No menu items!

மெக்ஸிகோவை நோக்கி ஒரு பயணம் – சத்யராஜ்குமார்

மெக்ஸிகோவை நோக்கி ஒரு பயணம் – சத்யராஜ்குமார்

முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

இரண்டாவது பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

3

டெக்கீலா எப்படி தயாராகிறது?

கப்பல் டயத்துக்கு டாணென்று மெல்ல அசைந்தாடிப் புறப்பட்டதும் அந்தச் சொர்க்கபுரிக்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மீண்டும் துவங்கியது.

நிலா சற்றே பெரியதாக இருந்த அந்த இரவில் கப்பலின் பின் பக்க முனையில் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். நிலவொளி கடல் நீரில் விழுந்திருக்க, வால்பகுதியில் நீரை இறைத்துக் கொண்டு கப்பல் விரைந்து செல்வது பார்க்க அழகாய் இருந்தது.

வெகு சிறிய தடுப்புச் சுவர்தான். அதற்குக் கீழே படுபாதளமாய்க் கடல். விழுந்தால் கவனிக்கப்படுவோமா என்று கூடத் தெரியவில்லை. யாரும் பார்க்கவில்லை என்றால் கடலின் பிரம்மாண்டத்தில் பெருங்காயமாகக் கரைந்து போக வேண்டியதுதான். சொகுசுக் கப்பலில் இருந்து தவறி விழுந்தவர்களைப் பற்றி அவ்வப்போது செய்திகளில் படித்ததுண்டு. இயற்கையின் பேரழகு மனதை ஆட்கொள்ள ஆரம்பித்தால் மெல்ல மெல்ல அது சூனியத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போய் விடும் என்று தோன்றுகிறது. புத்தி பேதலிக்கும் ஒரு மைக்ரோ கணத்தில் மனிதன் என்ன பைத்தியக்காரத்தனத்தையும் சட்டென்று செய்து விடுவான்.

இப்படி என் யோசனைகள் தடம் புரள ஆரம்பித்ததும் அந்த இடத்தைக் காலி செய்து மேல் தளத்தில் கோலாகலமாக திருவிழா போல இருந்த பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்து விட்டேன்.

புத்தகத்தை மேஜை மேல் வைத்து விட்டு காபி வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போது அங்கே ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். “ஸாரி நீ உட்கார்ந்திருப்பது தெரியவில்லை. புத்தகத்தைக் கவனிக்கவில்லை.” என்று சொல்லிக்கொண்டே எழுந்தவரை, “பரவாயில்லை, உட்காருங்கள்.” என்றேன்.

ஹெலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஃப்ளோரிடாவில் வசிக்கும் அந்த மெக்ஸிக வம்சாவழிப் பெண். அவருடைய மகளுடன் வந்திருக்கிறாராம். “மகளுக்கு அது பதினெட்டாவது கப்பல் பயணம்” என்றார். “நடுத்தரக் குடும்பங்களுக்கு இதை விடச் சிறந்த ரிலாக்சேஷன் உலகில் வேறு இல்லை. சமைப்பதைப் பற்றியோ, உணவு பற்றியோ எந்தக் கவலையுமில்லாமல் அன்றாடக் கவலைகளிலிருந்து மீண்டு சில நாட்கள் இருக்க முடிவது எவ்வளவு பெரிய விஷயம்!” என்றார். அவருக்கு இது ஐந்தாவது கடல் பயணம். இப்படிப் புதிய அறிமுகங்களுக்கான வாய்ப்புகளும் கப்பலில் உண்டு.

அந்த இரவுப்பயணம் முடிந்து விடிந்தபோது மெக்ஸிகோவின் இன்னொரு துறைமுகமான கோஸுமேல் என்னும் இடத்தைச் சென்றடைந்தோம்.

அது ஒரு தீவு.

கடல்தான் அங்கே அட்ராக்‌ஷன். இங்கே டாக்சிக்கு பதிலாக ஐந்து குடும்பங்களும் ஐந்து திறந்த வெளி ஜீப்பை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். கைடு ஆறாவது ஜீப்பில் வழி நடத்திச் செல்ல மற்ற ஜீப்புகளை நாங்களே ஓட்டிச் செல்ல வேண்டியிருந்தது.

இங்கேயும் அமெரிக்கா போலவே கீப் ரைட் என்பதால் எந்தப் பிரசினையுமில்லை. என் மனைவி வாகனப் பிரியை என்பதால் ஜீப் ஓட்டும் பணியை அவர் எடுத்துக் கொண்டார். ஆறு கார்களில் கட்சி ஊர்வலம் போல மெக்ஸிகோ தெருக்களில் வலம் வந்தோம்.

