No menu items!

பிரதமர் மோடி நினைவூட்டும் நெருக்கடி நிலை – என்ன நடந்தது?

பிரதமர் மோடி நினைவூட்டும் நெருக்கடி நிலை – என்ன நடந்தது?

நெருக்கடி நிலை, எமர்ஜென்சி, மிசா இந்த வார்த்தைகளை இன்றும் நமது அரசியல் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். நேற்று மான் கி பாத் நிகழ்ச்சியில் கூட நெருக்கடி நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். ‘கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஜனநாயகத்தின் மீது இந்தியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தகர்க்க முடியவில்லை. நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் போராடி, அவசரநிலையை தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்டனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமாக வர்ணிக்கப்படும் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு 47 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1975 ஜூன் 25 முதல் மார்ச் 21 1977 வரை – சுமார் இருபத்தோரு மாதங்கள் இந்தியா நெருக்கடி நிலையை அனுபவித்தது.

ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் நெருக்கடி நிலை, எமர்ஜென்சி, மிசா போன்ற வார்த்தைகளை கேட்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த காலக் கட்டத்தில் என்ன நடந்தது என்பது தெரியுமா என்பது சந்தேகமே. அவர்களுக்காக இந்தக் கட்டுரை.

இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இந்தியர்கள் அந்தக் கஷ்டங்களை அனுபவித்து 47 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் மறக்க முடியாத, மறக்க கூடாத காலக் கட்டமாக நெருக்கடி நிலை காலகட்டம் இருக்கிறது.

நெருக்கடி நிலை இந்திய ஜனநாயகத்தையே கேள்விக் குறியாக்கின ஒரு காலகட்டம்.

அது என்ன நெருக்கடி நிலை?

நம்ம மக்களுக்கு நிறைய உரிமைகளை கொடுக்கிற இந்திய அரசமைப்பு சட்டத்துல அந்த உரிமைகளை நிறுத்தி வைக்கிறதுக்கும் தடுக்கிறதுக்கும் சில சட்டங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் அரசமைப்பு சட்டத்தின் 352வது பிரிவு. நாட்டை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு இதுனு சொல்லப்படுகிறது.

நாட்டுக்கு வெளிநாட்டுலருந்தோ அல்லது உள்நாட்டிலருந்தோ ஆபத்து வரும் போது இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி நெருக்கடி நிலையை குடியரசுத் தலைவர் அறிவிக்கலாம். நெருக்கடி நிலையின் கால அளவு ஆறு மாதங்கள்தான். மேலும் நீட்டிக்க வேண்டுமானால் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்தப் பிரிவை பயன்படுத்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தினால் பிரதமருக்கு நிறைய அதிகாரம் வந்துரும். நாட்டு மக்களுக்கு இருக்கிற பல அடிப்படை உரிமைகள் பறி போயிரும். அரசு சொன்னதுதான் சட்டம்னு ஆகிடும். அரசு என்பது இங்கே பிரதமர் என்று புரிந்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது.

1971 பாகிஸ்தான் போரின்போது இந்தியாவுல நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இருந்துச்சு. வெளிநாட்டு அபாயத்தை காரணம் காட்டி இந்திரா காந்தி கொண்டு வந்திருந்தாங்க. 1975 ஜூன் 25ஆம் தேதி உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்கிறதுக்காக இந்திராகாந்தியால மீண்டும் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டது.

இந்த உள்நாட்டு நெருக்கடி நிலை அறிவிப்புதான் இந்தியா என்ற ஜனநாயக நாட்டை சர்வாதிகாரம் என்ற இருண்ட காலத்துக்குள் கொண்டு போனது.

நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில் யாரும் சுதந்திரமா பேசக்கூடாது. எழுதக் கூடாது. கூட்டம் கூடக் கூடாது. கருத்துக்களை சொல்லக் கூடாது. நாளிதழ்கள், பத்திரிகைகள்ல அச்சடிக்கப்படுற ஒவ்வொரு செய்திக்கும் கட்டுரைக்கும் அரசாங்கத்துக்கிட்ட அனுமதி வாங்கனும். போராட்டங்கள், எதிர் குரல்களுக்கு அனுமதி இல்லை.

அரசை எதிர்த்தால் மட்டும் சிறையல்ல, எதிர்ப்பீர்கள் என்று அரசு நினைத்தாலே சிறைதான்.

