No menu items!

அண்ணா, காமராஜர், ராஜாஜி – செய்தியாளரின் அனுபவங்கள்

அண்ணா, காமராஜர், ராஜாஜி – செய்தியாளரின் அனுபவங்கள்

இளம் நிருபராக பத்திரிகைத் துறையில் காலடி எடுத்து வைத்தபோது கோட்டைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற நாட்கள் கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம்.

காமராஜர் அப்போது தமிழக முதல்வர். வாரம் இரு முறையாவது நிருபர்கள் அவரை சந்திப்பது வழக்கம். எந்த அமைச்சரை சந்திப்பது என்பதை ‘பெரியவர்கள்’ தான் முடிவு செய்வார்கள் அவர்கள் பின்னால் போக வேண்டியதுதான்! அந்த ’பெரியவர்கள்’ கம்பீர உடையில்!

‘இந்து’ கிருஷ்ணமூர்த்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் வேம்புசாமி (ஞானியின் தந்தை) சர்மா சுதேசமித்திரன் சக்கவர்த்தி அய்யங்கார், மெயில் ராமநாதன், ‘தந்தி’ பாலசந்திரன் (ரமணி சந்திரன் கணவர்) இவர்கள் என்றும் நினைவில்!

பிற்பகல் 12.30 மணிக்கு மாடி ஏறுவோம். காமராஜரை சந்திக்க முடிவாகி அவர் அறை முன்பு நிற்போம். சற்று நோரத்தில் காமராஜர் அழைப்பார். காமராஜர் எந்தவித ‘பந்தா’வும் இல்லாமல் நீண்ட சோபாவில் அமர்ந்திருப்பார். அவர் அமர்ந்து பணிகளைப் பார்க்க பெரிய டேபிளும், சுழல் நாற்காலியும் இருந்தது ஆனால் அவை மூலையில் தள்ளப்பட்டு கிடந்தது. அதில் காமராஜர் உட்கார்ந்ததே இல்லை. சோபாவில் அமர்ந்தேதான் ஃபைல்களை கிடுகிடுவென்று பார்ப்பார்!

“வாங்க சர்மா… ஊர் பக்கம் போயிருந்தீங்களாமே… என்ன அங்க……. ராமநாதன் எங்கே” என்பார் காமராஜர்! ‘பட் பட்’ டென்று கேள்விகளை எழுப்புவார் ராமநாதன்- தைரியமாக!

நீண்ட நேரம் – உரையாடல் போலவே அந்த நிருபர்கள் சந்திப்பு இருக்கும்.

ஏகப்பட்ட செய்திகள் கிடைக்கும்…ஆனால்…!?

சந்திப்பு முடிகிற நேரத்தில் நிருபர்கள் எழுந்து நிற்பார்கள். சர்மா மிகவும் மரியாதையுடன் “ இதில் இவை எல்லாம் போடலாமே..” என்று எடுத்து சொல்வார்.

“அதெல்லாம் ஒண்ணுமே வேண்டாம்… எதுவும் போட வேண்டாம் பிறகு பார்த்துக்கலாம்..” என்று காமராஜர் சொல்லி விடுவார்! யாரும் போடமாட்டார்கள்..! பெரியவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியதே! ‘இவ்வளவு சேதிகளை போடாமல் விடுவதா?’ என்ற ஏக்கம் ஏற்படும்.

பொறுமை இழந்து ஒரு முறை அந்த லட்சுமணன் கோட்டை மீற நேர்ந்தது. முதலமைச்சர் காமராஜர் கிராமம் கிராமமாக பயணம் செய்யும் திட்டத்தைப் பற்றி கூற, அது செய்தியாக ‘காமராஜ் கிராமராஜ்’ ஆகிறார்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது!

சட்டசபை அப்போது நடந்து கொண்டிருந்தது. மெயில் ராமநாதன் “ஏய்! உன்னை சி.எம் தேடி கொண்டிருக்கிறார்.. அவ்வளவுதான்” என்றார். மற்ற நிருபர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.

சட்டசபையில் செய்தி சேகரிக்கும் பணியும் இருந்தது. காமராஜர் கண்களில் படாமல் பதுங்கி ஒதுங்கி பார்த்தேன்! சட்டமன்ற ‘லாபி’யில் சிக்கிக் கொண்டேன்!

“இங்கே வா நீ! நீதான் பெரிய புத்திசாலின்னு நினைப்போ…” என்றார்.

செய்தி ஆசிரியரிடம் நடந்ததை சொன்னேன்… அவர் பெரிதாகப் போட்டுவிட்டார் என்பது போல ஒரு மாதிரி சொல்லிப் பார்த்தேன்!

”என்னை நம்ப சொல்றியா? ஏம்பா ராமநாதன் இவர்களை கைடு பண்றதில்லையா?”- உரக்க.

