No menu items!

நியூஸ் அப்டேட்: சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக போராட்டம்

நியூஸ் அப்டேட்: சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக போராட்டம்

சொத்து வரி உயர்வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டனர்.
திருச்சி போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசுதான் வீட்டு வரியை உயர்த்த சொல்லியது என்கிறார்கள். வீண் பழி போட்டு ஏமாற்றப் பார்க்கின்றனர். திமுக கட்சி தொண்டர்கள் பணத்தில் ஏன் அரசு அதிகாரிகள் துபாய் செல்ல வேண்டும்? துபாயில் முதலீடு செய்யத்தான் ஸ்டாலின் சென்றார்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையை போன்று நெருக்கடி இந்தியாவில் ஏற்படும்: விஜயகாந்த் அறிக்கை

இலங்கை, கடன் சுமையில் சிக்கி பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையைப் போன்று நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக, ‘இன்றைய ஆட்சியாளர்கள் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, இலவசங்களைத் தருவதாகக் கூறுவது, தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வது போன்ற செயல்களால் மக்களை முட்டாளாக்குவது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்’ என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியும், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்ற நிலை அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்படும்” என்று கூறியுள்ளார்.

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஸ்டிரைக்: லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ், ‘ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவதாக அரசு தெரிவித்தது. ஆனால், கடந்த 14 நாளில் டீசல் விலை ரூ. 8 அதிகரித்துள்ளது. இது தவிர சுங்க கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சென்னையில் நடந்த தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். 21 நாட்களில் இந்த விலை உயர்வை குறைக்கவில்லை என்றால், தமிழகம், புதுச்சேரி உள்பட 7 மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

விமான பயணங்களுக்கு இனி போர்டிங் கார்டு தேவையில்லை

இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கு முக அடையாளங்களின் அடிப்படையில் பயணிக்க அனுமதி அளிக்கும் நடைமுறையை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையில் ‘போர்டிங் கார்டு’ (பயண அனுமதிச் சீட்டு) இல்லாமலே பயணிக்க முடியும். அதற்குப் பதிலாக ‘பேஸ் ரெகக்னிஷன்’ என்று அழைக்கப்படும் முகத்தை அடையாளம் காணும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். முதல் கட்டமாகக் கொல்கத்தா, வாரணாசி, புனே, விஜயவாடா, பெங்களூர், தில்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் மார்ச் 2023-க்குள் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய-அமெரிக்கப் பாடகி பால்குனி ஷாவுக்கு கிராமி விருது: மோடி வாழ்த்து

இசை உலகின் உயரிய விருதாகக் கருதப்படுவது கிராமி விருது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. இந்த விழாவில், குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை, ‘எ கலர்புல் வோர்ல்டு’ ஆல்பத்திற்காக இந்திய – அமெரிக்கப் பாடகி பால்குனி ஷா பெற்றார். இந்நிலையில் கிராமி விருது வென்ற பாடகி பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற பால்குனி ஷாவிற்கு வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்’ என்று மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...