No menu items!

நிழலின் நிழல் – ராஜேஷ்குமார்

நிழலின் நிழல் – ராஜேஷ்குமார்

இக்கதையை ஒலி வடிவில் கேட்க

அமெரிக்காவின் நியூஜெர்ஸி. வால் பேக் டவுன்ஷிப்.

காலை பதினொரு மணி.

வீட்டுக்கு வெளியே கோலப்பொடி உதிர்கிற தினுசில் பனி லேசாய் தூறி கொண்டிருக்க, “வொர்க் அட் ஹோம்” அசைன்மெண்ட்டுக்குக் கட்டுப்பட்டு அந்த அதி நவீன சின்டெக்ஸியா கம்ப்யூட்டருக்கு முன்பாய் உட்கார்ந்திருந்தான் ரோஹித். இருபத்தேழு வயது. கிட்டத்தட்ட ஆறடி உயரம். சிரத்தையாய் ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை. லேசாய் ஒரு தமிழ்ப் பட ஹீரோவை ஞாபகத்துக்கு கொண்டு வருகிற முகம்.

ஒரு கஸ்டமரோடு சாட்டிங்கில் இருந்த ரோஹித் அதை முடித்துக்கொண்டு, பிளாஸ்கில் இருந்து சூடான கருப்புக் காப்பியை கண்ணாடி டம்ளருக்கு மாற்ற முயன்ற விநாடி, வாசலில் இருந்த காலிங்பெல் ஒரு “மியூஸிக் நோட்”டை காற்றில் சிதறடித்தது.

இந்த நேரத்திற்கு யார்?

பிளாஸ்க்கை தள்ளி வைத்துவிட்டு எழுந்து போய் கதவைத் திறந்தான்.

வெளியே –

ஒரு அமெரிக்க இளைஞனும் அழகான அந்தப் பெண்ணும் நின்றிருந்தார்கள். அவள் அணிந்திருந்த குட்டைப் பாவாடை அபாயகரமான உயரத்தில் இருந்தது. இருவரின் தலைகளிலும் பனித்துகள்கள் வெண் புள்ளிகளாய் ஒட்டிக்கொண்டு தெரிய, அந்த இளைஞன் வேகமான அமெரிக்க ஆங்கிலத்தில் பேசினான்.

“உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும்… அயாம் ஆண்ட்ரூஸ். இவள் என்னுடைய மனைவி ஜெஸிகா…”

”இட்ஸ் ஒகே… உங்களுக்கு என்ன வேண்டும்?”

“உங்களிடம் ஒரு பத்து நிமிடம் பேச வேண்டும், அனுமதி கிடைக்குமா?”

“உள்ளே வாருங்கள்.”

ரோஹித் அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் சோபாவைக் காட்ட இருவரும் உட்கார்ந்தார்கள்.

“சொல்லுங்கள்…. என்ன விஷயம்?”

ஆண்ட்ரூஸ் சில விநாடிகள் தயங்கிவிட்டு கேட்டார். “இந்த வீட்டில் உங்களைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா?”

“என் நண்பன் ஒருவன் இருக்கிறான். நேற்று இரவு அவனுக்கு நைட் ஷிஃப்ட் டுயூட்டி. உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறான். என்னிடம் என்ன பேசவேண்டும். சொல்லுங்கள்… நான் இப்போது “வொர்க் அட் ஹோம்” அசைன்மெண்ட்டில் இருக்கிறேன். கஸ்டமர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.”

“ஸாரி… இதோ விஷயத்திற்கு வந்துவிட்டேன். நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்த வீட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளி, ஒரு வீடு விலைக்கு வந்து இருக்கிறது. நானும் என்னுடைய மனைவி ஜெஸிகாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வீட்டைப் போய் பார்த்தோம். வீடு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், இந்த ஏரியாவில் சற்று திருட்டு பயம் அதிகம் என்று சிலர் சொன்னார்கள். அவர்கள் அப்படி சொன்னது உண்மையா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வந்தோம்…”

ரோஹித் மெல்ல சிரித்துவிட்டு சொன்னான், “நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மையல்ல. கடந்த இரு வருடங்களாக நானும் என்னுடைய நண்பன் சரணும் இந்த வீட்டில் இருக்கிறோம். இதுவரைக்கும் எந்த ஒரு திருட்டும் நடந்ததில்லை…”

“இது உங்களுடைய சொந்த வீடா… இல்லை வாடகைக்கு இருக்கிறீர்களா?”

“சொந்த வீடுதான்… முதலில் வாடகைக்கு இருந்தோம். பிறகு வீட்டின் உரிமையாளர் எங்களுக்கே இதை விற்றுவிட்டு நியூயார்க் போய்விட்டார்.”

“உரிமையாளரின் பெயர் என்ன?”

