No menu items!

மாலன் – விருதும் சர்ச்சையும்

மாலன் – விருதும் சர்ச்சையும்

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலனுக்கு இந்த ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருதும் சர்ச்சையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதது ஆச்சே; எனவே, சர்ச்சை இல்லாமல் இருக்குமா? நேற்று இந்த விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து சமூக வலைதளங்களில் இலக்கியவாதிகளின் பக்கங்கள் எல்லாம் இதைப் பற்றிதான் பேச்சு.

சர்ச்சை என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் விருதைப் பற்றியும் விருது பெற்றுள்ள நூலைப் பற்றியும் சிறு குறிப்பு…

இலக்கியத்துக்காக இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது. இதுபோல், சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் டெல்லியில் நேற்று (24-06-2022) அறிவிக்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் மொழிக்கான விருது மாலனுக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ் மொழியில் விருதுக்குரிய நூலை எழுத்தாளர்கள் பொன்னீலன், பாவைச்சந்திரன், சிவசங்கரி ஆகியோரைக் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது. இந்த விருது ரூ. 50 ஆயிரம் பணம், சால்வை, செப்பு பாராட்டு பட்டயம் கொண்டது.

விருது பெற்றுள்ள ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூல், பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி எழுதியுள்ள ‘Chronicle of a Corpse Bearer’ என்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு.

குஜராத்தில் வாழும் பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும் ஒதுக்கலுக்கும் உள்ளான பிணந்தூக்கிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட ஒரு காதல் கதை இந்நாவல்.

பார்சி மதத்தவர்களில் மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். மேல்நிலையில் புரோகிதர்கள், இடைநிலையில் சாதாரண பார்சிகள், கீழ்நிலையில் பிணம் தூக்குபவர்கள் என்னும்படி பார்சி சாதி அமைப்பு உள்ளது. இறந்தவர்களின் பிணங்களைக் குளிப்பாட்டிச் சடங்குகளை நடத்திய பிறகு, பார்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் அமைதித் தோட்டத்திலுள்ள உயரமான கோபுரங்களின் உச்சியில் பிணத்தைக் கழுகுகளுக்கு இரையாக வைப்பது பார்சிகளின் வழக்கம். சாகும் நேரத்தில் இயற்கைக்கு ஒரு பார்சி செய்யும் இறுதிக் கொடையாக இச்செயல் பார்க்கப்படுகிறது. இதற்காக பிணம் தூக்கும் வேலையை பார்சிகளிடையே ஒதுக்குதலுக்கு உள்ளான பிணந்தூக்கிகள் என்ற ஏழை சாதியினர் செய்கிறார்கள். மிகத் தூய்மையான பணியினைச் செய்பவர்கள் என்று இவர்களுக்குப் பெயரிருந்தாலும் இவர்களை ஏனைய பார்சிகள் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கிறார்கள்.

இந்த நாவலில் பிணம் தூக்கும் சமூகத்தைச் சேர்ந்த செப்பியா என்ற பெண்ணை, பார்சி மத குருக்களின் மகனான ஃபெரோஸ் எல்சிதனா தனது 17 வயதிலே காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறான். அந்த பெண் அவனுக்கு ஒன்றுவிட்ட தங்கை முறையுமாவாள். இதனாலும் அவளது தந்தையின் பிணம் தூக்கும் சாதி பின்புலத்தாலும், ஃபெரோஸ் எல்சிதனா தந்தையும் சமூகமும் அவளை ஒதுக்குகிறது. இதுவே நாவலின் ஆதார சுருதி.  

பிணம் தூக்கும் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் நிஜ வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டுள்ள நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. பார்சி சமூக அரசியல், அதன் பின்னணியில் அன்றைய இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பார்சி மதத்திலுள்ள பழமைவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே மதச் சடங்குகளைக் குறித்த விவரங்களை ஒட்டி நிகழும் பூசல்கள் என்று இந்த நாவல் 1990கள் வரை நீள்கிறது.

பார்சிகள் பிணத்தை சாப்பிடும் பாறு கழுகுகள் அருகி வருவதும், பிணத்தை போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் கட்டிடம் கட்டப்படுவதற்காக விற்கப்படுவதும் போன்ற சமகால பிரச்சினைகளையும் இந்த நாவல் பேசுகிறது.

இந்த நாவலை எழுத்தாளர் மாலன், ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாடமி பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

இனி சர்ச்சை

சாகித்ய அகாடமி ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருக்கிறார் மாலன். இந்நிலையில், சாகித்ய அகாடமி அமைப்பில் இருக்கும் ஒருவருக்கே விருதை கொடுப்பது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக சார்பு காரணமாகவே இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இத்தகைய விமர்சனங்களை சாடியுள்ள எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார், “முகநூல் சமூகத்தை கவனிக்கையில் ஒன்று தெளிவாய்த் தெரிகிறது. ஒருத்தரும் பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் புத்தகத்த படிக்கல. விருதுக்கான அத்தனை தகுதிகளுமுடைய நாவல் இது. ஒரு நல்ல புத்தகத்திற்கு விருது கிடைக்கும்போது நிகழும் இந்த உதாசீனமும் சீண்டல்களும் அந்த புத்தகத்திற்கு செய்யும் அவமரியாதை” என்று கூறியுள்ளார்.

