No menu items!

குளோபல் சிப்ஸ்: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சகாப்தம் முடிந்தது

குளோபல் சிப்ஸ்: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சகாப்தம் முடிந்தது

ஒரு காலத்தில் இன்டர்நெட் உலகின் ‘டான்’ ஆக இருந்த எக்ஸ்ப்ளோரர் தன் சேவையை, 15 ஜூன் 2022 அன்றுடன் நிறுத்தியுள்ளது.

1990களின் முற்பகுதியில் வெப் பிரௌசிங் பரவலாகத் தொடங்கிய காலத்தில் ‘நெட்ஸ்கேப் நேவிகேட்டர்’ என்ற பிரௌசர்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில்,1995-ல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. உடனடியாக மக்கள் அபிமானத்தைப் பெற்ற எக்ஸ்ப்ளோரர், 2003-ம் ஆண்டில் இணையவாசிகளில் 95 சதவிகிதத்தினருடன் இண்டர்நெட் உலகின் ‘டான்’ ஆனது.

2004இல் முதல் பலமான போட்டியாளாராக ‘மொஸில்லா பயர்பாக்ஸ்’ அறிமுகமானது. அதன் ஸ்பீடு வாடிக்கையாளர்களை ஈர்க்க எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை சரிய தொடங்கியது. 2008-இல் இன்றைய ‘டான்’ குரோம் வந்தது. அதன் பின்னர் எக்ஸ்ப்ளோரர் சரிவு வேகமானது.

சில வருடங்களில் குரோம், பயர்பாக்ஸ் போன்ற மற்ற பரவுசர்களை பதிவேற்ற மட்டும் பயன்படுத்தபடும் பிரௌசராக எக்ஸ்ப்ளோரர் மாறியது. அதுவும் விண்டோஸ் உடன் டீபால்ட்டாவே எக்ஸ்ப்ளோரர் இருந்ததால்தான் தாக்குப்பிடித்தது.

அதன்பின்னரும் மக்களை தன் வசம் ஈர்க்க எவ்வளவோ முயற்சிகளை எக்ஸ்ப்ளோரர் செய்தது. ஆனால், குரோம் அப்டேட்கள் முன்னால் அவற்றால் தாக்குபிடிக்க முடியவில்லை. இதனால், 2013ஆம் ஆண்டு வெளியிட்ட IE 11-க்கு பிறகு எந்த அப்டேட்டுகளையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யவில்லை. விண்டோஸ் 10 அறிமுகத்துக்குப் பிறகு அதன் சில டெக்னிக்கல் வெர்சன்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு பொருத்தமாக இல்லை என்பதால் முற்றிலுமாக நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு பதிலாக எட்ஜை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆனால், அதுவும் மக்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறி வந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொள்ளாததே எக்ஸ்ப்ளோரர் முடிவுக்கு காரணம்.

எக்ஸ்ப்ளோரர் வீழ்ச்சி அனைவருக்கும் ஒரு பாடம்.

கரப்பான் பூச்சியுடன் வாழ்ந்தால் ரூ.1.50 லட்சம்

பெரும்பாலான குடும்பத் தலைவிகளுக்கு அலர்ஜியான விஷயம் கரப்பான் பூச்சி. கணவர்களுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ, கரப்பான் பூச்சிக்கு பயப்படும் பல பெண்களைப் பார்த்திருப்போம். பெண்களுக்கு மட்டுமின்றி சில ஆண்களுக்கும் அலர்ஜி தரும் விஷயமாக கரப்பான் பூச்சி இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு மாத காலத்துக்கு வீட்டுக்குள் 100 கரப்பான் பூச்சிகளை விட்டால் இந்திய மதிப்புப்படி ரூ.1.5 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஒரு பூச்சிக்கொல்லி நிறுவனம். இது தொடர்பாக அந்த நிறுவனம் இணையதளத்தில் விளம்பரமும் செய்துள்ளது.