“டேவிட் பிராட்லி.”

““நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கிறீர்கள்?”

“தமிழ்நாடு.”

ஆண்ட்ரூஸ் மேற்கொண்டு ஏதோ பேச முயன்ற விநாடி ரோஹித் இறுகிப்போன முகத்தோடு கையமர்த்தினான்.

“உண்மையில் உங்களுக்கு என்ன வேண்டும்…? ஏதோ ஒரு குற்றவாளியை போலீஸ் விசாரிப்பது போல் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.”

ஆண்ட்ரூஸ் தன்னுடைய உதடுகளில் ஒரு புன்னகையை நெளியவிட ரோஹித் கோபத்தில் முகம் சிவந்தான்.

“இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?”

“தெரிந்தோ தெரியாமலோ ஒரு உண்மையை சொல்லி விட்டீர்கள் என்று அர்த்தம்.”

“நீங்கள் சொல்வது புரியவில்லை.”

“நாங்கள் உண்மையிலேயே போலீஸ்தான். நான் வால்பேக் டவுன்ஷிப் போலீஸ் ஸ்டேசனில் லெவல் ஒன் போலீஸ் ஆபிஸர். ஷி ஈஸ் லெவல் டூ ஆபிஸர்…” என்று சொன்ன ஆண்ட்ரூஸ் தன்னுடைய கார்டை எடுத்துக் காட்ட, ஜெஸிகாவும் தன் அடையாள அட்டையை ரோஹித்தின் முகத்துக்கு நேராக நீட்டினாள்.

“மிஸ்டர் ஆண்ட்ரூஸ் என் உயர் அதிகாரி. நான் அவருடைய அஸிஸ்டண்ட்…”

ரோஹித்தின் இதயத் துடிப்பு உச்சத்துக்குப் போக, அந்தக் குளிரிலும் முகம் வியர்த்து, பின்னங்கழுத்து சொதசொதத்தது. உலர்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு கேட்டான், “எதற்காக வந்து இருக்கிறீர்கள்…. உங்களுக்கு என்ன வேண்டும்?”

“உண்மை.” ஆண்ட்ரூஸின் முகபாவம் இப்போது வெகுவாய் மாறியிருந்தது.

“என்ன உண்மை?”

ஜெஸிகா தன்னிடமிருந்த செல்போனை எடுத்து ‘வாட்ஸ் அப்’ ஆப்ஷனுக்குப் போய், ஒரு வீடியோ காட்சியை உயிர்பித்து அதை ரோஹித்திடம் காட்டிக்கொண்டே சொன்னாள்.

“நேற்று இரவு பனிரெண்டு மணியளவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி இது. ஆனால், எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் கிடைத்தது. ரத்தக் கறை படிந்த சேலையால் சுற்றப்பட்ட ஒரு உடலை நீங்களும் உங்களுடைய சரணும் உங்கள் வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டிப் புதைப்பதை அப்பட்டமாய் காட்டும் வீடியோ பதிவு இது. எடுத்தவர் உங்களுடைய அண்டை வீட்டுக்காரர் டொமனிக் சார்லஸ். அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் ஜர்லனலிஸ்ட். அந்த நள்ளிரவு இருட்டிலும் அற்புதமாய் தன்னுடைய வீடியோ காமிராவில் பதிவு செய்து எங்களுக்கு அனுப்பியிருந்தார். அது சம்பந்தப்பட்ட விசாரணைதான் இது…”

ரோஹித்தின் முகத்தில் வியர்வையின் சதவிதம் கூடியிருக்க ஜெஸிகா கேட்டாள்.

“வீடியோ பதிவில் இருப்பது நீங்களும் உங்கள் நண்பர் சரணும்தானே?”

“ஆமாம்” என்பது போல் தலையசைத்தான் ரோஹித்.

“புதைக்கப்பட்ட அந்தப் பெண் யார்?”

ரோஹித் பதில் சொல்வதற்கு முன் கலைந்த தலை முடியும் தூக்கக் கலக்கமுமாய் பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்ட சரண் சற்றே குழறலான குரலில் சொன்னான்.

“அவள் பெயர் ஸாரா.”

ரோஹித் பதட்டமாய் தமிழில் கத்தினான்.

“சரண்…! நீ எதுவும் பேசாதே… நான் போலீஸ்கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசிக்கிறேன். நீ உள்ளே போ.”

“அட… நீ ஏண்டா பயப்படறே…? ஸாராவை ஒழிச்சுக் கட்டினது நான்தானே…! எவனோ வீடியோ எடுத்து அனுப்பிட்டான். போலீஸ் வராமே இருப்பாங்களா… ஆபிஸரை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்.”

