No menu items!

29 பேரை கடித்த சென்னை தெருநாய் – நாய்த் தொல்லைக்கு தீர்வு இல்லையா?

29 பேரை கடித்த சென்னை தெருநாய் – நாய்த் தொல்லைக்கு தீர்வு இல்லையா?

சென்னையில் பீதியூட்டும் சம்பவம் நடந்திருக்கிறது.

ராயபுரம் பகுதியில் ஜிஏ சாலையில் தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்து குதறியிருக்கிறது. சாலையில் அமைதியாகதான் படுத்திருந்திருக்கிறது அந்த நாய் ஆனால் திடீரென்று சாலையில் போகிற வருகிறவர்களை கடிக்கத் தொடங்கியிருக்கிறது. கடிபட்டவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்.

மக்களை கடித்து குதறிய நாயை அங்கிருந்த மக்களே அடித்து கொன்றிருக்கிறார்கள். இறந்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருந்ததா என்பதை பரிசோதிக்க நாயின் உடல் போஸ்ட்மார்ட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கடி வாங்கியவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் நாய் கடி, துரத்தல் என்பது புதிதல்ல. சமீபகாலமாய் மிக அதிகமான செய்திகள் வருகின்றன.

சென்னை மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் தெரு நாய்த் தொல்லை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய தேயிலை தயாரிப்பு நிறுவனம் வாக் பக்ரி (Wagh Bakri). வட இந்தியாவில் மிக பிரபலமான டீத் தூள் வாக் பக்ரி. இந்த நிறுவனத்தின் மதிப்பு 2000 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பாராக் தேசாய் சமீபத்தில் அகமாதபாத்தில் வாக்கிங் செல்லும்போது தெரு நாய் துரத்தியதில் ஓடி கீழே விழுந்து இறந்து போயிருக்கிறார்.

இந்தியா முழுவது தெரு நாய் பிரச்சினை இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். சாதுவான நாய்களின் மத்தியில் சாலையில் போகிறவர்களை துரத்தும் கடிக்கும் நாய்களும் இருக்கின்றன.

உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமான தெருநாய்கள் இருக்கின்றன. சுமார் 6 கோடி தெரு நாய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வெறிநாய் கடி (Rabies) மூலம் இறப்பவர்கள் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் அதிகம். உலக அளவில் வெறிநாய் கடி மரணங்களில் 36 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் வீட்டுப் பக்கம் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறியதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். கேரளாவிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அங்கும் தெருநாய் தொல்லைக்கு எதிரான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. குஜராத்திலும் வழக்குகள் இருக்கின்றன.

செப்டம்பர் மாதம் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் கையில் ஃபைல் கட்டுக்குப் பதில் மருத்துவக் கட்டுடன் வந்திருக்கிறார். உச்ச நீதிமன்ற் தலைமை நீதிபதி சந்திரசூட், அவரிடம் என்னவென்று விசாரிக்க. அந்த வழக்கறிஞர் தெருநாய்க் கடி என்று கூறினார். அவர் அப்படி சொன்னதும் அங்கிருந்த கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, உத்தரப் பிரதேசத்தில் தெருநாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி தந்தையின் மடியில் உயிரைவிட்ட சிறுவனைப் பற்றி கூறினார். உடனே தலைமை நீதிபதி சந்திரசூட்டும் தன் உதவியாளருக்கு நடந்த நாய்க் கடி சம்பவத்தை கூறினார். இப்படி தெரு நாய் கொடூரம் உச்ச நீதிமன்றம் வரை தெரிந்திருக்கிறது.

இத்தனை கொடூர சம்பவங்கள் நடந்தப் பிறகு தெருநாய்களை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு காரணம் நமது நாட்டு சட்டம்.

2001க்கு முன்பு வரை தொல்லை தரும் தெரு நாய்களை பிடித்துச் சென்று கொல்வது என்ற நடைமுறையை உள்ளூர் நகராட்சிகள் செய்து வந்தன. ஆனால் இதற்கு நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

2001ஆம் ஆண்டு மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சராக இருந்த மேனகா காந்தி புதிய விதிகளை உருவாக்கினார். அதன்படி தொல்லை தரும் மிருகங்களை அகற்றாமல், கொல்லாமல் அவற்றுக்கு கருத்தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த சமயத்திலேயே இந்த முடிவு சர்ச்சைக்குள்ளானது. கலாச்சாரத் துறை எப்படி இந்த விதிகளை கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுந்தது. ஆனால் அந்த கேள்விகளுக்கு பதில் இல்லாமலே இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதன்படி நாய்களை கொல்லாமல் அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டன. கொல்லக் கூடாது என்பது மட்டுமில்லாமல் கருத்தடைக்காக பிடித்துச் செல்லப்படும் தெரு நாய்களை அதே இடத்தில் கொண்டு வந்து விட வேண்டும், அவற்றுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும் என்றும் விதிகள் சொல்லின. ஒரு தெருவில் ஒரு நாய் குடி வந்துவிட்டால் அந்தத் தெருவில் வசிப்பதற்கு அந்த நாய்க்கு உரிமை உண்டு என்ற நிலை உருவானது.

2001ல் ஆரம்பமான இந்த சிக்கல் தெருநாய்களின் கடிகளால் மரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

நாய்களை கருத்தடை செய்து விடும்போது அவை பெருகாது. குறைந்துவிடும் என்பது இந்த விதியின் நோக்கம். ஆனால் அனைத்து நாய்களுக்கும் கருத்தடை செய்தால்தான் இந்த நிலை உருவாகும். கருத்தடை செய்யாத நாய்கள் தெருவில் உலவிக் கொண்டிருந்தால் நாய்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கும்.

எல்லா நாய்களும் கடிப்பதில்லை, கடிக்கும் நாய்கள் அனைத்துக்கும் ரேபீஸ் கிடையாது, நாய்கள் மனிதர்களுடன் அன்பாக பழகுபவை, நாய்களை கொல்வது வாழ்வதற்கான அதன் உரிமையை மீறுவது போன்றது. நாய்களை கொல்வது பாவம் என்று பல கருத்துக்களை தெரு நாய் ஆதரவாளர்கள், ஜீவகாருண்ய சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.

மின்சாரத்தை தொட்டால் ஷாக்கடிக்கிறது அதற்காக மின்சாரம் வேண்டாம் என்றிருக்கிறோமா, சாலையில் சென்றால் விபத்துக்கள் நடக்கிறது என்பதால் சாலையில் நடக்காமலிருக்க முடியுமா என்ற கேள்விகளை நாய் ப்ரியர்கள் சமூக ஊடகங்களில் எழுப்புகிறார்கள். மனித உயிர்கள் போல நாய்களின் உயிர்களும் முக்கியமானதுதான் என்று குரல் கொடுக்கிறார்கள்.

நாய்களின் உயிர்கள் முக்கியமானதுதான். அத்தனை முக்கியம் வாய்ந்த உயிர்களை தெருவில் விடாமல் எங்காவது கொண்டு சென்று ஒரு அடைப்புக்குள் பாதுகாத்தால் அவற்றுக்கும் நலம் தெருவில் செல்லும் மற்றவர்களுக்கும் நலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...