“ஒவ்வொரு சமூகத்திற்கும் இருண்ட பக்கங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க பலர் மறுக்கும்போது அந்தப் பகுதியை வெளிப்படுத்துவது ஒரு  எழுத்தாளனது கடமை.

மாலனின் மொழிபெயர்ப்பு கடுமையான தமிழில்லாது ஆங்கிலம் கலந்த தென் சென்னைத் தமிழாக சலசலத்து ஓடுகிறது. அந்த வகையில் சைரஸ் மிஸ்திரியின் நாவல் அனைவரும் படிக்க வேண்டியது” என்கிறார் எழுத்தாளர் நோயல் நடேசன்.

இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியான போதே 2015ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது மற்றும் தெற்காசிய இலக்கியத்திற்கான DSC விருது என்ற சர்வதேச விருது உட்பட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 COMMENTS

 1. “விருதுக்கான அத்தனை தகுதிகளுமுடைய நாவல் இது. ஒரு நல்ல புத்தகத்திற்கு விருது கிடைக்கும்போது நிகழும் இந்த உதாசீனமும் சீண்டல்களும் அந்த புத்தகத்திற்கு செய்யும் அவமரியாதை” – புத்தகத்தை யாரும் அவமதிக்கவில்லையே. ஒரேயொரு புத்தகத்தை மொழிபெயர்த்துவிட்டு தனது சாகித்திய அகாதமி உறுப்பினர் செல்வாக்கால் விருது பெற்றுள்ளார் என்பதுதான் விமரிசனம்.

 2. மாலன் முகநூல் மூலம் அளித்துள்ள விளக்கம்…

  1. கதை மும்பையில் நடக்கிறது, குஜராத்தில் அல்ல
  2. நான் சாகித்ய அகாதெமியின் நிர்வாகக் குழுவில் இல்லை. அதன் முழு நேர ஊழியனும் இல்லை.
  3. சாகித்ய அகாதெமி விருதுகள் தேர்வு முறை அதன் இணையதளத்தில் உள்ளது. இங்கு சுருக்கமாக: மூன்று நிலைகள் கடந்த பின்னர்தான் ஒரு நூல் தேர்வாகிறது. Ground list என்பது முதல் நிலை. முப்பதற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், நூலகர்கள், எழுத்தாளர்கள் தலா இரு நூல்களைப் பரிந்துரைக்குமாறு கோரப்படுகிறார்கள். இதிலிருந்து வல்லுநர் குழு வடிகட்டி 5 நூல்கள் கொண்ட குறும் பட்டியலைத் தயாரிக்கிறார்கள் இந்தக் குழு preliminary panel என்றழைக்கப்படுகிறது. இதில் அகாதெமியின் ஆலோசனைக் குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவினர் இடம் பெற முடியாது. இந்தக் குறும்பட்டியலிருந்து நடுவர் மூவர் நேரில் கூடி விவாதித்து முடிவு செய்கிறார்கள். பொதுவாக இந்த மூவரும் வேறு வேறு சார்புகள், பார்வைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இதிலும் அகாதெமியின் குழு உறுப்பினர்கள் நடுவர்களாக இருக்க முடியாது. இவர்கள் நியமனம் ரகசியமானது. அகாதெமியின் தலைவரே நேரடியாக நியமிப்பார். குழு உறுப்பினர்களுக்கு இது தெரியாத வண்ணம் ரகசியம் காக்கப்படுகிறது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அகாதெமியின் தலைவர் நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற்று விருது பெறும் நூலை அறிவிக்கிறார். விருது நூலுக்குத்தான்.
  4. நான் ஐந்தாண்டுகளாகப் பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன். அகாதெமியின் எந்த விருதுக்கும் பொதுக்குழுவிற்கும் தொடர்பு இல்லை. அவர்கள் நடுவர்களோ, குறும்பட்டியல் தயாரிப்பவரோ இல்லை. இதற்கு முன்னரும் பொதுக்குழு உறுப்பினர்களது நூல்கள் பரிசு பெற்றிருக்கின்றன. நான் முன்னுதாரணம் இல்லை.
  5. அகாதெமி பரிசுகளுக்கும் அரசிற்கும் சம்பந்தம் இல்லை. கடந்த சில ஆணடுகளில் பரிசு பெற்ற சிலர்: சசி தரூர் (ஆங்கிலம்) -.காங்கிரஸ், வீரப்ப மொய்லி (கன்னடம்) – காங்கிரஸ், இமயம் (தமிழ்) – திமுக, சு. வெங்கடேசன் (தமிழ்) – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த ஆண்டு மம்தா அரசின் கல்வி அமைச்சர் வங்க மொழிக்குப் பெற்றார்.
  6. ஜாதிக்கும் விருதுக்கும் தொடர்பில்லை. அம்பைக்கு முன்னால் அகாதெமியின் நான்கு வகை விருதுகள் பெற்றவர்கள் அனைவரும் பார்ப்பனர் அல்லாதாரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...