No menu items!

முடிந்தது முதல்கட்ட தேர்தல்! -வழுக்கிய வாக்கு சதவிகிதம்

முடிந்தது முதல்கட்ட தேர்தல்! -வழுக்கிய வாக்கு சதவிகிதம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்றாலே எப்போதும் பரபரப்புதான். 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் மகத்தான மெகா தேர்தல் இது. மக்கள் தொகை கணக்குப்படி பார்த்தால் உலகின் மிகப்பெரிய தேர்தல் என்று இந்திய நாடாளுமன்றத் தேர்தலைத்தான் சொல்ல வேண்டும்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல், ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், முதல் கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்திருக்கிறது.

16.63 கோடி வாக்காளர்கள், 625 வேட்பாளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள், 18 லட்சம் ஊழியர்கள், 361 கண்காணிப்பாளர்கள், 4 ஆயிரத்து 627 பறக்கும் படையினர்… இப்படி முதல்கட்ட தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்களுக்காக 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரெயில்கள், ஒரு லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முதல்கட்ட தேர்தலில் தமிழகம், புதுச்சேரி போன்ற 17 மாநிலங்கள், 4 யூனியன் பகுதிகள் தேர்தலைச் சந்தித்திருக்கின்றன. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுடன், நாடு முழுவதும் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது.

தமிழகம், ஒரே கட்டமாக, ஒரே மூச்சில் தேர்தலைச் சந்தித்து முடித்து விட்டதைப் போல, முதல்கட்ட தேர்தலில், உத்தரகண்ட், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், புதுச்சேரி போன்ற 10 மாநிலங்களும், யூனியன் பகுதிகளும் ஒரே கட்டமாக, ஒரே மூச்சில் நேற்று தேர்தலைச் சந்தித்து முடித்திருக்கின்றன. அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக முழுமையாக வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது.

ராஜஸ்தானில் 12 மக்களவைத் தொகுதிகளும், உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் 8 மக்களவைத் தொகுதிகளும், மத்திய பிரதேசத்தில் 6 மக்களவைத் தொகுதிகளும் நேற்று தேர்தலைச் சந்தித்திருக்கின்றன. மகாராஷ்டிரம், உத்தரகண்ட், அசாம் மாநிலங்களில் 5 தொகுதிகளிலும், பிகாரில் 4 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும் நேற்று வாக்குப் பதிவு நடந்துள்ளது.

சரி. தமிழகத்துக்கு வருவோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் மட்டுமின்றி, குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடந்து முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 72.44 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்தமுறை 69.46% வாக்குகளே பதிவாகியிருக்கின்றன. அதாவது கடந்த தேர்தலை விட 3 சதவிகித வாக்குகள் குறைவு.

தமிழகத்தில், அதிக அளவாக 75.67% வாக்குகள் கள்ளக்குறிச்சி தொகுதியில் பதிவாகி இருக்கின்றன.. தமிழகத்தில் மிகக்குறைவான வாக்குகள் பதிவான தொகுதி மத்திய சென்னை. அங்கே 67.35 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

அதுபோல 60%க்கும் குறைவாக வாக்குகள் பதிவான தொகுதிகள் என தமிழகத்தில் சில தொகுதிகள் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கின்றன. வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என, தலைநகர் சென்னையின் 3 தொகுதிகளுடன், ஸ்ரீபெரும்புதூர், தஞ்சாவூர், மதுரை மக்களவைத் தொகுதிகள் இந்தப் பெருமையை(!) பெற்றுள்ளன.

தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 64.54% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த ஒரே கட்டதேர்தலில், 1.3 லட்சம் போலீசார் காவல்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சிதம்பரம் உள்பட சில தொகுதிகளில் சின்ன சின்ன அமளிதுமளிகள் ஏற்பட்டாலும், பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது முதல் கட்ட தேர்தல்.

கோவை, மத்திய சென்னை தொகுதிகளில் தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்ததாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது தனிக்கதை.

