No menu items!

நான் மிகப்பெரும் தலைவராவேன்: சொன்னதை செய்த அண்ணா

நான் மிகப்பெரும் தலைவராவேன்: சொன்னதை செய்த அண்ணா

அறிஞர் அண்ணாதுரையின் 113-வது பிறந்த தினம் இன்று. அண்ணாதுரையின் கல்லூரி நண்பரும் எழுத்தாளருமான மறைந்த சிட்டி சுந்தர்ராஜன் அவரைப் பற்றிய என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே…

“பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது அண்ணாதுரை எனக்கு வகுப்பு தோழர். அவர் B.A. Hors இரண்டாவது ஆண்டு. நான் B.A இரண்டாவது ஆண்டு. ஆனால், இருவருக்கும் வரலாறு பொதுப்பாடம். அந்த நாட்களில் நாங்கள் இணைபிரியாமல் இருப்போம். நான் காங்கிரஸ் அனுதாபி; அவர் ஜஸ்டிஸ் கட்சி அனுதாபி. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஏ. கிருஷ்ணசுவாமியும் எங்களுடன் வந்து சேர்ந்துகொள்வார். கிருஷ்ணசுவாமி, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ராமசுவாமியின் புதல்வர்.

நாங்கள் அரசியல் விஷயங்களில் நேர் எதிர்கட்சி விசுவாசிகளாக இருப்பினும் நல்ல நண்பர்களாக இருந்தோம். தினசரி சந்தித்து உரையாடுவோம். கல்லூரிகளுக்கான விவாதங்களில் நானும் அண்ணாதுரையும் பச்சையப்பன் கல்லூரி பிரதிநிதிகளாக போய்க் கலந்துகொள்வோம். கிருஷ்ணசுவாமி கிறிஸ்தவ கல்லூரி சார்பாக வருவார். ஒருவருக்கொருவர் எதிரெதிர் கட்சியாக வாதாடுவோம்.

பச்சையப்பன் கல்லூரி வரலாறு சங்கத்திற்கான தேர்தலில் நான் செயலாளராகப் போட்டியிட விரும்பினேன். அண்ணாதுரையும் அதையே விரும்பினார். எனவே, போட்டி வேண்டாம் என்று முடிவு செய்து, இருவரும் பேசி அவர் தலைவராகவும் நான் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அந்த அளவுக்கு எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது.

“பின்னால் நான் மிகப்பெரும் தலைவராவேன்“ என்று கல்லூரி நாட்களிலேயே அண்ணாதுரை சொல்லிக்கொண்டே இருப்பார். “அது எப்படி சாத்தியம்? முடியவே முடியாது“ என்று நான் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார். “பி.ஜி (பி.ஜி என்று தான் என்னை அவர் கூப்பிடுவார்). நீங்கள் சொல்லும் தலைவர்கள் எல்லாம் இங்கிலீஷில் பேசுகிறார்கள்; ஹாலில் பேசுகிறார்கள். நான் குடிசைப் பகுதிகளில் சென்று பேசுவேன். தமிழில் பேசுவேன். மக்களிடையே இப்போது புதிய உணர்வும் எழுத்தறிவு வேட்கையும் தோன்றிக் கொண்டிருக்கிறது. நான் அவர்களுடன் சென்று பேசி அவர்களை எதிர்கால புதிய வாழ்வுக்கு ஆயத்தம் செய்வேன்” என்றார்.

கல்லூரி நாட்களுக்குப் பிறகு எனக்கு அண்ணாதுரையுடன் தொடர்பு இல்லாமல் ஆகிவிட்டது. இந்நிலையில், ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்த்தபோது, 1969 தேர்தல் அன்று தலைவர்கள் ஓட்டுபோடுவதைப் பற்றி செய்தி சேகரிக்க நுங்கம்பாக்கம் வாக்குச்சாவடிக்கு சென்றிருந்தேன். அண்ணாதுரை ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார். காரில் ஏறப்போனவர் திரும்பி என்னைப் பார்த்தார். ”நீங்கள் பி.ஜி தானே?” என்றார். பக்கத்தில் வந்து கட்டி தழுவிக்கொண்டார். “நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்” என்று நான் சொன்னேன். “முன்பு போலவே வேடிக்கையாக பேசுகிறீர்களே” என்றார் அவர்.

அன்றிலிருந்து அவரது கடைசி காலம் வரைக்கும் மீண்டும் எங்களுக்குள் மிக இயல்பான ஒரு நட்பு இருந்தது. அதேநேரம் அவர் தலைவராகவும் இருந்தது பழகுவதில் எனக்கு கொஞ்சம் சங்கடத்தையும் ஏற்படுத்தியது.

