No menu items!

பர்மா பஜாரின் கதை – மாறிவரும் சந்தைப் பொருளாதாரத்தின் முகம்!

பர்மா பஜாரின் கதை – மாறிவரும் சந்தைப் பொருளாதாரத்தின் முகம்!

சந்தியா நடராஜன்

நான் முதன்முதலாக சென்னைக்கு வந்த போது சுற்றிப் பார்த்த இடங்களில் ஒன்று பர்மா பஜார். பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போலத்தான் இருந்தது என் நிலை. ‘டூப்ளிகேட் அயிட்டங்களை உன் தலையில் கட்டிவிடுவார்கள். எதையும் பார்த்து வாங்கு. பேரம் பேசு’ என்று அறிவுரை வழங்கி இருந்தான் என் சென்னை நண்பன்.

பாரி முனையிலிருந்து பர்மா பஜார் கடைகளைப் பார்த்துக்கொண்டே ஒரு பர்லாங் தூரம் நடந்தேன். எதுவும் வாங்கவில்லை. பர்மா பஜார் வியாபாரிகள் ஏதோ அயல் கிரகத்து மனிதர்கள் போல் தோன்றினார்கள். அச்சமும் வியப்பும் என் உள்ளத்தில் மாறி மாறிக் குடிமை கொண்டன. ஆனால், கண்ணில் பட்ட சார்லி செண்ட்டும் யார்ட்லி பவுடரும் காபர்டைன் பேண்ட் பிட்டுகளும் வெளிநாட்டு சாக்லெட்டுகளும் ‘வா வா’ என்று அழைத்தபடியே இருந்தன.

1970களின் பிற்பகுதியில் இந்த பர்மா பஜார் உலா நிகழ்ந்தது. அதற்குப் பிறகு ஐந்தாறு ஆண்டுகளில், அதாவது 1985ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி இந்த பர்மா பஜாருக்கு எதிர் வரிசையில் சென்னைத் துறைமுகத்தின் மெயின் கேட்டுக்கு எதிரே உள்ள சென்னை சுங்க இல்லத்தில் சுங்க அதிகாரியாகச் சேர்ந்தேன். அது முதற்கொண்டு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு பர்மா பஜாரின் நிழல் உலக மனிதர்களைக் குறித்த தகவல் சேகரிப்பு எனது வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

1985களில் சுங்க இல்லத்தில் ஒரு நீல நிற வேன் இருந்தது. நகரில் ஏதாவது ஒரு சோதனைக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ அதிகாரிகளை அழைத்துச் செல்ல அந்த நீல நிற வேன் பயன்படுத்தப்படும். அந்த வேன் பர்மா பஜாரைக் கடக்கும்போதெல்லாம் கடைக்காரர்கள் ஷட்டர்களை வேகவேகமாக மூடுவார்கள். அது ஒரு வழக்கமாகவே இருந்தது. இந்த வழக்கம் குறித்து விசாரித்தபோதுதான் பர்மா பஜாரின் பூர்வ சரித்திரம் தெரிய ஆரம்பித்தது.

பர்மா பஜார், பர்மாவிலிருந்து அகதிகளாகத் தமிழ்நாட்டிற்குத் திரும்பிய தமிழர்களால் உருவானது. வணிகத்திற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்று மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா. அங்கே இருந்து தேக்கு மரங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல பொருள்களை இறக்குமதி செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள் சென்னை செட்டியார்கள். சென்னைத் துறைமுகத்திற்கு எதிரேயுள்ள ‘ரேவு’ பகுதி வாணிப கிடங்குகள் நிறந்ததாக இருந்திருக்கின்றது. (பொருட்கள் புழங்கிய பகுதி இன்று ‘பொருள்’ வைத்துக்கொண்டு திரிபவர்களுக்கும் புகலிடம் தந்திருக்கிறது. பயங்கர ஆயுதங்களுடன் ரவுடித்தனம் செய்கிறவனை, ‘அவன் ரேவுகாரன்’ என்று சொல்லுமளவுக்கு ‘ரேவு’ பகுதியின் வண்ணம் மாறியிருக்கிறது.)

