No menu items!

புத்தகம் படிப்போம்: சாதி பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? – சுரிந்தர் எஸ். ஜோத்கா

புத்தகம் படிப்போம்: சாதி பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? – சுரிந்தர் எஸ். ஜோத்கா

ஒவ்வொருவரின் குடும்பத்தையும் சொந்த வாழ்வையும் தாண்டி இன்று சாதி உண்மையிலேயே ஒரு விடயமாக உள்ளதா? ஆம் என்றால், அது யாருக்கு எந்த வகையில் விடயமாகிறது? இந்த 21ஆம் நூற்றாண்டில் சாதி பற்றி நாம் எவ்வாறு பேச வேண்டும்? சாதி சமகால இந்தியாவில் எவ்வாறு மாறியிருக்கிறது? எந்த அளவிற்கு மிஞ்சி நிற்கிறது?

இன்றைய நகர சமூகத்திலும் அதன் பொருளாதாரத்திலும் சாதியின் இயக்கம் எத்தகைய அளவெல்லைகளைக் கொண்டிருக்கிறது? சனநாயக அரசியலிலும் அதன் அரசியலாக்கத்திலும் சாதியின் தொடர்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? சமூகத்தில் சாதியானது அடிப்படைப் பிரதிநிதித்துவத்திலும் இடஒதுக்கீட்டிலும் பாகுபாடுகளை வலுப்படுத்துகிறதா? இன்றைய நவீன தொழிலாளர் சந்தையிலும் முறைசாராத் துறையிலும் பெருநிறுவனப் பொருளாதாரத்திலும் சாதியின் இருப்பு எவ்வாறு பங்காற்றுகிறது?

இத்தகைய வினாக்கள் எளிமையாக, நேர்படப் பேசுபவையாக இருக்கலாம். இருப்பினும், இந்தியச் சமூகத்தில் ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்களிலும் சாதிபற்றிய நோக்கு முறையிலும் பன்முகப் போக்குகள் உள்ளன. அதனால், இந்தக் கேள்விகளுக்கு எளிய வகையில் விடையளிக்க முடியாது. இந்தச் சிறிய அறிமுக நூல் சாதியின் சமகால யதார்த்தங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்கூறிய கேள்விகளையும் சாதிபற்றிய பல்வேறு நோக்கு நிலைகளையும் தீவிரமாகப் பரிசீலிக்கிறது.

சாதிபற்றி நாம் பழக்க வழக்கம், சடங்கு, பாரம்பரியம் அல்லது சமயம் முதலான பல்வேறு கோணங்களில் விரிவாக அணுகலாம். ஆயினும், இந்தச் ‘சிறிய’ அறிமுகம் சாதியைச் ‘சமத்துவமின்மை’ எனும் நோக்கில் முதன்மையாகப் பரிசீலிக்கிறது.

சமத்துவமின்மை என்பது மனித சமூகங்களில் அழிக்க முடியாததொரு நோய்க் கூறாக இருந்துவருகிறது. இன்று உலகம் தழுவிப் பல்வேறு நாடுகளிலும் பண்பாடுகளிலும் சமத்துவம், குடியுரிமை, சனநாயக நிர்வாகம், சமத்துவமின்மை ஆகிய இலட்சியங்களுக்கு ஏற்பு அதிகரித்து வந்தாலும், பழைய, புதிய வடிவங்களில் நிலைபெற்று வருகிறது; வளர்ந்தும் வருகிறது. சமத்துவமின்மையின் பண்டைய வடிவங்களாகிய இனம், சாதி, பாலினம், இனத்துவம் (Ethnicity) முதலானவை காலகதியில் மாறி வந்துள்ளன. ஆனால், மறைந்துவிடவில்லை; இவற்றிற்கு எதிராகப் பல்வேறு நிலைகளில் இடையறாப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன என்றாலும், இன்றைய சமகால உலகில் சமத்துவமின்மையானது வருவாய், தொழில் சார்ந்த அந்தஸ்து, இவை சார்ந்த பிற வெளிப்பாடுகளால் புதிய புதிய வகையினங்களில் பல்கிப் பெருகிவருகிறது. நாம் முரண்பாடுகளோடு வாழ்ந்துவருகிறோம். சாதி இத்தகைய முரண்பாடுகளில் ஒன்று.

சமூகவியலர்கள் சாதியைப் படிநிலைப்பட்ட ‘மூடிய அமைப்பு’ என்று அடிக்கடி சொல்வார்கள். இந்த அமைப்பில், பெரும்பாலும் செய்யும் தொழிலின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சமூகக் குழுக்கள், திருமணத்திலும் உறவு முறை சார்ந்த நடத்தைகளிலும் மரபு விதித்துள்ள விதிகளைப் பின்பற்றுகின்றன. சாதிகள் சமனற்றவை. இவை சுத்தம் – அசுத்தம் அடிப்படையில் சடங்கியல் தகுதியுடன் படிநிலைப்படுகின்றன. இந்தச் சாதி அமைப்பில் ஒவ்வொரு சாதியினரின் ‘தகுதி’ அல்லது ‘இருப்பு’ அவர்கள் யார் யாருடன் பழகலாம், பழகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது. சாதி அமைப்பில் தீண்டாமை எனும் கருத்தும் செயல்பாடும் ஒருங்கிணைந்த ஒன்றாக உள்ளன.

