No menu items!

ஈரான்-பாகிஸ்தான் ஏவுகணை சண்டை -மூன்றாம் உலகப்போருக்கு ஒத்திகையா?

ஈரான்-பாகிஸ்தான் ஏவுகணை சண்டை -மூன்றாம் உலகப்போருக்கு ஒத்திகையா?

‘இஸ்லாமிய நாடுகளுக்குள் எப்போதுமே சண்டை வராது. சண்டை வரவே வராது’. இப்படி ஒரு நம்பிக்கை இந்த உலகப்பந்தில் ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், 1980ஆம் ஆண்டு தொடங்கிய ஈரான்-ஈராக் போர் இந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

அந்த வரிசையில்தான் இப்போது ஈரான்–பாகிஸ்தான் இடையே சின்னதாக ஒரு முட்டல் மோதல் தொடங்கியிருக்கிறது. இரு நாடுகளும் மாறிமாறி ஏவுகணைகள், டுரோன்கள் மூலம் ஒன்றையொன்று தாக்கி களேபரப்படுத்தியிருக்கின்றன.

மத்திய கிழக்குப் பகுதி ஏற்கெனவே மல்யுத்த களமாக இருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே, காசா பகுதியில் நடந்து வரும் சண்டை 100 நாள்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், செங்கடல் வழியாகச் செல்லும், அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவுக் கப்பல்கள் மீது யேமன் நாட்டின் ஊத்தி தீவிரவாதிகள் ஏவுகணை, டுரோன் தாக்குதல்களை நடத்த, இதற்கு பதிலடியாக ஊத்தி அமைப்பினரின் தளங்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் கூட்டு விமானப்படைகள் இதுவரை 6 முறை வான் தாக்குதல்களை நடத்தி விட்டன.

இந்த பரபரப்புகளுக்கு நடுவில்தான், பாகிஸ்தான் மீது ஏவுகணை, ஆளில்லா டுரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் தொடுத்திருக்கிறது. பதிலுக்குப் பாகிஸ்தானும், ஈரான் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறது.

சரி. பாகிஸ்தானுக்கும், ஈரானுக்கும் இடையில் அப்படி என்னதான் பிரச்சினை?

ஈரான் நாடு, ஒரு மத்திய கிழக்கு நாடுதான். ஆனால் அது அரபு நாடல்ல. ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடு ஈரான்.

ஈரானின் அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த நாற்பது ஆண்டுகளாக சன்னி முஸ்லீம்களின் செல்வாக்கு மிகுந்த நாடாக உருமாறி வருகிறது. ஈரானுக்கு எதிராக, சௌதி அரேபியாவுடன், பாகிஸ்தான் அதிக நெருக்கம் காட்டி வருகிறது.

ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக இணக்கமான உறவு இல்லை. 2014ஆம் ஆண்டு இந்த இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் சிறிய அளவில் ஒரு மார்ட்டர் பீரங்கிச் சண்டை கூட நடந்திருக்கிறது.

மத்திய கிழக்கில் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் உந்து சந்தி ஈரான் நாடுதான். எடுத்துக்காட்டாக, காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம், லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பு, யேமன் வாழ் ஊத்தி பிரிவு, ஈராக்கில் ஒன்றரை லட்சம் தீவிரவாதிகளைக் கொண்ட பி.எம்.எஃப் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு காட்ஃபாதர் ஈரான்தான்.

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் நேரடி கைகலப்பை ஈரான் விரும்பவில்லை என்பதால் ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஊத்தி போன்ற குட்டி குட்டி பூதங்களின் உதவியுடன் ஒரு மறைமுகப் போரை ஈரான் நடத்தி வருகிறது.

அந்த அடிப்படையில்தான் அண்டை நாடுகளான ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இப்போது மோதல் வெடித்திருக்கிறது.

ஈரான், பாகிஸ்தான் இடையே, 900 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லை இருக்கிறது. ஈரானைத் தொட்டுக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மாநிலத்தின் பெயர் பலூசிஸ்தான். கனிமவளம் நிறைந்த இந்தப் பகுதியில் வாழும் பலூச் இன மக்கள் தனிநாடு கேட்டு பாகிஸ்தான் ராணுவத்துடன் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள்.

இதேப்போல, பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஈரானிய பகுதியிலும் சிஸ்டன் பலூசிஸ்தான் என்ற பகுதி உள்ளது. இங்கும் பலூச் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களும் தனிநாடு கேட்டு ஈரானுடன் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் தனிநாடு கேட்டு செயல்படும் பலூச் விடுதலை ராணுவம், பலூச் விடுதலை முன்னணி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆயுத உதவி செய்கிறது. பதிலுக்கு, ஈரானுக்குத் தொல்லை தரும் ஜெய்ஸ்-அல்-அட்ல் என்ற தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆயுத உதவி செய்கிறது.

