No menu items!

வாவ் டூர்: டைட்டானிக் நகரில் சில நாட்கள் – சல்மா

வாவ் டூர்: டைட்டானிக் நகரில் சில நாட்கள் – சல்மா

எனது எல்லா செயல்பாடுகளுக்கும் உந்துசக்தியாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் பயணம். சிறு நகரமோ, வெளிநாடோ, பேருந்தோ, ரயிலோ, விமானமோ, எது கிடைத்தாலும் அதில் தொற்றிக்கொள்வேன். சலிக்காமல் பயணிப்பேன். புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரங்கள், புதிய உணவுகள் என வாழ்க்கையை செம்மைப்படுத்தப் பயணத்தினால்தான் முடியும். அதில் அதீத நம்பிக்கை எனக்குண்டு.

கோவிட் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்டுவரும் மன உளைச்சலை பயணங்கள் தடைபட்டுப்போனதும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. கோவிட் தந்த மன உளைச்சல்களில் அதுவே பிரதானமானது என்றும் சொல்லலாம்.

நவம்பரில் பயணத் தடைகள் மெதுவாக விலக்கப்பட்டுவந்த தருணத்தில் தான் அயர்லாந்தில் இருக்கும் என் மருமகளுக்கு டிசம்பரில் குழந்தை பிறக்கவிருந்தது. நான் அங்குச் செல்ல வேண்டும் என்பதால் விசாவிற்கு விண்ணப்பித்தேன். ஐரோப்பியப் பயணத்திற்கான கோவிட் சட்டதிட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்குள் நுழையும்போதும் வெவ்வேறாக இருந்ததனால் மல்டி எண்டரி போட்டு விசா கேட்கவில்லை.

அயர்லாந்து, நான் இதுவரை பயணித்திராத நாடு என்பதால் அதீத ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருந்தன. நம் நாட்டைப் போலவே பிரிட்டனின் ஆதிக்கத்தில் சிக்கி மொழியையும் வளங்களையும் தக்கவைத்து கொள்வதற்காக நீண்டகாலமாகப் போராடி விடுலை பெற்ற நாடு.

அங்குச் செல்கிறேன் என்று சொன்னதும் கவிதையும் பயங்கரவாதமும் இணைந்த நாடு என்றார் என் எழுத்தாள நண்பர். பிரிட்டனை எதிர்த்து போரிட்ட ஐரிஷ் ரெவலோசனரி ஆர்மியைத்தான் பிரிட்டன் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்திற்று. பிரிட்டனின் அட்டூழியங்களை அயர்லாந்து மக்கள் இன்னும் மறக்க தயாராக இல்லை. ஒரு நாட்டைக் கைப்பற்ற எத்தனை கொடூரமான வழிமுறைகளை கையாள முடியுமோ அத்தனையையும் அங்கே அரங்கேற்றியிருக்கிறது பிரிட்டன். கத்தோலிக்கம் மட்டுமே இருந்த இடத்தில் பிரிட்டன் புராட்டாஸ்டன்ட் மதத்தை கொண்டுவந்து மத மோதல்களை உருவாக்கியது வரலாறு. இன்று இரு மதங்களும் பின்பற்றப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் வயிற்றிலேயே இறந்துவிட்ட ஆறு மாதக் குழந்தையை கருக்கலைப்பு செய்வதற்குச் சட்ட அனுமதியில்லாமல் உயிர்விட்ட அவலம் சட்டென நினைவுக்கு வரக்கூடிய செய்தி. இதற்குக் காரணம், கருக்கலைப்பைக் கிறிஸ்தவ மதம் ஏற்கவில்லை என்பதால் அந்நாட்டுச் சட்டமும் ஏற்கவில்லை. அந்தப் பெண்ணின் மரணம் உலகமெங்கும் பேசுபொருளாகி பெரும் போராட்டமாக மாறிய பிறகு அந்நாட்டின் சட்டதிட்டங்களில் கருக்கலைப்பு குறித்த சிறிய மாற்றங்கள் உண்டாயின.