”ஆர்வம் உள்ள யங் மேன்! அதனால்தான் அப்படி…. பெரிய தவறு ஏதும் இல்லை”

”அவன் ஆர்வத்தை உடைப்பிலே போடச் சொல்லு” என்றவர் குபீர் என்று சிரித்தார். “ நல்லாதான் இருக்கு! மத்தவங்க ஏமாளிங்களா?” என்றார்!

நகர்ந்து விட்டேன்

காமராஜர் கோபம் இவ்வளவுதான். இப்படித்தான்! அது முதல் அனுபவம். அவருக்கு தான் பேசும்போது குறுக்கிட்டால் பிடிக்காது. அறை குறையாக எந்த தகவலும் சொல்லக் கூடாது. எரிச்சல் அடைவார்! ”நிறுத்தப்பா!” என்பார்!
முரசொலி அடியார், சற்று தாட்டியாக, முறுக்கிய மீசையுடன் முரட்டுத்தனமான தோற்றம் தருவார். மூத்த நிருபர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை எதுவும் வைத்துக் கொள்ளாமல் நகர்ந்து போய்விடுவார்கள்! ஆனால் அடியார் அன்பும் பண்பும் மிக்கவர்! நகைச்சுவை நிறைய உண்டு. நல்ல எழுத்தாளர். பாலதண்டாயுதம் என்ற தன் பெயரில், துருவ சஞ்சாரம் என்ற சிறு நாவல் எழுதியிருக்கிறார்- விகடனில்!

‘பழமைவாதிகளை கொஞ்சம் பயமுறுத்தலாமே’ என்பார்!

ராஜாஜியின் பிரஸ் மீட்டில் கணீர் குரலில் பல கேள்விகளை கேட்டார்! ‘ஆச்சார்யார் ஐயா’ என்று அவர் அழைத்ததை மூத்தோர் ரசித்ததில்லை.

ராஜாஜி நிருபர்களுக்கு ‘தலைப்பிலேயே’ போடுவதற்கு ஏற்றவாறு செய்திகளை வாரி வழங்குபவர்!

”நீங்கள்தான் இந்தியை திணித்தீர்கள்…இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்”… என்று அடியார் கேட்டார்.

“மனித சிந்தனையில் மாறுதல்கள் நடந்தால்தான் மூளை வேலை செய்வதற்கான அடையாளம்!” என்ற ராஜாஜி ‘ மாற்றம் ஒன்றுதான் மாறுதல் இல்லாதாது’ என்ற புகழ் பெற்ற வார்த்தைகளை சொன்னார்.

அடியார் விடவில்லை… ஏதோ கேட்க துவங்க, ராஜாஜி அவரிடம் இருந்த பேனாவை வாங்கி, ‘ இவ்வளவு தடிமனான பேனா எதற்கு? உங்கள் பாதுகாப்புக்கும் சேர்த்தா?’ என்று கேட்டு கலகலப்பு ஏற்ப்படுத்தினார்.

”உங்கள் பத்திரிக்கையில் எம்.ஜி.ஆர். என்ற பெயரை ‘ எம்.சி.ஆர் என்று எழுதுவதில்லை! ஜெயலலிதாவை செயலலிதா-என்று எழுதுவதில்லை.. சிவாஜியை சிவாசி என்று போடுவதில்லை. என் பெயரை ராசாசி என்று போடுவது ஏன்?” என்றார். அடியார் திகைத்தார். “உங்கள் ஆசிரியருக்கும் இதைப்பற்றி எழுதுகிறேன்” என்றார்.

எழுதினார்! அவர் கடிதத்தை வெளியிட்டு ‘இனி ராஜாஜி என்றே குறிப்பிடுவோம்’ என்று அதில் கலைஞர் அறிவிப்பும் வெளியானது!

அறிஞர் அண்ணா நிருபர்களிடம் கோபித்து பார்த்தது இல்லை! 1962-ல் அண்ணா காஞ்சிபுரத்தில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்! திமுக 15-ல் இருந்து 50 இடங்களில் வென்றும், அண்ணாவின் தோல்வி கட்சியை துவளச் செய்தது!

அண்ணாவிடம் “திராவிட நாடு கைவிடப்படுமா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். திராவிட நாடு கோரிக்கை வைத்து தேர்தலை திமுக சந்தித்தது! சட்டசபையில் சி. எஸ். விடுத்த சவால் காரணம்!

அண்ணாவின் பதில் அருமையானது! “ திராவிட நாடு கோரிக்கையை கைவிட வேண்டும் என்றால் மூன்று காரணங்கள் இருக்க வேண்டும்! மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்! அது ஒருபோதும் நடக்காது என்ற நிலை இருக்கவேண்டும்! அல்லது அதைவிட பெரிய லட்சியம் ஒன்று தோன்ற வேண்டும்! என்றார்”

(கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்தது குறித்து விரைவில்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...