No menu items!

சிறையாக மாறிய சுரங்கம் – மரண பயத்தில் -40 தொழிலாளர்கள்

சிறையாக மாறிய சுரங்கம் – மரண பயத்தில் -40 தொழிலாளர்கள்

அந்த நான்கு இடங்களுமே இந்துக்களுக்கு மிகமிக புனிதமான இடங்கள். யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் என்ற அந்த நான்கு பகுதிகளையும் சார்தாம் என்ற நெடுஞ்சாலைத் திட்டத்தின்கீழ் இணைக்கத் திட்டமிட்டது உத்தரகண்ட் அரசு. ச்சார் என்றால் இந்தியில் நான்கு.

இந்தப் பணியின் ஒரு கட்டமாக, உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால், யமுனோத்ரியை இணைக்கும் நெடுஞ்சாலையில், சில்க்யாரா-தண்டல்காவ்ன் இடையே மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. இந்த சுரங்கப்பாதை உருவானால், 26 கிலோ மீட்டர் தொலைவு மிச்சமாகும்.

கடந்த 12ஆம்தேதி, தீபாவளித் திருநாளன்று, சுரங்கத்தின் உள்ளே நாற்பது தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த நேரம், டமார் என்று ஒரு சத்தம்.

சில்க்யாரா நுழைவாயிலில் இருந்து 600 அடி தொலைவில் 120 அடி நீளத்துக்கு திடீரென சுரங்கத்தின் கூரையில் சரிவு ஏற்பட்டு பொலபொலவென காங்கிரீட்டும், கற்களும் சரிந்து விழுந்தன. சரிந்த பாறைகளும், கற்களும், மண்ணும் உள்ளே இருந்த நாற்பது தொழிலாளர்களுக்கும், வெளிஉலகத்துக்கும் இடையே பல மீட்டர் நீளமுள்ள இடை வெளியை ஏற்படுத்தி விட்டன. இந்த இடிபாடுகளை அகற்றினால்தான் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை தொட முடியும் என்ற நிலை.

அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். உடனடியாக மாநில பேரிடர் மீட்புப்படைக்குத் தகவல் பறந்தது. அவர்கள் ஓடோடி வர, முதல் வேலையாக தொழிலாளர்கள் சிக்கிக் கிடந்த இடத்துக்கு அவசர அவசரமாக, மின்னல் வேகத்தில் ஒரு துளை போடப்பட்டது. அதன் வழியே உள்ளிருப்பவர்கள் தடையின்றி சுவாசிக்க ஆக்சிஜன் காற்று செலுத்தப்பட்டது.

நல்லவேளையாக உள்ளே இருந்த மகாதேவ் என்ற தொழிலாளரிடம் வாக்கிடாக்கி இருந்தது. அதன்மூலம் தொலைத்தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. ‘உள்ளே வெளிச்சம் இருக்கு. காத்து இருக்கு. எங்களை எப்படியாவது மீட்டு வெளியே எடுத்திருவீங்க இல்ல?’ என்றார் மகாதேவ். அந்த தொழிலாளியின் குரலில்தான் எத்தனை விதமான உணர்வுகள்? லேசான பயம், துக்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு, களைப்பு.. இத்தனையும் அந்த குரலில் எட்டிப்பார்த்தன. மகாதேவின் அந்த வாக்கிடாக்கி ஆடியோ பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.

சுரங்கத்தின் உள்ளே சிக்கிய நாற்பது தொழிலாளர்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தவர்கள்தான் அதிகம். அவர்கள் மட்டும் மொத்தம் 15 பேர். தவிர, உத்தரபிரதேசம் (8), மேற்கு வங்கம் (5), ஒடிசா (5), பிகார் (4) இமாச்சல், அசாமைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவார்கள்.

துளை வழியே தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், கூடவே தேவையான மருந்துகளை அனுப்பும் வேலை ஒருபக்கம் நடக்க, மறுபக்கம் குவிந்து கிடக்கும் மண், பாறைகளை அப்புறப்படுத்தி, வழியை உருவாக்கி 40 பேரையும் மீட்கும்பணி சுறுசுறுப்பாகத் தொடங்கி யது.

மாநில மீட்புப்படை அதிகாரி மணிகந்த் மிஸ்ரா தலைமையில் 200 பேர் இந்த அதிரடி வேலையில் இறங்கினார்கள். உள்ளே காற்று, போதிய வெளிச்சம் இருந்தாலும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் இறங்கி னார் மீட்புப் பணி பொறுப்பாளர் தீபக் பாட்டீல்.

