No menu items!

வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்தது ஏன்?

வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்தது ஏன்?

கிரிக்கெட் என்றாலே வெஸ்ட் இண்டீஸ்தான் என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்தது. ஒரு நாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வேறு அணியே கிடையாது. 1975, 1979 என்று இரண்டு உலகக் கோப்பைகளை கைப்பற்றியிருக்கிறது.

ஆனால் இன்று உலகக் கோப்பைக்கு விளையாட தகுதியே பெறவில்லை. இந்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் தகுதியே பெறவில்லை.

என்ன நடந்தது?

கிளைவ் லாயிட், கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹெயின்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், பிரயன் லாரா, கிறிஸ் கெயில் என்று பிரபலமான பல கிரிக்கெட் நட்சத்திரங்களை உலகுக்குத் தந்த பெருமை வெஸ்ட் இண்டீசுக்கு உள்ளது. ஆனால் இன்று அந்த பெருமைகளெல்லாம் பழம் கனவாய் போய்விட்டது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற முடியாமல் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற சிறிய நாடுகளிடம் தோற்று நிற்கிறது வெஸ்ட் இண்டீஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று வீழ்ந்து நிற்பதற்கு என்ன காரணம்?

ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் பிரீமியர் லீக் என பல பெயர்களில் உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ள டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்ந்ததற்கான முதல் காரணமாக சொல்லலாம். உலகம் முழுக்க எந்த மூலையில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும், அதில் ஆடும் அணிகளெல்லாம் முதலில் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த வீர்ர்களைத்தான் வாங்க விரும்புகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் வீர்ர்களும் இந்த தொடர்களில் சிறப்பாக ஆடுகின்றனர். அதற்காக பலகோடி ரூபாய்களை அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில்கூட பிராவோ முதல் சுனில் நரைன் வரையிலான வீர்ர்கள் கலக்கி வருகிறார்கள். இந்த ஐபிஎல்லில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீர்ர்களைக் கொண்ட அணியை உருவாக்கினாலே, யாரும் வெல்ல முடியாத ஒரு வலிமையான வெஸ்ட் இண்டீஸ் அணியை உருவாக்க முடியும். ஆனால் டி20 லீக் போட்டிகளில் ஆடும் வீர்ர்கள் பலரும் தங்கள் சொந்த நாட்டுக்காக ஆடாதது அந்த அணியை பலவீனப்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஒரு வீர்ர், மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிசிசிஐ நோ அப்ஜெக்‌ஷன் சர்டிபிகேட் வழங்கிய பிறகுதான் அவர்கள் இந்த தொடர்களில் ஆட முடியும். பிசிசிஐ கேட்டுக்கொண்டால் மற்ற எந்த தொடரையும் விட்டு நாட்டுக்காக வீர்ர்கள் ஆடவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இந்தியாவில் இப்படி இருக்கும்போது வெஸ்ட் இன்டீஸ் வீர்ர்கள் மட்டும் எப்படி தங்கள் அணியை விட்டு மர்ற நாடுகளின் லீக் போட்டிகளில் கவனம் செலுத்தலாம் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

இதற்கு முக்கிய காரணம் பணம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருக்கிறது. அதனால் அதைப் பகைத்துக்கொள்ள வீர்ர்கள் தயாராக இல்லை. பிசிசிஐ சொன்னபடி கேட்காவிட்டால் இந்தியாவில் நடக்கும் ஒரு போட்டியில்கூட அவர்களால் ஆட முடியாது. அதனால் ஏகப்பட்ட பணம் இழப்பு ஏற்படும். இதற்கு பயந்து இந்திய வீர்ர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கட்டுப்பட்டு நிற்கிறார்கள். இதற்கு நேர்மாறாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பொருளாதார ரீதியாக மிகவும் வறுமையான சூழலில் இருக்கிறது. இந்திய வீர்ர்களைப் போல் வெஸ்ட் இண்டீஸ் வீர்ர்களுக்கு சம்பளம் கிடையாது. வெஸ்ட் இண்டீசுக்காக ஒரு ஆண்டு முழுக்க ஆடினால் கிடைக்கும் பணத்தை, ஒரு டி20 லீக்கில் அவர்களால் சம்பாதிக்க முடியும். இதனால் அவர்கள் பணத்துக்காக தங்கள் கிரிக்கெட் வாரியத்தை புறக்கணித்து லீக் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள். இது அவர்கள் அணியை பாதிக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீழ்ச்சிக்கான அடுத்த காரணம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் வீர்ர்களுக்கும் இடையே இருந்துவரும் பிரச்சினைகள். 2014-ம் ஆண்டுமுதல் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. சுமுகமான உறவு இல்லை. 2014-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு நடுவே, வெஸ்ட் இண்டீஸின் மொத்த அணியும் சம்பளத்துக்காக புரட்சி செய்தது. தொடரில் இருந்து அவர்கள் வெளியேறினார்கள். பதிலுக்கு இளம் வீர்ர்களைக் கொண்ட அணியை உருவாக்கி இந்தியாவை சந்தித்த்து வெஸ்ட் இண்டீஸ்.

இதுபோன்ற மோதல்கள் அங்கு தொடர்ந்து நடக்கின்றன. முக்கிய போட்டிகளில் ஆடாமல் வீர்ர்கள் தவிர்க்கிறார்கள். 2016-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற வீர்ர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் பெரிதாக எதையும் செய்யவில்லை. இதை அப்போதைய கேப்டன் டாரென் சாமி கடுமையாக விமர்சித்தார். வீர்ர்களுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே இதுபோன்ற உரசல்கள் அடிக்கடி ஏற்பட்டன. வீர்ர்கள் முக்கிய தொடர்களை புறக்கணித்தனர். பதிலுக்கு வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் வாரியமும் முக்கிய வீர்ர்களை அடிக்கடி அணியில் இருந்து தூக்கியடித்து தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்கிறது. அதனால் நிலைத்தன்மை இல்லாத அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருப்பதும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.

நிகோலஸ் பூரன், கைல் மில்லர்ஸ், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், ரோவ்மென் பொவல் என்று சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய வீர்ர்கள் பலரும் இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்தனர் இவர்கள் அனைவருமே ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்கள். லீக் கிரிக்கெட்டில் தனிநபர்களாக தாக்கத்தை ஏற்படுத்திய இவர்களால் நாட்டுக்கான ஒரு அணியாக திறமையைக் காட்ட முடியவில்லை. ஒரு அணியாக அவர்கள் பல நாட்கள் தொடர்ந்து இணைந்து செயல்படாததே இதற்கு காரணம். இதனால் தங்கள் தகுதிக்கு குறைவான நெதர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற அணியிடம்கூட அவர்கள் தோற்றனர். கிளப் கிரிக்கெட்டால் ஒரு அணி எவ்வளவு பாதிக்கப்படும் என்பதற்கு இதை ஒரு உதாரணமாக கூறலாம்.

இந்தக் காரணங்களைத் தவிர வெஸ்ட் இண்டீஸ் இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வம் குறைந்து போனது. கிரிக்கெட்டில் காசு இல்லை என்று கருதுகிறார்கள். அண்டை நாடான அமெரிக்காவின் விளையாட்டுக்களை கற்றுக் கொண்டால் அங்கு குடிபெயர முடியும். பணம் பார்க்க முடியும் என்று நம்புகிறார்கள். இளைஞர்கள் இப்படி நினைப்பதால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு திறமையான ஆட்டக்காரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இவைதான் வெஸ்ட் இண்டீஸ் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...