ரோஹித் மறுபடியும் ஏதோ பேச முயல, ஆண்ட்ரூஸின் கடுமையான பார்வை அவனை அடக்கியது. குரலில் முன்பிருந்த மரியாதையும் காணாமல் போயிருந்தது. “நீங்கள் இருவரும் இனி உங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது. எதைப் பேசுவதாக இருந்தாலும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். நான் உன்னுடைய நண்பனை விசாரிக்கும் போது நீ குறுக்கே எதுவும் பேசக்கூடாது.”

ரோஹித் மெளனமாகிவிட, ஆண்ட்ரூஸின் பார்வை சரணின் முகப்பரப்பில் கூர்மையாய் பதிந்தது.

“அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று சொன்னாய்?”

“ஸாரா…?”

“யார் அவள்?”

“ராயல் ட்ரீட் இண்டர்நேஷ்னல் ஹோட்டலில் வரவேற்பு பெண்ணாக வேலை பார்த்தவள். என்னுடைய பதினெட்டு மாத காதலியாக இருந்தவள்.”

“சரி… அவளைத் தீர்த்துக்கட்ட என்ன காரணம்?”

“துரோகம்… நம்பிக்கைத் துரோகம். அடுத்த வாரம் அவளுக்கு ‘சேக்ரட் ஹார்ட்’ சர்ச்சில் கல்யாணம். மாப்பிள்ளை யார் தெரியுமா?”

“யார்?”

“ராயல் ட்ரீட் இண்டர்நேஷ்னல் ஹோட்டலின் உரிமையாளரின் மகன் ஸ்டீபன் ரோஸ்… இது எப்பேர்ப்பட்ட நம்பிக்கைத் துரோகம். அதுதான் நேற்றைக்கு இரவு அவளுடைய கணக்கை முடித்துவிட்டேன்.”

ரோஹித் மறுபடியும் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்ற விநாடி, ஆண்ட்ரூஸின் இடுப்பு மறைவிலிருந்து துப்பாக்கி வெளிப்பட்டு அவனை குறி பார்த்தது.

“இதோ பார்…” உன்னுடைய நண்பன் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீ குறுக்கிட்டு ஏதாவது பேசினால், கடமையை செய்யவிடாத குற்றத்துக்காக, உன்னைச் சுட்டுத்தள்ள வேண்டியிருக்கும்… நான் உன்னிடம் கேள்வி கேட்டால் தவிர நீ வாயைத் திறக்கக்கூடாது.”

ரோஹித் தலையைக் குனிந்துகொள்ள, இப்போது ஜெஸிகா, சரணைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“கையில் என்ன காயம்?”

“அவளைக் குத்தும் போது கை நழுவியதால் ஏற்பட்ட ஆழமான ரத்த காயம். இரண்டு நாள் பிளாஸ்டர் போட்டால் சரியாகிவிடும்.”

“உனக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா?”

“இப்போதுதான் நான் சந்தோஷமாகவே இருக்கிறேன்.”

ஆண்ட்ரூஸ் தன்னுடைய செல்போனை எடுத்தபடி சற்றுத் தள்ளிப்போய் நின்று கொண்டு மெதுவான குரலில் பேசினார்.

“கொலையாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டான். அந்தப் பெண்ணின் உடலைத் தோண்டி எடுக்க வேண்டும். உடனடியாய் சம்பவ இடத்துக்கு ‘எக்ஸ்க்யூம்’ ஸ்குவாடை அனுப்பி வையுங்கள்.”

அடுத்த அரைமணி நேரத்திற்குள் ‘எக்ஸ்க்யூம்’ ஸ்குவாட் வந்து அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

நான்கடி ஆழம் தோண்டிய பிறகே ரத்தக் கறை படிந்த அந்த இளம் பச்சை நிற சேலை பார்வைக்குத் தட்டுப்பட்டது.

பக்கவாட்டில் இருந்த மண் கட்டிகளை அகற்றிவிட்டு சேலையோடு சுற்றப்பட்ட அந்த ஐந்தடி நீள மூட்டையைத் தூக்கி வெளியே கிடத்தினார்கள்.

ரோஹித் தலை குனிந்தபடி நின்றிருக்க, சரண் தன்னுடைய முகத்தில் எந்தவிதமான சலனத்தையும் காட்டாமல் இடதுகை விரல்களால் தாடையைத் தடவியபடி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆண்ட்ரூஸ் ‘எக்ஸ்க்யூம்’ ஸ்குவாடைப் பார்த்து குரல் கொடுத்தார்.

“ரிமூவ் இட்.”

சேலை சுற்றியிருந்த மூட்டையின் இரண்டு பக்க முடிச்சுகளும் அவிழ்க்கப்பட, பார்த்துக் கொண்டிருந்த ஆண்ட்ரூஸும் ஜெஸிகாவும் குழப்பமான பார்வைகளை ஒரு சின்ன திடுக்கிடலோடு பரிமாறிக் கொண்டார்கள்.

