No menu items!

ஏ.ஆர்.ரஹ்மான் செய்தது தவறா? – சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபல் வர்மா!

ஏ.ஆர்.ரஹ்மான் செய்தது தவறா? – சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபல் வர்மா!

ஏ.ஆர்.ரஹ்மான் மீது எல்லோரும் பாய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அவரைத் திட்டி பல பதிவுகளைக் காண முடிகிறது. ரஹ்மான் ரசிகர்கள் அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். லேசாய் சமாளிக்க முயல்கிறார்கள். ஆனாலும் வசவு வீச்சு அதிகமாக இருக்கிறது.

காரணம் ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma)வின் சமீபத்திய வீடியோ பேட்டி. அதில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்.

இந்தியில் பிரசித்திப் பெற்ற இயக்குநர் சுபாஷ் கய் (Subhash Ghai), யுவராஜ் என்ற பெயரில் சல்மான் கானை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்துக்கு இசை ரஹ்மான். வழக்கம்போல் பாடல்கள் தாமதமாகிறது. ரஹ்மானுக்கு சுபாஷ் கய் போன் போடுகிறார். லண்டனிலிருந்து மும்பை வந்திறங்கியதாகவும் இன்னும் சற்று நேரத்தில் மும்பை ஸ்டூடியோவில் சந்திப்பதாக ரஹ்மான் சொல்கிறார். ஸ்டுடியோவில் காத்திருக்கும் சுபாஷ் கய் அங்கே பாடகர் சுக்விந்தர் சிங்கை (Sukhwinder Singh) (தைய்யா தையா பாடினாரே அவர்) பார்க்கிறார். அவர் ஏதோ ஒரு இசை முயற்சியில் இருக்கிறார். என்னவென்று அவரிடம் சுபாஷ் கய் கேட்க ‘உங்கள் படத்துக்குதான் ரஹ்மான் பாட்டு பண்ண சொல்லியிருக்கிறார்’ என்கிறார் சுக்விந்தர். சுபாஷ் கய்க்கு கடும் கோபம் வருகிறது.

அந்த நேரம் ரஹ்மான் ஸ்டுடியோவுக்குள் வருகிறார். ஹாய், ஹாய் என்று தனது வழக்கமான பாணியில் சொல்லிவிட்டு சுக்விந்தரிடம் ‘பாட்டு ரெடியா?’ என்று கேட்கிறார். சுக்விந்தரும் தான் மெட்டு போட்ட பாட்டை பாடிக் காட்டுகிறார். ‘மெட்டு பிடித்திருக்கிறதா?’ என்று சுபாஷ் கய்யிடம் ரஹ்மான் கேட்க கய்க்கு கோபம் தலைக்கேறுகிறது.

‘உங்கள் இசைக்காக கோடி கோடியாக நான் பணம் தருகிறேன். ஆனால் நீங்கள் சுக்விந்தரை மெட்டு போட சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நான் சுக்விந்தரையே இசையமைக்க சொல்லியிருப்பேனே’ என்று ரஹ்மானிடம் கத்துகிறார் சுபாஷ். ஆனால் ரஹ்மான் ’நீங்கள் பணம் கொடுப்பது என் பெயருக்குதான். என் இசைக்கல்ல’ என்று கூலாக சொல்கிறார். அதுமட்டுமில்லாமல், ‘நான் எப்படி பாட்டு போடுகிறேன் என்பது முக்கியமல்ல. நான் யாரை வைத்து பாட்டு போடுகிறேன் என்பதும் முக்கியமல்ல. பாட்டு நல்லா இருக்கிறதா, உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். நான் அந்தப் பாட்டை வாங்கி உங்களிடம் தரும்போது அது என் பாட்டாகிவிடுகிறது. இப்போது நீங்கள் இதை பார்த்ததால் தெரிகிறது. இல்லாவிட்டால் தெரியுமா? உங்களுடைய தால் (Taal) படத்தில் நான் போட்ட பாட்டுக்கள் எல்லாம் ஹிட். அவற்றை என் ட்ரைவர் கூட போட்டிருக்கலாம். உங்களுக்கு அது தெரியுமா? உங்களுக்கு இந்தப் பாட்டு பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். நான் சென்னைக்கு சென்று வேறு பாட்டு அனுப்புகிறேன்’ என்று கூலாக பதிலளித்திருக்கிறார்.

சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு யுவராஜ் படத்தில் இல்லை. ஆனால் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது.

இதுதான் ராம் கோபால் வர்மா சொன்ன சம்பவம்.

உடனே கொந்தளித்துவிட்டது உலகம். அப்படியென்றால் ரஹ்மான் சொந்தமாக பாட்டு போடுகிறவர் இல்லையா என்று ஆத்திரத்துடன் கத்தி கபடாக்களை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டது. இவர்களில் இளையராஜா ரசிகர்களும் பாஜக விரும்பிகளும் அதிகம். அவர்களுக்கு ரஹ்மானை பழி தீர்த்துக் கொள்ள இது ஒரு காரணம்.

சினிமாவுக்கு இசையமத்தல் என்பது குறித்த புரிதல் நமது ஊரில் ஒரு புரிதல் இருக்கிறது. இயக்குநர் வருவார். இசையமைப்பாளருடன் அமர்வார். சூழலை சொல்வார். உடனே இசையமைப்பாளர் ஹார்மோனியத்தை எடுத்து தனக்கு தோன்றும் மெட்டுக்களை வாசிப்பார். அதில் பிடித்த மெட்டை இயக்குநர் தேர்ந்தெடுப்பார். ஹீரோ பெரிய நட்சத்திரம் என்றால் அவர் தேர்ந்தெடுத்து அதில் மாற்றங்களையும் சொல்வார். இந்தக் கதைகளை நாம் பல பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். முப்பது நிமிடத்தில் சின்னத் தம்பி பாடல்கள், எம்.ஜி.ஆர் மெட்டுக்களை மாற்றிய பாடல்கள் என பல கதைகள்.

மெட்டு தேர்ந்தெடுக்கப்பட்டபின் இசை கோர்வைகளை இசையமைப்பாளர் வாத்தியக்காரர்களுக்கு சொல்லித் தருவார். இதில் இரண்டு விதம். அனைத்து இசைக் கருவிகளுக்கும் தானே இசைகுறிப்புகளை தரும் இளையராஜா பாணி. இது மிக அபூர்வம். அல்லது வாத்தியக்காரர்களுடன் அமர்ந்து இசைக்கருவிகளை வாசிக்க சொல்லி இசை கோர்ப்பது மற்றொரு பாணி.

மேற்கத்திய பாணி வேறு வகை. அங்கிருக்கும் பல இசைக் குழுக்கள் – அது பாப், ராக், மெட்டல் என எந்த வகையானாலும் – ஜாமிங் (Jamming) என்று ஒன்றை செய்வார்கள். ஒன்றாய் அமர்ந்து இசையை உருவாக்குவார்கள்.

உதாரணமாய் பீட்டில்ஸ் (The Beatles) இசைக் குழுவை எடுத்துக் கொள்வோம். ஜான் லெனன், பால் மெக்கர்ட்னி, ஜார்ஜ் ஹாரிசன், ரிங்கோ ஸ்டார் என நால்வர் அடங்கிய குழு. 1962 முதல் 1970 வரை கோலோச்சியவர்கள். இன்று வரை இந்தக் குழுவின் பாடல்கள் மில்லியன்களில் விற்றுக் கொண்டிருக்கிறது.
இவர்கள் நால்வரும் ஒரு இடத்தில் கூடுவார்கள். ஒருவர் தான் உருவாக்கிய மெட்டை வாசிப்பார். அதை இன்னொருவர் வேறு வகையில் பாடிக் காட்டுவார். இன்னொருவர் அதில் வேறு இசையை சேர்ப்பார்…இப்படி மணிக் கணக்கில் ஒரு பாட்டை மெருகேற்றிக் கொண்டிருப்பார்கள். சில பாடல்கள் சில மணி நேரங்களில் முடிந்துவிடும். சில பாடல்கள் மாதக் கணக்கில் நீளும்.

