No menu items!

’என்னப்பா Blade போடப் போறீயா’ – விஜய் ஆண்டனியின் மகள் மீரா

’என்னப்பா Blade போடப் போறீயா’ – விஜய் ஆண்டனியின் மகள் மீரா

தமிழ் சினிமாவிற்கு இது சோதனையான காலக்கட்டம் போல் இருக்கிறது. அடுத்தடுத்த திடீர் மரணங்களால் தமிழ் சினிமா உலகம் கண்ணீரில் கலக்க ஆரம்பித்திருக்கிறது.

மயில்சாமி, மனோபாலா, மாரிமுத்து என தமிழ் சினிமா நட்சத்திரங்களின் எதிர்பாராத மறைவுடன் இப்போது இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீராவின் தற்கொலையும் சோகத்தை அதிகரித்து இருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் அதிகம் முணுமுணுக்கப்பட்ட இரண்டுப் பெயர்கள், ஏ.ஆர். ரஹ்மான், விஜய் ஆண்டனி.

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியின் பின்னணியில் விஜய் ஆண்டனி இருக்கிறார் என்று ஒரு கிசுகிசு உலா வந்தது. விஜய் ஆண்டனிக்கு தொடர்பிருக்கிறது என்று வீடியோ வெளியிட்டவர்கள் மீது, வழக்கு தொடர இருக்கிறேன் என்று விஜய் ஆண்டனி சொல்லி முடித்த 72 மணி நேரத்திற்குள் அவருக்கு அடுத்து ஒரு மாபெரும் இழப்பு.

விஜய் ஆண்டனி – ஃபாத்திமா ஹனிட்யூ தம்பதியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 16 வயதுதான். சர்ச் பார்க் பள்ளியில் 12 வது படித்து வந்த மீரா 19.9.2023 அன்று அதிகாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அஜித்குமாரை சினிமா ரசிகர்களும், பொது மக்களும் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் முன்னுக்கு வந்த அந்த வேகம்தான்.

இதேபோல்தான் விஜய் ஆண்டனியும். சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்று முன்னணி இசையமைப்பாளர், ஹீரோவாக முன்னுக்கு வந்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் வாழ்க்கை பெரும் போராட்டங்கள் நிறைந்தது. தமிழில் முதல் நாவலாக வெளியான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன்தான் இந்த விஜய் ஆண்டனி.

இப்படியொரு பிரமிக்க வைக்கும் பின்னணி இருந்தாலும், சிறுவயதிலேயே அப்பாவை இழந்தவர் விஜய் ஆண்டனி. கணவரை இழந்தாலும் இவரது அம்மா, நம்பிக்கையை இழக்கவில்லை. விஜய் ஆண்டனியையும், அவரது தங்கையையும் அழைத்து கொண்டு வேலைக்காக திருநெல்வேலிக்கு வந்தார்.

அம்மா வேலைப் பார்த்தே ஆகவேண்டிய சூழல் நிலவியதால், மகனை ஒரு ஹாஸ்டலிலும், மகளை மற்றொரு ஹாஸ்டலிலும் சேர்த்துவிட்டார். இவர்கள் மூவரும் வார இறுதி விடுமுறை நாட்களில் சந்திப்பதுதான் வழக்கம். அப்போது கூட அவர்களுக்கு ஒரு வடை வாங்கிக் கொடுக்க மட்டுமே கையில் பணமிருக்கும். ஒரே ஊரில் இருந்தாலும் அவர்கள் சந்தித்து கொள்ள 5 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

வறுமையின் பிடி அதிகமிருந்தாலும், விஜய் ஆண்டனிக்கு சாதிக்க வேண்டுமென்ற வேகம் அதிகமிருந்தது.

கல்லூரியில் படித்தது இயற்பியல். ஆனால் விஜய் ஆண்டனி அதிகம் தென்பட்டது ஆடல் பாடல் மேடைகளில்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தன் மீதிருக்கும் நம்பிக்கையில் சென்னைக்கு வந்தார். வந்தாரை வாழ வைக்கும் சென்னை, இவரை உடனடியாக அங்கீகரிக்கவில்லை. ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவில், உதவியாளராக சேர்ந்தவர், தனது நுட்பமான அறிவினால் சவுண்ட் இன்ஜினியரானார்.
கடனை வாங்கி ‘ஆடியோபைல்’ என்ற ரிக்கார்டிங் ஸ்டூடியோவை கோடம்பாக்கத்தில் தொடங்கினார். சின்னத்திரை தொடரான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’வுக்கு அக்னி என்ற பெயரில் இசையமைத்தார். விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடல்களுக்கும் இசையமைத்தார். இவரது திறமையைப் பார்த்து விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் சினிமாவில் இசையமைப்பாளராக வாய்ப்பளித்தார்.

இசையை முழுமையாக கற்றுக்கொள்ளாவிட்டாலும், சத்தங்கள் குறித்த அறிவினால் மக்கள் ரசிக்கும் இசையைக் கொடுத்தார். இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அடையாளம் காணப்பட்டார்.

