No menu items!

நியூஸ் அப்டேப்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் கபில் சிபல்

நியூஸ் அப்டேப்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் கபில் சிபல்

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கபில் சிபல் காங்கிரஸில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர தலைவர் இல்லாமல் இருப்பதே தோல்விக்கு காரணம் என விமர்சனம் எழுந்தது. இதனால் ஜி-23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள்  தலைமைக்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கினர்.

அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாத போதிலும் ராகுல் காந்தியே  எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் .  ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஒதுங்கிக்கொண்டு வேறு சில தலைவர்களுக்கு கட்சியை வழிநடத்த வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். “12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13-ல் தொடங்கப்படும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ல் தொடங்கும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ல் தொடங்கும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இறைச்சி உண்ணும் இந்துகள்  எண்ணிக்கை அதிகரிப்பு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கம் பற்றிய தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிகை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களிலுமே இறைச்சி உணவை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 2015-2016 காலகட்டத்தில் இறைச்சி உண்ணும் இந்துக்களின் எண்ணிக்கை 73.24 % ஆக இருந்தது. அது 2019-2021 காலத்தில் 77.95% ஆக அதிகரித்துள்ளது. மதமற்றவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்துவோர் மத்தியில் 2015-2016 காலகட்டத்தில் இறைச்சி உண்போர் சதவீதம் 98.11 ஆக இருந்தது. அண்மை ஆய்வில் அது 99.56% ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் ஒவ்வொரு மதம் சார்ந்தும் இறைச்சி உண்ணும் பழக்கம் பற்றிய புள்ளிவிவரம் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு பருவமழை அதிகம் பெய்யும்: மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக அமைச்சர் துரைமுருகன் தகவல்

திமுக அரசின் ஓராண்டு சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்து பேசிய, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஜூன் 12-ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணையை 20 நாட்களுக்கு முன்னரே முதல்வர் திறந்து வைத்து, 75 ஆண்டுகளில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டு பருவமழை அதிக அளவில் பெய்யும். விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வரும். 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் இப்போதே 118 அடி உயரத்துக்கு நீர் இருக்கிறது. இன்னும் அதிகமாக நீர் வந்தால், மேட்டூர் அணை தாங்காது. எனவே, முன்கூட்டியே நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது” என்றார்.

முதல்வர் அலுவலகத்தில் வேலை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சிறப்பு செயலாக்க திட்டத்துறை சார்பில், முதல்வரின் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தபடவிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்களை முதல்வர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதற்காக 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இதற்காக இன்று முதல் http://www.bim.edu/Tncmpf எனும் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாதியில் இருந்து மக்களுக்கு வரங்களை கொடுப்பேன்: நித்யானந்தா புதிய பதிவு

நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சமீபத்தில சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவியது. இதையடுத்து நித்யானந்தா வெளியிட்ட பதிவில், என் உடல்நிலை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது. நான் சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் நித்யானந்தா புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சமாதியின் உள்ளே இருந்து நேரடி ‘கவரேஜ்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், “சமாதியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி. அனைத்தும் சமநிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்.

நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் கேட்ட வரங்கள், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும். நான் சமாதியில் இருக்கும்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...