No menu items!

ஜோர்டானின் வினோதங்கள் | 3

ஜோர்டானின் வினோதங்கள் | 3

நோயல் நடேசன்

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

பெட்ரோவில் (Treasury) உயரமான பாறையில் செதுக்கப்பட்ட அழகிய சிற்பவேலைகள், இரண்டாயிரம் வருடங்கள் தாண்டி, தற்போழுது உலகில் அதிக அளவில் படமெடுக்கப்படும் இடமாக கணிக்கப்படுகிறது. ஏறுவதற்கோ உள்ளே பார்ப்பதற்கோ தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியே இருந்து மட்டும் பார்க்க முடியும். பல மணி நேரம் நின்று ரசிக்கக்கூடிய இடம்.

பெட்ரோவைக் கடந்து தொடர்ச்சியாக சில கிலோமீட்டர் நடந்தபோது அங்கும் சமாதிகள், கோவில்கள், ரோமர்களின் தியேட்டர் எனப் பார்க்க முடிந்தது. இங்கு பாதையில் நடப்பது இலகுவானதல்ல. கல்லுகள், குழிகள் கொண்ட பிரதேசம். இளமைக் காலத்தில் போயிருந்தால் நன்றாக இருக்குமென எண்ணியபடி, திரும்பி வரும்போது பாதித்தூரம் குதிரை வண்டியில் வந்தோம். போகும்போது கழுதைகள் மேல் சுற்றுவது தான் இங்கு இலகுவானது என ஏற்கனவே போயிருந்த எனது மகள் சொல்லியிருந்தார்.  உண்மை. கழுதைகளின் குளம்புகள், தரைகளிலும் ஏறி இறங்க இலகுவானது. ஆனால், அதற்கு எங்களுக்குத் துணிவில்லை.

பெரிய பாறைகளில், இயற்கையாகவோ அல்லது அவர்கள் செதுக்கிய குகைகளோ என்ற சந்தேகம் இன்னமும் இருந்தாலும், நபேட்டியன்ஸ் இயற்கையிலிருந்து பாதுகாப்பாக குகைகளில் குடும்பமாக வாழ்ந்தார்கள். ஒட்டகங்கள், ஆடுகள் இவர்களது முக்கிய சொத்துகள். ஒட்டகங்கள் கன்று ஈனுவது இவர்களது வாழ்வின் முக்கிய சடங்காகும்.

தற்போது இங்கு சில்க் ரோட் வாணிகர்கள் வருகை தருவதில்லை. அத்துடன் கலாச்சார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் பெட்டாவில் வாழ்வதில்லை. இவர்களுக்கான குடியிருப்புகள் அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. உல்லாச பிரயாணிகள் வருகிறார்கள்.

தற்போது 450 இஸ்லாமிய குடும்பங்கள் வாழ்கிறார்கள். பலர் தங்களது நாடோடித் கலாச்சாரத்தை விடவில்லை. அத்துடன் அனேகர் பெயர்களில் பெடுவல் (The Bedul) என்ற பெயர் தொக்கி நிற்கிறது. அதன் கருத்து அரபியில் ‘மாற்றப்பட்டது’ என்பதாகும். இவர்களை விட பல நபேட்டியன்ஸ் இனக்குழுக்கள் பல இடங்களில் வாழ்வதாக கூறப்படுகிறது. ஒரு விதத்தில் இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பின்போது வெளியேறிய ரோமாக்களை ஒத்தது இவர்கள் நிலை.

வாடி ரம் எனப்படுவது ஜோர்டானின், சவுதி அரேபியா எல்லையை நோக்கிய தென்பகுதி. சிவப்பு நிறமான கற்பாறைகள் நிறைந்த பாலைவனம். ஜோர்டானின் உயரமான பகுதிகூட.

நாம் எல்லாம் செவ்வாய்க் கிரகத்துக்குப் போகமுடியாது. ஆனால், செவ்வாய்க் கிரக நிலப் பரப்பு போன்ற பகுதி ஜோர்டானில் உள்ளது. பெரும்பாலான செவ்வாய்க் கிரகம் சம்பந்தமான ஹோலிவூட் படங்களெல்லாம் எடுத்தது இங்கே தான். முக்கியமாக ‘லாரன்ஸ் ஒவ் அரேபியா’ (Life of T E Laurence) என்ற படம் இங்குதான் எடுக்கப்பட்டது. இதன் பின்பு இந்த இடம் உல்லாசப் பிரயாணிகளால் பிரபலமானது.

