No menu items!

சிறுகதை: உலகம் ஒரு கிராமம் – ஆசி. கந்தராஜா

சிறுகதை: உலகம் ஒரு கிராமம் – ஆசி. கந்தராஜா

பிறந்த மண்ணைத் தொலைத்துப் புதிய வாழ்க்கை தேடும் எலியோட்டத்திலே,  ஆபிரிக்க நாடொன்றில் சயந்தனைச் சந்தித்தான் கணேசன். இலங்கையில் நடந்த இனக் கலவரம், அதைத் தொடர்ந்த போராட்டம், புலம் பெயரும் நிர்ப்பந்தம் போன்ற பல்வேறு காரணிகளால் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்து விட்டார்கள். இப்போது இருண்ட கண்டத்தின் நாடொன்றிலே எதிர்பாராத சந்திப்பு.

கல்லூரி நாட்களில் சயந்தனும் கணேசனும் பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர்கள். பிற மொழி இலக்கியங்களைச் சயந்தன் நிறையவே வாசிப்பான். மரபுகள் மீறப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது அவன் கொள்கை. இது சம்பந்தமாக பலதடவைகள் அவன் கல்லூரி நண்பர்களுடன் முரண்பட நேர்ந்ததும் உண்டு. பணம்தேடி அலையும் இப்போதைய வாழ்க்கையிலே இலக்கியச் சிந்தனைகளைத் தான் அடியோடு தொலைத்துவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டான். அங்கு நிற்கும்வரை இரவுச் சாப்பாட்டுக்கு தனது வீட்டுக்கு வருமாறும் அன்புக் கட்டளையிட்டான்.

அங்குள்ள சர்வதேசிய நிறுவனம் ஒன்றின் நிதிக் கட்டுப்பாட்டாளராக சயந்தன் பணிபுரிந்ததால் சகல வசதிகளும் கொண்ட பாரிய பங்களா ஒன்றை அவனுக்கு ஒதுக்கியிருந்தார்கள். சயந்தனின் வீட்டில் பீட்டர் என்ற சுதேசி இளைஞன் குடும்பத்தில் ஒருவனாக வளைய வந்தான். அவனே சயந்தனின் அலுவலக உதவியாள், சாரதி, வீட்டு வேலைக்காரன் எனச் சகலகலா ஊழியன். இட்லி, தோசை, சப்பாத்தி முதல்கொண்டு இந்திய உணவுவகைகளை சுவையாகச் சமைப்பான் என சயந்தனின் மனைவி சொன்னார். விசுவாசம் என்பதின் அர்த்தத்தை அவனிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பீட்டருக்கு நற்சான்றிதழ் வழங்கினான் சயந்தன்.

இரவுச் சாப்பாடு முடிந்ததும் பலதும் பத்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆப்பிரிக்க இலக்கியம், எழுத்தாளர்கள், அங்கு வாழும் ‘ட்ரைபல்’ இனங்களின் பழக்கவழக்கங்கள் பற்றிக் கலந்துரையாடும்போது பீட்டர் பற்றிப் பேச்சுத் திரும்பியது.

பீட்டருக்கு குலவழக்கப்படி திருமணம் முடிந்துவிட்டதாம். பீட்டருக்கும் பெண்ணுக்கும் பதினைந்து வயது வித்தியாசம். பெண் படிக்க விரும்பினாள். அவளின் படிப்பிற்கான செலவையும் இவனே ஏற்றுக் கொண்டானாம். படிப்பை முடித்தபின்பும் இவனுடன் கூடிவாழ்வதை அவள் பின்போட்டுக் கொண்டே வந்தாள். பின்புதான் தெரியவந்தது அவள் வேறொரு பணக்காரனுடன் தொடர்பு வைத்திருப்பது.

பீட்டர் பற்றிய இந்த வர்த்தமானத்தை சயந்தன் பேச்சோடு பேச்சாக சொன்னான்.

“பீட்டர் என்ன செய்தான்?” என நண்பனை நோண்டினான் கணேசன். அவன் எப்பொழுதும் ஒரு கதைப்பிரியன்.

இடையில் பிடித்துக் கொண்டவனை மறந்து தன்னுடன் வந்து வாழும்படி மனைவியை அழைத்தானாம். ‘உன்னிடம் என்ன கார் பங்களா இருக்கிறதா? என்ன சுகத்தை உன்னிடம் காணப்போகிறேன்? என முகத்தில் அடித்தால்போல் கூறிவிட்டாளாம். சென்ற வருடம்தான் பீட்டருக்கு அவனது குல வழக்கப்படி விவாகரத்து கிடைத்தது’ என்று சயந்தனும் மனைவியும் தெட்டம் தெட்டமாக விசயத்தைக் கூறினார்கள்.

“பீட்டரின் நல்ல மனசுக்கு நிச்சயம் நல்லதொரு பெண் கிடைப்பாள்’’ என அவனுக்காக அனுதாபப்பட்டான் கணேசன்.

‘அங்கேதான் சிக்கல். பீட்டரிடம் மணப்பெண் கூலி கொடுப்பதற்குப் பணம் இல்லை. இங்கு ஆண்கள் மணம் முடிக்கும் பெண்ணின் தந்தைக்கு பணம் அல்லது பொருள் கொடுத்து பெண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வாங்கவேண்டும் என்றும் சொல்லலாம். இதனால் பல ‘ட்ரைபல்’ இனங்களில் வரதட்சணைக் கொடுமையால் வாழா வெட்டிகளாக ஆண்களே வாழ்கிறார்கள். அத்தகையவர்களுள் பீட்டரும் ஒருவன்’ என்று பீட்டரின் குலத்தவர்கள் கடைப்பிடிக்கும் திருமண சம்பிரதாயங்களை சயந்தன் சிரத்தையுடன் விளக்கினான்.