வளமும் வசதியும் ஒருசேரக் கைகூடி வாழ்ந்த பர்மா தமிழர்களுக்கு இரண்டாம் உலகப் போர் பேரிடியாக அமைந்தது. 1941ஆம் வருட கிறிஸ்துமஸ் பரிசாக ஜப்பானிய விமானங்கள் ரங்கூன் மீது குண்டுமழை பொழிந்தன. பர்மாவிலிருந்து தமிழர்கள் உயிர் பிழைத்து ஓடி வந்தார்கள். இது பர்மாவின் முதல் அகதி அலை.

1962ஆம் ஆண்டில் பர்மாவில் இராணுவப் புரட்சியால் ஆட்சியைக் கைப்பற்றிய ஜெனெரல் நீ வின் (Ne Win) ஒட்டுமொத்தத் தமிழர்களையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கும் வேலையில் இறங்கினார். தமிழர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளானார்கள். இந்த ஒடுக்குமுறை 1964ஆம் ஆண்டு தீவிரமடைந்தது. பர்மாவிலிருந்து தமிழர்கள் வெளியேறத் தொடங்கினர். இந்திய அரசும் அவர்களைப் பாதுகாத்துப் பத்திரமாகக் கொண்டு வரக் கப்பல்களையும் விமானங்களையும் ஏற்பாடு செய்தது.

வீடு வாசல் இழந்து பர்மாவிலிருந்து வெளியேறிய தமிழர்களின் இந்த இரண்டாவது அலையில் கப்பல் மூலம் சென்னைத் துறைமுகத்தில் வந்து இறங்கியவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை நடைபாதையில் விற்கத் தொடங்கினார்கள். இதுவே பர்மா பஜாரின் தொடக்கநிலை. இவர்கள் ‘பர்மா அகதிகள்’ (Burma Refugees) என்று அழைக்கப்படுவதில்லை. அரசு ஆவணங்களில் இவர்கள் ‘பர்மாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள்’ (Burma Repatriates) என்றே குறிப்பிடப்படுகிறார்கள். 1964இல் பர்மா அகதிகளாகக் கப்பலில் வந்து இறங்கிய இவர்கள் முதலில் கும்மிடிப்பூண்டி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பிறகு வேலூரிலும் பர்மா முகாம் உருவானது.

சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நடைபாதை வியாபாரிகளாக வாழ்க்கையைத் தொடங்கியவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடைபாதை வணிகத்திற்கு உரிமம் தந்து உதவியது. எனவே, 1964இல்தான் பர்மா பஜாருக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1967இல் ஏற்பட்ட அண்ணாவின் அரசும் அதற்குப் பிறகு உருவான கலைஞர் தலைமையிலான திமுக அரசும் பர்மா பஜார் வியாபாரிகளுக்கு உறுதுணையாக நின்று உதவி புரிந்தது. நடைபாதை வணிகர்கள் கடைக்காரர்கள் ஆனார்கள். நான்கடி அகலம், ஆறடி அகலம் உள்ள மரக்கட்டைகளால் ஆன கடைகள் உருவாயின.

இந்த மரத்தாலான கடைகளை அமைத்துக் கொடுத்தவர்கள் பர்மாவில் மரவேலை மற்றும் மர வணிகம் செய்து வந்த தமிழ்ச் செட்டியார்கள். இவர்களின் பூர்விகம் வேலூர், திருவண்ணாமலை பக்கம் என்கிறார்கள். பர்மாவிலிருந்து ஏதிலிகளாய் வந்தவர்களுக்கு அரசாங்கம் நேதாஜி நகரிலும் ஷர்மா நகரிலும் 1200 சதுர அடி கொண்ட மனைகளை அளித்தது. இந்தச் செட்டியார்கள் நேதாஜி நகரில் வீடு கட்டிக்கொண்டு ஷர்மா நகரில் தேக்குமர வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் தொழிற்பட்டது பர்மா தேக்கு மரங்கள்.