வாழ்க்கையின் வேகத்திற்கு இது போதாது என்று பின்னர் நடிகராகவும் களம் கண்டார். ஆனால் விஜய் ஆண்டனி நடிக்க வேண்டுமென யாரும் கேட்கவில்லை. இதனால் தன்னை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் நஷ்டமடையக்கூடாது என தயாரிப்பாளராகவும் மாறினார் விஜய் ஆண்டனி.

இப்படி தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் அவராகவே முடிவு செய்து செதுக்கியவர் விஜய் ஆண்டனி. ஆனால் தன்னுடைய மகள் மீரா விஷயத்தில் மட்டும் அவரால், அவர் நினைத்ததை கொடுக்கமுடியவில்லை.

வாவ் தமிழாவுக்காக அவர் அளித்த பேட்டியில் கூட, ‘என்னுடைய வலி, நான் பார்த்த சம்பவங்கள், நட்பு, நம்பிக்கை, துரோகம் இப்படி எனக்கு நேர்ந்த அனுபவங்களை, என்னுடைய உணர்வுகளை என்னுடைய பிள்ளைகளுக்கு கடத்த முடியுமா என்று பார்க்கிறேன். ஆனால் அது முடியாது போலிருக்கிறது. நம்முடைய வலி, அனுபவங்களை நம்முடைய குழந்தைகளுக்கு கொடுக்க ஏதாவது டெக்னாலஜி ஒன்றை யாராவது கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும். அதனால் நம்மால் முடிந்தது, அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது. நல்லது பண்ணினாலும், கெட்டது பண்ணினாலும் நாம் கொடுக்கவேண்டியது நம்பிக்கைதான். நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று நீ சொன்னாலும், நான் உன்கூட இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கவேண்டும். இது அந்த தவறை சப்போர்ட் பண்ணுவதாக அர்த்தமில்லை. அவளைக் காப்பாற்றுவதோ, நியாயப்படுத்துவதோ தவறு. ஆனால் உனக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூடவே இருப்பது முக்கியம்.

என் மகளிடம் பேசலாம் என்று அவளைக் கூப்பிட்டால், ’என்னப்பா ப்ளேட் போடப் போறீயா’ என்றபடியே வந்து உட்காருவாள். என்ன பண்றீங்க என்று கேட்டால், படம் பார்க்கிறேன் என்பாள். அப்படியா, நிறைய படங்கள் பார் என்பேன். படங்களில் வருபவை நாற்பது ஐம்பது சதவீதம் பொய்யாக இருக்கலாம். கற்பனையாக இருந்தாலும் கூட, வாழ்க்கையில் அவை நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் இல்லையா. இந்த உலகம் பற்றிய அறிவு, படங்களைப் பார்த்தாவது அவளுக்கு வரட்டுமே என்று நினைப்பேன்.

என் குழந்தைகள் போன் கேட்டால், போனை கொடுக்க சொல்வேன். நாம் சொல்வதைக் கேட்காமல் விட்டாலும், வேறு யாராவது சொல்வதை அவர்கள் கேட்பதற்கான வாய்ப்பு இருக்கலாம். போனில் பார்க்கிற ஏதாவது ஒரு விஷயம், தவறாக கூட இருக்கலாம். இன்றைக்கு ஏதாவது ஒன்றைப் பார்க்கும் போதுதான், நேற்று பார்த்தது தவறு என்று தெரிய வரும்.’’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

இன்று தனது உயிரை மாய்த்து கொண்ட மீராவுக்கு இந்த தற்கொலை தவறு என்பது பின்னாளில் தெரியவரலாம், ஆனால் அதை உணர்ந்து கொள்ள இன்று மீரா இந்த உலகில் இல்லை.

இப்படி மீரா தன்னுயிரை மாய்த்து கொள்ள காரணம், இன்றைய தலைமுறைக்கு இருக்கும் மன உளைச்சலும், மன அழுத்தமும்தான் என்கிறார்கள்.

கொஞ்ச நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்த மீரா, சட்டென்று இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

என்ன நடந்தாலும் உன்னுடன் நான் இருப்பேன் என்று அப்பா விஜய் ஆண்டனி சொன்னதை, மீரா தூக்குப் போடுவதற்கு ஒரு விநாடி முன்பு யோசித்திருந்தால் இப்படியொரு கட்டுரை எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்ட விஜய் ஆண்டனி, மீராவின் இழப்பை எப்படி எதிர்க்கொள்ள போகிறாரோ….

1 COMMENT

  1. தகப்பனை விட தாயிடம் தான் சிலவற்றை சொல்ல முடியும் பெண் குழந்தைகளால் அதனால் விஜயின் மனைவி மிக நெருக்கமாக இருந்திருக்க வேண்டும் தன் மகளிடம் ஒரு தோழியாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...