இந்தியர்கள் அனைவருக்கும் உற்சாகத்தைத் தரும் நாள் தீபாவளி. ஆனால் உத்தர்காசி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்களைப் பொறுத்தவரை அது சோகமான நாள். தீபாவளியன்று நடந்த விபத்தில் சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் இருந்து 600 அடி தொலைவில் 120 அடி நீளத்துக்கு திடீரென சுரங்கத்தின் கூரையில் சரிவு ஏற்பட, சுரங்கத்தின் வாயில் மூடப்பட்ட்து. அதில் பணியாற்றிக்கொண்டிருந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டனர். வெளியுலக தொடர்புகள் ஏதும் இல்லாமல் கடந்த 12 நாட்களாக அவர்கள் சுரங்கத்தில் சிக்கியுள்ள நிலையில் இன்று மாலைக்குள் வெளியே எடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கியது எப்படி? அந்த சுரங்கப்பாதை எதற்காக அமைக்கப்படுகிறது என்பதைப்பற்றியெல்லாம் விரிவான ஒரு கட்டுரை ஏற்கெனவே வாவ் தமிழா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்…
படித்துவிட்டீர்களா?.. இனி இன்றைய நிகழ்வுக்கு வருவோம்… இன்று இரவுக்குள் எப்படியும் தொழிலாளர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் மீட்புப் படையினர் உள்ளனர். அதற்கான செயல்திட்டத்தையும் வகுத்துள்ளனர். அந்த செயல்திட்டம் என்ன என்பதைப் பார்ப்போம்…
தொழிலாளர்கள் இப்போது சிக்கியுள்ள பகுதி 2 கிலோமீட்டர் நீளமும், 8.5 மீட்டர் உயரமும் கொண்டது. அதிர்ஷ்டவசமாக அந்த சுரங்கப் பகுதிக்குள் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் இருப்பதால்தான் இத்தனை நாட்களாக சுரங்கத்தில் சிக்கியும் தொழிலாளர்கள் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லாமல் பத்திரமாக இருக்கிறார்கள்.
மீட்புப் படையினர் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள இயந்திரத்துக்கு இப்போது தடையாக இருப்பது வழியில் உள்ள சில இரும்புக் கம்பிகள்தான். சுரங்கத்தின் கூரைக்காக பயன்படுத்தப்பட்ட இந்த இரும்பு கம்பிகளை வெட்டி அகற்றினால்தான் தொழிலாளர்களை மீட்பு படையினரால் நெருங்க முடியும் அதனால் அந்த கம்பிகளை அகற்றும் கடைசி கட்ட பணி இப்போது நடைபெற்று வருகிறது.
இரும்பு கம்பிகளை அகற்ற அனுபவம் மிக்க தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரும்புக் கம்பிகளை அகற்ற அகற்ற, நீண்ட ராட்சத குழாய் இன்று சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது. இந்த ராட்சத குழாய் வழியாக இன்று இரவுக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
44 ராட்சத குழாய்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு தொழிலாளர்களை மீட்பதற்கான வழி உருவாக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் கடந்த 12 நாட்களாக வெளியுலக தொடர்புகள் ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அந்த தொழிலாளர்களுக்கு இதுவரை 2 முறை மட்டுமே சரியான உணவு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் சோர்வாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அத்துடன் சுரங்கத்தில் உள்ள வெப்ப நிலைக்கும், வெளியுலகில் உள்ள வெப்ப நிலைக்கும் வித்தியாசம் இருக்கும் என்பதால், வெளியுலக சூழலுக்கு அவர்கள் பழக நேரமாகும் என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள். அதனால் மனரீதியாக்கவும் உடல் ரீதியாகவும் சிகிச்சை தேவைப்படுகிறது.
ராட்சத குழாய் மூலம் மீட்கப்படுவதற்கு முன், வழியிலுள்ள கம்பிகளின் கூர் முனையில் சிக்காமல் எப்படி கவனமாக ஊர்ந்து வரவேண்டும் என்பது பற்றி சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
தொழிலாளர்கள் ராட்சத குழாய்கள் மூலம் வெளியேறியதும், உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர். அதற்காக 41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படுள்ளன. தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும், ஒவ்வொருவரும் தனித்தனி ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு சிகிச்சை முடிந்த பிறகுதான் அவர்கள் தங்கலின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.