ஐரிஷ் மக்கள் தங்களது கேலிக் மொழியை இழந்துவிட்டு இன்று மறுபடியும் அதை மீட்டெடுக்க முயன்றபடி இருக்கிறார்கள். பள்ளிகளில் கட்டாயப் பாடம் என்றாலும் ஒரு சதவீத மக்கள் மட்டுமே கேலிக் மொழியைப் பேசும் நிலை அங்கே உள்ளது.

மலைகளும் புல்வெளிகளும் கடலும் சார்ந்த, எப்போதும் மழை பெய்கிற குளிர் பிரதேசத் தீவு இது. ஒரே நாளைக்குள் ஐந்து விதமான கால நிலைகளை பார்க்க இயலும். நான் போய் இறங்குவதற்கு முதல் நாள் கடும் புயலும் வெள்ளமும் இருந்திருக்கின்றன. நான் போய் இறங்கியபோது நல்ல மழை. தீவின் வடக்குப் பகுதி பெல்பாஸ்ட் இன்னும்கூட இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி. அங்குக் கூடுதலாக மழை பெய்யும் என்றார்கள். ஒருமுறை நார்வேயின் பெர்கன் நகரத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் எப்போதும் மழை. இந்த நகரத்தில் குழந்தை பிறக்கும்போதே குடையோடு பிறக்கும் என்று பழமொழி இருப்பதாகச் சொன்னார்கள்.

ஏராளமான அரண்மனைகள், கோட்டைகள், உயரமான மலை முகடுகள், வயல் வெளிகள், கடற்கரைகள், கலை, கலாச்சாரம், இலக்கியம் என்று பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்களைக் கொண்ட நாடு அயர்லாந்து. பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் உள்ள பெல்பாஸ்டிற்குப் பயணிப்பதற்கு இங்கு விசாவுக்கு விண்ணப்பிக்கும்போதே தனித்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அங்குள்ள பாடிவேகன் எனும் டூரிஸ்ட் பேருந்தில் பேலபாஸ்ட் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள். அதில் பயணித்தால் அவர்களே அனுமதி பெற்று அழைத்துப் போகிறார்கள்.

டப்ளின் இலக்கியத்தின் தலைநகரம். ஆங்கிலத்தில் எழுதிய பல பெரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், நோபல் பரிசை வென்றெடுத்தவர்கள் எனப் பலரும் இந்த நகரைச் சேர்ந்தவர்கள்தான். வில்லியம் பட்லர் யீட்ஸ், ஷேம்ஸ் ஷீனி, தாமஸ் மூர், பெக்கட், ஆஸ்கார் வைல்டு, ஜேம்ஸ் ஜோய்ஸ் எனப் பெருங்கவிஞர்கள், படைப்பாளிகளின் பிறப்பிடம் இந்த நகரம்.

டப்ளினில் உள்ள அத்தனை மியுசியங்களையும் ஆர்ட் கேலரிகளையும் இலவசமாகப் பார்வையிட இயலும் என்பது என்னைப் போன்றவர்களுக்கு எத்தனை அற்புதமான செய்தி. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளிலும் உள்ளது போல கட்டணம் செலுத்தித்தான் போக வேண்டுமென்கிற நிலை இங்கு இல்லை. நடந்து சென்றே நகரத்தின் அடுத்தடுத்த தெருக்களில் உள்ள அத்தனை மியூசியங்களையும் கேலரிகளையும் பார்த்துவிட இயலும். ஆனால், எனது துரதிர்ஷ்டம், நான் சென்றபோது கோவிட் காரணமாக அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

