No menu items!

’மறக்குமா நெஞ்சம்…’- ஏ.ஆர். ரஹ்மான்

’மறக்குமா நெஞ்சம்…’- ஏ.ஆர். ரஹ்மான்

‘’முன்பு பாடல்களை ரேடியோவில் மட்டும்தான் கேட்க முடிந்தது. இப்போது எங்கும் இசை நிறைந்திருக்கிறது. அதனால் அடிக்கடி கேட்கும் போது போரடித்துவிடும். இதை மீறி ஒரு இசையைக் கொடுப்பது நம்முடைய மைண்ட்டுக்கு சவால் விடுக்கிற விஷயம்’’ என்று உற்சாகமாகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

நல்லதொரு சூழலில் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய எண்ணங்கள், எதிர்பார்புகள் பற்றி பகிர்ந்து கொண்டது இங்கே தொடர்கிறது.

ஆஸ்கார் விருதுகளை தட்டிச்சென்றிருப்பதனால் உருவாகி இருக்கும் உலகளாவிய அங்கீகாரம் மூலமாக மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி ஒரு மியூஸிக் ஸ்டாராக இந்தியாவுக்கு ஏன் பெருமை சேர்க்கக்கூடாது என்று கேட்டால், ‘’நான் ஒரு கம்போஸர். ஜாக்ஸனைப் போல் பெர்ஃபார்மர் இல்லை என்பதே உண்மை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டேஜ் ஷோக்களில் என்னால் முடிந்ததை பெர்ஃபார்ம் பண்ணுகிறேன். என்னால் துள்ளிக் குதித்து, காற்றில் மிதப்பது எல்லாம் இப்போது என்னால் முடியாது. நம்முடைய இந்தியக் கலாச்சாரம் வேறு, அதை உலகம் பார்க்கும் விதம் வேறு. அதனால் ஒரே ஹை ஜம்ப்பில் தொட்டுவிட முடியாது. படிப்படியாகதான் எட்ட முடியும். ’ஜெய் ஹோ’ நிகழ்ச்சியில் இருந்து என்னிடம் பல மாற்றங்கள். என்னால் முடிந்ததை செய்கிறேன்.” என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார்.

சமீபகாலமாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மேற்கத்திய இசைவடிவங்கள் முக்கியத்துவம் பெறுவது குறித்து பேசுகையில் “அதற்கேற்றதுபோல் வாய்ப்புகள் அமையவில்லை. நான் கடைசியாக ‘சங்கமம்’ படத்தில் நீங்கள் குறிப்பிடுகிற இசையைக் கொடுத்திருந்தேன். இப்போது எனக்கு மல்ட்டி ரோல்கள் உண்டாகியிருக்கின்றன. இந்திய இசையின் பிரதிநிதியைப் போல், அன் அஃபிஷியல் அம்பாஸிடர் மாதிரி என்னைப் பார்க்கிறார்கள். பல நாடுகளில் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள். முன்பு கூட ‘நோபல் அமைதி விருதிற்கான’ இசையை அமைப்பதற்கான வாய்ப்பும் வந்தது. இப்படி பல வாய்ப்புகள் வரும்போது அதிகப் படங்களுக்கு இசையமைக்க முடியாது. இது வேண்டாம் என்று சினிமாவில் இறங்கினால் இந்தியாவுக்கு இதுபோல் வாய்ப்புகள் அமையாது. நாம் அடுத்தக்கட்டத்திற்கு போகமுடியாது.” என்று தீர்மானமான பதில் வருகிறது.

ஆஸ்கர் விருதை வென்றதால், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வருகிறதா.. அப்படி ஹாலிவுட்டில் இசையமைத்தால் மில்லியன் டாலர்களில் சம்பாதிக்கலாமே. அப்படி முடிந்திருக்கிறதா என்று வினா எழுப்பினால், “அது வரும். ஆனால் அது தேவையா இல்லையா என்பது உங்களுடைய விருப்பம்தான். என்னைப் பொறுத்தவரை ஒரு சின்ன விஷயத்திற்காக நீங்கள் அனைத்தையும் இழக்கவேண்டுமென்றால் அதில் விருப்பமிருக்காது. காரணம் நம்முடைய சென்ஸ் எல்லாம் உறைந்துப்போனது போலாகிவிடும். ஒரு ஆல்பம் பண்ணி அதிக பெயர், புகழ், பணம் என சம்பாதித்துவிட்டால், அதற்கு பிறகு உங்களுக்கு இசையே வராது. அதனால்தான் எனக்குள்ளே ஒரு தாகம், பசி இருப்பதுபோல் பார்த்துக்கொள்கிறேன். பட்டினி இருந்தால்தான் அதை சமாளிக்க உழைக்கத் தோன்றும்.”

