No menu items!

வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம்

வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம்

மும்பை பரோட்டா கடை வேலைக்குப் போகும் திருநெல்வேலி பயல் முத்துவீரன், சந்தர்ப்ப சூழ்நிலையால் பரோட்டாக்களுக்குப் பதிலாக துப்பாக்கி தோட்டாக்களை கையிலெடுக்க அவன் சோலி முடிந்ததா இல்லையா என்பதே இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஒன்லைன்.

ஃபீல் குட் ரொமான்டிக் டிராமாவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் – சிம்பு கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்பு எக்கச்சக்கம். ஆனால் இந்த முறை கெளதம் வாசுதேவ் மேனன் தனது வழக்கமான ஸ்டோரி டெம்ப்ளேட்டான கேங்ஸ்டர் கதையை ரொம்ப நீளமாகவே எடுத்திருக்கிறார்.

திருநெல்வேலி நடுவக்குறிச்சிக்கு அருகே இருக்கும் கிராமம் கருவக்குளம். அப்பா இல்லாததால் தனது அம்மாவையும் தங்கையையும் காப்பாற்ற சுள்ளிப் பொறுக்கும் முத்துவீரன். வெட்டிய உடைமுள்ளை எடுத்து வைக்கும் போது முத்துவீரனுக்கு சீக்கிரமே நல்லது நடக்கும் என்கிறார் போஸ்ட்மேன். போகிறப்போக்கில் அவர் ஒரு பீடியைப் பற்றவைக்கிறார். அந்த தீக்குச்சி சுள்ளியைப் பற்ற வைத்துவிடுகிறது. படமும் தொடங்கி விடுகிறது.

பொறுக்கி வைத்த சுள்ளி எரிந்து சாம்பலாகிவிட, சிம்புவுக்கு வாழ்க்கை முள்ளாய் குத்துகிறது. அம்மா ராதிகா ‘உன் ஜாதகத்துல நீ கொலைக்காரன் ஆவேன்னு இருக்குல. பேசாம வேற எங்கேயாவது போ’ என்கிறார். மும்பையில் பரோட்டா கடை வைத்திருக்கும் மாமா சிம்புவுக்கும் மும்பை டிக்கெட் போடுகிறார். ஆனால் மும்பைக்கு கிளம்பும் முன்பே மாமா தனது பூவுலக வாழ்க்கையை முடித்துகொள்ள டிக்கெட் வாங்கி விடுகிறார்.

ஆனாலும் சிம்பு மும்பைக்குப் போகிறார். மாமா சொன்ன பரோட்டா கடையில் சேர்கிறார். பரோட்டா கடையில் இருப்பவர்கள் சாதாரண மாஸ்டர்கள் அல்ல. கூலிக்கு ஆட்களை கொத்து பரோட்டா போடும் கேங்ஸ்டர்கள் என பிறகுதான் தெரியவருகிறது.

அதற்குள் சிம்புவும் கையில் துப்பாக்கியை தூக்கிவிட, ’இன்டர்வெல் வந்தாச்சு’ என்று நாம் யூகித்ததைப் போலவே முதல் பாதி முடிந்துவிடுகிறது. பிறகு துப்பாக்கி வம்பில் சிம்பு என்னவாகிறார் என்பதை இரண்டாவது பாதியில் காட்டியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

சுள்ளிப் பொறுக்கும் பத்தொன்பது வயது இளைஞனாக சிம்புவை திரையில் பார்க்கும் போதே வழக்கத்திற்கு மாறாக சிம்பு மெனக்கெட்டு இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. கருவக்குளம் முத்து வீரனாக வரும் காட்சிகளில் சிம்பு அப்பாவித்தனத்தை உடல் மொழியிலும், முக அசைவிலும் காட்டியிருக்கிறார். கேங்ஸ்டராக வரும் போது சிம்புவாகவே மாறியிருக்கிறார். அதுவே மும்பை முத்துவுக்கு சரியாய் பொருந்தியிருக்கிறது. ஆக, நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புக்கு ஒரு ஸ்பெஷல் பரோட்டா விருந்தாக அமைந்திருக்கிறது ‘வெந்து தணிந்தது காடு’.