இந்தச் செட்டியார்களின் மர வணிகம் குறித்து ஒரு விநோதமான செய்தி உலவுகிறது. பர்மாவில் வெட்டப்படும் தேக்கு மரங்கள் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் கடலில் வீசப்படுமாம். அந்த மரக்கட்டைகள் காற்றின் வேகத்தில் கடலில் மிதந்து வந்து சென்னையில் பழவேற்காடு கடற்கரையிலோ கோவலம் பகுதியிலோ கரை ஒதுங்குமாம். அந்த மரக்கட்டைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் பிரத்யேக குறிகளை வைத்து கட்டைகளுக்குரிய வணிகர்கள் எடுத்துச் செல்வார்களாம். கடலில் மிதக்கும் கட்டைகளுக்கு என்ன பாதுகாப்பு! மிதக்கும் கட்டைகள் இந்த நீண்ட நெடிய பயணத்தில் வேறெங்கும் கரை ஒதுங்காதா? ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டாமா? கடலில் போடுவதற்கு காவல் வேண்டாமா? கடல் கடந்து வணிகம் செய்தவர்கள் கடலலையில் கடை விரித்தார்களா? நம்ப முடிகிறதா?

ஆனால், இப்படி நடந்தது உண்மை என்று சாதிக்கிறார் மீரான்பாய். இவர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆக்கூர் மதர்ஸாவில் பயின்ற இஸ்லாமியர். இன்று தமிழக பாரதீய ஜனதா கட்சியில் ஒரு பிரமுகர். இவரது தந்தை அப்துல்காதர் பர்மா பஜார் மறுமலர்ச்சி சங்கத்தின் செயலாளராக இருந்தவர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகில் உள்ள சுந்தரபுரம் இவரது பூர்விக ஊர். அங்கிருந்து பர்மாவுக்குச் சென்றவர். அப்துல்காதர் பர்மா பஜார் செயலாளராக இருந்த போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த யூசுப் தலைவராக இருந்தார். யூசுப் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைவராக நீடித்தவர். மீரான் பாயின் அண்ணன் சாகும் ஹமீது சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தவர். பர்மா அகதிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் பேரில் தான் அரசாங்கம் பர்மா பஜாரில் கடை ஒதுக்கீடு செய்து வந்தது. அவரது கடை எண் 81. 1995இலிருந்து ஐந்தாறு ஆண்டுகள் பர்மா பஜார் சங்கத்தின் செயலாளராக பணியாற்றிய அப்துல் காதர் வடசென்னையில் எம்.கே.வி. நகர் உருவான காலத்தில் பர்மாவிலிருந்து தன்னுடன் வந்த பலருக்கு அரசாங்கத்தில் வீட்டு மனை பெற பெரிதும் உழைத்தவர்.

இந்தப் பின்புலத்திலிருந்து வந்தவர் மீரான் பாய் என்பதால் காற்றின் திசையும் விசையும் அறிந்த செட்டியார்கள் கடலலை மீது செய்து வந்ததாகக் கூறப்படும் மரக்கட்டை கதையை நம்ப வேண்டியிருக்கிறது. விரைவில் அப்படிப்பட்ட வணிகம் செய்த ஒரு செட்டியாரைச் சந்திக்க இருக்கிறேன்.

இன்று பர்மா பஜாரின் பெரும்பாலான கடைகள் இஸ்லாமியர் வசம் இருந்தாலும் அந்நாட்களில் இந்துக்களும் கணிசமான அளவுக்கு கடைகள் வைத்திருந்தனர். இவர்களும் முஸ்லீம்களும் இணைந்து நட்புறவோடு வியாபாரம் செய்து வந்தனர். நாவன்னா ஷண்முகம் என்ற அப்துல் காதரின் நண்பர் பர்மா பஜாருக்கு ஒரு பெரும்பலமாக நின்றார் என்று சொல்கிறார் மீரான்பாய். அவரது மகன் முணியாண்டி கடையை அறியாத சென்னை தொழிலதிபர்களோ திரைப்பட கலைஞர்களோ ஏனைய பிரபலங்களோ இல்லை. அந்தக் கடை மீது அவர்களுக்கு ஒரு மோகம், ஒரு மயக்கம். முணியாண்டி படையல் இல்லாத பெரும் வெற்றி விழா விருந்துகள் சென்னையில் நடந்ததில்லை.

