No menu items!

கலைஞர்– கண்ணீர் விட்ட கவிப்பேரரசு வைரமுத்து | 2

கலைஞர்– கண்ணீர் விட்ட கவிப்பேரரசு வைரமுத்து | 2

கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் தொடர்ச்சி…

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆட்சி, அரசியல், சினிமா, இலக்கியம், குடும்பம் –  என அனைத்தையும் கலைஞர் பேலன்ஸ் செய்தவிதம் இன்றும் அனைவராலும் வியந்து பேசப்படுகிறது. எப்படி இதனை அவர் செய்தார்?

இத்தனை துறைகளை கலைஞர் எப்படி சமன் செய்தார் என்பதற்கு, வேறொரு சந்தர்ப்பத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்ன பதில் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். கலைஞர் பற்றி சிவாஜி சொல்லவில்லை, வேறொரு கேள்விக்கு அவர் சொன்ன பதிலை கலைஞரோடு நான் இங்கே பொருத்திப் பார்க்கிறேன்.

நடிகர் திலகத்திடம் ஒருமுறை நான் கேட்டேன். “உங்கள் சிறப்பு என்ன தெரியுமா?” ”என்னப்பா சிறப்பு, சொல்லுப்பா” என்றார். நான் சொன்னேன்: “நீங்கள் நடிகர் திலகம், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிப்பீர்கள். மொழிக்கு உயிர் கொடுத்தவர், நடிப்புக்கு தனி முத்திரை தந்தவர், உடலின் எல்லா பாகங்களையும் அசைய வைத்தவர் என்றெல்லாம் உங்களைக் கொண்டாடுகிறார்கள். நீங்கள் மேல்நாட்டில் பிறந்திருக்க வேண்டும்; தமிழனாக பிறந்தது நீங்கள் செய்த குறைபாடு என்கிறார்கள். ஆனால், எப்படிப்பட்ட பெருங்கலைஞர் என்பதைவிட ஒரு கோணத்தில் நான் உங்களைக் கண்டு வியக்கிறேன்.

தமிழ் சினிமா உலகில் எவருக்கும் வாய்க்காத, கூட்டுக் குடும்பம் என்ற ஒரு பெரும் நிறுவனத்தின் பெருந்தலைவர், வெற்றிகரமாக அதை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிற தலைவர், நடிகர்களின் தலைவராகவும் இருக்கிறார் என்பதுதான் உங்களுக்கு பெருமை” என்றேன்.

அப்படியே அண்ணாந்து பார்த்து, “ஓ… இப்படி என்னைப் பார்க்கிறீர்களா? கூட்டுக் குடும்பம் அவ்வளவு பெரிய விஷயமா” என்று வியந்தார். அப்போது நான் அவரைக் கேட்டேன்: “இந்த கூட்டுக் குடும்ப  வெற்றிக்கு யாது காரணம்?” அதற்கு அவர் சொன்ன பதில்தான், இப்போது நீங்கள் கலைஞர் பற்றி கேட்ட கேள்விக்குமான பதில்.

சிவாஜி சொன்னார்: ‘ஒரு கூட்டுக் குடும்பத்தில… எந்த ஒரு மனிதருடைய உழைப்பில் அந்தக் கூட்டுக் குடும்பம் இயங்குகிறதோ, அவன், தன்னால்தான் இந்தக் கூட்டுக் குடும்பம் இயங்குகிறது என்று நினைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். என்னால்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள்; என்னால்தான் நீங்கள் உடை உடுத்துகிறீர்கள்; என்னால்தான் நீங்கள் காரில் போகிறீர்கள்; என்னால்தான் கல்வி கற்கிறீர்கள், என்னால்தான் நிலம் வாங்கி இருக்கிறீர்கள், என்னால்தான் நீங்கள் சுகபோகத்தில் திளைக்கிறீர்கள் என்று குடும்பத் தலைவன், சம்பாதிக்கிறவன், ஈட்டி ஈகை செய்கிறவன் நினைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். அதுதான் கூட்டுக் குடும்பத்தின் வெற்றி” என்றார்.

கலைஞர்… நினைத்துக் கொள்ளவில்லை. தான்தான் இந்த கட்சியின் தலைவன், தான் இல்லாவிட்டால் இது இயங்காது என்று நினைக்கவில்லை. இந்த குடும்பத்தின் தலைவன் தான்தான், நான் இல்லாவிட்டால் இந்தக் குடும்பத்தில் யாருக்கும் இன்பம் கிடையாது… நினைக்கவில்லை. நான் தான் பெரிய பேச்சாளன்; என்னைவிட்டால் யாரும் கிடையாது… நினைக்கவில்லை.

எல்லா துறையிலும் சிறந்து விளங்கினாலும், தான் என்ற கர்வம், நான் என்ற அகம்பாவம், அவரிடம் ஒருநாளும் தலைகாட்டியதில்லை.

ஆனால், ‘நீ என்ன தலைவன்’ என்று யாராவது கேட்டால், “நான்தானடா தலைவன்” என்று நிரூபிக்கத் தெரியும் கலைஞருக்கு. ‘நீ என்ன முதலமைச்சர்’ என்று எவனாவது கேட்டால், “நான்தானடா முதலமைச்சர்” என்று நிரூபிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர். மற்றபடி நான்தான் தலைவர், நான் தான் முதலமைச்சர் என்று ஒருநாளும் கருதியதில்லை.

கலைஞர் எளியவர். காரணம்… மிக மிக எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். ஒருநாளும் அந்த தன் வேர்களை அவர் மறந்ததில்லை.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...