No menu items!

செந்தில் பாலாஜி அப்ரூவர் ஆகிறாரா? – மிஸ் ரகசியா

செந்தில் பாலாஜி அப்ரூவர் ஆகிறாரா? – மிஸ் ரகசியா

“நாடாளுமன்றத் தேர்தல் டிசம்பர் மாசத்துலயே வருதாம்” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“உனக்கு யார் சொன்னது?”

“எனக்கு யாரும் சொல்லலை. அறிவாலயத்துல டி.ஆர் பாலு பேசிக் கொண்டதை சொல்கிறேன். எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி கூட்டணி அமைக்கிறதுக்கு முன்னால சீக்கிரம் தேர்தல் வச்சிரணும்னு பாஜக பிளான் பண்ணுதுனு சொல்லியிருக்கிறார். அதனால டிசம்பர், ஜனவரில நாடாளுமன்றத் தேர்தல் வரும்னு எதிர்பார்க்கிறாங்க. இந்த டிசம்பர் மாசத்துலயே தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டு இருக்காம். திமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகணும்னு சொல்லியிருக்கிறார். முதல்வரும் தேர்தல் சீக்கிரம் வருங்கிறதால இப்போதைக்கு செந்தில் பாலாஜி விஷயத்தை மூட்டை கட்டி வச்சிட்டு, தேர்தல் கூட்டணி பத்தின விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க சொல்லி இருக்காரு”

“அப்ப தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கிடுச்சுன்னு சொல்லு.”

“தொகுதிப் பங்கீட்டைப் பத்திகூட தீவிரமா பேசிட்டு இருக்காங்க. இந்த முறை திமுக அதிக தொகுதிகள்ல போட்டி போடணும்னு நினைக்கிறது.”

“திமுக கூட்டணில புதுக் கட்சிகள் வர வாய்ப்பிருக்கா?”

“பாமக தூது போயிருக்காங்க. ஆனா ஒரு சீட்தான் தருவோம்னு திமுக தரப்புல சொல்லப்பட்டிருக்கு. பாமக மூணு சீட் கேட்டிருக்கு. அவ்வளவு கொடுக்க முடியாதுனு சொல்லியிருக்காங்க”

”அதிமுக தயாரா இருக்கா?”

”எடப்பாடி படு வேகமா இருக்கிறார். அதிமுக கூட்டணில பாஜகவுக்கு 10 சீட்னு முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்”

“25 சீட்ல போட்டினு அண்ணாமலை பேசிக்கிட்டு இருந்தாரே?”

”அவருக்கு ஆசைதான். ஆனா அதிமுக கொடுக்கணும்ல. இந்த பத்து தொகுதில 9 தமிழக தொகுதிகளும், 1 புதுச்சேரி தொகுதியும் வரும். பதிலுக்கு தேர்தல் செலவுக்கு தேவையான நிதியைக் கொடுக்கறதா பாஜக வாக்குறுதி கொடுத்திருக்காம்”

“பாஜகவுக்கு 10 சீட் கொடுத்தா அதிமுகவோட சீட்கள் குறையுமே?”

“அதனாலதான் பாமகவை கழட்டிவிட தயாராயிட்டார் எடப்பாடி. அநேகமா நாடாளுமன்றத் தேர்தல்ல பாமக தனித்துதான் போட்டியிட வேண்டியிருக்கும்”

“ஐய்யோ பாவம். கடைசில ஓட்டிப்பார்னுதான் தோணுது. பாஜககிட்ட பேசி சீட் வாங்கிடுவாங்க”

“அமித்ஷா மனசு வச்சா நடக்கலாம். ஆனா அதிமுகவுக்கு பாமகவை சேர்த்துக்க இஷ்டம் இல்லை”

“முதல்வர் அறிவாலயத்துக்கே வர்றதில்லைன்னு சில சீனியர்கள் வருத்தப்பட்டதா கேள்விப்பட்டேனே?”