பின்னர் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்திலும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலும் பர்மா பஜார் விரிவடைந்து வலிமை மிகுந்த ஒரு வணிகக் கூட்டமாக மாறியது. ‘ஏ’ பஜார், ‘பி’ பஜார், ‘சி’ பஜார் என்றிருந்த பர்மா பஜாரில் ‘ஜேஜே’ பஜார் உருவானது. உயர்நீதிமன்றத்தின் எதிரே மாலை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்ட ஈவ்னிங் பஜார் தலையெடுத்தது. ‘மரக்கட்டை’ கடைகள் உருமாற்றம் பெற்று, இரும்பு ஷட்டர்களுடன் கூடிய கடைகளாயின. சென்னை மாநகராட்சி இந்தக் கடைகளை ஒதுக்கீடு செய்தபோது அவற்றின் ஆரம்பகட்ட விலை ரூபாய் ஐந்தாயிரம். இன்று பர்மா பஜாரில் ஒரு கடையின் விலை 25 லட்சம் ரூபாய்.

ஆரம்ப கட்டத்தில் அந்நியத் துணிமணிகளும் செருப்பு, பெல்ட், நகவெட்டி, பொம்மை, சிறு கத்தரிக்கோல், லண்டன் நைட் செண்ட், நேஷனல் ட்ரான்சிஸ்டர், பேனா, பென்சில், முகப் பவுடர், சிகரெட் இப்படிப்பட்ட பொருட்களே பர்மா பஜாரில் விற்பனையாகின. சீனியர் சுங்க அதிகாரி ஒருவர் பத்து இருபது செவன் ஓ கிளாக் (7’O Clock) பிளேடு பாக்கெட்டுகளைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய நண்பரான அந்த அதிகாரியை அவரது சம காலத்தவர்கள் விருந்து நிகழ்வுகளின்போது நையாண்டி செய்ததுண்டு.

சென்னைத் துறைமுகத்தில் வெளிநாட்டுக்குச் சென்றுவரும் பயணக் கப்பல்கள் தற்போது இல்லை. இதை எழுதிக் கொண்டிருக்கும்போது நாகைத் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஒரு கப்பல் கொடியசைத்துத் தொடங்கப்பட்டிருப்பதைத் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.

சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சென்னைக்கும் இடையே இதுவரை மூன்று பயணியர் கப்பல்கள் இயங்கியிருக்கின்றன. ‘ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற கப்பலும் ‘ரஜூலா’ என்ற கப்பலும்தான் சென்னைத் துறைமுகத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்றுவந்த முதற்கட்டப் பயணியர் கப்பல்கள். ‘ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ்’ கப்பல் ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப்’ இந்தியாவுக்குச் சொந்தமானது. ‘பிரிட்டிஷ் இந்தியா லைன்’ என்ற நிறுவனத்தால் ‘ரஜூலா’ இயக்கப்பட்டு வந்தது. இந்த இரு கப்பல்களில் ‘ரஜூலா’ பயணம் மேலானது என்பார்கள். என்ன மேலானது! அதிலும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தால் மூச்சு முட்டும், உடம்பு சூடேறும். பேருக்குத்தான் வெளிச்சமும் காற்றோட்டமும்.