சித்தி இதானி. சித்தா யுனானி மருத்துவப் பெயர் போல் இருக்கும் இந்த பெயர்தான் கதாநாயகியின் பெயர். நல்ல வேளையாக காற்றில் பறக்கும், சுருள் முடி, துப்பட்டாவுடன் அவுன்ஸ் கணக்கில் அளந்து பேசும் கெளதமின் ஹீரோயினாக இல்லாததால், சித்திக்கு நல்ல வாய்ப்பு. தமிழ் சினிமாவுக்கு எடுபடும் முகம்.

ராதிகா நடிப்பதில் ஆச்சயர்மில்லை. ஆனால் எழுத்தாளர் பவா செல்லத்துரையும் அவரது எழுத்தைப் போல இயல்பாய் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மலையாளியாக வரும் நீரஜ் மாதவ் நன்றாக நடித்திருக்கிறார்.

படம் பார்க்கும் போதே ஒரு கேங்ஸ்டர் மூவிக்கான வார்ம் ஃபீலிங்கை ஃப்ரேமிற்கு ஃப்ரேம் தக்க வைத்திருக்கிறது ஒளிப்பதிவு. பரோட்டா கடை, உள்ளே வந்தால் வெளியேற முடியாத ஒரு சிறை என்ற உணர்வை வெளிப்படுத்தும் காட்சியமைப்பும், அதன் கேமரா கோணங்களும் அசத்தல்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை பின்னணியில் பதறவைக்கிறது.

திரைக்கதை வசனம் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஜெயமோகன். இதனால் திரைக்கதையில் கெளதமின் விவேகத்திற்கு பதில் ஜெயமோகனின் வேகம் தெரிகிறது. படிக்கும் போது சுவாரஸ்யம் இருக்கும். சிறுகதை ஒரு முழுநீளப்படமாக மாறும் போது அதில் அதே சுவாரஸ்யத்தை தக்கவைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பதை ஜெயமோகன் இப்படம் மூலம் நன்றாகவே உணர்ந்திருப்பார்.

கொலைக்காரன் ஆவாய் என்று ஜோசியர் சொன்னார் என்று ராதிகா சொல்கிறார். மாமாவின் துப்பாக்கியை சிம்பு எடுத்துகொண்டு மும்பைக்கு வருகிறார். மும்பை பரோட்டா கடையில் துப்பாக்கியை தூக்கினால் அது உன்னை விடாது என்கிறார்கள். இப்படி எல்லாவிதத்திலும் மூளையை டிஸ்டர்ப் செய்யாமல் எளிதில் யூகிக்கிற முடிகிற ஒரு திரைக்கதையை எடுத்து கொண்டவர்கள், அதில் நாம் அதிகம் ஆழ்ந்துப் போகிற மாதிரியான சம்பவங்களோ உணர்வுகளோ இல்லாததால் க்ரேவி இல்லாத வெறும் பரோட்டா போல இருக்கிறது.

சிம்பு, சித்தி இதானி, ராதிகா கதாபாத்திரங்களைத் தவிர்த்து அதிக காட்சிகளில் வருகிற கர்ஜி, குட்டி, பாஸ் போன்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கான டீடெய்லிங் இல்லாதது கிளாசிக்கல் கார்களில் மாட்டும் ஆக்ஸ்சஸரீஸ் போன்ற உணர்வை அளிக்கின்றன.

இடைப்பட்ட காலத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு நடிகராக வலம்வரும் கெளதம் வாசுதேவ் மேனன் மேக்கிங் விஷயத்தில் தன்னுடைய ஃபார்ம்மை இன்னும் இழக்கவில்லை என்று நினைவூட்டி இருக்கிறார்.

ஆனால் கெளதமின் கேங்க்ஸ்டர் கதையோ அல்லது காதல் கதையோ அவற்றில் இருக்கும் ஒருவிதமான ஈர்ப்பு இதில் மிஸ்ஸிங்.

ஆனால் சிம்புவுக்கு இது வெந்து தணிந்த காடு அல்ல. பற்றியெறிய துணிந்த காடு போல் comeback கம்பளத்தை விரித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...