No menu items!

பாஜகவுக்கு 180 சீட்தான்! திமுக சர்வே! – மிஸ் ரகசியா

பாஜகவுக்கு 180 சீட்தான்! திமுக சர்வே! – மிஸ் ரகசியா

“தேர்தல் முடிஞ்சு இன்னும் முடிவுகள் வெளியாகல. அதுக்குள்ள கூட்டணியில புகைச்சல் ஆரம்பிச்சுடுச்சு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“எந்த கூட்டணியைப் பத்தி சொல்றே?”

“அதிமுக – தேமுதிக கூட்டணியைப் பத்திதான் சொல்றேன். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அதிமுக மேல ரொம்ப கோபமா இருக்காங்களாம். கூட்டணி பேச வந்தப்ப அதிமுக தலைவர்கள் சொன்னது ஒண்ணு. ஆனா கூட்டணி சேர்ந்த பிறகு அவங்க செஞ்சது ஒண்ணுன்னு கட்சிக்காரங்ககிட்ட அவங்க சொல்லிட்டு இருக்காங்க. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில அதிமுக கூட்டணி தலைவர்கள் கொடுத்த வாக்குறுதி என்னங்கிற ரகசியத்தை தேர்தல் முடிவுக்கு பிறகு பிரேமலதா வெளியிடலாம்னு சொல்றாங்க.”

“எடப்பாடி எப்படி இருக்கார்? கட்சி ஆலோசனைக் கூட்டத்துல ரொம்ப புலம்பியிருந்தாரே?”

“வட இந்தியாவுல பாஜக ஜெயிக்குமா ஆட்சிக்கு வருமானு டெல்லி நண்பர்கள்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கார். நானுறு இடம்லாம் வராது. மெஜாரிட்டிக்கே கஷ்டப்படுவாங்கனு அவருக்கு சொல்லியிருக்காங்க. அதுல கொஞ்சம் சந்தோஷம் அவருக்கு. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தா தனக்கு கஷ்டம்னு நினைக்கிறார்.”

“பிரதமரோட வெறுப்பு பேச்சுக்கு அறிக்கை விட்டாரே?”

“அறிக்கை விடலாமா வேண்டாமானு ரொம்ப யோசிச்சாங்களாம். பாஜகவை ரொம்ப பகைச்சுக்க வேண்டாம், இங்கதான் எலெக்ஷன் முடிஞ்சிருச்சுல..சிறுபான்மையினர் வாக்குகள் போட்டுட்டாங்க..இனிம பாஜகவை எதிர்த்து அறிக்கை விடுறதுல ஒரு லாபமும் இல்லைனு சொல்லியிருக்காங்க. அமைதியா இருந்துருவோம்னு சொல்லியிருக்காங்க. ஒண்ணுமே சொல்லாம இருந்தா எதிர்காலத்துல பிரச்சினையாகும்னு எடப்பாடி சொன்னாராம். அதுனால பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.”

“ஆமா அதுலதான் கண்டனம்கிற வார்த்தையே இல்லையே..”

“பிரதமருக்கு கண்டனம்னு சொன்னா இவரை ஒரு வழி பண்ணிடுவாங்கல”

”திமுக – மதிமுக கூட்டணியிலயும் கொஞ்சம் விரிசல் இருந்துச்சே?”

“ஆமாம். தேர்தல் சின்னம் தொடர்பா துரை வையாபுரி சொன்ன சில கருத்துகளால ரெண்டு கட்சி தலைவர்கள் மனசுலயும் சில கசப்புகள் இருந்துச்சு. ஆனா இப்ப அது சரியானதா சொல்றாங்க. வாக்குப்பதிவு முடிஞ்ச பிறகு திமுக தலைவர் ஸ்டாலினை வைகோ சந்திச்சிருக்கார். அப்ப தன்னோட மகனுக்காக திமுக செஞ்ச பிரச்சாரத்துக்கு அவர் தனிப்பட்ட முறைல நன்றி சொல்லி இருக்கார். அதோட தன் மகன் பேசின பேச்சால யாருக்காவது மனவருத்தம் இருந்தா, தான் அதுக்காக மன்னிப்பு கேட்கறதா சொன்னாராம். இதே மாதிரி நேருகிட்டயும் வைகோ மனம்விட்டு பேசி இருக்காரு. அதனால இரு தரப்புலயும் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கு.”

“காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லோரும் ஸ்டாலினை சந்திச்சிருக்காங்களே?”

“ஆமாம், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்ச்சியா திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கிறாங்க. அதுபடி காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்திச்சிருக்காங்க”

“முதல்வர் என்ன சொன்னாராம்?”

“முதல்வர் செம உற்சாகத்துல இருக்கிறாராம். வாங்க வின்னர்ஸ்னுதான் அவங்களை வரவேற்று இருக்கிறார். வடக்குலருந்து வர தகவல்கள் நல்லா இருக்கு. பிஜேபிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. அப்படிதான் ரிப்போர்ட்ஸ் எனக்கு கிடைக்குதுனு சொன்னாராம். அப்புறம் இதுல எத்தனை பேர் மந்திரியாகப் போறிங்கனு சிரிச்சுக்கிட்டே சொன்னாராம். அவர் கணக்குபடி பாஜகவுக்கு 180 சீட்தான் கிடைக்கும்னு சொல்லியிருக்கிறார்”

“நம்ப முடியலையே?”

