No menu items!

நியூஸ் அப்டேட்: பைடன் – மோடி சந்திப்பு

நியூஸ் அப்டேட்: பைடன் – மோடி சந்திப்பு

இந்தியா, அமெரிக்கா, அஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒன்றினைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாகியுள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் குறித்து 4 நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். இதனடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் அமைப்பு உறுதிபூண்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜப்பானில் இந்தோ-பசிபிக் பிராந்திய வளத்துக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐ.பி.இ.எப்.) தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர்: 75 ஆண்டுகளுக்கு பின் கோடையில் தண்ணீர் திறப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் 12 டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர்மட்டம் 95அடிக்கு மேல் இருக்கும் போது வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படும். இந்தநிலையில் இந்தாண்டு தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்று காலை 11 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். இதனால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த 20 – 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்திதான் இந்திய அரசியல் சுழலும் – பிரசாந்த் கிஷோர்

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிழ் சார்பில் நடந்த தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது. எந்தவொரு விஷயம் அல்லது கருத்தியல் அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் சரிவை சந்திக்கும். இதுதான் விதி. எனவே, பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என பலரும் கருதுகின்றனர். இதனை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்த விஷயம் இப்போது உடனே நடைபெற்றுவிடாது.

பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் நடைபெறாது. அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது. இதனால் இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும்.

அடுத்த 20 – 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் சுழலும். இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால் நீங்கள் அடுத்த 20 – 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்க்க வேண்டும். மாறாக அக்கட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது. சுதந்திர இந்தியாவில் முதல் 40 ஆண்டுகள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது. இதேபோல் தான் தற்போது பாஜக உள்ளது” என கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு நாட்கள் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மே மாதத்தில் கோடை மழை மற்றும் அசானி புயல் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் கோடை மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போது கிழக்கு திசையில் இருந்து தமிழ்நாடு நிலபரப்பிற்குள் வரும் காற்று போதிய வலுவில்லாததால், உணர்வெப்பம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இதன் காரணமாக வெப்பநிலையில் இயல்பை விட 1℃ -2℃ வரை வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு இதே நிலை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் விவகாரத்தால் வேறுபாடுகள் இருந்தாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: திருநாவுக்கரசு

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியினருக்கு உடன்பாடு இல்லை. பேரறிவாளனை விடுவிக்கும் போது நீதிமன்றம் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லை. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட காலத்திலிருந்தே அதிமுக, திமுக கருத்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியினர் எடுத்து வந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் கொல்லப்பட்டதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பேரறிவாளன் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும். திமுக – காங்கிரஸ் கூட்டணியை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது” என்றார்.

சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா: சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகி வருகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அதேபோல் சென்னையில் மக்கள் கவனக் குறைவாக இருப்பது தெரிகிறது. BA4 தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...