No menu items!

நிர்மலா சீதாரமன் Vs கனிமொழி: மக்களவையில் காரசாரம்

நிர்மலா சீதாரமன் Vs கனிமொழி: மக்களவையில் காரசாரம்

நேற்று மக்களவையில் விலைவாசி மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல கட்சிகளின் உறுப்பினர்கள் பல கருத்துக்களை முன்வைத்து பேசினர். குறிப்பாக திமுகவின் தூத்துக்குடி நாடாளுன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதும் அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காரசாரமாக பதிலளித்தார். அதன் விவரங்கள் பின்வருமாறு:

திமுக., எம்.பி., கனிமொழி பேசும்போது, “பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருப்பு பணம் பற்றி பேசினார். கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 2016 பணமதிப்பிழப்பு கொண்டு வந்தது. பல சிறு குறு தொழில்களை மிகவும் பாதித்தது. ஆனால், மக்கள் அவற்றை பொறுத்துகொண்டதற்கு காரணம் கருப்பு பணம் இல்லாமல் போகும் என்ற பாஜகவின் வாக்குறுதி.

அதேபோல் வெங்காயம், தக்காளி விலை குறைந்தது என்று கூறினார். அதை வைத்து ஒரு குடும்பம் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா? 1ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை பிரதமருக்கு பென்சில் விலையேற்றத்தை குறித்து கடிதம் எழுதியுள்ளார் அவற்றுக்கு பதில் என்ன?

2012-ல் ரூ.68 விற்ற ஒரு லிட்டர் பாமாயில் இன்று ரூ.160; ரூ.70க்கு விற்ற வனஸ்பதி இன்று ரூ.170; ரூ.116 ஆக இருந்த கடலை எண்ணெய் இன்று ரூ.188க்கு விற்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது, பெட்ரோல் டீசல், விலையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. மறுபக்கம் வருமானத்தை அதிகரிக்க வழியே இல்லையே. பல குடும்பங்கள் இதனால் அவர்களது வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டனர்.

இந்த அரசு கார்ப்பரேட்டுக்கு மட்டுமே சாதகமாக வரி சலுகைகள் அளிக்கிறது. சுதந்திரம் பெற்ற பல ஆண்டுகளில் இப்போது பெரிய அளவில் மக்கள் வேலை இல்லாமல் தவித்து வரும் நிலை நிலவி வருகிறது. இப்போது இந்த நாட்டில் இருக்கக் கூடிய இளைஞர்களுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அச்சுறுத்தலாக மாறி ‘எங்களுடைய எதிர்காலம் என்ன’ என்று அவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு கடன் கொடுக்க இந்திய ரிசர்வ் வங்கி தயாராக இல்லை என்று பாஜக உறுப்பினர் கூறினார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு முதலில் மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும். எங்களுக்கு வேறு எந்த கடனையும் தர வேண்டாம்” என பல கேள்விகளை முன் வைத்து கடுமையாக சாடினார்.

இவற்றுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்று. அதற்கு மக்களே காரணம். இந்த விவாதத்தில் வைக்கப்பட்ட கருத்துகள், தரவுகள் அடிப்படை இல்லாமல் அரசியல் அடிப்படையில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. எம்பி கனிமொழி பென்சில் விலையேற்றத்தினால் சிறுமி எழுதிய கடிதம் பற்றி கூறினார். தன் மனதில் உள்ளதை பிரதமருக்கு கடிதமாக எழுதினால் அவர் எதாவது செய்வார் என்ற எண்ணத்தில் அச்சிறுமி எழுதியுள்ளார்” என்றார்.

இடையில் கனிமொழி குறுக்கிட்டு, “தமிழிலோ ஆங்கிலத்திலோ பதிலளியுங்கள்” என்று கூறினார். தொடர்ந்து நிர்மலா சீதாராமன் அவைத் தலைவரிடம் தான் கனிமொழி ஜிக்காக கண்டிப்பாக தமிழில் பதிலளிப்பேன் என்றார்.

அதன்பிறகு தமிழில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “2021 நவம்பர் பெட்ரோல் மீதான வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 10 ரூபாயும் மோடி குறைத்தார். தொடர்ந்து மே மாதம் மீண்டும் பெட்ரோல் மீதான வரியை ரூ. 9.50 காசுகளும் டீசல் மீது ரூ. 7 என்ற வகையிலும் விலை குறைக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் திமுக பெட்ரோல் டீசல் மீது ரூ 5, ரூ 4 குறைப்போம் என்று கூறியிருந்தனர்” என்றார்.

இதனைத் தொடர்ந்து அவையில் கருப்பு பணம் குறித்த கேள்விகள் எழுந்தன. மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நிர்மலா சீதாரமனின் உரைக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆயினும் கோபமாக தொடர்ந்த மத்திய நிதியமைச்சர், ‘அவையில் பேசவே அவர்களுக்கு தெரியவில்லை’ என்றார். தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது. அதனால் காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணி எம்பிகள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சிதாராமன், “இருமுறை நாங்கள் வரியை குறைத்தும், ஒருமுறை கூட உங்கள் அரசாங்கம் வரியை குறைக்காதது ஏன் என்று தமிழக நிதி அமைச்சரிடம் கேட்டபோது அவர் நாங்கள் தேதி குறிப்பிடவில்லை என்று கூறினார். இது முதலை கண்ணீர் கதை.

பால் விலை குறித்து திமுக குற்றச்சாட்டு வைத்தனர். நாங்கள் பிராண்டுக்கு தான் வரி விதித்தோம். கரந்த பாலுக்கு அல்ல.  பிராண்ட்டட் ஐட்டங்கள் மீது மட்டும்தான் வரி போட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தபோது உங்கள் அமைச்சரும் அதில் இருந்தார். அவரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் இருக்கிறார். ஒரு கிலோ தயிரின் பழைய விலை ரூ100. இப்போது ஜிஎஸ்டியுடன் ரூ105 ஆக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் அதை ரூ 120க்கு விற்பனை செய்து வருகிறீர்கள். கவுன்சில் 5%தான் வரி விதித்தது. நீங்கள் விற்கும் விலை என்ன?

மோர் பழைய விலை ரூ10, 5% ஜிஎஸ்டியுடன் அதன் விலை 10.50 ஆக இருக்க வேண்டும். ஆனால், 12 ரூபாய்க்கு விற்கிறீர்கள். இது நியாயமாகுமா? ஜிஎஸ்டியை காரணம் காட்டி, அதன் மீது பழியிட்டு நீங்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்கிறீர்கள். ஒருமனதாக முடிவெடுத்த அதே கூட்டத்தில் உங்கள் அமைச்சரும்தான் கலந்துகொண்டார். அதில் ஏழைகளை பாதிக்கும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

மேலும், “ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சிதாராமன், 2022ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டம்வரை மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜூன் மாத நிலுவைத் தொகை மட்டுமே நிலுவையில் உள்ளது” என்றும் கூறினார்.

இந்த காரசார விவாதம் தான் இப்போது பேசும் பொருளாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...