No menu items!

சிஎஸ்கேவின் கதை – 5 சென்னைக்கு வந்த புதிய சவால்

சிஎஸ்கேவின் கதை – 5 சென்னைக்கு வந்த புதிய சவால்

ஐபிஎல் தொடரின்   விதிப்படி  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். வேண்டுமென்றால்  ‘மேட்ச் தி கார்ட்’ முறையைப் பயன்படுத்தி மேலும் 2 வீரர்களைத் தக்க வைக்கலாம்.  இந்த விதிப்படி 2011-ல் நடந்த ஏலத்தில் புதிதாக உருவான  கொச்சி மற்றும் புனே அணிகளையும்  சேர்த்து 10 அணிகள் கலந்துகொண்டன.

 இந்த ஏலத்துக்கு முன்னதாகவே  தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்க்கெல் ஆகிய 4 வீரர்களைத் தக்கவைத்தது சென்னை. சேப்பாக்கம் மைதானத்தை தங்கள் மைதானமாகக் கொண்டு அடிவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்மைதானத்துக்கு சாதகமான வீரர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்தது. சென்னை மைதானத்துக்கு அதிவேகப் பந்து வீச்சாளர்களெல்லாம் தேவையில்லை. ஓரளவு சுமார் வேகத்தில் பந்து போடும் மிதவேகப் பந்துவீச்சாளர்களோ, சுழற்பந்து வீச்சாளர்களோ போதும் என்பதால் அதற்கேற்றார்போல் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஹெய்டன் உள்ளிட்டவர்கள் அணியில் இருந்து விடைபெற, அவர்களுக்கு பதிலாக பஃப் டுபிள்ஸ்ஸியையும், பிராவோவையும் ஏலத்தில் அலாக்காக தூக்கியது. புதிய அணி தேர்வு செய்யப்பட்டதும், போட்டிக்கான பயிற்சிகளைத் தொடங்க பறந்து வந்தார் தோனி.

      “மீண்டும் ஒரு கோப்பையை வெல்ல வாய்ப்புக் கிடைத்தால் எதை  விரும்புவீர்கள்? உலகக் கோப்பையா, ஐபிஎல் கோப்பையா அல்லது சாம்பியன்ஸ் லீக் கோப்பையா?” 

-ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்த தோனியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி இது.

“நான் 3 கோப்பைகளையுமே வெல்ல விரும்புகிறேன். அதில் முதல் கட்டமாக இம்முறை மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல விரும்புகிறேன்” – என இதற்கு பதிலளித்தார் தோனி.

சொன்னதைப் போலவே இம்முறையும் எதிரணிகளுக்கு தோனியும் அவரது சகாக்களும்   டஃப் கொடுத்தனர்.  பொதுவாக ஒரு அணி 2 முறை கோப்பையை வென்றால், மூன்றாவது முறை கொஞ்சம் மிதப்பில் இருக்கும். அதனால் சில தவறுகளைச் செய்யும்.

ஆனால் 2 வெற்றித் தொடர்களுக்குப் பிறகும் சென்னை அணியோ, அதன் தலைவன் தோனியோ தலைக்கனத்தில் மிதக்கவில்லை. மாறாக அடுத்தடுத்த வெற்றிகளுக்கு திட்டமிட்டனர்.   அணித்தேர்வின்போது சேப்பாக்கம் மைதானத்துக்கு ஏற்றவாறு பார்த்துப் பார்த்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதால், சென்னையை அசைக்க முடியவில்லை. லீக் சுற்றில் சேப்பாக்கத்தில் நடந்த ஒரு போட்டியில்கூட தோற்காமல் அதைத் தங்கள் கோட்டையாக மாற்றி முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மைக்கேல் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் ஆகிய 3 வீரர்களும் 400 ரன்களுக்கு மேல் விளாச, அஸ்வின் 20 விக்கெட்களையும், டக் போலிங்கர் 17 விக்கெட்களையும் கொய்ய இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இம்முறை இறுதிப் போட்டியில் சென்னையிடம் அடி வாங்கிய அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு.

கொஞ்சம் விட்டிருந்தால் 2012-ம் ஆண்டிலும் சென்னை அணி வெற்றியை ருசித்திருக்கும். ஆனால் யாருடைய திருஷ்டி பட்டதோ, வெற்றி கைநழுவிப் போனது.  அந்த ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஆடியது சென்னை.

முதலில் ஆடிய சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்தது. ஹஸ்ஸி 54 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 73 ரன்களையும் குவித்தனர். இத்தனை பெரிய ஸ்கோரை கொல்கத்தாவால் சேஸ் செய்யவே முடியாது என்று அனைவரும் நினைத்த நேரத்தில், அதை மாற்றி எழுதினார்  மன்விந்தர் பிஸ்லா. 48 பந்துகளில் அவர் 89 ரன்களைக் குவிக்க, மறுபுறம் காலீஸ்  69 ரன்களைச் சேர்க்க, வெற்றி தேவதை கொல்கத்தாவை முத்தமிட்டாள்.

3-வது முறையாக கோப்பையை தொடும் நேரத்தில் கடைசி ஓவரில் வெற்றி கைநழுவிப் போக துடித்தன சென்னை சிங்கங்கள். இந்த தோல்விக்கும் சேர்த்து அடுத்த முறை கோப்பையை வெல்வோம் என்ற வைராக்கியத்தில் சென்னை அணி கலைந்து சென்றது. ஆனால் அடுத்த முறை சென்னையை எதிர்நோக்கி புதிய சவால் காத்திருந்தது.  அந்தச் சவாலின் பெயர் சூதாட்டம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...