மற்ற நிறுவனங்கள் அல்லது நடைமுறைகள் போலவே சாதி என்பதும் கால ஓட்டத்தில் மாறிவருகிறது. இன்றைய காலகட்டத்தில் சாதியை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்வது என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.

ஆரம்பகாலக் கருத்தாக்கங்கள் முதற்கொண்டு சாதி பற்றிய பேச்சு சமூகவியலருக்கோ பிற சமூக அறிவியலருக்கோ மட்டும் முன்னுரிமையானதாக இருக்கவில்லை. பலதரப்பட்ட காரணங்களால் எண்ணற்றோர் சாதிபற்றி எழுதியுள்ளனர்; அதுபற்றி அக்கறை காட்டியுள்ளனர். சமூக அறிவியல் சார்ந்த கல்வியாளர்கள் இவர்களில் ஒரு சாரார். கல்விப்புல ஆராய்ச்சி மட்டுமே சாதி பற்றிய சொல்லாடலை வடிவமைக்கவில்லை. சமகால முக்கியத்துவங்கள் கொண்ட சமூகச் செயல்பாடுகளோடு சாதியும் தீவிரமாகப் பேசப்பட்டுள்ளது. பண்டைய காலக் கீழைத்தேயவியலர்களின் எழுத்துகள் தொடங்கி, இன்றைய தலித் அரசியல் உரையாடல்வரை இது தொடர்கிறது. இதில் சமூக அறிவியல் புலமை என்பது இதன் அரசியலில் ஏதோ ஒரு வகையில் பின்னிப் பிணைந்த ஒன்றாகக் காணப்படுகிறது. இங்கு சொல்லவருவது, சாதி பற்றிய சமகாலப் புலமை ‘சாதியின் அரசியல்’ என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டுவருகிறது என்றல்ல; சாதி போன்ற பொருள்பற்றித் தூய கல்விபுல ஆய்வைச் செய்வது கடினம் என்பதைத்தான்.

இன்றைய காலகட்டத்தில் சாதி என்பது ‘இந்திய நவீனத்துவ’த்தில் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் இணைத்தறிய வேண்டும். இதனை இன்றைய பன்முகச் சொல்லாடல்கள் வழி கவனிக்கலாம். ‘மரபு’, ‘பூர்வீகம்’, ‘பழக்கவழக்கம்’, ‘சடங்கு சம்பிரதாயங்கள்’, ‘பின்தங்கிய நிலை’, ‘விலக்கி வைக்கப்படும் நிலை’ முதலான வகையினங்கள் யாவும் வலுவான அரசியல் தாக்கத்தை உண்டாக்குபவை. சாதிக்கு மாறாக முன்வைக்கப்படும், ‘வளர்ச்சி’, ‘முன்னேற்றம்’, ‘தகுதி’, ‘ஒன்றிணைத்தல்’, ‘குடியுரிமை’ முதலான இன்றைய கருத்தினங்களும் அரசியல் தாக்கம் கொண்டவை. சாதிக்கும் நவீனத்துவத்துக்குமான இந்தச் சிக்கலான உறவு இன்றைய சாதி பற்றிய விவாதத்தில் மிக முக்கியமான மூலங்களாக விளங்குகின்றன.

இந்தியா பற்றிய சொல்லாடலில் மேற்குலகம் சாதியையும் ஒரு முக்கியப் புள்ளியாகக் கொண்டிருந்தது. எண்ணற்ற முறைகளில் படிநிலைப்பட்ட வேறுபாடுகள் நீண்ட காலமாகவே இந்தியத் துணைக்கண்டத்தில் நிலைபெற்று வந்துள்ளன. மேற்குலகப் பயணிகள் தம் எழுத்துக்களில் சாதி பற்றிப் பேசியுள்ளனர். ‘Cas te’ எனும் சொல் போர்ச்சுக்கீசியக் கடல் வணிகர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்து வணிகம் செய்தபோது அவர்களின் சொல்லாடலில் தோன்றியது. இதற்குப் பின்னால் கீழைத்தேயவாதிகளும் ஆங்கிலக் காலனி நிர்வாகிகளும் சாதியமைப்புப் பற்றிய ‘கோட்பாடுகளை’ உருவாக்கினர். இந்தக் கோட்பாடுகள், இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கும் மனித சமூகத்தின் படிமலர்ச்சி பற்றி அவர்களிடம் உருவாகிவந்த பார்வையில் பொருத்திப் பார்ப்பதற்கும் அவர்களுக்கு உதவின. சாதி குறித்த மானிடவியல் கருத்தாக்கங்களின் உருவாக்கத்தில் இந்த ஆரம்பகால எழுத்துக்கள் பெருமளவில் செல்வாக்கைச் செலுத்தின எனலாம். சாதியையும் இந்தியச் சமூகத்தையும் பற்றிய இக்கோட்பாடுகள் இந்திய மரபு பற்றிய தேசியவாதக் கற்பனைகளை உருவாக்கவும் உதவின எனலாம். இந்தியாவின் சுயம் பற்றிய தேடுதலில் இவை காலகதியில் ஒரு கூறாகவே ஆகின.

