No menu items!

ரோஹித் சர்மா சகாப்தம் முடிகிறதா?

ரோஹித் சர்மா சகாப்தம் முடிகிறதா?

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பதற்காக அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது பிசிசிஐ. பிசிசிஐயின் டிக்‌ஷ்னரியில் அப்படி ஒருவருக்கு அழைப்பு விடுத்தால், ‘ஓய்வை அறிவித்து விடுங்கள்’ என்று மறைமுகமாக சொல்வதாக அர்த்தம்.

எல்லாம் நன்றாகத்தானே போகிறது. உலகக் கோப்பையில் இளம் வீர்ர்களைவிட ரோஹித் சர்மா நன்றாகத்தானே ஆடினார். பிறகு எதற்காக அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ‘அணியின் நலனுக்காகவும், இந்தியாவின் எதிர்காலத்துக்காகவும்தான் இதைச் செய்கிறோம்’ என்பதுதான் இதற்கான பிசிஐ அளிக்கும் மறைமுகமான பதில்.

ரோஹித் சர்மாவுக்கு இப்போது வயது 36. அடுத்த உலகக் கோப்பை வரும்போது அவருடைய வயது 40-க இருக்கும். நவீன கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இது முதுமை தள்ளும் வயது. என்னதான் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், அணியை வழிநடத்தினாலும் பீல்டிங்கில் ரோஹித் சர்மா எப்போதுமே சுமார்தான். இப்போதே இப்படியென்றால் 40 வயதில் அவரது பீல்டிங் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறது பிசிசிஐ. அதனால் அடுத்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஆடமாட்டார் என்று முடிவும் எடுத்துவிட்டது.

உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா ஆடமாட்டார் என்றால் அவருக்கு மாற்றாக அடுத்த கேப்டனையும், வீரரையும் இப்போதிலிருந்தே தயார்படுத்த வேண்டும். மாறாக ரோஹித் சர்மா அடுத்த 2 ஆண்டுகள் ஆடினால், புதிய வீரரையோ கேப்டனையோ 2 ஆண்டுகளுக்குள் தயார் செய்ய முடியாது என்று பிசிசிஐ கருதுகிறது. அதனால்தான் அவரை ஆலோசனைக்கு அழைத்துள்ளது.

டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு தன்னை பரிசீலிக்க வேண்டாம் என்று கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அறிவித்திருந்தார் ரோஹித் சர்மா. இப்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் ஆடுகிறார். இப்போதைய அட்டவணைப்படி அடுத்த ஆண்டில் இந்தியா வெறும் 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடப்போகிறது. அப்படி இருக்கும்போது அந்த 5 போட்டிகளுக்காக அவரை அணியில் வைத்திருக்க வேண்டுமா என்று பிசிசிஐ யோசிக்கிறது. அதனால்தான் அவரை அலோசனைக்கு அழைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், ‘இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன். வைட் பால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்குகிறேன்’ என்று சொல்லுமாறு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரோஹித் சர்மாவிடம் வலியுறுத்தப்படும் என்கிறது பிசிசிஐ வட்டாரம். குறைந்தபட்சம் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியையாவது அவர் ராஜினாமா செய்யலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அப்படி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தால் 2025-ல் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பைவரை அவர் ஒருநாள் போட்டிகளில் ஆடலாம்.

ரோஹித் சர்மா இல்லாவிட்டால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு வரும்.

இந்த உலகக் கோப்பைக்கு முன்புவரை ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக ஹர்த்திக் பாண்டியாவைத்தான் பிசிசிஐ நினைத்திருந்தது. ஆனால் இந்த தொடரின் பாதியிலேயே காயத்தால் வெளியேறினார் ஹர்த்திக் பாண்டியா. இந்த காயம் பிசிசிஐயை யோசிக்க வைத்திருக்கிறது. ஒருசில போட்டிகளில் ஆடினாலே காயமடையும் ஹர்த்திக்கை வைத்து எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுக்க பிசிசிஐ தயாராக இல்லை. அதனால் ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை கேப்டனாக்க திட்டமிட்டுள்ளனர். ரோஹித் சர்மாவுடனான பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு இந்த கேள்விக்கும் விடை கிடைக்கலாம்.

ரோஹித்தின் விஷயத்தில் ஒரு முடிவை எடுத்து செயல்பட்டு வரும் பிசிசிஐ, விராட் கோலி விஷயத்தில் முடிவு எடுக்க தடுமாறுகிறது. ரசிகர்களும், கோலியை வைத்து விளம்பரப் படங்களை எடுத்துள்ள நிறுவனங்களின் நிர்ப்பந்தமுமே இதற்கு காரணம். அதனால் ரோஹித்திடம் சொல்வதுபோல் கண்டிப்பான முறையில் நடக்காமல், சச்சினுக்கு கொடுத்ததைப்போல் பிட்னெஸைக் கருத்தில்கொண்டு விரும்பும் போட்டிகளில் மட்டும் ஆடுங்க: என்று கோலிக்கு பிசிசிஐ ஆலோசனை சொல்ல்லாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியோ ஒரு தலைமுறைக்கு விடை கொடுத்து, அடுத்த தலைமுறையை உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...