No menu items!

மெக்ஸிகோவை நோக்கி ஒரு பயணம் – சத்யராஜ்குமார்

மெக்ஸிகோவை நோக்கி ஒரு பயணம் – சத்யராஜ்குமார்

முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

2
மெக்ஸிகோ கிராமங்கள்

கப்பலை விட்டு வெளியே வந்து மெக்ஸிகோ காற்றை சுவாசித்த கணம் முதலில் கண்ணில் பட்டது பளபளவென ஒளி வீசிப் பறக்கும் இந்திய தேசக் கொடி. அந்த இடத்துக்கு கோஸ்டா மாயா என்று பெயர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்ட மாயன் என்னும் நாகரீகத்தின் மிச்சங்கள் அந்த ஊரில் இருக்கின்றன. தோராயமாக நாலாயிரம் வருஷம் பழமையான இனம். அவர்களுக்கான எழுத்து வடிவம், மொழிகள் எல்லாம் இருந்திருக்கின்றன. காலண்டர் கூட உருவாக்கிப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிய கோயில்களும் பிரமிடுகளும் சற்றே சிதிலமடைந்திருந்தாலும், பராமரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக டிக்கட் போட்டு வைக்கப்பட்டுள்ளன.

ஒரு மணி நேரம் டாக்சியில் பயணித்துதான் அந்த இடத்தை அடைய வேண்டும். கப்பலை விட்டு வெளியே வந்ததுமே நம்ம ஊர் ஆட்டோக்காரர்கள் போல மெக்ஸிகோ தேசத்து டாக்சிகாரர்கள் நம்மை மொய்த்துக் கொள்கிறார்கள்.

இரண்டு டாக்சிகளில் பதினாறு பேர் கொண்ட நாலைந்து குடும்பங்கள் மாயன் கலாசார மிச்சங்களைப் பார்க்க கிளம்பினோம்.

டாக்சி செல்ல ஆரம்பிக்க, கடந்து செல்லும் சாலைகளையும் மரங்களையும் பார்த்த போது சட்டென நம் தமிழக கிராமப் பகுதிக்கு வந்த மாதிரி இருந்தது. வழி நெடுகிலும் தோட்டம் துரவுகள். அவற்றில் புதைந்திருக்கும் பண்ணை வீடுகள். ஆங்காங்கே பஸ் ஸ்டாப்புகள். அதில் கைப்பையோடு பஸ்ஸுக்குக் காத்து நின்றிருக்கும் மெக்ஸிகோ கிராமத்துப் பெண்மணிகள். சாலையோரப் பெட்டிக் கடைகள். நாலு மூங்கிலை நட்டு, சின்னதாய் டெண்ட் அடித்து நிற்கும் டயர் வல்கனைசிங் கடைகள். அன்னாசிப் பழங்களைத் துண்டு போட்டு உப்பு மிளகாய் தடவிக் கொடுக்கும் ஸ்டாண்டுகள். இளநீரை சீவிக் கொடுப்பவர்கள். எல்லாமே சாலைக்கு அப்பாலிருக்கும் தோட்டங்களிலிருந்து ஃப்ரெஷ்ஷாகப் பறித்துக் கொண்டு வந்தவை.

டூரிசம், விவசாயம், மதுபானத் தயாரிப்பு இவையெல்லாம் அன்றாடப் பிழைப்புக்கு முக்கியத் தொழில்களாக இருக்கின்றன.

ஓர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்து காம்பவுண்ட் சுவருக்கு வெளியே மர நிழலில் நாலைந்து குழந்தைகள் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மரக் கிளைகளில் கூட சில சிறுவர், சிறுமிகள் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சிறுமி நீளமான மரக் குச்சியை காம்பவுண்ட் சுவரில் இருந்த துளை வழியே செலுத்தி உள்ளே விழுந்து விட்ட பந்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். என்னுடைய சின்ன வயதுகளில் சுதந்திரமாக இப்படித்தான் தெருக்களில் விளையாடி வந்தோம். அமெரிக்காவில் இது போல பார்ப்பது அரிது. ஏன் இந்தியாவிலேயே நகர மயமாகி விட்ட இடங்களில் குழந்தைகளுக்கு இது போன்ற குழந்தைப்பருவம் இப்போது கிடைப்பதில்லை.

ஆனால், இந்த வெள்ளந்தியான கிராமத்தோற்றம் மட்டுமே மெக்ஸிகோ இல்லை.

எங்கள் டாக்சி நெடுஞ்சாலையிலிருந்து ஒரு சிறிய கிளைச்சாலைக்குத் திரும்பியபோது – முகக்கவசம் அணிந்த ஏழெட்டு போலிசார் சாலையின் எதிரெதிர்ப் பக்கம் – குவிக்கப்பட்ட மணல் மூட்டைகளுக்குப் பின்னால் நின்றிருந்தார்கள். அனைவர் கையிலும் ஏகே 47. காரைப் பார்த்ததும் துப்பாக்கிகள் தயார் நிலைக்கு வந்தன.

கை காட்டி ஒரு போலிஸ் வாகனத்தை நிறுத்தினார். எக்ஸ்ரே கண்களால் காருக்குள்ளே இருந்த அனைவரையும் துளைத்தார். திருப்தியானதும் தலையசைத்துப் போகச் சொன்னார். திடீரென யுத்த பூமிக்குள் வந்து விட்ட மாதிரி ஒரு உணர்வு.