நம்ம இந்தியாவிலயா இப்படி நடந்துச்சுனு இப்ப இதைப் பத்தி கேக்குற இளையதலைமுறையினருக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். ஆனா இப்படிதான் நடந்துச்சு.

ஜவஹர்லால் நேருவின் ஜனநாயக பாரம்பர்யத்தில் வந்த இந்திராகாந்தி சர்வாதிகாரியாக இருந்த காலம் அது.

இந்திரா காந்தி ஏன் அப்படி செஞ்சார்? எதுக்காக நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார்?

நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டதற்கு காரணம் ஒரு தீர்ப்பு. 1971 மார்ச் மாசம் இந்தியாவுல பொதுத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல்ல இந்திரா காந்தியோட காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றி பெற்றது. 43.6 சதவீத ஓட்டுக்களை வாங்கி 352 இடங்கள்ல ஜெயிச்சது. இந்திரா காந்தியும் பிரதமர் ஆனார்.

ஆனா அந்த வெற்றி இந்திராகாந்திக்கு சந்தோஷத்தை கொடுக்கல. காரணம் அவருக்கு எதிரா ராஜ் நாராயன் தேர்தல் முறைகேடு வழக்கு போட்டிருந்தார். அந்தத் தேர்தல்ல ராஜ் நாரயண் ரேபரேலி தொகுதில இந்திரா காந்திக்கு எதிரா நின்னு தோத்துப் போனவர்.

இந்திரா காந்தி செய்த தேர்தல் முறைகேடு என்ன?

அரசாங்க சம்பளம் வாங்கிட்டு இருந்த தன்னோட தனிப்பட்ட உதவியாளர் யஷ்பால் கபூரை தன்னோட தேர்தல் ஏஜெண்ட்டா இந்திராகாந்தி நியமிச்சார். நியமிச்சு ஒரு வாரம் கழிச்சுதான் யஷ்பால் கபூர் அரசு பதவியை ராஜினாமா செஞ்சிருக்கார். இது தேர்தல் விதிகளுக்கு புறம்பானதுனு ராஜ்நாரயண் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்குல 1975 ஜூன் 12 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்துல தீர்ப்பு வந்தது. அது இந்திராகாந்திக்கு எதிராக இருந்தது. இது முறைகேடுதான் என்பதால் இந்திராகாந்தியோட தேர்தல் செல்லாதுனு அந்தத் தீர்ப்பு சொன்னது.

தீர்ப்பில் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்மோகன் சின்கா என்ன சொல்லியிருந்தார்னா:_ “மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். யஷ்பால் கபூர் முன்னதாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தபோதிலும் ஜனவரி 25_ந்தேதிதான் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தேதி வரை இந்திரா காந்தியின் தேர்தல் பணிகளை யஷ்பால் கபூர் கவனித்தது சட்ட விரோதம். இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. போலீசாரும் பயன்படுத்தப் பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. ” இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்திரா காந்திக்கு இந்த தீர்ப்பு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம், தேர்தல் முறை கேடுல ஈடுபட்டவங்க ஆறு வருஷம் தேர்தல்ல போட்டியிட முடியாதுனு சட்டத்துல இருக்கு. பதவியிலும் தொடர முடியாது.

இந்த தீர்ப்பு வந்ததுமே இந்திரா பிரதமரா இருக்கக் கூடாதுனு எதிர்க் கட்சிகள் ஒண்ணு சேர்ந்து போராட்டங்கள்ல இறங்கிட்டாங்க.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்திரா காந்தி உச்ச நீதிமன்றத்துல மேல் முறையீடு செஞ்சாங்க.. 1975 ஜூன் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தன்னோட தீர்ப்பை சொல்லிச்சு. அதுல இந்திரா காந்தி பிரதமரா நீடிக்கலாம். நாடாளுமன்றத்துக்கு போகலாம் ஆனா, அதன் நடவடிக்கைகளில் பங்கு பெறவோ வாக்களிக்கவோ முடியாதுனு தீர்ப்புல சொல்லியிருந்தாங்க. அவரோட பங்களிப்பு பிரதமர்ன்ற முறையில மட்டும் இருக்கும்னும் குறிப்பிட்டிருந்தாங்க.