இக்கப்பல்கள் சிங்கப்பூர் சென்று சென்னையை வந்தடைய இரண்டு வாரங்களாகும். 1960களில் இயங்கிய இந்தக் கப்பல்களின் போக்குவரத்தினால் பர்மா பஜாரின் வர்த்தகம் வளர்ச்சி பெற்றது. பஜார் வியாபாரிகள் சிலர் சிங்கப்பூர் செல்லத் தொடங்கினர். 1970களில் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ‘சிதம்பரம்’ என்ற கப்பலை வ.உ.சியை நினைவு கூர்ந்து சிங்கப்பூருக்கு இயக்கியது. ‘சித்மபரம்’ கொஞ்சம் வேகமாக ஓடியது; ஏறக்குறைய ஒரு மாமாங்க காலம் ஓடியது; 700 பயணிகளையும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்களையும் சுமந்துகொண்டு ஓடியது. ‘சிதம்பரம்’ கணிசமான பஜார்காரர்களுக்குப் பயணத்திற்கும் வளமான வாழ்க்கைக்கும் வழிவகுத்து வந்தது. மூச்சிறைக்க ஓடிய சிதம்பரத்தில் 1985ஆம் ஆண்டு பிரவரி 12ஆம் தேதி தீப்பிடித்தது. சென்னைத் துறைமுகத்திலிருந்து 100 மைல் தூரத்தில் கப்பல் வந்துகொண்டிருந்தபோது இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது.

சிதம்பரம் கப்பல் சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் ‘நார்த் க்வே’ (North Quay) என்ற தளத்தில் நிலைநிறுத்தப்படும். கப்பலின் கடைசிப் பயணி சுங்கச் சோதனை முடித்து வெளிவர இரண்டு மூன்று நாட்களாகும். சிதம்பரம் கப்பல் முதலில் நாகைத் துறைமுகத்திற்குக் கிழக்கே கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். நாகைத் துறைமுகத்திற்கு வரவேண்டிய பயணிகள், படகுகள் மூலம் கரைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். சென்னையிலிருந்து சில சுங்க அதிகாரிகள் நாகை சென்று கடலில் நிற்கும் கப்பலில் ஏறி, கப்பல் சென்னை வரும்வரை பயணிகளைக் கண்காணித்து வருவார்கள். ‘சிதம்பரம்’ சென்னை வந்தால் துறைமுகம் விழாக்கோலம் பூணும். சிதம்பரம் கப்பலில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிப்பந்திகளில் சிலர் துறைமுகத்திலிருந்து வெளியே செல்வதும் உள்ளே வருவதுமாக இருப்பார்கள். அந்தச் சிலர் சட்டைக்கு மேல் சட்டையும், பேண்ட்டுக்கு மேல் பேண்ட்டும் அணிந்து வெளியேறி, திரும்பும்போது ஒற்றைச் சட்டை ஒற்றை பேண்ட்டுடன் வருவார்கள். இப்படி வெளிநாட்டுப் பொருள்கள் கப்பலிலிருந்து வெளியேறிச் சந்தைக்குச் செல்வதுண்டு. இவை இறுதியில் பஜாரில் விற்பனையாகும். கைக்கடிகாரங்கள்தான் அன்றைக்குக் கடத்தல்காரர்களுக்குக் கை கொடுத்திருக்கின்றன.

இலங்கையிலிருந்து பயணிகள் மூலம் கொண்டுவரப்படும் கிராம்பும் பஜாரில் விற்பனைக்கு வரும். 1980களில் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனே இலங்கை வணிகத்தை அரசின் கடுமையான கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்து ‘திறந்த சந்தை’க்கு வழி வகுத்தார். சிங்கப்பூரைப் போன்ற பொருளாதாரச் சந்தை இலங்கையில் உருவாக ஆரம்பித்தது. அப்போதுதான் கொழும்பு சென்று திரும்பும் பயணிகள் மூலம் சோனி டிவிகள் சென்னைக்கு வர ஆரம்பித்தன. இந்த டிவிகளின் வருகை குறித்து இந்திய டிவி நிறுவனங்கள் பதற்றமடைந்தன. இந்த டிவிகளைச் சந்தைப்படுத்தும் மையமாக பஜார் இயங்கியது.

1985க்குப் பிறகு விமானப் பயணம் எளிதானது. எமர்ஜென்சி காலம் முடிவடைந்து மொரார்ஜி தேசாய் பிரதமரான பின்னர் பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள் எளிதானதும் இதற்கான காரணம் என்று சொல்கிறார்கள் சில பழுத்த பஜார்காரர்கள்.