மெக்ஸிகோ என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது டெக்கீலா எனும் மதுபானம். சுத்தத் தமிழில் சொன்னால் அது ஒரு வகை சாராயம்தான். இந்த டெக்கீலா மதுபான உற்பத்திக்குப் புகழ் பெற்றது மெக்சிகோ. எந்த நாடாக இருந்தாலும் சரி டெக்கீலா இல்லாத பார் ஒன்றை பார்க்க முடியாது.

இந்த பானம் தயாரிக்கும் இடம் ஒன்றில் டெக்கீலா டூர் நடத்துகிறார்கள். அங்கே இதைத் தயாரிக்கும் முறை பற்றி விளக்கி, அதற்கான உபகரணங்களைக் காட்சிக்கு வைத்திருப்பதோடு அல்லாமல் விதவிதமான டெக்கீலாவை சின்ன ஷாட் கிளாஸில் ருசி பார்க்கவும் கொடுக்கிறார்கள். இத்தனையும் இலவசம். பெரிய பாட்டிலில் வாங்கி வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும் என்றால் மட்டுமே பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

Agave Tequilana என்னும் ஒருவித கள்ளிச் செடியின் அடியில் முளைக்கும் பைனாப்பிள் போன்ற கிழங்கிலிருந்து இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் முள்முள்ளாய் பல சைஸ்களில் வரிசையாக நடப்பட்டு வளர்ந்து நிற்கிறது இந்தக் கள்ளிச்செடி.

மதுக்கடைகளில் பரிமாறப்படும் டெக்கீலா ஒரிஜினல் கிடையாது. அதைப் பருகினால் தொண்டையும் நெஞ்சும் எரிவது போன்ற உணர்விருக்கும். இங்கே தயாரிக்கப்படும் டெக்கீலா அப்படி இல்லை. உங்கள் உணவுப்பாதையை மிக மென்மையாகக் கையாளும். மிருதுவாக உணர்வீர்கள் என்றார். (மதுப்பழக்கம் உடல் நலத்துக்குத் தீங்கானது! உயிரைக் கொல்லும்! என்ற சப்டைட்டில் கார்டை இங்கே போட்டு விடுகிறேன்)
டெக்கீலாவின் பெருமைகளை அங்கே கேட்டறிந்த பின்னர் இரண்டு கடல் பகுதிகளுக்குச் சென்று மீதமிருந்த நேரத்தைக் கழித்தோம்.

இரண்டாமிடத்தில் Snorkeling செய்யும் வசதி இருந்தது. ஸ்நார்க்கெலிங் என்பது சில சுவாச உபகரணங்களை மாட்டிக் கொண்டு கடலில் மீன்களோடு மீன்களாக நீ்ந்தி அவற்றின் அழகை ரசிப்பது.

உங்களுக்கு நேரம் சரியில்லை எனில் சில கடல்பகுதிகளில் சுறாமீன்கள் வந்து கடித்து விடும் அபாயமுண்டு. இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதே என்று சொன்னார்கள். சுமார் 30 டு 50 அடி ஆழமுள்ள ஓரிடம். எனக்கு அவர்கள் கொடுத்த சுவாச உபகரணங்கள் ஒத்து வராததால் அவற்றைக் கழற்றித் திருப்பித் தந்து விட்டேன். அன்றாடம் ஸ்விம்மிங் செல்பவன் என்பதால் எப்போதுமே என் வசம் swimming goggle வைத்திருப்பேன். அதை மாட்டிக் கொண்டு கடலில் இறங்கி விட்டேன். கடலில் மூழ்கி கடல் வாழ் உயிரினங்களைப் பார்த்து ரசிக்கும்போது ஒரு போட்டோகிராபர் வந்து படம் எடுக்கிறார். பிடித்தால் அந்தப் புகைப்படங்களை சிறிய தொகை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

ஸ்நார்க்ளிங் உபகரணங்களை மாட்டியிருப்பவர்கள் முகம் எதுவுமே அடையாளம் தெரியவில்லை. பெரிய கண்ணாடியும் ப்ரீத்திங் மாஸ்க்கும் முகத்தை மறைக்க, எல்லோரும் ஒன்று போலவே இருந்தார்கள். வெறும் ஸ்விம்மிங் கண்ணாடி மட்டும் அணிந்திருந்ததால் போட்டோவில் என் முகம் அடையாளம் காணும் அளவில் தெளிவாகவே விழுந்திருந்தது.