சுரங்கத் தொழிலாளர்களை மீட்க இடிபாடுகள் வழியே துளையிடும் வேலை நடந்தபோது இயந்திரங்களின் அதிர்வால் இப்போது மீண்டும் ஏற்பட்டது ஒரு மண்சரிவு. 14ஆம்தேதி வரை 6 முறை அடுத்தடுத்து இப்படி மண் சரிவுகள். இதனால் அதிர்ந்து போனார்கள் மீட்புப் படையினர். இந்த சரிவுகளால், தோண்ட வேண்டிய பகுதியின் நீளம் இன்னும் 70 மீட்டர் அதிகமாகிப் போனது.

மீட்புப்படையினர் கைவசம் இருந்த துளைபோடும் இயந்திரத்தால் 45 மீட்டர் நீளம் வரை மட்டுமே தோண்ட முடியும். இந்த அழகில் துளைபோடும் இயந்திரம் வேறு பழுதாகிவிட அடுத்து என்ன என்று கையைப் பிசைந்தார்கள் மீட்புப்படையினர்.

‘இது சரிவராது, அமெரிக்க ஆகர் மெஷின்தான் சரி. அதை உடனே கொண்டு வாங்க’ என்று அவர்கள் சொல்ல, உடனே டெல்லிக்கு தகவல் தட்டிவிடப்பட்டது. ஆகர் என்பது அமெரிக்கத் தயாரிப்பான அதிநவீன துளைபோடும் இயந்திரம். படுக்கை வசமாக, படு வேகமாக துளை போடக்கூடிய ஹெவிவெயிட் அசுரன் அது. மணிக்கு 5 மீட்டர் என்ற அளவில், என்ன பெரிய கடினமான பாறை, மலை என்றாலும் ஆகர் குடைந்து தள்ளிவிடும்.

ஆகர், 25 டன் எடை கொண்ட ராட்சத டிரில்லிங் மெஷின் என்பதால் அதை சாலைவழியே கொண்டு வந்தால் காலதாமதமாகும். அப்படியானால் என்ன செய்யலாம்? ஆகர் மெஷினை 3 பாகங்களாக பிரித்தனர் டெல்லி பொறியாளர்கள். அந்த 3 பாகங்களும், இந்திய விமானப்படையின் சிறப்பு ஹெர்குலஸ் சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன.

ஹெர்குலஸ் சரக்கு விமானத்தால் சிறிய ஓடுதளங்களில் கூட தரையிறங்க முடியும். அந்த விமானம், விபத்து நடந்த சுரங்கப் பகுதிக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்யாலிசார் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்து தரையிறங்கியது.

ஆகர் இயந்திரத்தின் 3 பாகங்களும் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டன. இப்போது சுரங்க நுழைவாயிலில் ஆகர் நிறுவப்பட்டு, படுக்கை வசமாகத் துளை போடும் பணியைத் தொடங்கியது. துளை என்றால் எலிபோடுற மாதிரி சிறிய துளை இல்லை. 3 அடி விட்டம் கொண்ட ஒரு குழாயை சொருகக்கூடிய அளவுக்குப் பெரிய துளை.

ஆகர் மூலம் துளைபோட வேண்டியது. துளை உருவாக உருவாக உள்ளே 3 அடி விட்டமும், 6 மீட்டர் நீளமும் உள்ள குழாய்களை வரிசை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகச் சொருக வேண்டியது. ஒருகட்டத்தில் இந்த குழாய்கள் தொழிலாளர்கள் சிறைபட்டு கிடக்கும் இடத்தைத் தொட்டுவிடும். அந்த இடம் வரை குழாய் சென்றதும், அடைபட்டுக்கிடக்கும் தொழிலாளர்களை அந்த குழாய் வழியே ஊர்ந்து வரச் சொன்னால் அவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்துவிட முடியும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும். சொந்தபந்தங்களின் முகங்களைப் பார்க்க முடியும்.

ஆகர், அதன் வேலையை அழகாக ஆரம்பித்தது. ஆனால், உள்ளே ஏதோ ஒரு உலோகத்தோடு அது முட்டிக் கொள்ள, துளையிடும் வேலை அப்படியே நின்றுபோனது. மீட்புப் பணிக்கு வில்லனாக குறுக்கே முளைத்த அந்த உலோகத்தை கேஸ் கட்டர் மூலம் துண்டிக்கும் வேலை தொடங்கியது.

