No menu items!

வாவ் டூர்: ஜோர்டானின் வினோதங்கள் | 2

வாவ் டூர்: ஜோர்டானின் வினோதங்கள் | 2

நோயல் நடேசன்


முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜோர்டானில் இரண்டாவது நாள் இரவு… ஒரு கிறித்துவர் வீட்டில் எங்களது உணவு பரிமாறப்பட்டது. அங்கு ஒரு தாயும் மூன்று பெண்களுமாக ஜோர்டானிய உணவு தந்தார்கள். அவர்கள் அம்மான் நகரில் பிரபலமான ஒரு உணவுக்கடை நடத்துகிறார்கள். ஜோர்டானிய உணவுகள் அதிகம் வாசனைத் திரவியங்கள் கொண்டது. உணவில் ஆட்டிறச்சி முக்கியம். அத்துடன் இனிப்பு வகை அதிகமானது. முதல் இரண்டும் பிடித்தபோதிலும் கடைசியிடமிருந்து விலகியிருந்தேன்.

இந்த பெண்கள் அமரிக்காவின் உதவி நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து வேலை செய்பவர்கள். வெளிப்படையான பெண்களாக சரளமான ஆங்கிலம் பேசினார்கள்.

மத்திய கிழக்கில் மற்றைய மதங்களிடையே நல்லுறவையும் ஜோர்டானிய அரசு பேணுகிறது. அதற்கப்பால் மிகவும் திறமையான ராணுவம் மற்றும் உளவுப்படை உள்ள நாடு ஜோர்டான் என நினைக்கிறேன். சிரியா, ஈராக்கில் கால் வைத்த ஐசிஸ், அல்கைதா போன்ற தீவிரவாத இயக்கங்களால் அமரிக்கா சார்பு நாடாக ஜோர்டான் இருந்தபோதிலும், அங்கே பெரிதாக எதுவும் நடத்த முடியவில்லை.

நாங்கள் பேருந்தில் போகும்போது இஸ்ரேலின் வட, கிழக்கு எல்லைப் பிரதேசத்தை பல இடங்களில் பார்த்தோம். ஜோர்டானில் அகதிகள், அருகே இஸ்ரேல் எனக் கண்ணி வெடிகள் இருந்தபோதிலும் அவற்றில் கால்படாது கயிற்றின் மேல் நடக்கும் வித்தையில் மன்னராட்சியாகியபடியால் முடிகிறது. ஜனநாயகம் என்றால், யாராவது இன, மத விரோத கோசங்கள் போட்டிருப்பார்கள் அல்லது அகதிகளுக்கு எதிராக குரல் எழுப்பி இன்னொமொரு ஈராக்கோ, சிரியாவோ இங்கு உருவாகியிருக்கும்.

இத்தாலிக்கு வெளியே ரோமர்களது முக்கியமான நகரமாக ஜெராஸ் இன்னமும் தலைநிமிர்ந்து நிற்கிறது. சில கிலோமீட்டர்கள் விரிந்து பரந்த நகரம். படிகள் பல ஏறிச் செல்லும்போது கிரேக்கர்கள் பாணியான தூண்களுடன் (Colonade) அமைந்த பாதை தெரிந்தது. அந்த பாதை குதிரை வண்டிகள் ஓடிச் செல்ல, கரும்கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. நிலத்தின் கீழ் தண்ணீர் வாய்க்காலும் இருந்தன. பாதையின் நடுவே தண்ணீர் ஓடுவதற்கு வாய்க்கால் அமைத்து, அதைக் கல்லால் மூடியிருந்தார்கள். ரோமர்களது திறந்த வெளித் திரையரங்கம் இங்கும் உள்ளது.