ஏற்கனவே இந்திராகாந்திக்கு எதிராக போராட்டங்கள் நடத்திக்கிட்டு இருந்த எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு இந்தத் தீர்ப்பு இன்னும் பலத்தை கொடுத்தது. இந்திரா காந்திக்கு எதிராக ஜூன் 25ஆம் தேதி டெல்லில மிகப் பெரிய போராட்டத்தை நடத்துனாங்க. அந்தப் போராட்டத்துக்கு ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமை தாங்கினார். இந்த எதிர்ப்புகளை இந்திரா காந்தி அரசியல் ரீதியாக சந்திச்சிருக்கலாம். சமாளிச்சிருக்காலாம். ஆனால் அவங்க அப்படி பண்ணல.

1975 ஜூன் 25ஆம் தேதி நள்ளிரவு எமர்ஜென்சினு சொல்லப்படுற மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நெருக்கடி நிலையை இந்திராகாந்தி அறிவிச்சாங்க. அப்போ ஜனாதிபதியா இருந்தவர் பக்ருதின் அலி அகமது. அவர்தான் அந்த உத்தரவுல கையெழுத்து போட்டார்.

நெருக்கடி நிலை காலத்துல ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு அதிகம் பயன்பட்ட சட்டம்தான் மிசா. இன்னைக்கு பல தலைவர்கள் நாங்க மிசா சட்டத்தினால அதிகம் பாதிக்கப்பட்டோம்னு பேசுறதை கேக்குறோம். அது உண்மைதான். அது மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற சட்டம். காவல்துறையினருக்கு கட்டுக்கடங்கா உரிமைகளை கொடுக்கிற சட்டம்.

மெயிண்டனன்ஸ் ஆஃப் இண்டர்னல் செக்யுரிட்டி அதாவது உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம். இதுதான் மிசா ன்ற சட்டத்தோட முழு பேர்.

இந்திரா காந்திதான் இந்த சட்டத்தை 1971ஆம் வருஷம் கொண்டு வந்தாங்க. இந்த சட்டம் அரசாங்கத்துக்கும் காவல் துறைக்கும் கட்டுப்பாடில்லாத அதிகாரங்களை கொடுக்குது. யாரை வேண்டுமானாலும் காரணம் சொல்லாமல் கைது பண்ணலாம். விசாரணை இல்லாம சிறைல அடைக்கலாம். இந்த சட்டத்தை கொண்டு வரும் போது பதுக்கல்காரர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கு எதிராதான் பயன்படுத்தப்படும்னு சொல்லப்பட்டது. ஆனா அரசியல் எதிரிகளை பழிவாங்கவே இது அதிகம் பயன்பட்டது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நள்ளிரவே எதிர்க் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி, அத்வானி, ஜோதிபாசு, சந்திரசேகர், சரண் சிங், ராஜ் நாரயண், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ்னு பெரிய தலைவர்கள் எல்லோருமே சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த ஒரு நாள் ராத்திரில இந்தியா முழுவதும் 677 தலைவர்கள் கைது செய்யப்பட்டாங்கனு ஒரு புள்ளி விவரம் சொல்லுது.

தமிழ்நாட்டுல அதிகம் பாதிக்கப்பட்டது திமுக தலைவர்கள்தாம். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதுமே அதை எதிர்த்து திமுக தீர்மானம் போட்டதுதான் இதற்கு காரணம். திமுகவை சேர்ந்த மு.க,ஸ்டாலின், முரசொலி மாறன், சிட்டிபாபு, ஆசைத் தம்பி மாதிரியான பல முன்னணி திமுக தலைவர்கள் சிறைல அடைக்கப்பட்டாங்க.
தலைவர்கள் கைது ஒருபக்கம் நடந்துக் கொண்டிருக்க, பத்திரிகைகளுக்கு கடுமையான தணிக்கை கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிச்ச அன்னைக்கு ராத்திரி டெல்லில பத்திரிகை அலுவலகங்கள் இருந்த முக்கியமான இடங்களில் எல்லாம் மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. அதனால நிறைய செய்தித்தாள்கள்ல அந்த செய்தியே வரல.

பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை இருந்ததால அரசாங்கம் அனுமதிச்ச செய்திகளை மட்டும்தான் பத்திரிகைகள் அச்சிட முடியும். அதனால தலைவர்கள் கைது குறித்த செய்திகள் பத்திரிகைகள்ல வரல.