டிரைவரிடம் பேசியபோது உடைந்த ஆங்கிலத்தில், ‘போதை மருந்து, ஹியூமன் டிராபிக்கிங் எனப்படும் சிறுவர், சிறுமி ஆள்க் கடத்தல்களும் இங்கே உள்ளன. ஆயுதமேந்திய கேங்ஸ்டர்களை எதிர்கொள்ள இப்படியான ஆயுதமேந்திய போலிஸ் படை தேவை.’ என்றார். ‘முக்கிய சுற்றுலா தலம் என்பதால் இது போன்ற இடங்களில் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ள போலிஸ் நடமாட்டம்+கண்காணிப்பு எல்லா இடங்களிலும் இருக்கிறது. பாதுகாப்புக்கு குறைவேதுமில்லை.’

இடையில் உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட காரை நிறுத்தினார்கள். உள்ளூர்வாசிகளுக்கு ஆங்கிலம் தெரியாது. எங்களுடன் வந்த டிரைவர்களில் ஒருவருக்கும் அரைகுறை ஆங்கிலம்தான் தெரியும். ஆர்டர் கொடுக்க மிகுந்த சிரமப்பட்டோம். அப்போது ஆபத்பாந்தவனாக ஓர் ஊனமுற்ற இளைஞர் வந்து சேர்ந்தார். சக்கர நாற்காலியில் இருந்த அவர் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார். அங்கிருக்கும்போது நிகழ்ந்த விபத்தில் கால்களை இழந்து விட்டதாகச் சொன்னார். அமெரிக்க ஆங்கிலம் சரளமாகப் பேசினார்.

உணவு ஆர்டர் செய்ய அவர் உதவியதற்காக கொஞ்சம் யுஎஸ் டாலர்களை டிப்ஸாகக் கொடுக்க, வாங்க மறுத்து விட்டார். அவர் ஒரு கைவினைக் கலைஞர் என்பதும், தான் செய்த கைவினைப் பொருட்களை விற்கிறார் என்பதும் கிளம்பும்போது எதேச்சையாகத் தெரிய வர அவரிடம் சில கைப் பைகளையும் ப்ரேஸ்லெட்களையும் வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தோம். கால்களை இழந்தாலும் உதவும் குணத்தையும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்காத இளைஞர். மெக்ஸிகோ என்றில்லை, எந்த நாடாக இருந்தாலும் வாய்ப்புக் கிடைத்தால் டூரிஸ்ட்டுகளை ஏமாற்றிப் பிழைப்பவர்களை விட, இவரைப் போன்றவர்கள், தான் பிறந்த நாட்டைப் பெருமைப்படுத்துகிறார்கள் என்று தோன்றியது.

சுமார் மூன்று மணி போல மாயன் மிச்சங்கள் இருந்த பகுதியை அடைந்தோம். ஆனாலும் வெயில் எல்லோரையும் தீயில் குளிப்பாட்டியது. வேர்வையில் தத்தளித்தோம்.

ஒரு சின்ன மலைக்குன்று போன்ற இடத்தில் கருங்கற்களால் எழுப்பப்பட்ட பிரமிட் வடிவ கட்டிடங்கள். மாயன் கோவில்கள் என்றார்கள். இக்கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கற்களின் தன்மையை ஆய்வு செய்ததில், இந்தப் பகுதியில் எங்குமே காணக் கிடைக்காதவை என்பதாகவும், அதனால் இக்கோயில்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல; வானிலிருந்து தருவிக்கப்பட்ட கற்கள் கொண்டு கடவுளால் கட்டப்பட்டவை என்று அம்மக்கள் நம்புகிறார்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள் தொட்டு உருவாக்கிய சின்னங்கள். நடமாடிய இடம். அதிக சேதமின்றி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவற்றினிடையே இடையே நம் பாதங்களும் கடக்கின்றன என்ற உணர்வே ஒரு சிலிர்ப்பைத் தருகிறது. அது மாயன் நாகரீக மிச்சங்களாக இருந்தாலும் சரி; தஞ்சை பெரிய கோயிலாக இருந்தாலும் சரி. பழமையின் தரிசனம் தரும் உணர்வு ஒன்றுதான்.

சுமார் ஒரு மணி நேரம் அங்கே கழிந்திருந்த போது மணி நான்காகி விட்டது நினைவுக்கு வந்தது. திரும்பிப் போய்க் கப்பலைப் பிடிக்க நேரம் சரியாக இருக்கும். டாக்சிக்கு ஓடோடி வந்தோம். வழியில் ரோட்டோரக் கடையில் மிளகாய்ப்பொடி தடவிய கீற்று பைனாப்பிளும் இளநீரையும் மறக்காமல் வாங்கிச் சாப்பிட்டு விட்டு கப்பலுக்குத் திரும்பினோம். கப்பலுக்குள் காபியை வாங்கிக் குடித்து விட்டு அப்பாடா என்று படுக்கையில் விழுந்தபோது வீட்டுக்குத் திரும்பி வந்த உணர்வு ஏற்பட்டது.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...