இது பீட்டில்ஸ்க்கு மட்டுமல்ல மைக்கேல் ஜாக்சன் முதல் இன்றைய எட் ஷீரன், சார்லி புத் வரை பொருந்தும். தங்கள் இசைக் குழுவினர் மட்டுமில்லாமல் வெளியிலிருக்கும் சிறந்த இசைக் கலைஞர்களையும் தங்கள் பாடல்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்திக் கொள்வார்கள். அதற்கான பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். இசை குறிப்புகளில் அவர்கள் பெயரையும் இணைத்துவிடுவார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்து வந்த பின்னணியை பார்க்க வேண்டும். இளையராஜா போல் இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்து திரைத் துறைக்கு வரவில்லை. இளையராஜா, ராஜ் கோட்டி, டி.ஆர் போன்றவர்களுக்கு ரஹ்மான் கீ போர்ட் வாசிக்கும் கலைஞராக இருந்தாரே தவிர அவர்களுக்கு உதவியாளராக இருந்ததில்லை. படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் நெமிசிஸ் அவென்யூ (Nemesis Avenue) என்ற மேற்கத்திய இசைக் குழுவை நடத்தியவர். விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தவர். இசைக் குழுவில் இருந்ததால் அவருக்கு மேற்கத்திய பாணி ஜாமிங்கும் தெரியும், விளம்பர உலகில் இருந்ததால் தன் பாடல்களை எப்படி விளம்பரப்படுத்தி விற்பது என்ற மார்க்கெட்டிங்கும் தெரியும்.

அந்த ஜாமிங் முறையைதான் அவர் தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அவர் மெட்டை உருவாக்கியதும் அதை அடுத்த அரை நாளில் ரெகார்ட் செய்து கொடுத்துவிடுவதில்லை. அந்த மெட்டில் வேறு என்ன நகாசுகள் செய்யலாம் என்று பார்க்கிறார். உதாரனமாய் டுயட் படத்தில் கதாநாயகன் சாக்சஃபோன் கலைஞன். அதற்காக சாக்ஸ் இசையில் உச்சத்தில் இருந்த கத்ரி கோபால்நாத்தை அழைத்து அவரை வாசிக்க சொல்கிறார். அதில் அவருக்குப் பிடித்ததை தனது பாடலில் சேர்த்துக் கொள்கிறார். அதனால் ரஹ்மானுக்கு இசை தெரியாது என்று அர்த்தம் இல்லை. அந்தக் கருவியில் தன்னைவிட மேம்பட்ட கலைஞனின் திறமையை பயன்படுத்திக் கொள்கிறார். கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டுக்காக நித்யஸ்ரீயுடன் அமர்ந்து அவரை விதவிதமாய் பாடச் சொல்லி கேட்கிறார். அதில் அவருக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார். அவர்களுக்கான பணத்தைக் கொடுக்கிறார். இசை உரிமையை எடுத்துக் கொள்கிறார். மேற்கத்திய பாணியில் இசை தட்டு குறிப்புகளில் அவர்களது பெயரையும் இணைக்கிறார்.

ஆகா, ரஹ்மானுக்கு எத்தனை பெருந்தன்மை, தன் பாடலுக்கு இசைக் கருவிகளை வாசித்தவர்கள் பெயர்களையும் குறிப்பிடுகிறாரே என்று புளங்காகிதம் அடைந்துக் கொண்டிருந்தோம். அதற்கு காரணம் இதுதான்.

இளையராஜா இசையில் இது கிடையாது. ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு ஸ்வரமும் அவரது சிந்தனை மட்டுமே. அவரது படைப்பு மட்டுமே. அவரும் திறமையான கலைஞர்களை பயன்படுத்தியிருக்கிறார். டிவி கோபாலகிருஷ்ணன், ஹரிபிரசாத் சவுராசியா என பல மேதைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் எல்லாம் அவர் படைப்புக்கு.

இருபது வருடங்களுக்கு முன் ரஹ்மானை பேட்டி கண்டிருக்கிறேன். அப்போது அவரிடம் ஒரு கேள்வியை கேட்டேன். அந்தக் காலக் கட்டத்தில் பல்ஸ் (Pulse) என்ற இசைக்குழுவின் இசையை ரஹ்மான் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற விமர்சனம் உண்டு. உதாரணமாய் ரஹ்மானின் ஆரம்பக் கால படங்களில் வரும் வித்தியாசமான புல்லாங்குழல் இசையை அந்தக் குழுவினர்தான் வாசித்து தந்தார்கள் என்று கூறப்பட்டது. அதை அவரிடம் கேட்டேன். ஆனால் அதற்கு ரஹ்மான் முழுமையான பதிலை தரவில்லை. அவர்கள் என் நண்பர்கள், திறமை எங்கிருந்தாலும் பயன்படுத்தலாம் என்பது போன்ற பதிலை அளித்தார். இப்போது சுக்விந்தர் சம்பவம் வெளியில் வந்திருக்கிறது. அன்று பல்ஸ்.