‘சுரங்க வழியை அடைத்தபடி கிடக்கும் அந்த குப்பைக்கூளத்தில் கான்கிரீட்டும், இரும்பு உத்தரங்களும், பலவிதமான இயந்திரங்களும் கூட புதையுண்டு கிடக்கின்றன. அதனால் தான் ஆனானப்பட்ட ஆகர் இயந்திரமே திணறுகிறது’ என்கிறார்கள் மீட்புப்படையினர்.

இதனிடையே உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் மீட்புப்பணியை வந்து பார்வையிட்டுச் செல்ல, பணி எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்படையவில்லை. 6 நாட்களாகியும் மீட்புப் பணி முடிவதாக இல்லை. இப்போது வேலை செய்யும் ஆகர் இயந்திரம் அவ்வப்போது மக்கர் செய்யும் நிலையில், இன்னொரு ஆகர் மெஷினையும் கொண்டு வர முயற்சி நடக்கிறது.

இதற்கிடையே. சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கிடக்கும் தொழிலாளர்களில் பலர் சோர்வு, தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் என அவதிபட ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல் தலைவலி மருந்துகளும், கலோரி மிகுந்த உணவுகளும் அனுப்பப்படுகின்றன. அதன் மூலம் இன்னும் 9 நாட்கள் வரை அவர்கள் தாக்குப்பிடிக்க முடியும்.

மீட்புப் பணி நடைபெறும் பகுதியில் 6 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இப்படித்தான், 2018ஆம் ஆண்டு, தாய்லாந்து நாட்டில் நீர் நிரம்பிய குகை ஒன்றில் அந்த நாட்டைச் சேர்ந்த 13 சிறுவர்கள் சிக்கிக் கொண்டார்கள். கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த அந்த 13 சிறுவர்களையும் தாய்லாந்து அரசு மிகத் திறமையாக மீட்டது. ஆகவே, உத்தரகண்ட் சுரங்க மீட்புப் பணியில் தாய்லாந்து மீட்புப்படையினரின் உதவியை நாடலாமே என சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். நார்வே நாட்டு புவிசார் மையமும் இதில் உதவ முடியும் என்கிறார்கள் சிலர்.

நியூசிலாந்து நாட்டில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் இதுபோல விபத்து ஏற்பட்டபோது ரோபோ இயந்திர மனிதனின் உதவி பயன்படுத்தப்பட்டது. அதுபோல நவீன ரோபோவை வரவைத்து, உத்தரகண்ட் சுரங்க மீட்புப் பணியில் ஈடுபடுத்த முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. வெளிநாட்டு வல்லுநர்கள் சிலரது தனிப்பட்ட ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே அந்தப் பகுதி மக்களின் அங்கலாய்ப்போ வேறுவிதமாக இருக்கிறது. ‘இந்த நாலரை மீட்டர் நீள சுரங்கப்பாதை பணியை ஆரம்பித்தபோது, அந்த பகுதியில் இருந்த பாவ்க்நாக் என்ற கிராம காவல்தேவதையின் கோயிலை இடித்துத் தகர்த்து விட்டார்கள். அந்த தேவதை, கோபத்தில் பார்த்த பார்வைதான் இந்த சுரங்க விபத்துக்குக் காரணம். அந்த பாவ்க்நாக் காவல்தேவதையின் கோபம் தணியாதவரை மீட்புப் பணி வெற்றி பெறாது’ என்கிறார்கள் பகுதி மக்கள்.

இத்தனை இடர்பாடுகளுக்கும் நடுவில் இன்று 7ஆவது நாளாக மீட்புப்பணி நடந்து வருகிறது. இதுவரை 24 மீட்டர் நீளத்துக்குத்தான் துளையிடப்பட்டு இருக்கிறது. இன்னும் போக வேண்டிய பாதை தூரம். இதேவேகத்தில் மீட்புப்பணி நடந்தால் தொழிலாளர்களை மீட்க இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை ஆகலாம் என்கிறார்கள் மீட்புக் குழுவினர். இதற்கிடையே மீட்புப்பணி தாமதமாவதால் தொழிலாளர்களின் குடும்பத்தினர், சக தொழிலாளர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை மீட்புப்படையினர் எப்போது தொடுவார்கள்?, துயரம் தோய்ந்த தொழிலாளர்களின் முகங்களில் எப்போது மகிழ்ச்சியை மலரச் செய்வார்கள்? மீட்புப்பணி எப்போது முடியும்?

ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது ஒட்டுமொத்த இந்தியாவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...