“உணமைதான். கோட்டையை விட்டா வீடு… வீட்டை விட்டா கோட்டைன்னு முதல்வரோட தினசரி நடவடிக்கைகள் சுருங்கிப் போச்சு. ‘கலைஞர் முதல்வரா இருந்தப்ப தினமும் அறிவாலயத்துக்கும் வந்து கட்சி தொண்டர்களை சந்திப்பார். அவங்க சொல்ற தகவல்களைக் கேட்பார். முடிஞ்சா முரசொலி ஆபீசுக்கும் ஒரு நடை போயிட்டு அப்புறமாத்தான் வீட்டுக்கு போவார். இதனால அவருக்கு நேரடியா சில விஷயங்கள் தெரியவந்துச்சு. ஆனா நீங்க அறிவாலயத்துக்கும், முரசொலிக்கும் அதிகமா போகாததால அதிகாரிங்க சொல்றது மட்டும்தான் தெரியுது’ன்னு மூத்த அமைச்சர்கள் சிலர் அவர்கிட்ட சொல்லி இருக்காங்க. அதனால இனி அடிக்கடி அறிவாலத்துக்கு போற மாதிரி தன்னோட தினசரி திட்டங்களை மாற்றியமைக்கச் சொல்லி இருக்காராம் முதல்வர். மூத்த அமைச்சர்கள் மட்டுமில்ல, மூத்த அதிகாரிகளுக்கும் குறை இருக்கு”

“அவங்களுக்குமா? இந்த ஆட்சில அதிகாரிக்களுக்குதான் குறையே இல்லனு சொல்வாங்களே?”

“மூத்த அதிகாரிங்க முதல்வரை சந்திச்சு முக்கிய முடிவுகள் பற்றி பேசும்போது, ‘இது பத்தி நீங்க தம்பிகிட்ட பேசிடுங்க’ன்னு உதயநிதியைக் கைகாட்டி விட்டுடறாராம். உதயநிதிகிட்ட போனா அவர் உடனே பேசாம, ‘குறிஞ்சி இல்லத்துக்கு வாங்க. அங்க பேசலாம்’னு சொல்லிடறாராம். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இதை அவ்வளவா ரசிக்கலை. இப்படியே மாறி மாறி ஓட வேண்டி இருக்கேன்னு புலம்பறாங்க.”

“கஷ்டம்தான். சரி, செந்தில் பாலாஜி விஷயம் ஏதாவது தெரியுமா?”

“அவர் விஷயத்துல உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 மாறுபட்ட தீர்ப்பை கொடுத்திருக்காங்க. இது அமலாக்கத் துறைக்கு ஒரு சறுக்கலா பார்க்கப்படுது. இருந்தாலும் அவர் விஷயத்துல அமலாக்கத் துறை தீவிரமா இருக்காங்க. கோட்டையில இருக்கற செந்தில் பாலாஜியோட அறையில் இருந்து அவங்களுக்கு சில ஆதாரங்கள் கிடைச்சிருக்கு. அதை வச்சுதான் அவருக்கு செக் வைக்க அமலாக்கத்துறை அதிகாரிங்க நினைக்கறாங்க. தங்களுக்கு 20 நிமிஷம் போதும், அந்த நேரத்துக்குள்ள செந்தில் பாலாஜியை குற்றவாளியாவோ, நிரபராதியாவோ மாத்திட முடியும்னு அவங்க உறுதியா நம்பறாங்க.”

“புரியலையே?”

“ஆமாம். அமலாக்கத் துறையைப் பொறுத்த வரைக்கும் போக்குவரத்து துறை பணம் வாங்கல் விஷயத்தை இப்ப அதிகமா கண்டுக்கல. அதுக்கு பதிலா டாஸ்மாக் விவகாரத்தை நோண்டறாங்க. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் கைப்பற்றிய சில ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் உயர்அதிகாரிகள் சிலரை விசாரிச்சிருக்காங்க. அதில் டாஸ்மாக்கில் பணியாற்றிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரியும் ஒருவர். அவரும் நிறைய சொல்லியிருக்கிறாராம். செந்தில் பாலாஜிகிட்ட ஒரே கேள்விதா கேக்கப் போறாங்களாம். அதுக்குதான் அந்த 20 நிமிஷம்”

“என்ன கேள்வி?”