ராம் கோபால் வர்மா அந்தப் பேட்டியில் இன்னொன்றைக் குறிப்பிடுகிறார். ரஹ்மானைப் போல் பாடலை அலங்கரிப்பது வேறு யாருமே கிடையாது என்று சொல்கிறார். ஒரு மெட்டின் மீது பல வித நேர்த்தியான அலங்காரங்கள் செய்து பாடல் வெளி வரும்போது அது பளிச்சென்று இருக்கிறது என்கிறார். இளையராஜாவின் மெட்டுக்கள் சுகமானவையாக இருக்கலாம் ஆனால் ரஹ்மான் சுமாரான மெட்டுக்களையும் பொறுமையாக செதுக்கி செவிக்கு இனியதாக மாற்றிவிடுகிறார் என்று பாராட்டுகிறார் வர்மா.

சரி, இப்படி எல்லோரின் திறமையையும் பயன்படுத்திக் கொண்டு இசை:ஏ.ஆர்.ரஹ்மான் என்று போட்டுக் கொள்ளலாமா என்ற கேள்வி வரும்.

நல்ல நடிகரை பயன்படுத்தி, நல்ல கேமராமேனை பயன்படுத்தி, நல்ல ஆர்ட் டைரக்டரை பயன்படுத்தி, நல்ல வசனகர்த்தாவை பயன்படுத்தி, நல்ல இசையமைப்பாளரை பயன்படுத்தி – ஒரு இயக்குநர் படத்தின் டைரக்டர் நான் தான் என்று கூறிக் கொள்கிறார் அல்லவா அது போன்றுதான் இது.

பல பல வருடங்களுக்கு முன் இளையராஜாவின் புகழ் உச்சத்துக்கு வரத் தொடங்கியிருந்த காலத்தில் அவரை பிலிமாலாயாவில் எம்.ஜி.வல்லபன் பேட்டி எடுத்திருந்தார். அதில் ஒரு கேள்விக்கு ‘ஒரு மெட்டு பிறக்கும்போதே அதன் தலையெழுத்து எழுதப்பட்டுவிடுகிறது. அதை மாற்ற முடியாது’ என்று இளையராஜா பதிலளித்திருப்பார். இது இளையராஜாவுக்கு உண்மை. ஆனால் ரஹ்மானுக்கு அல்ல.

இளையராஜா ஒரு பாடலை நொடியில் படைத்து அடுத்த சில மணி நேரங்களில் பதிவு செய்து விடுகிறார். அந்த இடைப்பட்ட மணிகளில் அவருக்கு தோன்றும் இசைதான் அந்தப் பாடலின் தலையெழுத்து.

ஆனால் ரஹ்மானுக்கு இது பொருந்தாது. தனக்குள் தோன்றும் மெட்டை வாரக் கணக்கில் மாதக் கணக்கில் செதுக்கி அதன் தலையெழுத்தை மாற்றுகிறார். இளையராஜாவின் பாடல்களின் தலையெழுத்து அந்த நொடியில் முடிவாகிவிடுகிறது. ரஹ்மான் பாடல்களின் தலையெழுத்து ஆற அமர எழுதப்படுகிறது.
அப்படி அவர் ஆற அமர எழுத பலர் உதவுகிறார்கள். அது ரஹ்மான் பெயரில் வெளிவருகிறது.

திரையிசையில் பணியாற்றுபவர்களுக்கு இது தெரியும். ரஹ்மான் மட்டுமல்ல. அவருக்கு பின் வந்த பல இசையமைப்பாளர்கள் ரஹ்மான் முறையைதான் பின்பற்றுகிறார்கள்.

அதனால்தான் ‘இவர்கள் இசை உருவாக்குபவர்கள் (Music Composers) அல்ல, இசை நடத்துனர்கள்’ (‘There are no composers today, only programmers’) என்று இளையராஜா அடிக்கடி சொல்கிறார்.

ஆனால் அவர் சொல்வதாலேயே இந்த முறை தவறு என்று சொல்ல முடியாது.

இசை கூட்டு முயற்சியால் உருவாகிறதா தனி மனிதனின் மேதமையால் உருவாகிறதா என்பது அத்தனை முக்கியமல்ல.மனதுக்கு நெருக்கமாக இருக்கிறதா இதயத்தை இதமாக்கிறதா என்பதுதான் இசைக்கு முக்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...