ரோமர்களை நினைக்கும்போது அவர்கள் உருவாக்கிய பாதைகளும், நாம் தற்போது பாவிக்கும் மல கூடங்களும் எனக்கு நினைவுக்கு வரும். அதிலும் நீருக்குள் மலம் செல்லும்போது அதனது மணம் உடனடியாக மறைகின்றது என்பதை அக்காலத்திலேயே கண்டுபிடித்ததிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு ஐரோப்பியர், நம் நாடுகளுக்கு வரும் வரையிலும் ஆசியாவில் இருந்ததாக தகவல் இல்லை. (சிந்து நதி நாகரீகத்தில் நகரக் கழிவுகள் கால்வாய்களால் அகற்றப்பட்ட சான்றுகளும் சில பவுத்த மடாலயங்களில் மலகூடங்கள் இருந்ததற்கான சான்றுகளும் உள்ளதாக அறிந்தேன்) மதங்கள், யோகா, ஆயுர்வேதம் என உலகிற்குத் தந்த தென்னாசியர்கள் மலத்தை பெரும்பாலும் அகற்ற வழி சமைக்கவில்லை. பெரும்பாலான நோய்களின் தோற்றுவாய் மனித மலமே. அதைத் திறந்த வெளி, ஆறு, கடலோரம் எனப் பூமியைப் அசுத்தப்படுத்தியது மட்டுமல்ல மலம் அகற்ற ஒரு சாதியை உருவாக்கினார்கள். யோசித்துப் பாருங்கள் மனித மலத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு யோகாசனம் ஆயுர்வேதத்தால் என்ன பலன்? அதற்கப்பால் மற்றைய மனிதன் மலம் அள்ளும்போது அவனுக்கு நோய் வந்தால் பரவாயில்லை என்ற மனப்பான்மை எவ்வளவு கேவலம்? ஐரோப்பியர்கள் நம்மைச் சுரண்டியதைக்கூட என்னால் மன்னிக்க முடியும், இந்த மலகூடங்களை உருவாக்கியதற்காக!

மிகவும் முக்கியமான காசுத் தாள், வெடிமருந்து, காகிதம் என்பனவற்றைக் கண்டுபிடித்த சீனர்களும்கூட மாவோவின் காலம் வரையும் மண் முட்டிகளில் மலம் கழித்துவிட்டு, அரிசி வயலில் மழைக்காலத்தில் உரமாகப் போடுவார்கள். இதனால் விவசாயிகள் கால்களில் ஏற்படும் நோய் பற்றி மாசே துங் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

ஜெராஸ்சில் தாமர காலத்து மக்கள் குடியிருந்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. பின்பு கிரேக்கர்கள் காலத்தில் நகரமானது. ஜெராஸா என்பது கிரேக்கப் பெயரே. பின்பே, ரோமர்கள் இங்கு வந்தார்கள். அக்காலத்தில் யூதர்களது முக்கிய நகரமாகியது.

பிரபலமான ஆங்கில நாவலாசிரியர் Joseph Conrad எழுதிய Heart of Darkness Novella நாவலில் ஒரு வசனம் நினைவிற்கு வருகிறது. “முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்களுக்கு இங்கிலாந்து, பிற்காலத்தில் பிரித்தானியருக்கு ஆப்பிரிக்காபோல இருந்திருக்கும்” என்பதாகும். அக்காலத்தில் இங்கிலாந்தில் பல குறுநில மன்னர்கள், பிற்கால ஆப்பிரிக்காபோல் இருந்தார்கள்.

இங்கிலாந்தை ஆண்ட ரோமானியர், ஸ்கொலாண்டினரை தடுக்க ஒரு சுவர் எழுப்பியிருந்தார்கள். அதை ஹட்றியன் வால் (Roman Emperor- Hadrian’s Wall) என்பார்கள். இம்முறை அதைப் பார்க்க கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

இதை இங்கே ஏன் குறிபிடுகிறேன் என்றால் ரோமானியர், இங்கு வந்தபோது நிலையான அரசு இருந்தது, உலகங்குமிருந்து வாணிகர்கள் வந்தபடியிருந்தார்கள். ரோமானியர் வந்ததும் ஜெராஸ் (Jerash) நகரத்தை பெரிதாக உருவாக்கினார்கள். அந்தக் காலத்தில் அம்மான் மற்றும் பெட்ரா நகரங்கள் இருந்தன. இத்தாலிக்கு வெளியே இன்னமும் அழியாமல் இருக்கும் ரோமானியர்களின் கட்டிடங்கள் ஜெராஸ்ல் மட்டும் உள்ளதாக பதிவுள்ளது.

பழைய ஏற்பாட்டின்படி பிரகாரம் எகிப்திலிருந்து மற்றைய யூதர்களோடு புனித வசிப்பிடம் தேடி நாற்பது வருடங்கள் மோசஸ் பாலைவனத்தில் அலைகிறார். ஏற்கனவே அவர் புனித இடத்தை அடையமாட்டார் என்ற யாவோவின் கூற்றுப்படி. அவர் அலைந்த பாலைவனம் ஜோர்டானில் உள்ளதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 99 வயது ஆபிரகாமும் 90 வயது சேராவும் ஐசாக் என்ற குழந்தையை பெற்றெடுத்தார்கள் என்பதை நம்புவதால் ஜோர்டானில் தனது மக்களோடு மோசஸ் அலைந்தார் என்பதையும் நம்புவோம்.

