No menu items!

தண்ணீர் பிரச்சினையில் தவிக்கும் பெங்களூரு

தண்ணீர் பிரச்சினையில் தவிக்கும் பெங்களூரு

இந்தியாவிலேயே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் உள்ள நகரமாக பெங்களூருவைச் சொல்வார்கள். ஐடி நிறுவனங்கள், இதமான கால நிலை, காவிரி நீர் என்று பெங்களூருவை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் இப்போது அந்த பெங்களூரு நகரம் தண்ணீர் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் முன்பு ஏற்பட்டதைப் போல தண்ணீர் இல்லாத நகரமாக பெங்களூரு மாறிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

எதனால் வந்தது தண்ணீர் பஞ்சம்?

இந்தியாவின் ஐடி நகரமாக கருதப்படும் பெங்களூருவில் பல பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் குடும்பம் பெங்களூருவில் வசிப்பதால் அங்குள்ள மக்களின் தேவைக்காக மட்டும் மாதம் 1.6 டி.எம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த தண்ணீருக்கான முக்கிய ஆதாரம் காவிவி ஆறும், நகரின் பல இடங்களில் தோண்டப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளும்தான்.

ஆனால் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் காவிரியில் இருந்து தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. அத்துடன் நகருக்கு தண்ணீர் வழங்கும் சுமார் 800 குழாய் கிணறுகளும் வற்றிப் போய் இருக்கின்றன. இதனால் ஒட்டுமொத்த பெங்களூரு நகரமே வறன்று கிடக்கிறது.

1,000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.2,000

தண்ணீர் பஞ்சத்தால் குழாயில் நீர் வராத நிலையில், அத்தியாவசிய தேவைக்குக்கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீர் டாங்க் உரிமையாளர்களும் இந்த சூழலை பயன்படுத்தி மக்களிடம் கொள்ளையடித்து வருகிறார்கள். கடந்த மாதம் வரை 1,000 லிட்டர் தண்ணீருக்கு 600 முதல் 1,000 ரூபாய் வரை வைத்து விற்ற தண்ணீர் டாங்க் உரிமையாளர்கள், இப்போது அதே 1,000 லிட்டர் தண்ணீரை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள்.

பெங்களூரு நகரின் மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் டாங்கர் லாரிகளை நம்பியிருப்பதால் இதன் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் தங்கள் இமேஜ் பாதிக்காமல் இருக்க, பால் லாரிகளைக்கூட தண்ணீர் லாரிகளாக மாற்றி தண்ணீர் சப்ளை செய்துவருகிறது மாநில அரசு.

அதிகரிக்கும் பராமரிப்பு கட்டணம்:

பெங்களூருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு குடும்பமும் தண்ணீர் பயன்பாட்டை 20 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று குடியிருப்புகளின் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிக அளவில் தண்ணீரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு அவை அபராதத்தையும் விதித்து வருகின்றன. பல குடியிருப்புகளில் லாரி தண்ணீரை வாங்குவதற்காக மாதாந்திர பராமரிப்பு கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர்.

முதல்வர் அலுவலகமும் தப்பவில்லை

சாதாரண மக்களின் நிலைதான் இப்படி என்றால் முதல்வர் அலுவலகமும் தண்ணீர் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. பெங்களூரு நகரில் உள்ள குமாரகுருபா சாலையில் முதலமைச்சர் சித்தராமையாவின் ”கிருஷ்ணா” அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பிரத்யேக குடிநீர் குழாய்கள் மூலம் போதிய நீர் பெறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் திடீரென அங்குள்ள குழாய்களில் தண்ணீர் வருவது நின்று போயிருக்கிறது.

இதனால் அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் டேங்கர் லாரியை வரவழைத்து அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பியுள்ளனர். முதல்வர் அலுவலகத்துக்கே இப்படி ஒரு நிலை ஏற்பட்டது கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் தன் வீட்டில் உள்ள குழாய் கிணறே வற்றிப்போய் இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கர்நாடக மாநில அரசு தவறிவிட்டதாக பாஜக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன வழி என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறது கர்நாடக அரசு.

தமிழகம் மீது பழி

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீரை திறந்து விட்டதாலேயே இந்த தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதாக அங்குள்ள சில தலைவர்கள் புகார் கூறி வருகிறார்கள், அடுத்த ஆண்டு தமிழகத்துக்கு அதிக தண்ணீரைக் கொடுக்க கூடாது என்றும், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள். மொத்தத்தில் இந்த பிரச்சினையும் தமிழக விவசாயிகள் மீது விடிய வாய்ப்பு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...