salma
ஐரிஷ் கவிஞர் பியோனா போல்கர் உடன்

ஐரோப்பிய நகரங்களைப் போன்றே மருத்துவமும் கல்வியும் இங்கே இலவசம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 150 யூரோ குழந்தையின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதோடு அந்தக் குழந்தைக்கான அத்தனை மருத்துவ ஆலோசனைக்காகவும் ஒரு மிட்வைஃப் நியமிக்கப்படுகிறார். அவர் வீட்டுக்கே வந்து குழந்தையின் எடை, நலம் குறித்தெல்லாம் ஆய்வு செய்துவிட்டுச் செல்கிறார். குழந்தை உடல் நலன் சார்ந்த எந்த பிரச்சினைக்கும் உடனே இவரைத் தொலைப்பேசியில் அழைத்து ஆலோசனை பெறலாம். தேவையெனில் அவரே மருத்துவரிடம் போகச் சொல்கிறார். ஆறு மாதங்களுக்கு அவர்தான் பொறுப்பு. தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளை வீடு தேடிச் சென்று சத்து மாவு, மருந்துகள் தந்து குழந்தையையும் தாயையும் பேணுகிறோம். கர்ப்ப காலத்தில் மாதா மாதம் உதவித் தொகை தருகிறோம்.

அயர்லாந்தில் இரண்டு, மூன்று, நான்கு என நிறையக் குழந்தைகள் பெறுவோர் அரசின் கூடுதல் நிதிகளை மாதந்தோறும் பெறலாம். இரட்டைக் குழந்தைகளை பெற்றவர்களுக்கும் இந்தச் சலுகை உண்டு. குடும்ப அமைப்பு சற்று வலுவாக இருக்கும் நாடு இது. நான்கு குழந்தைகளோடு பல பெற்றோர்களைக் காண முடிந்தது.

இங்கே விவாகரத்துச் சட்டம் இயற்றப்பட்டதே 1996ஆம் ஆண்டில்தான்.

18 ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்தில் நர்ஸ் வேலைக்காக ஆள் எடுத்தபோது ஏராளமான மலையாளிகளும் தமிழர்களும் அங்கு வந்து சேர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். மதுரைக்காரர்கள் பலரைப் பார்க்க முடிந்தது. இங்குள்ள பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தில் கல்வி கற்க முடியும் என்பதால் இங்கு இந்திய மாணவர்கள் பெருமளவில் கல்வி கற்க வந்து பிறகு வேலை கிடைத்து இங்கேயே செட்டில் ஆகியிருக்கிறார்கள். 18 ஆண்டுகளுக்கு முன்பு வந்த முதல் தலைமுறை இந்தியர்களோடு இன்றைக்கு வந்திருக்கும் மாணவர்களும் சேர்ந்துகொள்ள, எங்கு திரும்பினாலும் இந்திய முகங்களுக்குப் பஞ்சமில்லை. கார்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள்.

இனவாதம், நிற வெறி ஆகியவை மிகவும் குறைவான உள்ள நாடு இது. ஐரிஷ் நடுத்தர வர்க்கத்தினரும் கடந்த சில பத்தாண்டுகளில் மிக அதிகமாகப் பிற நாடுகளுக்குக் குடியேறியிருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் அதிகமாகக் குடியேறியிருக்கிறார்கள்.

ஐரிஷ் மக்கள் மிகுந்த நட்பு பாராட்டக்கூடியவர்கள். டப்ளின் அரண்மனையைப் பார்க்கச் சென்றிருந்தேன். புதுப்பிக்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு நேரம், தொழிலாளி ஒருவர் கைகளில் சாக்லெட், குளிர்பானத்தோடு நின்றுகொண்டிருந்தார். அவரை அணுகி எந்த நுழைவாயில் வழியே செல்ல வேண்டும் எனக் கேட்டேன். உற்சாகமாகக் கூடவே வந்து வழிகாட்டியவர், இதைச் சாப்பிடுங்கள் என சாக்லேட்டைக் கொடுத்தார். நீங்கள் வழிகாட்டியதே போதும் என எவ்வளவு மறுத்தும் அவர் தந்துவிட்டுத்தான் சென்றார்.