மோசஸ், தற்போதைய ஜோர்டானின் சாக்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள மலைக்குன்றின்மேல் ஏறி (730 மீட்டர் உயரம்) புனித பூமி மேற்கே அமைந்த கானான் நிலத்தை (Canaan Land) அல்லது ஜெருசலேம் அமைந்த பகுதியைப் பார்த்தாரென விவிலியம் சொல்கிறது. அந்த மலைக் குன்றில் நாங்கள் நின்று பார்த்தபோது எங்களுக்கும் இஸ்ரேல் தெரிந்தது. இந்த இடத்தில் அழகான சிலுவையும் பாம்பும் கொண்ட சிற்பம் இத்தாலியக் கலைஞரால் அமைக்கப்பட்டுள்ளது. அதனருகே நின்று படமெடுப்பதற்கு பலர் போட்டியிட்டனர்.

அங்கு 6ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட தேவாலயம் திருத்தப்பட்டு, நாங்கள் சென்றபோது வழிபாடு நடந்து கொண்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே அழகான மொசைக் சித்திரங்களைப் பார்க்க முடிந்தது. இப்படியான அழகிய மொசைக் வேலைப்பாடுகளை பெலோரஸ்சியா மற்றும் ரஸ்யா (Russia) எங்கும் உள்ள தேவாலயங்களில் பார்க்க முடிந்தது. அத்துடன் இளம் பெண்கள் இந்த மொசைக் சித்திரத்தை மிகவும் பொறுமையாக செய்வதை மின்ஸ்க் (Minsk) நகரில் பார்த்தேன். இவை கிரேக்க வழி வந்த ஓதோடொக்ஸ் கிறிஸ்தவத்தின் அழகியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நினைத்தேன்.

இங்குதான் பத்து கட்டளைகள் கொண்ட கல்சாசனம் மோசஸ்க்கு கிடைத்ததுடன் மோசஸ் மற்றும் அவரது தம்பியாகிய அரன் இறந்த இடம் எனக் கருதப்படுகிறது. இங்கு அருகாமையிலே மடபா என்ற முக்கியமான நகரம் உள்ளது. இந்த இடத்திற்கு 2000த்தில் ஜோன் போல் பாப்பரசரும் தற்போதைய பாப்பரசரும் வருகை தந்து இந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள். தற்பொழுது கிறிஸ்துவர்களின் முக்கிய யாத்திரைத் தலமாகிவிட்டது.

அம்மான் நகரின் தென் பகுதியில் உள்ள சிறிய நகரம் மடபா. அங்கு சென்றபோது ஏராளமானவர்கள் தேவாலத்தின் முன்பாக நின்றார்கள். மடபா நகரில்தான் ஜோர்டானின் அதிக கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள். மடபாவில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் கிரிக்கத் தேவாலயத்தின் தரையில் மொத்தமான ஏருசலேம் அதாவது புனிதத் தலத்தின் முழுமையான வரைபடம் 6ஆம் நூற்றாண்டில் மொசைக் முறையில் வரையப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.

அக்காலத்தில் எங்களைப்போல் வழிகாட்டியுடன் பேருந்தில் போவதில்லை அல்லவா!

பல ஐரோப்பியர்கள் தங்களது சொத்துகளை ஒருவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு ஏருசலோமுக்கு புனித யாத்திரை செல்வார்கள். அவர்கள் வருவதற்கு இந்த வரைபடம் முக்கியமானதாக இருந்திருக்கும். இதுவே ஆரம்பக்கால வரைபடமாகக் கருதப்படுகிறது. அழிந்திருந்த தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அழிந்து போயிருந்த அந்த வரைபடத்தையும் பார்க்ககூடியதாக இருந்தது.

மடபாவில் உள்ள வீதிகள், வீடுகள் கடைகள் எல்லாம் நம்மைப் பழைய உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், இந்த இடங்களை எல்லாம் எங்கள் பயணத்தில் அவசரமாகக் கடந்து போகவேண்டியிருந்தது.

அடுத்த நாள் நெடும் பயணம் பெட்ரா நோக்கியிருந்தது. அந்தப் பாதையில் இஸ்ரேல் எல்லைக் கம்பி வேலியைப் பார்க்க முடிந்தது.வழியெங்கும் பாலைவனம்.

