No menu items!

நியூஸ் அப்டேட்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

நியூஸ் அப்டேட்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதை முன்னிட்டு அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

திரௌபதி முர்மு ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று காலை யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சமஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் மொத்தம் 90.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட 10.13 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,605. இதில் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 103. அறிவியல் பாடத்தில் 93.73 சதவீதம், வணிகவியல் பாடப்பிரிவில் 85.73 சதவீதம், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதம் தொழிற்பாட பிரிவுகளில் 76.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆன்லைன் ரம்மிக்கு தடை : முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்தனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளால் பலரும் பாதிக்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரிடம் அளித்தது. இந்த அறிக்கைமீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர் செல்வம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஜெயக்குமார், “தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் மொத்தமுள்ள 74 பேரில் 65 பேர் பங்கேற்றுள்ளனர். 4 பேர் வராத காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ஆக 5 பேர் மட்டும்தான் வரவில்லை. ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

அதிமுக அடிப்படை விதியே ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரியவில்லை. அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார் ஓபிஎஸ், அவர் துரோகத்தின் அடையாளம். அதிமுக பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது 11-ம் தேதி பொதுக்குழுவில் தெரியும்” என்றார்

முட்டை விலை கடும் உயர்வு

தமிழகத்தில் முட்டையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.6-ஆக அதிகரித்துள்ளது. ஒருசில கடைகளில் 6 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறும்போது, “ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு 400 காசுகளில் இருந்து 450 காசுகளாக அதிகரித்துள்ளது. தற்போது 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் 515 காசு மட்டுமே கையில் கிடைக்கிறது. நாள்தோறும் 5 கோடி முட்டை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது 4.20 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் முட்டை உற்பத்தி 10 சதவீதம் உயரும் நிலையில் தற்போது 20 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகள் வரை உயர வாய்ப்பு உள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...