கேசியோ கால்குலேட்டர்களும் காமிராக்களும் சைனா சில்க் புடவைகளும் பஜாரை ஆக்கிரமிக்கத் தொடங்கின. மிகப் பெரிய மியூசிக் சிஸ்டம் மக்களின் ஆடம்பரப் பொருளானது.

1980களில் விசிஆர், விசிடி காசட்டுகள் விற்பனை முழுவீச்சில் நடைபெற்றன. இவை இன்று இருக்குமிடம் தெரியவில்லை. சென்னை நகர் முழுதும் வீடியோ காசெட்டுகளை வாடகைக்குத் தரும் வீடியோ லைப்ரரிகள் முளைத்திருந்தன. நடிகர்கள், இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் எல்லாம் உயர்தர வீடியோ கடைகளில் தென்படுவதுண்டு. மாரியம்மன் கோயில் திருவிழாக்களில்கூட ‘டெக்’ மூலம் திரைப்படங்கள் ஒலிபரப்புவார்கள். விசிஆர் என்பது பொது வழக்கில் ‘டெக்’ என்று அழைக்கப்பட்டது. தனியார் பேருந்துகளிலும் விசிஆர் மூலம் திரைப்படங்கள் ஓடும். அத்தகைய பேருந்துகளை வீடியோ கோச் என்று சொன்னார்கள். வீடியோ கோச்சுகள் இன்னும் நவீனமாகி ஸ்லீப்பர் கோச்சுகளாகிவிட்டன. வோல்வோ பஸ்கள் நலுங்காமல் குலுங்காமல் பயணிக்க விரும்பும் வசதிமிக்கவர்களுக்கான ஊர்திகளாகிவிட்டன.

1985இல் சென்னைத் துறைமுகத்திற்கு வந்த இன்டெர்சிட்டி என்றொரு கப்பல் சுங்க அதிகாரிகளின் முற்றுகைக்கு ஆளானது. அக்கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விசிஆர்கள் கைப்பற்றப்பட்டன. அந்தக் கப்பலின் மீகாமன் (கேப்டன்) பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவரை பிலிப்பைன்ஸ் பீமன் என்று சொல்லலாம். அவ்வளவு பெரிய உடம்பு. தனது முதல் காதலி கடல் என்று சொன்னார். விசாரணை நடந்து முடிந்த கையோடு அவர் சென்னை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சரியாக ஏழு ஆண்டுகள் கழித்து அதே கேப்டனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சந்தித்த இடம் தூத்துக்குடி துறைமுகம். அல்காரா என்ற கப்பல் துபாய் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்துகொண்டிருந்தது. அதில் 99 வெள்ளிக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கப்பலைக் கடலோரக் கப்பற்படை இடைமறித்துத் தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டுவந்தது. அப்போது நான் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையில் பணியாற்றி வந்தேன்.

தூத்துக்குடியில் முகாமிட்டிருந்த நாங்கள் அல்காரா கப்பலுக்குச் சென்றோம். கடலோரக் கப்பல் படையின் தலைவர் கப்பலை முழுமையாகச் சோதனையிட்டதாகவும் கடத்தல் பொருளைக் கண்டெடுக்க முடியவில்லை என்றும் சொன்னார். அல்காரா கப்பலின் கேப்டனை எங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தினார். நின்றது அதே இன்டர்சிட்டி கேப்டன். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இன்டர்சிட்டி கப்பல் கேப்டனாக கடத்தல் குற்றத்திற்காகக் கைதான சம்பவத்தை எடுத்துரைத்தேன். கொஞ்சம் கலங்கி, கொஞ்சம் மயங்கி இறுதியில் பொருள் இருக்கும் இடத்தைச் சொன்னார். நங்கூர சங்கிலி அறையில், கீழே வெள்ளிக் கட்டிகளையடுக்கி வைத்துவிட்டு நங்கூர இரும்புச் சங்கிலியை அவற்றின் மேல் மலைப்பாம்பைப் போல இயந்திரம் மூலம் சுற்றி வைத்திருக்கிறோம் என்றார். தன்னை கேப்டனாக இயங்க அனுமதிக்குமாறு வேண்டினார். பிறகு கப்பல் பணியாளர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்தார். இயந்திரம் மூலம் நங்கூர சங்கிலி கடலில் இறங்கியது. சங்கிலி அறையின் தளத்தில் வெள்ளிக்கட்டிகள் பிரகாசித்தன.