ஆண்ட்ரூஸ் அருகே வந்து பார்த்தார்.

மூட்டைக்குள் உடைந்து போன கண்ணாடித் துண்டுகளோடு பிரேமிட்ட ஒரு பெண்ணின் ஆயில் பெயிண்ட் ஓவியம். அந்த ஓவியத்திற்கு அடியில் ‘WE LOVE US’ என்ற ஆங்கில வார்த்தைக்குக் கீழே சரண், ஸாரா என்ற பெயர்கள். இரண்டாய் ஒடிக்கப்பட்ட ஒரு கிடார், மூர்க்கமான கோபத்தோடு நார் நாராய் கிழிக்கப்பட்ட உயர்தரமான கோட், பேண்ட், சூட், பல நிறங்களில் பெர்ஃப்யூம் பாட்டில்கள், மென் வாலட்ஸ், டெல் லேப்டாப், ஆன்ராய்ட் போன், ஆல் ட்ராவல் காம்போ பேக், சில்வர் பிராஸ்லெட், ‘வான்ட்டட் அன் ஏஞ்சல்’ என்று தலைப்பிட்ட தடிமனான புத்தகம்.

ஆண்ட்ரூஸ் திகைப்போடு சரணை ஏறிட்டார்.

“வாட் ஈஸ் தீஸ்?”

சரண் மெளனமாயிருக்க ரோஹித் பேசினான்.

“ஸார்… இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற உடைந்து நொறுங்கிப் போன எல்லாப் பொருள்களுமே, அந்த ஸாராவால் சரணுக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள். சரண், ஸாரா இவர்களின் காதல் மூன்று மாதங்களுக்கு முன்புவரை கூட ஆழமாகவும் தீவிரமாகவும் இருந்தது. அதற்குப் பிறகுதான் ஸாரா, சரணோடு பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தாள். சென்றமாதம் அவளுடைய பிறந்தநாள் வந்தபோது, சரண் இண்டியன் சில்க்ஸ் ஹவுஸில் ஒரு சேலையை வாங்கிக்கொண்டு அவளைப் பார்க்கப் போயிருக்கிறான். ஸாரா பரிசை வாங்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், ஹோட்டல் உரிமையாளரின் மகனை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சொல்லியிருக்கிறாள். அந்த அதிர்ச்சியிலிருந்து சரணால் மீள முடியவில்லை. ஓரளவுக்கு மீண்டு சகஜமான நிலைமைக்கு வந்த பின்பும் அவனால் அவளை மறக்க முடியவில்லை.”

ரோஹித் சற்றே பேச்சை நிறுத்த சரண் இப்போது நிதானமான குரலில் தொடர்ந்தான்.

“நான் ஸாராவை அடியோடு மறக்க வேண்டுமென்றால் அவள் எனக்குக் கொடுத்த பரிசுப் பொருட்களையெல்லாம் என் பார்வையில் படாத அளவுக்கு ஒழித்து கட்ட வேண்டுமென்று நினைத்தேன். நேற்று இரவுதான் எல்லாவற்றையும் என்னுடைய கைகளால் ஆத்திரம் தணிகிற வரைக்கும் அடித்து நொறுக்கினேன். நொறுங்கிப்போன எல்லாவற்றையும் அவளுக்காக நான் வாங்கிய சேலையில் போட்டு ஒரு மூட்டையாய் கட்டினேன். ஸாராவையே தீர்த்துக் கட்டின மாதிரியான ஒரு சந்தோஷத்தோடு இங்கே புதைத்தேன். ஒரு பீரைக் குடித்துவிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாய் படுத்துத் தூங்கினேன். உங்களுடைய பேச்சுக் குரல் மட்டும் கேட்காமல் இருந்திருந்தால் நான் இன்னமும் தூங்கிக்கொண்டுதான் இருந்திருப்பேன்.”

“ஸாரி… டூ பாதர் யூ” ஒற்றை வரியில் பதில் சொன்ன ஆண்ட்ரூஸ் வீட்டைவிட்டு வெளியேறி, பனிதூறலில் நனைந்து சற்றுத் தொலைவில் நின்றிருந்த போலீஸ் வேனை நோக்கி மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்.

ஜெஸிகாவும் தலை குனிந்தபடி ஆண்ட்ரூஸை பின்தொடர்ந்தாள்.


ஓவியம்: வேல்

7 COMMENTS

  1. வாவா… இப்படி ஒரு கதையை உங்களைத் தவிர யாராலும் எழுத முடியாது அண்ணா. தலைப்பும், கதையும், ,முன் கிளாசிக்

  2. ராஜேஷ்குமார் சாரின் மர்ம டச் க்கு அதே இளமை! எப்படி சார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...