காமராஜரை சட்ட கல்லூரி மாணவர் பி.சீனிவாசன் ஜெயித்துவிட்ட போது அண்ணாவையும் சீனிவாசனையும பேட்டிக் காண விரும்பி அவர் வீட்டுக்கு போனேன். இரண்டு பேரையும் பிடிக்க முடியவில்லை. கடைசியில் அப்போதய கமிஷனர் “அண்ணா திருச்சியிலிருந்த வந்து கொண்டிருக்கிறார். வீட்டிற்கு போனால் பிடித்து விடலாம் ” என்று சொன்னார். அண்ணாதுரை வீட்டிற்குள் நுழையும் போது வரவேற்பறையில் நான் காமிராமேன் சகிதம் உட்காந்திருந்தேன். திருச்சியிலிருந்து அப்போது தான் வந்தவர், “என்ன பி.ஜி இதுபோல் செய்கிறீர்கள் ” என்றார். நான், “சீனிவாசன் பேட்டியும் உங்கள் பேட்டியும் எனக்கு கட்டாயம் வேண்டும்” என்றேன். “நான் ஷேவ் கூட செய்யவில்லை. நான்கு நாட்களாகி விட்டது” என்றார் அவர். “பரவாயில்லை காத்திருக்கிறேன்” என்றேன். ஆனால், அவரோ அரைமணி நேரத்தில் தயாராகி வந்துவிட்டார்.

பேட்டி முடிந்த பின்பு அவரையும் சீனிவாசனையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார வைத்துப் படம் எடுக்க விரும்பினேன். ஒப்புக்கொண்டார். சீனிவாசனும் அண்ணாவும் ஒரே சோபாவில் நெருங்கி உட்கார்ந்திருக்கும் நிலையில் பதிவு செய்தோம்.

அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது, 1968-இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலக தமிழ் மாநாட்டுக்கான சிறப்பு மலர் கமிட்டியில் என்னையும் சேர்த்துவிட்டார். கமிட்டியில் பல உறுப்பினர்களும் தி.மு.க.காரர்கள் தான். மலர் தயாரிப்பு குழுவிறகு நான் தலைவர்; விளம்பரம் சேகரிக்கும் குழுவிற்கு எம்.ஜி.ஆர். தலைவர்.

மத்திய அரசின் ஊழியராக இருந்துகொண்டு தி.மு.க. அமைப்பு சார்பான கமிட்டியில் பணியாற்றுவதில் எனக்கு சங்கடம் இருந்தது. ஆகவே, எம்.ஜி.ஆரையே மலர் குழுவுக்கும் தலைவராக்கி விட்டேன். என் வீட்டை முற்றுகையிட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு பெரும் வேதனை ஆகிவிட்டது. “முடியாது” என்று அண்ணாவிடம் சொன்னேன். ஆனால், கட்டாயப்படுத்தி ‘வேறு வழியில்லை’ என்று சொல்லிவிட்டார்.

அப்போது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. மலர் தயாரிப்புக் குழுவும் விளம்பரம் சேகரிக்கும் குழுவும் ஒருங்கிணைந்து எப்படி செயல்பட வேண்டும் என்று திட்டமிடுவதற்காக ஒரு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில், “விளம்பரம் சேகரித்துக் கொடுப்பதுடன் எங்கள் வேலை முடிந்ததா?” என்று எம்.ஜி.ஆர் கேட்டார். உடனே நான், “இல்லை, விளம்பரங்கள் போட வேண்டிய பக்கங்கள், அவற்றின் இட ஒதுக்கீடு முதலானவற்றையும் அந்த குழுதான் கவனிக்க வேண்டும். எனவே, இரண்டு குழுவுக்கும் ஒரே தலைவர் இருப்பதுதான் நல்லது, சிக்கல்களை சுலபமாக தவிர்த்துவிட முடியும்” என்று கூறி எம்.ஜி.ஆர். பெயரை பரிந்துரைத்தேன். எம்.ஜி.ஆர். என்பதால் யாராலும் மறுக்க முடியாமல் போய்விட்டது. நான் தப்பித்தேன்.

அதன்பின்னர், விரைவிலேயே அண்ணாதுரை மறைந்துவிட்டார். அண்ணாதுரையின் இறுதி ஊர்வலத்தில் முன்னால் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர் மறைவு நிச்சயம் தமிழ்நாட்டுக்கு பெரிய இழப்பு தான்” என்றார் சிட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...