No menu items!

நியூஸ் அப்டேட்: இபிஎஸ் வழக்கு – சிபிஐ விசாரணை ரத்து

நியூஸ் அப்டேட்: இபிஎஸ் வழக்கு – சிபிஐ விசாரணை ரத்து

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டரில் 4800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக, 2018இல் திமுகவைச் சேர்ந்த  ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

அதன்பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே இல்லை. இதையடுத்து இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ விசாரணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றையை குறைவாக ஏலம் விட்டது ஏன்? ஆ. ராசா கேள்வி

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, “2ஜி அலைக்கற்றையில் குரல் மட்டும்தான் சென்றடையும். 3ஜி அலைக்கற்றை மூலம் வீடியோக்களை பார்க்க முடிந்தது. 4ஜி அலைக்கற்றையில் அதன் திறன் இன்னும் அதிகரித்தது. 5 ஜி அலைக்கற்றை அதனை விட இன்னும் திறன் வாய்ந்தது. 5ஜி அலைக்கற்றையில் நீங்கள் தேடும் விஷயங்கள் ஒரு நொடியில் வந்துவிடும்.

அந்த திறன் அடிப்படையில் பார்த்தால் 5ஜி அலைக்கற்றை ஏலம் 5 லட்சம் கோடி அல்லது 6 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்றரை லட்சம் கோடிக்குதான் சென்றிருக்கிறது. 5 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்டது என்பதை நான் சொல்லவில்லை, மத்திய அரசுதான் சொன்னது. அப்படியென்றால் குறைவாக ஏலம் விட்டது திட்டமிடுதலில் மோசமா? 4-5 நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்துவிட்டதா? அவை குறித்து விசாரிக்க வேண்டும். எங்கு தவறு நடந்திருக்கிறது?”  என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடக்கம்

தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்படுள்ளது. ரூ.210 முதல் ரூ.390 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமைப் பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ளவும் முடியும்.

இதன்படி முதல் கட்டமாக திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. 80 கிலோ வரையிலான பார்சல்களுக்கு தினசரி திருச்சி முதல் சென்னை வரை ரூ. 210, மதுரை முதல் சென்னை வரை ரூ. 300, நெல்லை முதல் சென்னை வரை ரூ. 390, தூத்துக்குடி முதல் சென்னை வரை ரூ. 390, செங்கோட்டை முதல் சென்னை வரை ரூ. 390, கோவை முதல் சென்னை வரை ரூ. 330, ஒசூர் முதல் சென்னை வரை ரூ. 210 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் 6ஆம் கட்ட ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11-ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை 6-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

மேலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலி அலினா கபெவா மீது பொருளாதார தடை: அமெரிக்கா நடவடிக்கை

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்ய அதிபர் புடின், ரஷ்ய ராணுவ தளபதிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் என பல தரப்பின் மீதும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபெவா மீதும் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கபெவா பாஸ்போர்ட்டை அமெரிக்கா முடக்கியுள்ளது. மேலும், அவரின் சொத்துக்களையும் முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான அலினா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். அதேவேளை, ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான ஆர்.டி (ரஷ்யா டுடே)-யின் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...