நெருக்கடி நிலையால பொதுமக்களுக்கும் நிறைய கஷ்டம் இருந்துச்சு. பல லட்சம் மக்களுக்கு கட்டாய கருத்தடை ஆபரேஷன் செஞ்சாங்க, குடிசை வாழ் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி தலைமையேற்று நடத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இத்தனை கொடுமைகள் நடந்த நெருக்கடி நிலை காலம் இருபத்தோரு மாதங்கள் கழித்து நீக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்துல நடந்த இந்திராகாந்தியோட தேர்தல் வழக்குல1975 டிசம்பர் மாசம் அவருக்கு சாதகமா தீர்ப்பு வந்தது. 1976ல நாடாளுமன்றத்தோட பதவிக் காலம் முடிஞ்சது. ஆனா இந்திரா காந்தி 1977லதான் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிச்சார். அந்த வருஷ ஆரம்பத்திலயே தலைவர்களை விடுதலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.

1977 மார்ச்ல நடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல எதிர்க் கட்சிகள்லாம் ஒண்ணு சேர்ந்து இந்திராகாந்தியோட காங்கிரஸ் கட்சிக்கு எதிரா நின்றாங்க ஜெயிச்சாங்க. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் தேர்தல்ல தோத்துட்டாங்க.

தமிழ்நாட்டுல நெருக்கடி நிலை சமயத்துல, 1976ல திமுக ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல்ல எம்.ஜி.ஆர் புதிதாய் தொடங்கியிருந்த அதிமுகவுடன் இந்திரா காங்கிரஸ் கூட்டணி அமைச்சது. தேர்தல்ல வெற்றி பெற்று, அதிமுக முதல் முறையா தமிழகத்துல ஆட்சியையும் பிடிச்சது.

மத்தியில ஜனதா அரசு இருந்தபோது நெருக்கடி நிலையின் போது நடந்த அத்துமீறல்களை விசாரிக்க ஷா கமிஷனை நியமிச்சது. அந்த விசாரணை கமிஷன் அறிக்கைல நெருக்கடி நிலையின் போது நடந்த பல அத்துமீறல்கள், அராஜகங்கள் பத்தி நிறைய சொல்லியிருந்தாங்க.

நெருக்கடி நிலைக்கு எதிராக ஆட்சியைப் பிடித்த ஜனதா அரசால மிசா சட்டம் நீக்கப்பட்டது. ஆனா மக்களோட அடிப்படை உரிமைகளை பறிக்கிற 352வது பிரிவு முழுமையா நீக்கப்படவில்லை.

இதில் ஜனதா அரசு பல மாற்றங்களை செய்தது. 44வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் என்று சொல்லப்படும் அந்த திருத்தங்களில் உள்நாட்டு நெருக்கடி என்ற வார்த்தை நீக்கப்பட்டு ஆயுத கிளர்ச்சி என்ற சொற்றோடர் சேர்க்கப்பட்டது. இந்திரா காந்தி உள்நாட்டு நெருக்கடி என்று சொல்லிதான் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார்.

பிரதமரின் வாய்மொழி ஒப்புதல் அல்லது அனுமதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர், அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் முறையை கைவிடப்பட்டு, கேபினட்டின் தீர்மானம் எழுத்து மூலமாக குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, அவர் நெருக்கடி நிலையை அறிவிக்க முடியும் என்று 44-வது திருத்தத்தின் மூலம் நிபந்தனையாக்கப்பட்டது. இது போன்று பல மாறுதல்கள் செய்யப்பட்டு ஒரு பிரதமர் நினைத்த நொடியில் நெருக்கடி நிலையை அறிவிக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டது.

நெருக்கடி நிலை வந்து 47 வருடங்கள் கடந்துவிட்டன.

அன்னைக்கு இருந்தது மாதிரியான அரசாங்கத்தோட நேரடியான அடக்குமுறையான கட்டுப்பாடுகளோ தணிக்கைகளோ இன்னைக்கு இல்லை.

மிசா சட்டம் நீக்கப்பட்டுவிட்டாலும் அரசுகள் தொடர்ந்து அது போன்ற சட்டங்களைக் கொண்டு வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. தடா, பொடா போன்ற சர்வதிகார சட்டங்களை உருமாற்றி பெயர் மாற்றி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துக்கிட்டுதான் இருக்காங்க. அதை எதிர்த்து குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...