இந்திய சினிமா இசையில் தொழில்நுட்பத்தை நுணுக்கமாக புகுத்தியவர்களில் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு முன்னோடி. அதனாலேயே நீங்கள் இசையின் அடிப்படை ஆதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா இல்லை தொழில் நுட்பத்தை நம்புகிறீர்களா என்ற கேள்வியை முன் வைத்தால், “முதலில் அதன் ஆத்மா. பிறகு தொழில் நுட்பம். உலகில் எங்கிருந்தாலும் இசையை வீடியோ கான்பரஸிங் மூலம் செய்ய முடிகிறது. வீட்டில் இருந்தபடி இசையமைப்பது போன்றுதான் இருக்கிறது. எந்த முறையில் இசையமைத்தாலும் கடைசியாக மக்களிடம் சென்று போது அது வரவேற்பை பெறும்போது திருப்தி கிடைத்துவிடுகிறது. பொது மக்களுக்கும் நமக்கும் இடையேயான அந்த தொடர்புதான் முக்கியம்.” என்கிறார்.

உங்களது சினிமா கேரியரில் உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் எதுவும் வந்தது இல்லையே. அதன் ரகசியம் என்னவென்று ஒரு குறுகுறுப்பான கேள்வியை கேட்டால், “அப்படி என்றால் என்னைப் பற்றி கிசுகிசுக்கள் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? (மனம்விட்டு சிரிக்கிறார்). உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சோஷியல் லைஃப்பிற்கான நேரமில்லை. பாதிநேரம் பறந்துக் கொண்டேதான் இருக்கிறேன்.” என்று புன்னகைக்கிறார்.

ஒரு சாதாரண மனிதன் கூட நன்றாக என்ஜாய் பண்ணும்போது, எல்லாமும் இருந்து உங்களால் அதைக் கொண்டாட முடியவில்லையே. அந்த வருத்தம் இருக்கிறதா என அடுத்த கேள்வியைக் கேட்ட போது, “எது என்ஜாய், அதன் வரையறை என்ன என்பதை பொறுத்திருக்கிறது. என்னுடைய என்ஜாய்மெண்ட்டின் வரையறை வேறு. நான் படித்தது வேறு. எங்களுடையக் குடும்பத்தின் கொள்கைகள் வேறு. பள்ளிக்கூட நாட்களிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். அதனால் நானும், என் குடும்பமும் எதையும் மிஸ் பண்ணவில்லை.” என்றப்படி கண்களை உற்று நோக்குகிறார்.

இசையைப் போலவே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆன்மிகத்தில் அவ்வளவு ஈடுபாடு. அதனால் நீங்கள் ஆன்மிகப் பாடல்களுக்கும் இசையமைத்தால் அது நன்றாக இருக்குமே என்றால், “நான் ஆன்மிகப் பாடல்களுக்கு அதிகம் இசையமைத்து இருக்கிறேன். நீங்கள் யாரும் அதைக் கேட்டது இல்லை. இந்தப் பாடல்கள் எல்லாம் எங்கள் குடும்பத்திற்காக மட்டுமே. நாங்கள் மட்டுமே கேட்பது பழக்கம். எதிர்காலத்தில் வாய்ப்பு அமைந்தால் பெரியளவில் ஆன்மிகப்பாடல்களுக்கும் இசையமைப்பேன்.” என மேல் நோக்கிப் பார்க்கிறார்.

நீங்கள் இசையமைத்தப் பாடல்களில் உங்களுக்குப் பிடித்த ஐந்துப் பாடல்களை பட்டியலிடுங்களேன் என்ற ஒரு கமர்ஷியலான கேள்வியைக் கேட்டோம். “இருவர் படத்திலிருந்து ‘நறுமுகையே’, காதலன் படத்திலிருந்து ‘என்னவளே’, சங்கமம் படத்திலிருந்து ‘மார்கழி திங்கள் அல்லவா’, உதயா படத்திலிருந்து ‘காதல்’, திருடா திருடா படத்திலிருந்து ‘வீரப்பாண்டிக் கோட்டையிலே’.” என்ற பட்டியல் அவரிடமிருந்து பட்டென்று வருகிறது.

பாடல்களில் அதிரடி காட்டுகிறீர்கள். ஆனால் பர்ஸனலாக இப்படி அமைதியாக, ஒதுங்கியே இருக்கிறீர்களே. உங்களுக்குள்ளே ஒரு அதிரடி கேரக்டர் ஒளிந்திருந்தால் மட்டுமே அதை வெளிக் கொண்டு வரமுடியும்.. சரிதானே என அவரை வம்புழுக்கு இழுத்த போது, “எல்லோரும் இதைதான் கேட்கிறார்கள் .(சிரிக்கிறார்). படம் அந்த மாதிரி இருக்கும்போது அதற்கேற்ற மாதிரிதானே இசையமைக்க முடியும். ஒருவேளை நான் எல்லா இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றியதால் கிளாஸிக்கல், ஹிந்துஸ்தானி, கர்நாட்டிக் என எல்லா இசையும் வருகிறது போல. இசைக்குள் நுழைந்துவிட்டால் அது வேறு விதமான வைப்ரேஷன். நான் வேறு ஆள்” என்ற போது சந்தோஷத்தில் முகம் மலர்கிறது.