“அப்ரூவர் ஆகிறீங்களா? இல்ல ஜெயிலுக்குப் போறீங்களான்றதுதான் அந்தக் கேள்வி. அதுக்கு அவர் சொல்ற பதிலை வச்சு வழக்கின் போக்கு தீர்மானிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் சொல்றாங்க. செந்தில் பாலாஜியை அப்ரூவர் ஆக்கி திமுகவின் பெரும்புள்ளிகளை சிக்க வைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புது”

“இங்கேயும் ஒரு ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரை உருவாக்கப் போறாங்களா? செந்தில் பாலாஜி அப்ரூவர் ஆவாரா?”

“இல்லை என்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தாக்குப்பிடித்துவிட்டால் போதும் என்று அவருக்கு வாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தால் இந்த விசாரணைகளையெல்லாம் தள்ளி வைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள். அதனால் அவர் அப்ரூவர் ஆவது கஷ்டம்”

“சரி, இப்ப திமுக அமைச்சர்கள் யாரும் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில சந்திக்கறது இல்லையே?”

“அமலாக்கத் துறை மேல இருக்கற பயம்தான் காரணம். அவங்க கண்கொத்திப் பாம்பா பார்த்துட்டு இருக்கும்போது நாம ஏன் வீணா போய் தலையைக் கொடுக்கணும்னு பலரும் தயங்கறாங்க. ஆனா அமைச்சர்கள் அடிக்கடி போய் பார்க்காட்டியும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் அடிக்கடி செந்தில் பாலாஜியை போய் பார்க்கிறார். அவர் காவேரி மருத்துவமனையில் மருத்துவரா இருக்கார். மருத்துவர்ங்கிற முறையில் அவர் செந்தில் பாலாஜியை சந்திச்சு நலம் விசாரிக்கிறார். கூடவே திமுக குடும்பம் சொல்லும் தகவல்களையும் அவருக்கு சொல்லிட்டு வர்றார். தலைவர் உங்களை கைவிட மாட்டார். உங்களுக்காக அவர் எல்லா முயற்சிகளும் செஞ்சுட்டு வர்றார்னு செந்தில் பாலாஜிக்கு அவர் தைரியம் சொல்லிட்டு இருக்காராம்.”

“ஓபிஎஸ்கிட்ட தன்னோட கட்சிக்கு தலைமையேற்கச் சொல்லி வைத்தியலிங்கம் மூலமா தினகரன் தூதுவிட்டதா முன்ன சொன்னியே. அந்த தூது சக்சஸ் ஆச்சா?”

“தினகரனோட இந்த அழைப்பை ஓபிஎஸ் ஏத்துக்கலையாம். ‘அழைப்புக்கு நன்றி. ஆனா உங்க கட்சியில நான் இணையறதுக்கான நேரம் இது இல்லை. அதுக்கு பதிலா நாடாளுமன்றத் தேர்தல்ல கூட்டணி அமைச்சு போட்டியிடுவோம்’னு தினகரனுக்கு ஓபிஎஸ் பதில் அனுப்பி இருக்காராம். தினகரன் மட்டுமில்லாம பாஜகவோடயும் கூட்டணி வைக்கணும்கிறது ஓபிஎஸ்ஸோட ஆசை. ஆனா அவர் கூட இருக்கிற பன்ருட்டி ராமச்சந்திரனுக்குத்தான் இதுல விரும்பம் இல்லை. பாஜக நம்பக்கூடிய கட்சி இல்லை. அவங்க எப்ப வேனும்னாலும் நம்மளை கழட்டி விட்டுட்டு எடப்பாடி பக்கம் போயிடும்னு ஓபிஎஸ்க்கு அவர் அட்வைஸ் பண்றாராம்”

“நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட துரை வைகோ விரும்பறாராமே?”

“ஆமா. தனக்காக விருதுநகர் தொகுதியை ஒதுக்கச் சொல்லி தூது விடறார். ஆனா அந்த தொகுதி எம்.பியான மாணிக்கம் தாகூர், சோனியா காந்தி குடும்பத்துக்கு ரொம்பவே நெருக்கமானவர். அதனால அந்த தொகுதியை அவருக்கு ஸ்டாலின் ஒதுக்கறது கஷ்டம்னு பேசிக்கறாங்க.”

“பாவம் வைகோவுக்காக அவருக்கு ஒரு இடம் கொடுக்கலாம்”

“தேர்தலில் இடம் கொடுக்கலைனாலும் இதயத்தில் இடம் கொடுத்துருவாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...