ஜெய்ஸ்-அல்-அட்ல் என்ற பெயருக்கு ‘நீதியின் படை’ என்பது அர்த்தம். இந்திய தொழிலதிபரும், முன்னாள் கடற்படை அலுவலருமான குல்பூஷண் ஜாதவ், உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் வைத்து கடத்தப்பட்டது நினைவிருக்கிறதா? அந்த ஆள்கடத்தல் சம்பவத்தில் ஜெய்ஸ்-அல்-அட்ல் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஈரானின் ராஸ்க் நகரில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஈரானிய பாதுகாப்புப்படையினர் 12 பேர் கொல்லப்பட்டார்கள். கடந்த 3ஆம்தேதி, ஈரானின் கெர்மான் பகுதியில், ஈரான் என்ற நாட்டின் மிகப்பெரிய ராணுவத் தளபதியாக இருந்த காசம் சுலைமானியின் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. அந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இந்த இரு தாக்குதல்களிலும் ஜெய்ஸ்-அல்-அட்ல் அமைப்பின் கைங்கர்யம் இருப்பதாக ஈரானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்துதான் மீது கடந்த 16ஆம்தேதி, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ்-அல்-அட்ல் தீவிரவாதிகளின் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை, டுரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. அந்த தாக்குதலில் தீவிரவாதிகள் யாரும் பலியானதாகத் தெரியவில்லை. 2 குழந்தைகள்தான் பலியானார்கள்.

இதற்கு பதிலடியாக கடந்த 18ஆம்தேதி, ‘ஆபரேசன் மார்க் பார் சமாச்சார்’ என்ற பெயரில் ஈரான் மீது பாகிஸ்தான் பதில்தாக்குதல் தொடுத்தது. ஏவுகணைகள், ஆளில்லாத டுரோன்கள் மூலம் சரவண் நகரின் மீது நடந்த இந்த வான் தாக்குதலில், ஐந்து பெண்களும் 4 குழந்தைகளும் பலியானார்கள்.

இந்த தாக்குதல்களை அடுத்து ஈரான், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தூதர்களை திரும்பப் பெற்றுள்ளன. இந்த புதிய மோதல், அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அரங்கில் தற்போது அமெரிக்காவின் கை சற்று தளர்ந்து வருவதாக ஒரு கணிப்பு உண்டு. ஆப்கானிஸ்தானில், தாலிபன் தீவிரவாதிகள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது, அமெரிக்க வீழ்ச்சியின் ஆரம்பப் புள்ளியாகக் கருதப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது அமெரிக்க வீழ்ச்சிக்கான இன்னொரு அழுத்தமான அடையாளம்.

அமெரிக்காவின் இந்த தளர்ச்சி, ஈரானுக்கும் அதிக துணிச்சலைக் கொடுத்து வருகிறது. அண்மையில், ஈராக் நாட்டின் இர்பில் நகருக்கு அருகே உள்ள ஒரு தீவிரவாதிகள் தளத்தை இஸ்ரேலின் உளவுமையம் என்றுகூறி ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. சிரியா மீதும் இதேப்போன்ற ஒரு வான் தாக்குதலை ஈரான் தொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் நடத்தப்பட்ட மற்றொரு வான் தாக்குதல்தான் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

சரி. ஈரான், பாகிஸ்தான் இடையில் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துள்ள இந்த தாக்குதல்கள் குறித்து மற்ற நாடுகளின் கருத்து என்ன?

‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற அடிப்படையில் பாகிஸ்தானின் எதிரியான ஈரானை இந்தியா நட்பு நாடாகக் கருதுகிறது. ஏற்கெனவே பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது கடந்த 2019ஆம் ஆண்டு, விமானத் தாக்குதல் நடத்திய நாடு இந்தியா.

எனவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் நடத்திய வான் தாக்குதல், ‘புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று’ என இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஜெய்ஸ்-அல்-அட்ல் அமைப்பு மீது ஈரான் நடத்திய தாக்குதலை இந்தியா மறைமுகமாக வரவேற்றுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, போன்ற நாடுகள் ஈரான், பாகிஸ்தான் இடையிலான இந்த புதிய பதற்றம் குறித்து கவலை தெரிவித்துள்ளன. சீனா, இந்த இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஏற்படுத்த உதவத் தயார் என அறிவித்துள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, ஈரான் நாட்டுடன் ஏற்பட்டுள்ள இந்த மோதல் பெரிதாகி பெரிய அளவில் போர் வெடிப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அடக்கி வாசிக்க விரும்புகிறது. காரணம் இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் இது தேர்தல் ஆண்டு.

ஈரான் நாட்டைப் பொறுத்தவரை இந்த தாக்குதல், அந்த நாட்டின் பலத்தைக் காட்டும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அண்டைநாட்டு தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் நாடு ஆரம்பித்துள்ள புது டிரெண்ட் வான் தாக்குதல்கள், மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடவும் வாய்ப்புண்டு என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆக மொத்தத்தில், காசா பகுதி அமைந்திருக்கும் மத்தியத் தரைக்கடல், கப்பல்கள் தாக்கப்படும் செங்கடல் என இரண்டு கடல்களில் பற்றிக் கொண்ட போர்ப்பதற்றம், இப்போது பாரசீக வளைகுடா, அரபிக்கடல் வரை வந்துவிட்டது.

ஈரான், பாகிஸ்தான் இடையிலான புதிய போர்ப்பதற்றம், இந்தியாவின் வாசல் வரை வந்து விட்டநிலையில், இந்தியா இந்த பிரச்சினையை மிக கவனமாக கையாள வேண்டியது அவசியம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...