No menu items!

நியூஸ் அப்டேட்: நலமாக உள்ளேன் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

நியூஸ் அப்டேட்: நலமாக உள்ளேன் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், 2 நாட்களுக்கு அவர் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று உடன்பிறப்புகளுக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ”தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல். பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினைத் தொடர்ந்திட முடியும். நலமாகவே இருக்கிறேன். பணிகளைத் தொடர்ந்திடுவேன். சரியாகச் சொல்வதென்றால், ஓய்விலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறேன்.

இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசுப் பணிகளையும் கழகச் செயல்பாடுகளையும் வழக்கம்போலத் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு. அந்த இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை: ஜெயக்குமார் பேட்டி

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அதிமுகவின் இரண்டு அணிகளும் ஆதரவு திரட்டி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம். ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவே முடிவு எடுக்கும். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். எனது வீட்டுக்கு வந்தால் அதிமுக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிடலாம்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை; அவரை போல ஓ.பி.எஸ்க்கும் நடக்கும் என கூறுவது தவறு. ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம்; யார் என்று கூறவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். நான் பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை; பழனிசாமி பக்கமும் இல்லை” என கூறினார்.

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் (97.27%), ராமநாதபுரம் (97.02%) உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது.

10-ம் வகுப்பில் 8,21,994 (90.07%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும் 3-ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்” என்றார்.  

மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால், அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. அதை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்தி வந்த நிலையில், ஆலையை விற்பனை செய்ய இன்று நாளேடுகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. தாமிர உருக்கு வளாகம், சல்பரிக் அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள 10 பிரிவுகளும் விற்பனைக்கு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்பாக விற்பனைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு வேதாந்தா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பூஜை செய்வதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது

திருவள்ளூரை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி. இவருக்கு நாகதோஷம் உள்ளதாகவும், பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம்பக்கத்தினர் கூறியதால் கடந்த 13-ஆம் தேதி மாணவியின் உறவினர்கள் அவரை பூண்டியை அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்தில் முனுசாமி என்ற பூசாரியிடம் அழைத்து சென்றனர். அப்போது இரவு அங்கேயே தங்கி பூஜை செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளர். இதன்பேரில், மாணவியை உறவினர்கள் அங்கு தங்க வைத்துள்ளனர்.

மறுநாள் அதிகாலை, பூச்சி மருந்து குடித்து மாணவி ஹேமாமாலினி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையில், மாணவி ஹேமாமாலினியை பூசாரி முனுசாரி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஹேமாமாலினி தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூசாரி முனுசாமியை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...