No menu items!

மீண்டும் கொரோனா – அச்சத்தில் டெல்லி

மீண்டும் கொரோனா – அச்சத்தில் டெல்லி

கடந்த சில மாதங்களாக சத்தமே இல்லாமல் முடங்கிக் கிடந்த கொரோனா வைரஸ், இப்போது மீண்டும் பயமுறுத்த தொடங்கிவிட்டது. தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களில் புதிதாக 459 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 63 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை, அங்கு கடைசியாக கொரோனா இத்தனை உக்கிரமாக இருந்தது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான். அப்போது நாளொன்றுக்கு சுமார் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிவிட்டோம் என்று எல்லோரும் மகிழ்ந்த நிலையில் இப்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியைப் போலவே வட மாநிலங்கள் பலவற்றிலும் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியிருகிறது. உத்தரப் பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் கடந்த 15 நாட்களில் புதிதாக 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அம்மாநில முதல்வரே தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதை பற்றி கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், “வட மாநிலங்களில் இப்போது பனிக் காலம் முடிந்து, வெயில் காலம் தொடங்குகிறது. இந்த கால நிலை மாற்றத்தின் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் மட்டுமின்றி பன்றிக்காய்ச்சலின் தாக்கமும் இப்போது அதிகமாக இருக்கிறது. அடுத்த 2 வாரங்கள் வரை கொரோனாவின் பரவல் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளனர்.

கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த, மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், வெளி இடங்களுக்கு செல்லும்போது முக்ககவசம் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்பதால், பிரச்சாரக் கூட்டங்களின்போது மக்கள் அதிகமாக ஓரிடத்தில் திரண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் கொரோனா பரவலின் வேகமும் அதிகமாக இருக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது.

தலைநகர் டெல்லியை நோக்கி வட மாநில விவசாயிகள் பேரணி அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தங்களை பயமுறுத்தவும், விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுக்கவும் கொரோனா வைரஸை அரசாங்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

காரணம் எதுவாக இருந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருந்து நம் நலனையும், நமது குடும்பத்தின் நலனையும் காப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...