இப்போது பீட்டர் ஒரெயொரு நம்பிக்கையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறானாம். அந்தப் பணக்காரன், அவளைக் குலவழக்கப்படி கலியாணம் செய்து கொள்ளவேண்டும். அப்போதுதான் அவளுக்காக அவன்  கொடுத்த மணப்பெண் கூலியையும் படிப்புக்கு செலவு செய்த காசையும் திருப்பிக் கேட்டு வாங்கமுடியும் என மேலும் விபரம் சொன்னார் சயந்தனின் மனைவி.

பிரிக்க நாட்டில் கணேசனின் பணி இனிதே நிறைவேறியது. இனி ஊர் திரும்பும் ஆயத்தங்கள்.

கணேசனும் சயந்தனும் வரவேற்பறையில் பேசிக்கொண்டிருந்தார்கள். பீட்டரும் ஒரு மூலையில் அமர்ந்து உரையாடலில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளித்தது. ஆபிரிக்க சமூகம் சார்ந்த சிக்கல்கள், இன்றைய இளம் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி மிக ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை, பீட்டர் அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தான். அவனது சமூக சிந்தனைக் கருத்துக்கள், அவன்மேல் கணேசனுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தின.

மெதுவாக குடும்ப விசயங்களுக்கு உரையாடல் திரும்பியது. சயந்தனுக்கு இலங்கையில் பல சகோதரிகள். இவன்தான் குடும்பத்தில் ஒரே ஆண்பிள்ளை. அதுவும் மூத்தவன். அடுத்தடுத்து ஆறு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு தகப்பன் கண்ணை மூடிவிட்டார். இவனே குடும்பப் பொறுப்புகளை ஏற்று சகோதரிகளை ஒவ்வொன்றாக கரைசேர்த்து வந்தான். கடைசித் தங்கைக்கு இன்னமும் திருமணமாகவில்லை என்று சொன்னான். பணம்தான் பிரச்சனை என்றும், மனைவி இப்போது புறுபுறுக்கத் துவங்குவதாகவும், எமக்கென்று ஒரு சேமிப்பு வேண்டாமா? எமது பிள்ளைகளை யார் பார்ப்பார்கள்? என்று கேட்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டான்.

யாழ்ப்பாணத்திலுள்ள வரதட்சிணை நிலவரம்பற்றி, கணேசன் கூறியதை செவிமடுத்த பீட்டர், “என்ன விசித்திரம்? இங்கு ஆண்கள் வரதட்சிணைக் கொடுமையால் கஷ்டப்படுகிறோம். உங்கள் நாட்டிலோ பெண்கள் வாடுகிறார்கள்” என்று கூறி வாய்விட்டுச் சிரித்தான்.

அன்று படுத்தும் கணேசனுக்குத் தூக்கம்வரவில்லை. பீட்டர் இறுதியாகச் சொல்லிச் சிரித்த விமர்சனக் குறிப்பு மீண்டும் மீண்டும் மனக்கண்முன் வந்துபோயின.

இலங்கை, இந்தியாவில் நிலவும் வரதட்சிணைச் சந்தை பற்றி விலாவாரியாகச் சொல்லத் தேவையில்லை. புத்திஜீவித பேருரைகளும் பெண்கள் விடுதலை முழக்கங்களும் மேடையில் மட்டுமே செல்லும். வாழ்க்கைக்கு என்றுமே உதவுவதில்லை என்ற எண்ணம் மேலிட, கணேசன் புரண்டு புரண்டு படுத்தான்.

உண்மையில் உலகம் சுருங்கிவிட்டது. நாளை மறுதினம் சிட்னியில் மனைவி மக்களுடன் கணேசன் இருப்பான். ‘உலகம் ஒரு கிராமமாகியுள்ளது’ என்ற சொல்லடை புழக்கத்துக்கு வந்துள்ளது.

சயந்தனின் தங்கையிடம் பணமில்லை. இதனால் அவளுக்கு ஒரு கலியாண வாழ்க்கை வாய்க்கவில்லை. முதிர்கன்னியாக இலங்கையிலே  பெருமூச்சுவிட்டு வாழ்கிறாள். இங்கு ஆபிரிக்காவில், பீட்டர் நல்ல உழைப்பாளி, நேர்மையானவன், புத்திசாலி, வாட்டசாட்டமாக இருக்கிறான். அவனால் ஒரு பெண்ணைக் கௌரவமாக வைத்துக் காப்பாற்றிக் குடும்பம் நடத்தமுடியும். அவன் இப்போது மணப்பெண் கூலி கொடுக்க முடியாது கட்டைபிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

பீட்டருக்கு தன் தங்கையை சயந்தன் மணம்முடித்துக் கொடுப்பானா? அன்றேல் மாஸ்டரின் தங்கையை மணம்முடிக்க பீட்டர் முன்வருவானா?

எல்லைகள் அறுந்துபோன கோளமயமாதல் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தினை கணேசன் நாளை தன் வீடு நோக்கிய பறப்பில் தேடுவானோ?

ஓவியம்: பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...