அந்தக் கப்பல் தலைவனுக்கு ஏழு பிள்ளைகள். எல்லோரும் வெவ்வேறு நாடுகளில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. ‘ஏன் கடத்தல் கப்பல்களில் பணிபுரிகிறீர்கள்? குறைந்த வயதுக்காரரும் இல்லை’ என்று கேட்டபோது அவர் சொன்னார், “நான் கடலில் பிறந்தவன். கப்பலில் வளர்ந்தவன். காசு பெரிதல்ல; கப்பல் பணி மீதான என் காதல் பெரிது. வயது முதிர்ந்த நிலையில் கடத்தல் கப்பல்கள்தான் என்னை வரவேற்கின்றன. நான் கடலிலே சாக விரும்புகிறேன்.”

வாழ்ந்து பழகியதே வாழ்க்கை ஆகிறது. ஆசைப்பட்டதையே அடைய நினைக்கிறது மனசு. சட்டமும் விதிகளும் ஆசையில் வாழும் மனசுக்கில்லை. இது பஜார் வியாபாரிகளுக்கும் பொருந்தும்.

எண்பதுகளில் பஜாரின் முகமாக இருந்த விசிஆர் மறைந்துபோயிற்று. ஆளும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப பர்மா பஜாரின் நிறம் மாறும்; கையாளும் பொருட்களும் மாறும்.

1995 ஜூலை 21ஆம் நாள் மேற்கு வங்கத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு இந்தியாவில் முதன்முதலாக செல்போனில் பேசி அலைபேசி சேவையைத் தொடங்கிவைத்தார். அலைபேசி யுகம் ஆரம்பித்தது. பர்மா பஜாரின் கடைகளும் மொபைல் விற்பனையில் நாட்டம் கொண்டன. மொபைல் இறக்குமதி வரி குறைகிறபோது மொபைல் கம்பெனிகளின் விற்பனை மையங்களுடன் போட்டிபோட முடியாத சூழலில் வேறு புதிய வரவுகளைத் தேடிக்கொண்டது பர்மா பஜார்.

2000ஆம் ஆண்டு வரை திருட்டு விசிடிகள் திரைப்படத் துறைக்குப் பெரும் சவாலாக இருந்தன. அவை அப்பளக்கட்டுகள் போல் மலேசியாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் வந்திறங்கின. பர்மா பஜார் முழுவதும் சிடி கடைகளாகத் தோற்றமளித்த காலமும் உண்டு.

மறைமுக வியாபாரிகளாக அறியப்பட்டவர்கள் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கி விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். அமேசான் இந்தியா விழாக் காலங்களில் அதிரடி சலுகைகளை அறிவிக்க ஆரம்பித்தது. டிஜிட்டல் டிவிகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குக் குறைந்த விலையில் அமேசான் இணைய தளத்தில் விற்கப்பட்டது. அவற்றை அதிக எண்ணிக்கையில் வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டு விலை ஏறுகிறபோது நல்ல லாபத்திற்கு விற்கத் தொடங்கினார்கள்.

கள்ள மார்க்கெட் என்று கருதப்பட்ட பஜாரின் விற்பனை முகமும் காலத்திற்கு ஏற்ப மாறியது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் இசைந்துபோக வேண்டிய கட்டாயம் உண்டானது. உலக அரங்கில் நிலவும் அரசியல் பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தும் தீர்மானித்தும் செயல்படும் இவர்கள் படிக்காத பொருளாதார நிபுணர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...