மலைப்பாதைகள் அருகே பல விதமான வசதிகளுடன் கூடாரங்கள் உள்ளன. ஒரு நாள் அங்கு தங்குவதற்கு எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை நேரத்தில் நானும் சியாமளாவும் பாறையொன்றில் ஏறி நின்று பார்த்தபோது உண்மையிலே அது ஒரு வேற்றுக்கிரகமாகத்தான் தெரிந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் மணல் நடுவே சிவப்பு பாறைகள். அவற்றை ஊடறுத்து தற்போது வாகனங்களின் பாதைகள், கோடாகத் சிவப்பு கடுதாசியில் போட்ட கறுப்புக் கோடாகத் தெரிந்து.

‘லாரன்ஸ் ஒவ் அரேபியா’ (Laurance of Arabia) போல் இன்னுமொரு முக்கிய படம் ‘குயின் ஓவ் த டெசேட்’ (Queen of the desert). இரண்டும் இரு முக்கியமான பிரித்தானிய காலனிக்காலம் பற்றிய படம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையும் முழு அரேபியா, சிரியா, ஈராக், ஜோர்டான் என்ற நாடுகள் 500 வருடங்களாக உதுமானியப் பேரரசின், (Ottoman Empire) கீழ் இருந்தது. தற்போது ரஸ்சியாவை (Russia) உடைக்க மேற்கு நாடுகள் செய்யும் முயற்சிபோல் அக்காலத்தில் உதுமானியப் பேரரசை உடைக்க பிரித்தானியார்கள் செய்த முயற்சியில் வெற்றி கண்டார்கள். அதற்கு உதவியவர்கள் இருவர். லாரன்ஸ் (T. E Laurence), கெற்றுட் பெல் (Gertrude Bell)…

ஆரம்பத்தில் லாரன்ஸ் (T. E. Laurence) பிரித்தானியாவின் உதுமானியப் பேரரசிற்கு எதிரான உளவாளி. கெற்றுட் பெல் (Gertrude Bell) பிரித்தானிய வெளியுறவுப் பிரிவால் அனுப்பப்பட்ட ராஜதந்திரி; அத்துடன் புதைபொருள் மற்றும் மானிடவியல் துறையில் ஆர்வம் கொண்டவர்.

ஓட்டமானுக்கு எதிராக போரிடுவதற்கு அரேபியர்களுக்கு லாரன்ஸ் பல வழிகளில் உதவியதுடன் களத்தில் நின்று கெரில்லா போரில் ஈடுபட்டார். அரேபியர்களிடமும் பிரித்தானியாவிலும் சரித்திர கதாநாயகன் என்ற பெயர் அவருக்கு உள்ளது.

ஆக்ஸ்போட்டில் படித்த சுதந்திர எண்ணம்கொண்ட இளம் பெண், கெற்றுட். அவர் தனியாக அரேபியா, சிரியா, யோர்டான, ஈராக் எங்கும் பயணித்தார். அரேபியர்களைப் புரிந்துகொண்டு சுதந்திரமாக விடுவதே நல்லது என்பதால் இவரே பிரித்தானியாவின் கீழிருந்த அரபு ராச்சியங்களை தற்போதைய எல்லையில் பிரித்துக் கொடுக்கும்படி சிபாரிசு செய்வதுடன் ஈராக், சவுதி அரேபியா மன்னர்களை ஜோர்டானில் தெரிவு செய்கிறார். பிற்காலத்தில் பாக்தாத் மியுசியத்தின் தலைவராக அங்குள்ள காட்சிப்பொருட்களை வகைப்படுத்துகிறார் (Catalog).

சில காலம் லாரன்ஸ்சும் கெற்ருட்டும் அரேபியாவில் இணைந்தும் வேலை செய்துள்ளார்கள். இருவரும் ஆங்கிலேயரது ஏகாதிபத்திய வரலாற்றில் மட்டுமல்ல, அரேபியர்களது வரலாற்றிலும் முக்கியமானவர்கள். லோரன்ஸ் பல இடங்களில் போரில் ஈடுபட்டு பின்பு இங்கிலாந்தில் இளைப்பாறிய காலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறக்கிறார். கெற்ருட் ஈராக்கில் தங்கி அங்கே இறக்கிறார்.

