No menu items!

நியூஸ் அப்டேட்: ரம்ஜான் – முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

நியூஸ் அப்டேட்: ரம்ஜான் – முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை அளிக்கும், அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் துணை நிற்கும் தமிழக அரசின் சார்பில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ‘ரம்ஜான்’ திருநாளில் எங்கள் உளங்கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: கெட்டுப்போன சிக்கனில் தயாரித்ததால் விபரீதம்!

கேரள மாநிலம் காசர்கோடு செறுவத்தூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் ஐடியல் கூல்பாரில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் செறுவத்தூர் பகுதியை சுற்றி உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கண்ணூர் கரிவெள்ளூரை சேர்ந்த தேவநந்தா (வயது 16) என்ற மாணவிக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் காஞ்ஞங்காடு மாவட்ட மருத்துவமனையில் நேற்று சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மாணவி தேவநந்தா உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுமார் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் ஃபுட் பாய்சன் ஆகி மாணவி இறந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கூல்பாருக்கு சீல் வைக்கப்பட்டது. கூல்பார் உரிமையாளரான மங்களூரைச் சேர்ந்த ஒருவரும், ஷவர்மா தயாரித்த நேபாளத்தைச் செர்ந்த தொழிலாளியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அம்மா உணவகங்களை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிப்பு; ஜெயக்குமார் குற்றச்சாட்டு

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அம்மா உணவகங்களைக் குறைத்து கருணாநிதி உணவகங்களை அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களே இதை விரும்பவில்லை. கூடிய விரைவில் தமிழ்நாடு என்ற பெயர் கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம்” என்றார்.

தமிழகத்தில் மே 4 முதல் அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பம்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் 4-ம் தேதி தொடங்கும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், “இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28-ம் தேதி வரை நீடிக்கும். நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு அளவை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விழாவில் ஆபாச படம் ஒளிபரப்பு: அசாமில் பரபரப்பு

அசாம் மாநிலம் டின்சுகியா என்ற பகுதியில் உள்ள இந்திய ஆயில் நிறுவனத்தில் மெத்தனால் கலந்த எம்-15 ரக பெட்ரோல் தயாரிக்கும் திட்டத்தை மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தொடங்கி வைத்தார். இதற்கான விழா அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான விளக்கங்களுடன் கூடிய காணொளியை ஒளிபரப்ப அங்கு ப்ரொஜெக்ட்டர் திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திட்டத்தை தொடங்கி வைத்து விருந்தினர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, மேடையில் உள்ள திரையில் திடீரென ஆபாச பட காட்சிகள் ஓடியுள்ளன. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சில வினாடிகள் காட்சி ஓடிய நிலையில், ஆப்பரேட்டிரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு வீடியோ நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ப்ரொஜெக்ட்டர் ஆபரேட்டரை கைது செய்த காவல்துறை இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை: மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வருக்கு குருபூஜை தினத்தன்று பட்டினப் பிரவேச விழா நடத்தப்படும். அந்த விழாவின் போது ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிச் சென்று வீதி உலா வருவது வழக்கம். இவ்வாறு ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்க்கிறது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...