No menu items!

அதிமுகவை உடைக்குமா பாஜக? – மிஸ் ரகசியா

அதிமுகவை உடைக்குமா பாஜக? – மிஸ் ரகசியா

டிவியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தோம்…

“அதிமுக – பாஜக கூட்டணி உடைஞ்சதுல ஓபிஎஸ் ரொம்ப குஷியா இருக்காரு. கட்சி நிர்வாகிகளோட ஆலோசனை. பாஜகவோட பேச்ச்சுவார்த்தை, பிரஸ் மீட்னு மறுபடி பிஸியாட்டாரு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்கிறது இதுதான் போல. ஓபிஎஸ்ஸோட திட்டம்தான் என்ன?”

”தமிழக அரசியல்ல அதிர்ஷ்டத்தால முன்னுக்கு வந்த தலைவர் ஓபிஎஸ். ஜெயலலிதா காலத்துல அவர் முதல்வரானதுக்கு அந்த அதிர்ஷ்டம்தான் காரணம். அதே அதிர்ஷ்டம் இப்பவும் அடிக்கும்னு உறுதியா நம்பறார் ஓபிஎஸ். ஒருபக்கம் பாஜகவோட பேச்சுவார்த்தை நடத்தற அவர், இன்னொரு பக்கம் தினகரனோடவும், சசிகலாவோடவும் பேசிட்டு இருக்கார். அத்தோட எடப்பாடிகிட்ட நல்ல டேர்ம்ஸ்ல இல்லாத தலைவர்களுக்கும் வலை விரிக்கறார். இப்போதைய சூழலைப் பயன்படுத்தி திரும்பவும் எப்படியாவது விட்ட இடத்தைப் பிடிக்கணும்னு தீவிரமா இருக்கார்.”

”ஆனா எடப்பாடி அந்த அளவுக்கு விடுவாரா?”

“அவரும் சும்மா இல்லை. பல விஷயங்களைப் பத்தி யோசிச்ச பிறகுதான் பாஜக கூட்டணியை முறிச்சிருக்கார். பொதுவா கட்சியோட முக்கியமான முடிவுகளை எடப்பாடிதான் அறிவிப்பார். ஆனால் இந்த முறை பாஜக கூட்டணி பத்தின முடிவை கே.பி.முனுசாமியை விட்டு சொல்ல வச்சிருக்கார். இதன் மூலமா கூட்டணியை முறிச்சது கட்சியோட முடிவுதான்னு பாஜகவுக்கு மறைமுகமா உணர்த்தியிருக்கார்.”

“ஓபிஎஸ்சை பயன்படுத்தி அதிமுகவை உடைக்க பாஜக முயற்சி செய்யுமே?”

“அதையும் எதிர்கொள்ள எடப்பாடி தயாராத்தான் இருக்கார். புதிய வியூகங்களை வகுத்திருக்கார். பாஜக கூட்டணி இல்லைன்னு முடிவானதும் கட்சியில கூடுதலா சில நிர்வாகிகளை நியமிச்சுட்டு வர்றார். 12 புதுமுகங்களை அவர் மாவட்ட செயலாளர்களா அறிமுகப்படுத்தி இருக்கார். அதனால அதிமுகல இப்ப மாவட்ட செயலாளர்களோட எண்ணிக்கை 82-ஆ உயர்ந்திருக்கு. திருவண்ணாமலை, 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்ங்கிற திட்டத்தை திருநெல்வேலி ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்கள்ல அவர் இப்ப அறிமுகப்படுத்தி இருக்கார். அதிருப்தியாளர்களை இல்லாமல் செய்ய இன்னும் கொஞ்சம் மாவட்ட செயலாளர்களை கூடுதலா நியமிக்க திட்டமிட்டு இருக்கார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாவட்டத் தலைவராக இருந்து அதிமுகல சேர்ந்த ராயபுரம் மனோவை அமைப்பு செயலாளரா நியமிச்சிருக்கார். அவர் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர். வன்னியர் சமூகத்தை குறிவச்சு இந்த நடவடிக்கையை அவர் எடுத்திருக்கார். இப்படி பல அரசியல் கணக்குகளை போட்டு அதைச் செயல்படுத்திட்டு வர்றார்.”

“எப்படி செயல்பட்டாலும் பாஜக ஆதரவு தலைவர்கள் அதிமுகல இல்லாமயா இருப்பாங்க?”

“இல்லாம போயிடுவாங்களா என்ன? தம்பிதுரை, வேலுமணி, தங்கமணி ஆகிய மூணு பேரும் பாஜகவுக்கு சாதகமான தலைவர்கள். தம்பிதுரைதான் வானதி சீனிவாசனோட சேர்ந்து டெல்லியில பாஜக தலைவர்களை அதிமுக தலைவர்கள் சந்திக்க ஏற்பாடு செஞ்சார். அந்த ஏற்பாட்டின்படி முதல்ல வேலுமணியும், தங்கமணியும் மட்டும்தான் பாஜக தலைவர்களை சந்திக்கறதா இருந்தது. ஆனா எடப்பாடிதான் அவங்களோட கே.பி.முனுசாமியையும், சி.வி.சண்முகத்தையும் அழைச்சுட்டு போகச் சொன்னார். டெல்லி பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாஜக கூட்டணி சரிப்பட்டு வராதுன்னு தங்கமணிக்கும், வேலுமணிக்கும் புரிஞ்சிருக்கு. அவங்க எடப்பாடிகிட்ட கூட்டணி விஷயத்துல என்ன முடிவு வேணும்னாலும் எடுக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஆனா தம்பிதுரைதான் இன்னும் பாஜக மேல பாசமா இருக்கார். கூட்டணி இருந்தா அடுத்த முறையாவது தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைச்சிருக்குமேங்கிற ஆதங்கம் அவருக்கு இருக்கு. அதனால தம்பிதுரையோட நடவடிக்கைகளை எடப்பாடி கூர்ந்து கவனிச்சுட்டு வர்றார்.”