காதல் தோல்வியால் கெற்ருட் இறுதிவரையும் திருமணமாகாது வாழ்ந்தவர். லாரன்ஸ் தனது வரலாற்றுப் புத்தகத்தை இறந்த அரேபியர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததிலிருந்து, அரேபியாவில் ஒரு பாலின உறவில் மட்டும் ஈடுபட்டவர் என்பது செய்தியாக இருந்தது.

வரலாற்றை வாசித்தறிவது கடினமானது எனக் கருதுபவர்கள் ‘லாரன்ஸ் ஓவ் அரேபியா’, ‘குயின் ஒவ் த டெசேட்’ ( Laurence of Arabia- Peter O, Queen of the desert -Nicole Kidman) இரண்டு படங்களையும் பார்க்கலாம். இரண்டும் மேற்கூறிய இருவரை மையப்படுத்தி தயாரித்த திரைப் படங்கள் என்பதால் வரலாற்றை ஓரளவு புரிய வைக்கும்.

‘லாரன்ஸ் ஓவ் அரேபியா’ திரைப்படம், போர் காட்சிகளுடன் பிரித்தானியர்களது பொங்கும் காலத்தில் வெளி வந்ததால் மிகவும் புகழ்பெற்றது. ஆனால், ‘குயின் ஒவ் த டெசேட்’ சினிமாத்தனமற்று யதார்த்தமான வரலாற்றை எடுக்க விரும்பியதாலும், பிரித்தானியர்களது மங்கும் காலத்தில் வந்ததாலும் பணவசூலில் தோல்வியானது. நிக்கோல் கிட்மன் எனக்கு பிடித்த ஆஸ்திரேலிய நடிகை.  அழகாக நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களிலும் வாடி ராம் நிலக்காட்சிகளையும் பார்க்க முடியும்.

வாடி ராமில் தங்கிய மாலையில் பெடுவின் தலைவரால் விருந்தினர்களுக்கு கோப்பி தயாரித்து கொடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. சீனா, ஜப்பானில் தேனிர் உபசாரம்போல் இது ஒரு பெரிய சமூகச் சடங்கு. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முகாமின் நடுவில் நெருப்புத் தணலில் பெடுவீன் ஒருவரால் பச்சை கோப்பி நெருப்பில் வறுக்கப்பட்டு, எங்கள் முன்பே இடிக்கப்பட்டது. பின்பு அதனுடன் அரைக்கப்பட்ட ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து எடுக்கும்போது ஏலக்காய் வாசனை மூக்கைத் துளைக்கும் – தயாரிக்கப்பட்ட கோப்பியை முதல் தயாரித்த நபர் அருந்தி ருசி பார்த்த பின்பே எங்களுக்கு தருவார். அந்த கோப்பி ஒரு கலாச்சார சடங்கு மட்டுமல்ல உணவு உண்பதற்கான பசியை உருவாக்கும்.

நாங்கள் போன நேரம் மிதமான வெப்ப நிலை என்பதால் பல இடங்களில் நெருப்புகள் எரித்து கோப்பியை கூடாரத்துக்கு வெளியே வைத்து தயாரிப்பதை பார்க்க முடிந்தது. இந்த சடங்கின்போது எல்லோரும் நிலத்தே இருக்கவேண்டும். நானும் இன்னொருவரும் நிலத்தில் இருக்க முடியாது என்பதால் கதிரையில் அமர்ந்தோம்.

இரவில் பாலைவனத்தில் கொஞ்சநேரம் நடப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். ஆகாயம் முழுவதும் நீலவானத்தில் சிதறிய நட்சத்திரங்கள் கீழே நிலா வெளிச்சத்தில் சிவந்த நிலம் ஆங்காங்கே கூடாரங்கள் முன்பாக புள்ளி புள்ளியாக எரிந்து கொண்டிருந்த நெருப்புகள் புதிய உலகமாக காட்டியது.

றுதியாக நாங்கள் சென்ற இடம் சாக்கடல்.

பல விளம்பரங்களில் ஒருவர் கடலில் படுத்தபடியே புத்தகம் படிக்கும் காட்சியை பார்த்திருப்பீர்கள். இப்படி மிதக்க முடியுமா? உண்மையா என பல தடவை என்னையும் யோசிக்க வைத்தது.

