No menu items!

நியூஸ் அப்டேட்: தமிழ்நாட்டில் வேகமாக பரவும் டெங்கு, இன்ஃபுளுவென்சா: 11 பேர் உயிரிழப்பு

நியூஸ் அப்டேட்: தமிழ்நாட்டில் வேகமாக பரவும் டெங்கு, இன்ஃபுளுவென்சா: 11 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 282 குழந்தைகள் H1N1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்புளுவன்சா காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 243 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டத்தோ சாமிவேலு மறைவு: பிரதமர், முதல்வர்  இரங்கல்

மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு. 1963இல் இருந்து மலேசிய வானொலி, மலேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசிய தகவல் இலாகாவில் நாடக கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர். தகவல் தொழில்நுட்பம், பொது பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராக, மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் பதவி வகித்தவர்.

டத்தோ சாமிவேலு, வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார். மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில், ‘டத்தோ’ ஒரு மறக்கவியலா அத்தியாயம். அவரது இறுதிச் சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டத்தோ சாமிவேலு மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மலேசியாவின் முன்னாள் கேபினட் அமைச்சரும், மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர். எஸ்.சாமிவேலுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என பதிவிட்டுள்ளார்.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சித்ரவதை: 21 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பலரால் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை சங்கிலி தொடர்போல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கியது தெரியவந்தது. இவ்வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்றம் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 7 பெண்கள், காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிறுமியின் உறவினர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 19ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

ஆந்திராவில் முதலிரவில் மணமகன் மாரடைப்பால் மரணம்

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனபள்ளியைச் சேர்ந்தவர் துளசி பிரசாத் (வயது 25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிரிஷா (23) என்பவருக்கும் பெரியவர்கள் நிச்சயித்த வண்ணம் கடந்த திங்கட்கிழமை மதனபள்ளியில் திருமணம் நடைபெற்றது. பின்னர், பெண் வீட்டார் வீட்டில் முதல் இரவு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  மணமகன் துளசி பிரசாத் முதல் இரவு அறைக்குள் இருந்தார். சிறிது நேரம் கழித்து மணப்பெண் அறைக்கு சென்று பார்த்தபோது, படுக்கையில் விழுந்து கிடந்தார் துளசி பிரசாத். அதிர்ச்சி அடைந்த சிரிஷா வெளியில் ஓடி வந்து தகவல் தெரிவித்தார்.

உடனடியாக துளசி பிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே துளசி பிரசாத் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மதனபள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...