“கூட போன காங்கிரஸ்காரர் சொன்ன தகவல் இது”

“அதை சொல்லல. நீ கொடுக்கிற தகவல்கள் நம்பிக்கைக்குரியதுனு தெரியும். 180 சீட்தான் பாஜகவுக்குன்றதை நம்ப முடியலைனு சொன்னேன்”

“ஆமாம். அப்படிதான் சொல்லியிருக்கிறார். பாஜகவின் பதற்றம் மோடி பேச்சுல தெரியுதுனும் சொன்னாராம்”

“வட மாநிலங்கள் பிரச்சாரத்துக்கு முதல்வர் போறதா தகவல் வந்தததே?”

‘முதல்வருக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கு. ஆனா சனாதன பிரச்சினைல திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சினு ஒரு பிம்பத்தை பாஜக உருவாக்கி வச்சிருக்கு. அதனால திமுக தலைவர்கள் வட மாநிலங்களுக்கு வந்தால் அது நெகடிவ்வா போய்டும்னு டெல்லி தலைவர் சொல்லியிருக்கிறார். அதனால முதல்வர் யோசிக்கிறாராம்”

“வட மாநில தேர்தல் நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு?”

“ஆரம்பத்துல பாஜகவோட கை ஓங்கி இருந்தாலும், இப்ப பல இடங்கள்ல காங்கிரஸ் கட்சியோட செல்வாக்கு அதிகரிச்சு வர்றதா பிரதமருக்கு உளவுத் துறை தகவல் சொல்லி இருக்குனு டெல்லில சொல்றாங்க. குறிப்பா மேற்கு உத்தர பிரதேசத்துல ரஜபுத்திர பிரிவினர் பாஜகவுக்கு எதிரா இருக்காங்க. இது தேர்தல் முடிவுகளை மாத்துமோன்னு பாஜக பயப்படுது. அதனாலதான் மோடியோட பிரச்சாரத்துல இப்ப காங்கிரஸ் கட்சியை அடி அடின்னு அடிச்சுட்டு இருக்கார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தா, இந்துக்களோட சொத்துகளை பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுப்பாங்கன்னு மோடி பேசுனதுகூட அதனாலதான்.”

“இது காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?”

“பாதிப்பைவிட இது அனுகூலமான விஷயத்தைத்தான் ஏற்படுத்தும்னு காங்கிரஸ் நினைக்குது. காங்கிரஸ் கட்சியை ஏற்கனவே ஆதரிச்சிக்கிட்டு இருக்கிற இந்துக்களோட ஓட்டை இது எந்த விதத்துலயும் பாதிக்காது. அதே நேரத்துல சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் கடந்த சில தேர்தல்களா பிரிஞ்சு கிடந்தது. ஆனா இப்ப மோடி காங்கிரஸ் மேல சொன்ன குற்றச்சாட்டால, நம்மளுக்கான கட்சி காங்கிரஸ்தாங்கிற எண்ணம் சிறுபான்மை இன மக்கள் மத்தியில அதிகரிச்சு இருக்கு. அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமா இருக்கும்னு பேசிக்கறாங்க.”

“கோவையில ஒரு லட்சம் வாக்குகளை காணோம்னு அண்ணாமலை புகார் சொல்லி இருக்காரே?”

“இது சார்பா பாஜக கோவையில நடத்தின ஆர்ப்பாட்டத்துல விரல்ல மை வச்சிருந்த பலர், தங்களுக்கு ஓட்டு போட வாய்ப்பு கிடைக்கலைன்னு சொல்லி போராடின காமெடிய நீங்க்கூட பார்த்திருப்பீங்களே.. இந்த விஷயத்துல அண்ணாமலை புகார் சொன்னாலும், அவருக்கு உதவியா வானதி சீனிவாசன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாம இருக்காங்க. ’அவர் ஏதோ பரபரப்பா சொல்லணும்னு இப்படி சொல்லிட்டு இருக்காரு. நான் அதுக்கெல்லாம் துணைபோக முடியாது’ன்னு சொல்லிட்டாராம்.”

“அண்ணாமலை ஜெயிப்பாரா?”

“திமுகவினர் ஒரு ரகசிய சர்வே எடுத்தாங்களாம் அதுல அண்ணாமலை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல தோப்பார்னு வந்திருக்கு. இதுல பாஜகவினருக்கு மகிழ்ச்சி. திமுகவினருக்கு வருத்தம்”

“திமுகவுக்கு ஏன் வருத்தம்?”

“நாடாளுமன்றத் தேர்தல்ல 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்கிறது ரொம்ப குறைவு. இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலயாவது ஜெயிப்போம்னு திமுக நம்பிக்கிட்டு இருந்தது. அதனால அதுக்கு வருத்தம். குறைந்த வாக்குகள் வித்தியாசத்துல தோத்தா பரவாயில்லைன்ற நிலைல பாஜகவினர் இருக்காங்க. இந்த நியூஸ் கேட்டு பாஜகவினருக்கு மகிழ்ச்சி”

“அவங்களும் இப்படி சர்வே எடுத்திருப்பாங்கல?”

“ஆமாம். அதிலயும் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு இல்லனுதான் வந்திருக்குனு சொல்றாங்க. அதுனாலதான் ஒரு லட்சம் ஓட்டுக்களை காணோம்னு பாஜககவினர் சொல்லிக்கிட்டு இருக்காங்க”

”அப்போ பாஜகவுல யார்தான் ஜெயிப்பாங்க?”

“அதுக்குதான் இன்னும் பதில் கிடைக்கல” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...