”பாஜகவோட கூட்டணி கட்சிகள் இதை எப்படி பார்க்குது?”

“நாடாளுமன்றத் தேர்தல்ல பாரதிய ஜனதாவோட தாமரை சின்னத்தில் போட்டியிட டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் போன்ற தலைவர்கள் சம்மதிச்சாலும், வெற்றி வாய்ப்புக்கு அவங்க அதிமுகவைத்தான் நம்பி இருந்தாங்க. குறிப்பா ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி இருக்கும்னு நம்பி ஒரு வருஷமா தொகுதியில நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வர்றார். இப்ப அதிமுக கூட்டணி இல்லைன்னதும் ரொம்பவே நொந்து போயிட்டார். டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜகவோட டெல்லி தலைவர்களை தொடர்புகொண்டு, ‘அண்ணாமலையை நம்பாதீங்க. அவரை தலைவர் பதவியில இருந்து நீக்கிட்டு அதிமுக கூட்டணிக்கு ஏற்பாடு செய்யுங்க’ன்னு சொல்லிட்டு இருக்காராம். தன்னோட பேச்சை பாஜக தலைவர்கள் கேட்பாங்க. பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் ஏற்படும்னு அவர் உறுதியா நம்பறார். பாரிவேந்தரோட கதையும் கிட்டத்தட்ட அதேதான்.”

”அப்படின்னா அண்ணாமலையை மாத்திடுவாங்களா?”

“டெல்லி தலைமை இன்னும் அண்ணாமலைக்கு சாதகமாத்தான் இருக்கு. அதனால அவரை மாத்த மாட்டாங்கன்னு அண்ணாமலையோட ஆதரவாளர்கள் சொல்றாங்க. ஆனா அவரோட எதிர்ப்பாளர்கள் வேற மாதிரி சொல்றாங்க. ‘அதிமுக – பாஜக கூட்டணி முறிஞ்சது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமா போயிடுமோன்னு மேலிடத் தலைவர்கள் நினைக்கறாங்க. அதனால அதிமுக சொன்னபடி மாநில தலைமையை மாத்தி, பாஜக திரும்பவும் கூட்டணிக்கு முயற்சி செய்யும்’கிறது அவங்களோட கருத்தா இருக்கு.”

“அதிமுக – பாஜக நியூஸாவே சொல்றியே… திமுக நியூஸ் ஏதும் இல்லையா?”

“முதல்வரைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலை கவுரவப் பிரச்சினையா பார்க்கிறார். ‘நம்மளோட 2 ஆண்டு ஆட்சிக்கான தேர்வு இது. அதனால 40 தொகுதியிலயும் நாம ஜெயிச்சே ஆகணும்’னு கட்சி நிர்வாகிகள்கிட்ட ஸ்டிக்டா சொல்லி இருக்கார் ஸ்டாலின். இதுகாக பூத் கமிட்டி உறுப்பினர்களை நல்லா கவனிக்கச் சொல்லி இருக்கார். நாடாளுமன்ற தேர்தல்ல ஏதாவது ஒரு தொகுதியில தோத்தாலோ, இல்லை கடந்த தேர்தலைவிட வாக்கு வித்தியாசம் குறைஞ்சாலோ குறிப்பிட்ட மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட அமைச்சர் கழற்றி விடப்படுவார்னும் சொல்லி இருக்கார்.”

”அதிமுகவோட கூட்டணி முடிவால திமுக கூட்டணியில ஏதும் மாற்றம் இருக்குமா?

“திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி நீடிக்குமா நீடிக்காதான்னு திமுக தலைவர்கள் பட்டிமன்றமே நட்த்திட்டு இருக்காங்க. இந்த நேரத்துல உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திருமாவளவனை தொடர்பு கொண்டு எடப்பாடி நலம் விசாரிச்சிருக்கார். இது திமுக தலைமையோட சந்தேகத்தை அதிகரிச்சிருக்கு” என்று சொல்லிக்கொண்டே டிவியில் கண்பதித்தார். அதில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு ஓடிக்கொண்டிருந்தது.

”விளையாட்டு உலகில் நாம் இதுவரை பெரிதாக சாதிக்காத விலையாட்டு ஜிம்னாஸ்டிக்தான். பல்டிகளை அடிப்பதில் கெட்டிக்கார்ர்களான நம் அரசியல்வாதிகளை இதில் களம் இறக்கினால் இதிலும் சாதிக்கலாம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...