தங்கள் பூச்சிக்கொல்லி மருந்தை சோதனை செய்து பார்ப்பதற்காக அந்த பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. அத்துடன் அந்த நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தித்தான் கொல்ல வேண்டும், அடித்துக் கொல்லக் கூடாது, வீட்டில் வசிப்பவர்களின் வயது 20-களில் இருக்கவேண்டும் என்று ஏகப்பட்ட கண்டிஷன்களையும் இந்த நிறுவனம் விதித்துள்ளது.

1.50 லட்சம் ரூபாய் இல்லாமலேயே நம் நாட்டில் பலரது வீட்டில் நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சிகள் இருப்பது தனிக்கதை.

2 டீக்கு மேல் வேண்டாம்

இலங்கையைப் போலவே பாகிஸ்தானிலும் இப்போது பொருளாதார நெருக்கடி முற்றி வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கூடவே அந்நியச் செலாவணி கையிருப்பும் கணிசமாக குறைந்துள்ளது.

இந்த சூழலில் மக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். தினசரி 1 அல்லது 2 டீக்கு மேல் குடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டின் திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சரான அஷான் இக்பால். உலகிலேயே அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 13,000 கோடி ரூபாய்க்கு பாகிஸ்தான் தேயிலையை உற்பத்தி செய்துள்ளது. இதனால்தான் பாகிஸ்தானியர்கள் குறைந்த அளவில் டீ குடிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் புதிய அரசின் இதுபோன்ற செயல்களால், ‘பேசாமல் இம்ரான்கானே பிரதமராக இருந்திருக்கலாமோ?” என்ற மனநிலையில் இருக்கிறார்களாம் பாகிஸ்தான் மக்கள்.

ஒரு பந்துக்கு ரூ.49 லட்சம்

ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் உரிமைக்காக பிசிசிஐ பெற்றுள்ள தொகை, மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களை பொறாமைப்பட வைத்துள்ளது. இந்த ஏலத்தின்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப டிஸ்னி ஹாட்ஸ்டார் ரூ 23,575 கோடியை வழங்குகிறது. அதுபோல் போட்டிகளின் டிஜிட்டல் உரிமைகளுக்காக ரிலையன்ஸ் வியாகாம் 20,500 கோடி ரூபாயை அளிக்கிறது. இதைத்தவிர ப்ளே ஆஃப் மற்றும் வார இறுதியில் நடக்கும் போட்டிக்களுக்காக கூடுதல் கட்டணங்களையும் ரிலையன்ஸ் வியாகாம் வழங்கவுள்ளது.

இந்த கணக்குப்படி பார்த்தால், ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டத்தின் மூலமும் 118 கோடி ரூபாய் பிசிசிஐக்கு கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இதில் வீசப்படும் ஒவ்வொரு பந்துக்கும் தலா 4 லட்ச ரூபாய் கிடைக்கிறது. அதேநேரத்தில் ஐபிஎல்லைப் போலவே பாகிஸ்தானில் நடக்கும் பிஎஸ்எல் போட்டியை 2 ஆண்டுகளுக்கு ஒளிபரப்ப மொத்தமாகவே 166 கோடி ரூபாய்தான் வழங்கப்படுகிறது. இப்படி பார்த்தால் ஒரு ஆண்டுக்கு பிஎஸ்எல் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைக்கும் மொத்த வருமானமே 83 கோடி ரூபாய்தான். அப்போது பொறாமை இருக்கத்தானே செய்யும்…

கர்நாடக முதல்வரின் நாய்ப் பாசம்

கர்நாடக முதல்வரான பசவராஜ் பொம்மை, சமீபத்தில் வெளியான ‘777 சார்லி’ படத்தைக் காண தியேட்டருக்கு சென்றுள்ளார்.

இப்படத்தில் உள்ள நாயைப் பார்த்ததும் பொம்மைக்கு தான் வளர்த்த நாயின் ஞாபகம் வந்துள்ளது. முதல்வரால் செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய், கடந்த 2021-ம் ஆண்டு இறந்துள்ளது. படத்தில் உள்ள நாய் தனது நாயைப் போலவே இருந்ததால், படத்தைப் பார்த்து வெளியில் வந்ததும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் பொம்மை. அத்துடன் இந்த படம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். நாயைப் போன்ற நன்றியுள்ள மிருகம் வேறொன்று இல்லை என்று கலங்கியபடி சொல்லியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...