salma, ireland, tour

Hugh Lane ஆர்ட் கேலரி மிகப்பெரும் ஓவியக்கூடம். மிகப் பழமையான, அற்புதமான ஓவியங்கள் Hugh Lane என்பவரால் சேகரிக்கப்பட்டு சிட்டி ஆர்ட் கேலரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆர்ட் கேலரிதான் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் முதன் முதலாக பிப்ரவரியில் திறக்கப்பட்டது. எனது ஐரிஷ் தோழி கவிஞர் பியோனா போல்கர் பெங்களூர் தமிழரை மணம் செய்தவர். நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர். அவருடன் அங்கு சென்றிருந்தேன். அத்தனையும் பிரமாதமான விலைமதிப்பற்ற ஓவியங்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அயர்லாந்தில் சரியான கேலரி இல்லை என்பதனால் சில ஓவியங்களை இங்கிருந்து லண்டன் நேஷனல் கேலரியில் வைப்பதற்காக அனுப்பியிருக்கிறார் Hugh Lane. அங்கு அவர்கள் அதனை உரிய முறையில் காட்சிப்படுத்தவில்லை என வருத்தத்தில் மறுபடியும் அவை அயர்லாந்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என உயில் எழுதியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவரும் கவிஞர் யீட்ஸும் ஏனைய நண்பர்களோடு இணைந்து இந்த டப்ளின் சிட்டி ஆர்ட் கேலரியை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். Hugh Lane 39 வயதில் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு அந்த உயிலுக்கு சாட்சி இல்லை என இங்கிலாந்து பொய்யாகக் காரணம் சொல்லி அந்த விலைமதிப்பற்ற ஓவியங்களைத் தர மறுத்து உரிமை கொண்டாடியது. இன்றும் அந்த ஓவியங்களை விட்டுத்தர இங்கிலாந்து தயாராக இல்லை.

ஓவியங்களை பார்த்துப் பிரமித்து நின்றேன். அத்தனை உயிர்ப்பு மிக்கவை. இந்த கேலரியில் ஐரிஷ் ரைட்டர்ஸ் யூனியன் இருக்கிறது. எழுத்தாளர்கள் அதில் உறுப்பினர்களாகலாம். புத்தக வெளியீடுகளை, உரையாடல்களை நிகழ்த்தலாம். அருகில் ஐரிஷ் ரைட்டர்ஸ் மியூசியம் இருந்தது.

டப்ளினில் ட்ரினிட்டி கல்லூரி லைப்ரரி மிகப் பிரம்மாண்டமானது. டப்ளின் செல்கிற எழுத்தாளர்கள் அங்கு செல்லாமல் திரும்ப மாட்டார்கள். இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்படுகிற ஒவ்வொரு புத்தகமும் அங்கிருக்கும் என்றார்கள்.

நகரின் அருகிலேயே முப்பது சதவீதம் இடத்தில் பீனிக்ஸ் பார்க் அமைந்திருக்கிறது. நியூயார்க் மன்ஹாட்டனின் சென்ட்ரல் பார்க்கின் விஸ்தீரணத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். இது அதைவிடவும் வியப்பூட்டக்கூடியதாக உள்ளது. 1752 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாதமான பூங்கா. ஏராளமான மான்கள், மரங்கள், புல்வெளிகள் எனச் சுற்றி வருவதற்குச் சில நாட்கள் தேவைப்படும் பூங்கா.

தடுக்கி விழும் இடமெல்லாம் ஐரிஷ் பப். பிரசித்தி பெற்ற டெம்பிள் பார் கின்னஸ் பியர் தொழிற்சாலை எனக் கொண்டாட்டமான நகரம் டப்ளின். ஹென்றி ரோடு, பிராண்டன் ரோடு என அழகிய தெருக்கள். உலகத்தின் அத்தனை பிராண்டுகளும் கிடைக்கும். இரவுகளில் தெருவில் பப்களுக்கு வெளியேயும் உள்ளேயும் கேட்கும் இளைஞர்களின் இரைச்சல் நமக்கும் உற்சாகத்தை உண்டுபண்ணக்கூடியவை.