எங்கள் ஹோட்டேல் சாக்கடல் பக்கத்தில் இருப்பதால் இரண்டு நாளும் அங்கு போக முடிந்தது. முதல் நாள் உடலில் சாக்கடல் அடியில் உள்ள தார் போன்ற களியை வாளியில் எடுத்துவைத்து உடலில் பூசும்போது உடலுக்கு நல்லது என்றார்கள். எங்களுக்கு பூசுவதற்கு இருவர் நின்றார்கள். எனக்கு பூசியது இளம்பெண். எனது நண்பர் ரவிந்திரந்திரராஜ் பூசியது ஒரு தடித்த ஆண். நண்பனது கண்ணில் இருந்த பொறாமையும் சேர்ந்து எனது உடலில் பூசப்பட்டது.

சாக்கடல் உள்ளே போனபின் அது உண்மையெனப் புரிந்தது. பொதுவாக கடலின் உப்பின் வீதம் 3.5 வீதமாகும். ஆனால், சாக்கடலில் 34.2 வீதம் – அதாவது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமானது. உப்புகளின் அடர்த்தியால் எமது உடல் இங்கு மிதக்கிறது. அத்துடன் இங்கு அதிகம் மக்னீசம் உப்பு. அது உடலில் படும்போது எண்ணெய் பட்டதுபோல் இருக்கும். நான் பரிசோதிக்க நாக்கால் நக்கினேன். ஏற்கனெவே பேதியாக மகனீசியம் சட்பேட்டு குடித்த ருசி தெரிந்த எனக்கு, உப்பு கரிப்பதற்கு பதிலாக கசப்புத் தன்மை இருந்தது. சாக்கடல் 50 மீட்டர் நீளம் 15 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. அத்துடன் ஜோர்டான ஆற்றின் நீரளவு குறைந்து வருவதால் சாக்கடலின் நீரளவு குறைந்துகொண்டேபோகிறது

மிதப்பதற்க்கு பயந்தவர்களுக்கும் பாதுகாப்பதற்கும் உயிர் காப்பவர்கள் (Lifeguards) உள்ளார்கள். ஓரளவு நீச்சல் தெரிந்தவர்கள் இலகுவாக மிதக்க முடிந்தது. துப்பரவு நீச்சல் தெரியாதவர்கள் தடுமாறுவார்கள். அப்பொழுது கண்ணில் சாக்கடல் தண்ணீர் பட்டால் கண்ணெரியும். அத்துடன் கண்ணுக்கு கூடாது என்பதால் ஒருமுறை கண்ணில் பட்டபோது வெளியே வந்து கழுவினேன். சாக்கடலில் குளித்தபின்பு மிகவும் கவனமாக உடலை கழுவி குளிக்க வேண்டும். காலில் ஒருபகுதியை நான் ஒழுங்காக கழுவாத இடத்தில் உப்பு வெள்ளையாக தடிப்பாக படிந்திருந்தது.

நான் பாத்துக்கொண்டிருக்க ஒரு சீனப்பெண் கடலுக்குள் இறங்குவதுபோல இறங்கி நீந்த தொடங்கினாள். ஆனால், அவளால் நீந்த முடியவில்லை. அவள் தத்தளித்தது அவளது ஆண் துணைக்கு புரியவில்லை. பக்கத்தில் நின்ற ஜோர்டானியன் ஒருவன் அவளை காப்பாற்றிய போதுதான் அவனுக்கு என்ன நடநதது என்று புரிந்தது.

சாக்கடல் என அழைக்கப்பட்டாலும் அது கடல் அல்ல. நான்கு பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்ட ஏரியாக அமைந்திருப்பது. பூழியின் மிக ஆழமான பிரதேசம். உப்பின் தன்மையால் எந்த உயிரினமும் வாழமுடியாது. புவியிலிருந்து 430 மீட்டர்கள் ஆழத்தில் அதன் மேற்பரப்பு அமைந்துள்ளது. அரேபியா, ஆப்பிரிக்கா இரு கண்டத்திட்டுகளும் பொருந்தியிருக்கும் இடத்தால் இப்படியான ஒரு அமைப்பு ஏற்பட்டிருக்காலம் என விளக்குகிறார்கள்.

ஜோர்டானில் நாங்கள் பார்த்த வாடி ராம், சாக்கடல் இரண்டும் இயற்கையின் விசித்திரமான இரு இடங்கள் என்பதுடன் பல காலகாலம் மறக்கமுடியாத நிலத் தரிதனத்தை எனக்கு அளித்தவை.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...