ஜோர்டானின் மூன்று வகையான நிலம் உள்ளது: பெரும்பகுதி பாலைவனம், சில இடங்கள் கல்லும் மண்ணும் கொண்ட பிரதேசம் (Semiarid). பொஸ்பரஸ் என்ற கனிபொருள் மட்டும் உள்ளது. இன்னொரு பகுதி விவசாய பூமி. நாசரேத்து இயேசு, ஞானஸ்த்தானம் செய்த ஜோர்டான் ஆறு இங்கு ஓடுவதால் அந்த பிரதேசம் ஒரு விவசாய பூமி.

நபட்டியன்ஸ் தலைநகரான பெட்ராவில் மாலையில் ஒரு ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டலை பழைய காலம் போல மலையின் ஒரு பகுதியில், மலையை இடிக்காது, மலையின் அமைவுக்கு ஏற்ப கட்டியிருந்தாரகள். அங்கிருந்து பார்க்கும்போது பெரும்பகுதி பெட்ரா நகரத்தை பார்க்கமுடியும்.

காலையில் பெட்ரோவை நோக்கி நடந்தோம். பாலைவனத்துள் உயரமான சிவந்த நிற கற்பாறைகள் உள்ள வழியில் இரண்டு கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். நூறு மீட்டர் உயரமான ரோஜா வண்ணப் பாறைகள் மத்தியில் இந்தப் பாதை அமைந்துள்ளது. கோட்டைபோல் மிகவும் பாதுகாப்பான இடம். நடக்க முடியாதவர்கள் மின்சார வண்டிகளில் செல்லமுடியும். ஆனால், நடந்து போகும்போது அந்த இடத்தை அனுபவித்துப் பார்க்க முடியும். இதுவரை நான் பார்த்தவற்றில் பிரமிப்பை ஊட்டிய இடம் இதுவாகும். 2000 வருடங்கள் முன்பாக உருவாக்கப்பட்டதாக அறிந்தேன்.

இங்குதான் ஹரிசன்போட் , ஷான் கானரி நடித்த Indiana Johns and the last crusade (1989) படமாக்கப்பட்டது. அந்த படத்தின் மூலம் இந்த இடமும் பிரபலமானது. அத்துடன் ஏழு அதிசயங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் ஐக்கிய நாடுகள் கலாச்சாரப் பிரிவால் பாதுகாக்கப்பட வேண்டிய கலாச்சார சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இரண்டு கிலோ மீட்டர் சிவந்த பாறைகள் இடையே நடப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். இது எளிதாகப் பகைவர்களிடமிருந்து பாதுகாக்க, ஒரு கோட்டை போன்ற அமைப்பாகும். பெட்ரோ செல்லும் வழியில் சில கற்களில் கோட்டோவியங்கள் மட்டும் பார்க்கக்கூடியதாக இருந்தன. ஏற்கனவே சொல்லியபடி நபட்டியன்ஸ் எதையும் எழுதவில்லை. ஆனால், கோட்டோவியங்களாக அவர்களது தெய்வங்கள், மிருகங்களை வரைந்திருந்தார்கள். எகிப்தியர் கல்லிலும் பாபிலோனியர் களிமண்ணிலும் யூதர்கள் பப்பரசிலிலும் எழுதி வைத்தார்கள். ஆனால், நபட்டியன்ஸ் எதிலும் எழுதாததால், வரலாற்றாசிரியர்கள் மற்றையவர்கள் வரலாற்றிலிருந்து இவர்கள் வரலாற்றைக் தோண்டி எடுக்க வேண்டியுள்ளது.

இவர்களிடம் ஆழமான வாய் வழிக் கதைகள் உள்ளது. குடி தண்ணீருக்காக, பாறைகளை குடைந்து மழை நீரை சேகரிக்கும் இவர்கள் திறமை முக்கியமானது. பாலைவனங்களில் வாழும் இவர்கள் பாறைகளில் குடைந்து தண்ணீரையை சேகரித்து விட்டு மூடிவிடுவார்கள். இவர்களால் மட்டுமே அங்கு தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியும். நீரைத் தேடியே, ஒட்டகங்களில் பொதிகளை சுமந்து வருபவர்கள் இவர்களை நாடுவார்கள். நாங்கள் சென்ற வழியெங்கும் இரண்டு கிலோ மீட்டரகள் மழைநீரை தேக்க பாறையில் வாய்கால் அமைத்திருப்பதையும், உயரமான கற்பாறைகளில் படிகள் செதுக்கியிருந்ததையும் காணமுடிந்தது. பாலைவனப் பகுதியான போதும் மழை வெள்ளம் இங்கும் ஏற்படும்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...