No menu items!

NEETல ஜீரோ எடுத்தா போதுமா? Merit என்னாச்சு? : Dr. Yazhini Explains Neet Zero percentile Controvery

NEETல ஜீரோ எடுத்தா போதுமா? Merit என்னாச்சு? : Dr. Yazhini Explains Neet Zero percentile Controvery

முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பூஜ்யம் பிரசண்டைல் எடுத்தவர்களும் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. இது தொடர்பாக, திமுக மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் மருத்துவர் யாழினி ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி.

நீட் வருவதற்கு முன்பு இங்கே எப்படிப்பட்ட நிலைமை இருந்தது? ஏன் திமுக நீட்டை எதிர்க்கிறது? சுருக்கமாக சொல்ல முடியுமா?

திராவிட இயக்கம், திராவிட மரபு தமிழ்நாட்டை எப்படிப்பட்ட ஒரு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது என்கிற பின்னணியில் இதனை பார்க்க வேண்டும். கல்வியைப் பொறுத்தவரைக்கும் மத்திய அரசு எதில் அதிகம் முதலீடு செய்தார்கள் என்று பார்த்தால், இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் (institute of eminence), அதாவது ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள். உயர்ந்த நோக்கத்தோடுதான் செய்தார்கள். ஆனால், பணம் படைத்த, முன்னேறிய வகுப்பினர்தான் அந்த கல்வி நிறுவனங்களுக்குள் செல்ல முடியும்.

இந்த கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள், படிப்பு முடித்ததும் நாட்டுக்கு சேவை செய்வார்கள் என்று எதிர்பார்ப்புடன்தான் அதில் அதிக முதலீடு செய்யப்பட்டது. ஆனால், என்ன நடந்தது? அரசின் பணத்தில், இந்த கல்வி நிறுவனங்களில் படித்தவர்களில் 10க்கு 8 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். 2 பேர்தான் உள்நாட்டில் இருந்தார்கள்.

இதேநேரத்தில் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். நாம் இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் போன்றவற்றை உருவாக்கவில்லை. அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், இந்த பள்ளி – கல்லூரிகளுக்கான மாணவர் விடுதிகள், பள்ளி – கல்லூரிக்கு செல்ல மாணவர்களுக்கு இலவச பேருந்து என ஆரம்ப கல்வியில் (பிரைமரி எஜுகேசன்) கவனம் செலுத்தினோம்.

இதுபோல் பிரைமரி ஹெல்த்திலும் கவனம் செலுத்தினோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகள் என அனைவருக்குமான திட்டங்களை உருவாக்கினோம். சிலருக்காக மத்திய அரசு செலவழித்துக் கொண்டிருந்த போது, நாம் எல்லோருக்குமாக செலவழித்துக் கொண்டிருந்தோம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று கொண்டு வந்ததும் கலைஞர்தான்.

இதன் விளைவாகத்தான் எல்லோருக்கும் கல்வியும் போய் சேர்ந்தது, எல்லோருக்கும் சுகாதாரமும் போய் சேர்ந்தது. இந்த நோக்கத்தில்தான் நாம் அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்த அடிப்படை கட்டுமானத்தை நாசம் செய்ய வந்திருப்பதுதான் நீட்.

நீட்டுக்கு முன்னால், இளநிலை மருத்துவம் படிக்கும் ஒரு மாணவர் உடனே மேற்படிப்பு படிக்க செல்ல மாட்டார். அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றுவார். இந்த சேவைக்காக அவருக்கு அரசு மேற்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும். இதன் காரணமாக நமது அரசு மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து மருத்துவர்களும் வந்துகொண்டே இருந்தார்கள்.

இனி என்ன நடக்கும்? நீட் மூலமாக யார் வருவார்கள்? காசு இருப்பவர்கள்தான் வருவார்கள். அவர்கள் இளநிலை படித்துவிட்டு, உடனே மேற்படிப்பு படிக்கத்தான் செல்வார்கள். அரசு மருத்துவமனைகளுக்கு சேவை செய்ய வரமாட்டார்கள்.

ஒரு தனிநபரின் படிப்பை பாதிக்கிறது என்பதற்காக மட்டும் நாங்கள் நீட்டை எதிர்க்கவில்லை. மருத்துவ துறையில் நாம் உருவாக்கி வைத்திருக்கிற இந்த அடிப்படை கட்டமைப்பையே நீட் நாசம் செய்யப்போகிறது என்பதால்தான் எதிர்க்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...