ஐரிஷ் பப்களில் ஐரிஷ் கெல்டிக் நடனம் மிகப் பிரசித்தமானது. ஐரிஷ் உணவுடன் கூடிய இரண்டு மணிநேரக் காட்சிகள் எப்போதும் உண்டு. பன்றி இறைச்சி, உருளைக்கிழங்கு, மாட்டிறைச்சி சாஜேஸ்தான் ஐரிஷ் உணவு. பிஷ் அண்ட் சிப்ஸ் எங்கும் நிறைந்திருக்கிறது. விஸ்கி கலந்ததுதான் ஐரிஷ் காபி.

நகரை பிரித்தபடி ஓடும் Liffy நதி, இணைக்கும் ஹா ஃப் பென்னி பிரிட்ஜ், பஞ்சத்தில் இறந்த மக்களுக்காக வைக்கப்பட்டருக்கும் ஐரோப்பாவின் மிக உயர்ந்த உலோகத் தூண் என வரலாற்றை நினைவுபடுத்திக்கொள்ளப் பல விஷயங்கள் இங்கே உண்டு.

அயர்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்சின் ‘யுலிசிஸ்’ நாவல் வெளியாகிய நூற்றாண்டை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்ற அந்தப் படைப்பாளியை கவுரவிக்கத் தபால்தலை வெளியிட்டிருக்கிறது அரசு. அப்போது கடும் வெறுப்பையும் விமர்சனத்தையும் எதிர்கொண்ட இந்தப் படைப்பு இன்று கொண்டாடப்படுகிறது.

ஜேம்ஸ் ஜோய்ஸின் பெற்றோர் கடும் வறுமையில் இருந்த காலத்தில் வீட்டிற்கு வாடகை செலுத்த இயலாமல் நள்ளிரவில் வீட்டிலிருந்து துரத்தப்பட்டார்கள். இன்று டப்ளினின் எந்தத் தெருவில் நடந்தாலும் இதோ இந்த வீட்டில் ஜேம்ஸ் ஜோய்ஸ் வசித்தார் எனச் சொல்வதற்கான பல தெருக்கள் உண்டு. அவர் வசிக்காத தெருவே இல்லை என வேடிக்கையாக சொன்னாலும் வறுமை எந்த அளவு அக்குடும்பத்தை ஆட்கொண்டிருந்தது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். துயர் மிகுந்த அனுபவங்கள் அந்த படைப்பாளியின் வாழ்வில் ஊடாடியிருந்திருக்கிறது.

டப்ளினின் தலைமை தபால் அலுவலகத்தின் வாயிலில் Muse என்னும் இஸ்லாமியப் பெண்கள் அமைப்பு ஏழைகளுக்கு உணவு அளிப்பதைத் தினமும் மாலை நேரம் பார்ப்பேன். அந்தக் கடும் குளிரில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டமாக நின்று வாங்கி செல்வார்கள். அந்தப் பெண்கள் குழுவோடு தானும் இணைந்துகொள்வதாக பியோனா சொன்னார்.

salma, ireland, tour

பெல்பாஸ்ட் நகரத்தில்தான் டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டது. கோப் எனும் அழகிய நகரத்தில் நின்று சில பயணிகளை ஏற்றிச் சென்ற பிறகுதான் மூழ்கியிருக்கிறது. கார்க் கவுண்ட்டியில் இருக்கிறது அந்தச் சின்னஞ்சிறிய அழகிய நகரம். அங்குள்ள அழகிய சர்ச் சுற்றுலாப் பயணிகள் தவறவிட கூடாத ஒன்று.