சின்னத் தொட்டியில் அல்லாமல் பெருங்கடலில் இயற்கையாக நீந்துகிற மீன்களோடு மீன்களாக நீந்திச் செல்வது சுகானுபவம். கொஞ்ச நேரத்துக்கு நாமும் ஒரு கடல்வாழ் உயிரினம் ஆகி விடுகிறோம்.
அதே கடற்கரையை ஒட்டிய உணவகத்தில் டாக்கோ, என்ச்சிலாடா போன்ற அந்த நாட்டின் பாரம்பரிய உணவுகளை வாங்கிச் சாப்பிட்டோம். அமெரிக்காவிலும் மெக்ஸிகோ உணவகங்கள் தெருவுக்குத் தெரு இருக்கிறது. ஆனால், இந்த ஒரிஜினல் சுவை நிச்சயமாக எல்லா இடங்களிலும் இருக்காது. முக்கியமாக சால்சாவின் காரம். எப்படி நாம் ரசத்தின் ருசியை வைத்து நம்ம ஊர் சமையல் பக்குவத்தைத் தீர்மானிக்கிறோமோ அப்படி மெக்ஸிகோ உணவின் பாரம்பரியத் தன்மைக்கு இந்த சால்சாவை அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம்.

நேற்றைய தினம் போலவே இன்றும் சரியான நேரத்துக்கு கப்பலுக்குத் திரும்பி விட்டோம். வந்த வழியே திரும்பி ஃப்ளோரிடாவை நோக்கி மறுபடி இரண்டு இரவுகள், ஒரு பகல் கப்பல் பயணம்.

வாசலில் நின்று வழியனுப்பி வைக்கும் கப்பல் கேப்டனிடம், “இந்த மிதக்கும் சொர்க்கத்திலிருந்து கீழே இறங்கிச் செல்ல மனசில்லை.” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே, “இன்றிரவே ஏழு நாள் பயணமாக பஹாமாஸ் தீவுகளுக்குச் செல்கிறோம். அப்படியே திரும்பி கப்பலுக்குள் போய் விடுங்கள்.” என்றார்.

உண்மைதான். உள்ளேயே அந்தக் கப்பல் கம்பெனியின் டிக்கெட்டிங் அலுவலகம் உள்ளது. அங்கே டிக்கெட் வாங்கினால் ஸ்பெஷல் தள்ளுபடிகளும் உண்டு. ஆனால், நம் எல்லோருக்குமே வெளியே அன்றாட வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது.

கடைசியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இந்த சொகுசுக் கப்பல் பயணம் எல்லா நாளுமே, எல்லோருக்குமே சொர்க்கமாக இருக்காது. சிலருக்கு நரகமாகி விடும். இனிமேல் இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று விட்டால் போதும் என்று ஓடி விடுபவர்களும் இருக்கிறார்கள்.
மோஷன் சிக்நெஸ் எனப்படும் கடல் ஒவ்வாமை நோய் சிலரைப் பாடாகப் படுத்திவிடும். உப்புக் காற்றும் கப்பலின் ஆட்டமும் வயிற்றைப் புரட்டி வாந்தி மயக்கம் என்று உடலை வாட்டி எந்தக் கொண்டாட்டத்தையும் ரசிக்க விடாமல் செய்து விடும்.

சில கடல் பரப்புகளின் தன்மையைப் பொறுத்தும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தும் மோஷன் சிக்நெஸ் இல்லாதவர்களுக்கும் கூட தற்காலிகமாக இப்பிரசினை நேரக் கூடும். ஆகவே, இம்மாதிரிப் பயணம் மேற்கொள்ளுமுன் டாக்டரைப் பார்த்து இதற்குரிய மருந்துகளை வாங்கிக் கையில் வைத்துக் கொள்வது நலம். மாத்திரை வடிவிலும் உடலில் ஒட்ட வைத்துக் கொள்ளும் patch வடிவிலும் மருந்துகள் உள்ளன.

சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் அவரவர் பார்வையயும் சூழ்நிலையையும் பொருத்தது என்பது கடலில் மிதக்கும் சொகுசுக் கப்பலுக்கு மட்டுமல்ல; அதற்கு வெளியே உள்ள நம் அன்றாட வாழ்வுக்கும் பொருந்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...