1950களுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியாலும் சனநாயக அரசியலால் விளைந்த நிறுவனங்களாலும் இந்தியச் சமூகம் ஒவ்வொரு தளத்திலும் உருமாற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் சாதியின் எதார்த்தம் இன்னும் மறையவில்லை. பல இடங்களில் சாதிக் குழுக்கள் கிடைமட்டத்தில் தம்மைச் சாதிச் சங்கங்களாக உருமாற்றிக்கொண்டன; அரசியல் பலமாகவும் காட்டிக்கொண்டன. இதனால், படிநிலையும் சமத்துவமின்மையும் இன்றுங்கூடப் பல்வேறு நிலைகளில் மறுகட்டமைப்புப் பெற்றுள்ளன. இன்னொரு வகையில் சொல்வதானால், சாதியானது உயிர்ப்புடனும் உந்துசக்தியுடனும் உள்ளது. அது கணிசமான அடையாளத்தைக் காட்டுவதோடு சிலருக்கு வாய்ப்புகளையும் பலருக்கு இழப்புகளையும் ஏற்படுத்துகிறது. சாதியானது தேய்வதற்குப் பதிலாக அதன் இருப்பு பொதுவெளியில் வளர்ந்து வருகிறது என்றும் பலர் வாதிடுகின்றனர்.

இச்சூழலில் சாதியானது ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் ஆராய்வதற்கான களமாகவே உள்ளது. சமூகவியல், சமூக மானிடவியல், வரலாற்றியல், அரசறிவியல், பொருளியல் முதலான துறையினர் மட்டுமல்லாது எழுத்தாளர்களும்கூடச் சாதியின் பல்வேறு பரிமாணங்களை எழுதியுள்ளனர். மேலும் இவர்கள் பன்முகக் கருத்தாக்க முறைகளுடனும் அரசியல் உணர்திறன்களுடனும் விவாதிக்கின்றனர். கடந்த காலத்தின் ஊடாகச் சாதியானது சனநாயக அரசியல் செயல்பாடுகளில் ஒரு முக்கியக் கூறாக இருந்துவருகிறது. அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் சாதிச் சமூகங்களின் அரசியல் ரீதியான அணிதிரட்டலும் இன்று இந்தியாவில் சாதிக்குள்ள ‘மதிப்பை’ மாற்றியுள்ளன. சாதி இன்று பொதுக் கொள்கை வகுப்பதிலும் முக்கியமாகிறது. வளர்ச்சிக்கான அரசும் உலகளாவிய நிதி வழங்கும் அமைப்புகளும் வறுமை – விலக்கப்படுதல் ஆகிய இரண்டுக்கும் உழைக்கும் குடிமைச் சமூகக் குழுக்களும்கூடச் சாதியை ஒரு முக்கியக் கூறாகவே அணுகுகின்றன.

இந்தச் சிறிய அறிமுக நூலானது சமகால இந்தியாவில் சாதியின் பன்முகக் களங்களை ஆராய்ந்து அறிமுகம் செய்கிறது. சாதி பற்றிய எழுத்துக்களைப் பரிசீலிக்கிறது. ஆனால், இந்த எழுத்துகள் பற்றிய மதிப்பீடாகவோ அல்லது ஆய்வுப் போக்குகளைப் பற்றிய அலசலாகவோ மட்டும் இந்நூல் நின்றுவிடவில்லை. இந்நூல் சமூக அறிவியல்களில் சாதியின் மாறிவரும் போக்குகளை, அர்த்தங்களை உணர்த்த முயல்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக அல்லது அதற்கும் சற்றுக் கூடுதலான காலகட்டத்தில் இதுபற்றிப் பிரபலமாகப் பேசப்பட்டவற்றையும் கவனத்தில் கொள்கிறது. இந்த விவாதங்களை நான் எளிதில் புரிந்துகொள்ளும்படியான மொழியில் வழங்க முயற்சித்துள்ளேன். சாதியின் அரசியல் களங்களிலும் மற்ற விடயங்களிலும் பல்வேறு நிலைகளில் முரண்பட்டுக் கிடக்கின்ற கருத்துக்களை ஒத்திசைந்து காட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இத்தகைய முயற்சியில் ஏற்படும் இடர்பாடுகளைக் கவனத்துடன் கையாண்டுள்ளேன்.

நூல் விவரம்:

சாதி: தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம்
ஆசிரியர்: சுரிந்தர் எஸ். ஜோத்கா
தமிழில்: பக்தவத்சல பாரதி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

நூலைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்


சுரிந்தர் ஜோத்கா புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக முறைகள் பயிற்று மையத்தில் (Centre for the Study of Social Sys tems) பேராசிரியராகவும் அதன் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...