நாட்டை பிடித்துக்கொண்டு மொழியை இழந்தவர்கள் என்று அயர்லாந்தைச் சொல்வார்கள். இங்கிலாந்துக்கு எதிராக தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தபோது அயர்லாந்து புரட்சிகரத் தலைவன் டி வலோரா, “உங்களுக்கு அயர்லாந்து வேண்டுமா, கேலிக் மொழி வேண்டுமா என்று எங்களிடம் கேட்டால், அயர்லாந்து கோரிக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு கேலிக் மொழியைக் கேட்டுப் பெறுவேன்” என்று சொன்னான். சுதந்திரத்திற்குப் பிறகு கெலிக் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டு ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக்கப்பட்டது என்றாலும் ஆங்கிலம்தான் இன்றும் கோலோச்சுகிறது.

பள்ளிக்கூடங்களில் மும்மொழிக் கல்வி இருக்கிறது கல்லூரிகளில் ஆங்கிலமே பிரதானம். கேலிக் மொழி பேசுகிற ஐரிஷ்காரர்கள் மிகக் குறைந்த விகிதம்தான். அயர்லாந்தில் போலிஷ் மொழி பேசுபவர்களின் சதவீதம் கூடியிருக்கிறது. போலிஷ் நாட்டவர்கள் வேலைக்காக அயர்லாந்தைத் தேடி வந்துகொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் தலைமையகங்கள் இங்கே வந்த பிறகு ஏராளமான இந்திய இளைஞர்களும் தொழில்நுட்பத் துறைப் பணிக்கு வந்திருக்கிறார்கள்.

நியூ கிரேஞ்ச் என்கிற கல்லறை டப்ளினுக்கு அருகே உள்ளது. ஒரு மணிநேரத்தில் அங்கு செல்லலாம். எகிப்தின் பிரமிடுதான் பழமை வாய்ந்தது என்பது உண்மையல்ல. இதுதான் அதைக் காட்டிலும் பழமையானது.

மணல் குன்று ஒன்றின் மேல் புல்வெளிப் பிரதேசத்தில் வெறும் கற்பாறைகளை ஒன்றின் மீது இன்னொன்றைச் சொருகிச் சொருகிக் கட்டியிருக்கிறார்கள். அதன் தாழ்வான நுழைவாயில் உள்ளே தவழ்ந்துதான் நாம் போக முடியும். வெளியிலிருந்து தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு சூரிய ஒளி உள்ளே வரும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமூட்டும் கட்டிடக்கலை.

அந்தப் பாறைகள் எங்கிருந்து எப்படி இந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டன, எப்படி இத்தனை உயரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு ஒரு கட்டிடம் உருவாக்கப்பட்டது, இத்தனை ஆண்டுக் காலம் பாறைகள் நழுவாமல் விலகாமல் இருப்பது எப்படி என்பதையெல்லாம் பார்க்க எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. அயர்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று இது.

பிப்ரவரி முதல் வாரத்தில் புகழ்பெற்ற டப்ளின் இலக்கிய விருதின் லாங்லிஸ்ட் அறிவிப்பு வெளியாகிற்று. எண்பது நாவல்களில் முப்பது நாவல்களில் ஒன்று என்னுடையது. மீனா கந்தசாமி மொழிபெயர்த்து லண்டன் Tilted Axe பதிப்பித்த ‘மனாமியங்கள்’ மொழியாக்கமான ‘விமன் ட்ரீமிங்’ தேர்வாகிற்று. நான் அங்கே இருக்கும்போது வந்த அந்த அறிவிப்பு தற்செயலாக நடந்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நகரத்தின் எல்லாத் தெருக்களிலும் தேர்வான புத்தகங்களின் அட்டைப்படங்கள் தாங்கிய பிரமாண்டமான பில் போர்டுகள் வைக்கப்பட்டன. டப்ளின் சிட்டி கவுன்சிலின் சார்பாக அவை வைக்கப்பட்டிருந்தன. இலக்கியத்தைக் கொண்டாடும் நாடு அல்லவா? பல்வேறு ரேடியோ, நாளிதழ்களுக்குப் பேட்டி தர வேண்டியிருந்தது.