இப்போது மீண்டும் இந்திய அளவிலான தேர்தலுக்கு வருவோம். இந்திய அளவில் நேற்று நடந்த முதல்கட்ட தேர்தலில் 62.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில், அதிக அளவில் வாக்குகள் பதிவான இடம் லட்சத்தீவுதான். அங்கே 83.37% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. திரிபுராவில் 79.90% வாக்குகள். மேற்கு வங்கத்தில் 77.57%. புதுச்சேரியில் 73.25% இவைதவிர அசாம், மேகாலயா மாநிலங்களிலும் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

மிகக்குறைவாக வாக்கு சதவிகிதம் பதிவான இடம் பிகார். அங்கே வெறும் 48.88 சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ளன.

கலவரம் நடந்து ஓய்ந்திருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியும் நேற்று தேர்தலைச் சந்தித்திருக்கிறது. அங்கே மொய்ராங்காம்பு சஜேப் பகுதியில் வாக்குச்சாவடி சூறையாடப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கி ஏந்திய வன்முறை கும்பலை காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்த சம்பவமும் மணிப்பூரில் நடந்திருக்கிறது.

இப்படியான ஒரு கலவரச் சூழல் இருந்தும்கூட மணிப்பூரில் 72.17% வாக்குகள் பதிவாகி இருப்பது ஆச்சரியம்.

அதேப்போல, நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள சத்தீஷ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் நேற்று அமைதியாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

நேற்றைய முதல்கட்ட மக்களவைத் தேர்தலுடன், அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்திருக்கின்றன. அருணாசலப்பிரதேசத்தின் 60 தொகுதிகளில், 50 தொகுதிகளிலும், சிக்கிம் மாநிலத்தின் 32 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று தேர்தல் நடந்திருக்கிறது. (அருணாசலப்பிரதேசத்தின் 10 தொகுதிகளில், போட்டி எதுவுமின்றி வேட்பாளர்கள் கடந்த மார்ச் 30ஆம்தேதி தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள்)

சரி. நேற்று முதல்கட்ட தேர்தலைச் சந்தித்த 102 மக்களவைத் தொகுதிகளில் எத்தனை தொகுதிகள் காங்கிரஸ் வென்ற தொகுதிகள்? எத்தனை தொகுதிகள் பாரதிய ஜனதா வென்ற தொகுதிகள்?

2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால், இந்த 102 தொகுதிகளில் 45 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணி வென்ற தொகுதிகள். 41 தொகுதிகள் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்ற தொகுதிகள்.

மக்களவை முதல் கட்ட தேர்தல் நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜூ, பூபேந்தர் யாதவ், சஞ்சீவ் பால்யன், அர்ஜுன் ராம் மேக்வா, சர்வானந்த சோனாவால் போன்ற மத்திய அமைச்சர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.

தமிழகத்தில் க.கனிமொழி, ஆ.ராசா போன்றவர்களின் எதிர்காலமும் கூட இந்த முதல் கட்ட தேர்தலில் அடங்கியிருக்கிறது.

தேர்தல் முடிவுகளுக்காக இன்னும் 44 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலை எதிர்பார்த்தபடி இப்போது ஆவலுடன் இருக்கிறது இந்தியா.

பொதுவாய் மிக அதிகமாய் வாக்கு சதவீதம் இருந்தால் அலை இருக்கிறது என்பார்கள். அது ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கலாம். ஒரு பிரச்சினையின் அடிப்படையில் இருக்கலாம். மாற்றத்துக்கான வாக்குகளாக இருக்கலாம்.

வாக்கு சதவீதம் வழக்கம்போலோ அல்லது வழக்கத்தை விட குறைவாக இருந்தாலோ அது மக்கள் ஆர்வத்தை தூண்டாத தேர்தல் என்று புரிந்துக் கொள்ளலாம். இது போன்ற வாக்கு சதவீதத்தில் மாற்றங்கள் நிகழாது என்று தேர்தல் ஆய்வாளர்கள் கூறுவார்கள்.

இந்த முறை என்ன நடந்திருக்கிறது என்பது ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...