தொழில் நுட்ப வளர்ச்சியினால் வந்திருக்கும் லேட்டஸ்ட் இசைக் கருவிகளால் இன்று இசையின் ஆத்மா கெட்டுப் போகிறது என்ற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன என்று கேட்ட போது.. “எல்லாமே நம்முடைய மனதைப் பொறுத்தது. ஒரு ஸிந்ததைஸர் மூலமாக நல்ல இசையைக் கொடுக்கலாம். வீணையில் ஒரு மட்டமான இசையைக் கொடுக்கலாம். வீணையில் வாசிப்பது எல்லாமே நல்ல இசை என்றும் இல்லை. ஸிந்ததைஸரில் வாசிப்பது எல்லாம் மட்டமான இசையுமில்லை. உயிர் இல்லாத இசைக் கருவிக்கு நாம் எப்படி உயிர் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.” என தெளிவான வார்த்தைகளில் பதில் கிடைக்கிறது.

உங்களுடையப் படங்களில் புதுமையான குரல்களுக்காக அதிக பாடகர்களை அறிமுகப்படுத்தினீர்கள். இப்போது பல பாடகர்கள் இருந்தும் யாராலும் நிலைத்து நிற்கமுடியவில்லையே என இன்றைய சினிமா ட்ரெண்ட் பற்றிய கேள்விக்கு, “இது ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. தவறான ட்ரெண்ட்.. ஒரு குரல் மிக வித்தியாசமாக இருக்கிறது என்றால் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நானும் நாலைந்து குரல்களை அறிமுகப்படுத்துகிறேன் என்று இறங்கினால் அது தவறாகி போய்விடும்.” என்கிறார்.

இரவு நேரங்களில் இசையமைக்கும் பழக்கம் ஒரு பக்கம். மறுபக்கம் தனிமையில் உட்கார்ந்து யோசிக்கும் பழக்கமும் இருக்கிறதா என வினவினால் “நான் எப்போதும் தனிமையில்தானே இருக்கிறேன். (சிரிக்கிறார்). நீண்ட தூர பயணங்களின்போது அதிகம் யோசிப்பது வழக்கம். தனியாகதான் பயணங்களை மேற்கொள்கிறேன்.” என்கிற போது உற்சாகம் தெரிகிறது.

உங்களுடைய ஆன்மிக வாழ்க்கை எப்படி கழிகிறது என கேள்விகளின் போக்கை மாற்ற ஒரு சீரியஸான கேள்வியைக் கேட்ட போது, “ஆன்மிக வாழ்க்கையை சிம்பிளாகவும் முடிக்கலாம். சிக்கலாகவும் மாற்றிக்கொள்ளலாம். அது நம் கையில்தான் இருக்கிறது. ’நீ காட்டுக்குள் போய் பிரார்த்தனை செய்வது வீண். ஆனால் ஒரு குடும்பமாக வாழ்ந்து, அவர்களுடைய கஷ்டநஷ்டங்களை உணர்ந்து வெளிவரும் போது ஒரு மனிதனாக இருப்பாய்.’ என்கிறார்கள் பெரியவர்கள். அவர்கள் சொல்கிற வழியில்தான் நான் என் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். இப்போதே மிகப் பெரிய சந்தோஷமும், துக்கமும் எனக்கு ஒரே மாதிரியாகதான் தெரிகின்றது.” மெல்லிய புன்னகை அவரது படர்கிறது.

முன்பெல்லாம் அதிகம் பேசவே மாட்டீர்கள். இப்போது ட்விட்டரில் அடிக்கடி ட்விட் செய்ய ஆரம்பித்திருக்கிறீர்களே. இந்த மாற்றம் வந்தது எப்படி என தற்போதுள்ள பரபர சூழல் குறித்து கேட்டதும், “இது எல்லோருக்கும் நான் கொடுக்கும் ஒரு மரியாதை. சில விஷயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே. அதற்காகதான். அதனால்தான் இப்படி அனுப்பி சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.” என்கிறார்.

இறுதியாக உங்களின் அடுத்தக்கட்டம் என்ன என ஆர்வத்தோடு கேள்வியை முன் வைத்தபோது, “கோயிங் டு பேக். நல்ல விஷயங்கள் பலவற்றை விட்டுவிட்டு போய்விட்டோம். அதை மீட்டெடுக்க ஆசைப்படுகிறேன். நம்முடைய கிளாஸிக்கல் எஸென்ஸ்ஸை வைத்து ஒரு பிரம்மாண்டமான ஆர்கெஸ்ட்ராவை உருவாக்கவேண்டும். இதனுடைய வீச்சு அபாரமாக இருக்குமென நினைக்கிறேன்.” என முகம் மலர்கிறார்.

[இந்த நேர்க்காணல் க்ளாஸிக்கல் நேர்க்காணல் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...