இந்த செய்தியை அறிந்து, நான் டப்ளினில்தான் இருக்கிறேன் என்பதை இந்திய தூதரின் செயலர் அகிலேஷ் மிஸ்ராவுக்குத் தகவல் தெரிவித்தார் பியோனா. மிஸ்ரா என்னை தூதரகத்திற்கு அழைத்தார். தமிழில் ஒரு சில வார்த்தைகள் அறிந்த, இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர் மிஸ்ரா. வாரணாசியைச் சார்ந்தவர்.

ஐரிஷில் தமிழ் அமைப்புகள் தம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுத் தருகிறார்கள். தமிழ் ஆர்வம் கொண்ட ஜான் ரிச்சர்ட், சரவணன் போன்றவர்களது முயற்சியால் வாரம் ஒருநாள் தமிழ் வகுப்புகள் நடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஆசிரியைகளாக அந்த வகுப்புகளை நடத்துகிறார்கள்.

ஒன்பது பேர் கொண்ட இந்தக் குழு ஒருங்கிணைத்து நடத்தும் வகுப்புகளில் முப்பது தன்னார்வ ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். அயர்லாந்தின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக இது இயங்குகிறது. (https://irelandtamilacademy.org)

salma, ireland- tour
தமிழ் வகுப்பு ஆசிரியர்களுடன்

பியோனா கென்ட் ஸ்ட்ரீட் லைப்ரரியில் எனக்கான ஒரு வாசிப்பையும் கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்தார். கோவிட் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக நடந்த நிகழ்வு அது. முதலாவது தமிழ் நிகழ்வும் அதுதான் என்று சொல்லி வாழ்த்தினார் நூலகர். கடும் குளிரிலும் அரங்கு நிறைந்திருந்தது. எனது நாவலின் ஆங்கிலப் பிரதிகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.

அங்குள்ள லிட்ரேச்சர் ஐலண்ட் என்னும் தனியார் அமைப்பு அரசின் நிதி உதவியோடு பிற மொழிகளில் அந்நாட்டு எழுத்தாளர்களின் படைப்பை மொழியாக்கம் செய்கிறது. ஜான் பானவெல்லின் ‘கடல்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலைப் பார்த்தேன்.

ஜி. குப்புசாமி மொழியாக்கம் செய்த இந்த நாவலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இன்னும் சில தமிழ்ப் புத்தகங்களையும் பார்த்தேன். லிட்ரேச்சர் ஐலண்ட் அலுவலகத்திற்கு அதன் இயக்குநர் Sineadஉடன் சென்றிருந்தேன்.

எனது மூன்று மாதப் பயணத்தில் அங்குக் காண்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் கோவிட் காரணமாக அத்தனை மியூசியங்களையும் வெளியில் நின்று ஏக்கத்தோடு பார்த்ததுதான் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தினமும் காலை என் மகன் வீட்டிலிருந்து பேருந்தில் கிளம்பி அரை மணிநேரப் பயணத்தில் நகரத்தை அடைவேன். மூடப்பட்டிருக்கும் மியூசியங்களுக்கு முன்னே சற்று நேரம் நின்றுவிட்டு, திறந்திருக்கும் இடங்களையும் தெருக்களையும் சுற்றி வருவேன். மாலை வீடு திரும்புவேன்.

பார்க்காமல் விட்ட இந்தக் கலை சார்ந்த விஷயங்கள்தான் மீண்டும் அயர்லாந்திற்கு செல்ல வேண்டும் என்று ஏங்க வைப்பதற்கான காரணங்களாக இருக்கின்றன. அதிக இடங்களைச் சுற்றிப் பார்க்காவிட்டாலும் எனது எந்தப் பயணத்திலும் இல்லாத மனத் திருப்தி அயர்லாந்து பயணத்திலிருந்தது. பேத்தியோடு இருந்தது மட்டுமல்ல, என்னுடைய நாவல் டப்ளின் விருதுக்கான லாங் லிஸ்டில் இடம்பெற்றதும், இலக்கியத்தின் தலைநகரில் இருந்தேன் என்பதும் அந்த மனத் திருப்திக்குக் காரணங்களாக இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...