ஆன்மிகத்தை கவசமாக பயன்படுத்தி பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சாமியார்கள் வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறார் பெனிடிக் ஆண்டோ. இவர் மீதான பாலியல் புகார்களின் எண்ணிக்கை தினம் தோறும் கூடிக்கொண்டே வருகிறது. சமூக ஊடகங்களில் இவரது ஆபாச வீடியோக்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
யார் இந்த பெனிடிக்ட் ஆண்டோ?
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர்தான் பெனடிக்ட் ஆன்டோ. வயது 29 ஆகிறது. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கிறார். ஆன்மீகப் பணிகளைவிட அசிங்கமான பணிகளைதான் செய்திருக்கிறார் என்பது இப்போது வீடியோக்கள் மூலம் தெரியவருகிறது.
பாதிரியாரின் லீலைகள் வெளிவந்தது எப்படி?
பாதிரியாரிடம் சிக்கிய ஒரு இளம்பெண் தான் ஏமாந்த கதையை சட்டக் கல்லூரி மாணவர் ஆஸ்டின் ஜீனோ என்பவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த மாணவர் பாதிரியாரிடம் போய் நியாயம் கேட்டிருக்கிறார். இதில் இருவருக்கும் வாக்குவாதமும் சண்டையும் நடந்திருக்கிறது. மாணவர் தன்னை தாக்க வந்ததாக பாதிரியார் காவல்துறையில் புகார் அளிக்க அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
இந்த மாணவரின் அம்மா உடனே குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து பாதிரியாரின் லீலைகள் அடங்கிய ஆபாச வீடியோக்கள், ஆடியோக்கள், வொட்சப் பேச்சுக்களை அளித்து, பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பாதிரியார் வீட்டில் சண்டை போட்டு வரும்போது அந்த மாணவர் பாதிரியாரின் லேப்டாப்பையும் எடுத்து வந்திருக்கிறார். அதில் பல பெண்களுடன் பாதிரியார் அந்தரங்கமாய் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்திருக்கின்றன. அந்தப் படங்களைதான் மாணவரின் தாய் காவல்துறையிடம் கொடுத்திருக்கிறார். அந்த லேப்டாப்பினால்தான் பாதிரியார் லீலைகள் வெளியில் வந்தன.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதிரியாரைத் தேடினார்கள். ஆனால் பாதிரியார் தப்பி ஓடிவிட்டார். இன்று காலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பாதிரியார் பெண்களை எப்படி வலையில் வீழ்த்தினார்?
இந்த பாவ பாதிரியார் பெனடிக் இயல்பாகவே நன்றாக பேசக் கூடியவராம். ஆலயத்துக்கு வரும் இளம்பெண்கள்தாம் அவரது இலக்கு. அவர்களிடம் நயமாக பேசுவது. ஆலயம், பிரார்த்தனை போன்றவற்றைக் குறித்து முதலில் பேச ஆரம்பித்து கொஞ்சம் நம்பிக்கை வந்ததும் தனிப்பட்ட விஷயங்களைப் பேசத் தொடங்குவாராம். பிறகு மெல்ல அந்தரங்க பேச்சுக்கு இறங்குவாரம். அவரை நம்பும் இளம்பெண்களும் முதலில் வொட்சப் வீடியோ காலில் பேசியிருக்கிறார். தான் தனிமையில் வாடுவதாக பேசி பெண்களின் இரக்கத்தை சம்பாதித்துக் கொள்வார். அதனைத் தொடர்ந்து தனது லீலைகளை அரங்கேற்றியிருக்கிறார். ஏமாறும் அப்பாவிப் பெண்களை அறைக்கு அழைத்து அவர்களுடன் உல்லாசமாய் இருந்திருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டவும் செய்திருக்கிறார் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
இதில் மிக அசிங்கமான விஷயம் என்னவென்றால் தான் முன் நின்று நடத்தி வைத்த திருமணத்தில் அந்த மணப் பெண்ணையே தன் வலையில் வீழ்த்தியிருக்கிறார். அந்தக் கல்யாணப் படமும் பாதிரியாருடன் இருக்கும் ஆபாசப் படமும் வெளி வந்திருக்கின்றன.