No menu items!

செங்கல்பட்டு To ‘தாதா சாகேப் பால்கே’ : ‘வஹீதா ரஹ்மான் Life Story

செங்கல்பட்டு To ‘தாதா சாகேப் பால்கே’ : ‘வஹீதா ரஹ்மான் Life Story

இந்தியளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் ‘தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’ இந்த ஆண்டு பாலிவுட் மூத்த நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1960 – 70களில் பாலிவுட் வெள்ளித்திரையை ஆண்ட வஹீதா ரஹ்மான், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர்!

செங்கல்பட்டு டூ டில்லி – ஒரு பிளாஷ்பேக்…

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த தக்னி முஸ்லிம் மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் முகமது அப்துர் ரஹ்மான் – மும்தாஜ் பேகம் தம்பதி. அப்துர் ரஹ்மான், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர். இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள். இவர்களில் கடைக்குட்டிதான் வஹீதா ரஹ்மான். 1938 பிப்ரவரி 3 அன்று பிறந்தார். சிறு வயதாக இருக்கும் போதே, இவரும் இவரது சகோதரிகளும் சென்னையில் பரத நாட்டிய கலை பயின்றனர்.

பரத நாட்டியம் பயின்றாலும் உண்மையில் வஹீதாவுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை. இந்நிலையில், வஹீதாவின் இளமை காலத்திலேயே அவரது தந்தை அப்துர் ரஹ்மான் இறந்துவிடுகிறார். இதனால், வீட்டு பொருளாதார சூழ்நிலை ஒத்துழைக்காததாலும், அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினாலும், வஹீதாவால் அவரது குறிக்கோளை அடையமுடியவில்லை.

கற்றுக்கொண்ட பரதம் துணையுடன் சினிமாவில் நடனக் கலைஞராக நுழைந்தார், வஹீதா ரஹ்மான். 1955ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான  ‘ஜெய்சிம்மா’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதே ஆண்டு தெலுங்கில் வெளியான அக்கினேனி நாகேஸ்வர ராவின் ‘ரோஜுலு மராயி’ (Rojulu Marayi) படத்தில் ஒரு நாட்டுப்புற பாடலில் மட்டும் நடனமாடினார். தொடர்ந்து தமிழில் எம்.ஜி.ஆர்., பி. பானுமதி நடிப்பில் வெளியான ‘அலிபாபுவும் 40 திருடர்களும்’ (1956) திரைப்படத்திலும் நடித்தார்.

இந்நிலையில், தற்செயலாக, இந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான குருதத் பார்வையில் வஹீதா பட்டது அதன்பின் அவரது வாழ்வையே மாற்றிவிட்டது.

குருதத் வாழ்க்கையில் ஒரு எருமை மாடு குறுக்கிட்டதன் வாயிலாகத்தான், அவர் வஹீதா ரஹ்மானை கண்டடைந்தார். குருதத்தும் அவருடைய நண்பர் அப்ரார் அல்வியும் ஒரு தயாரிப்பாளரை பார்க்க ஹைதராபாத் சென்றுள்ளனர். காரில் போகும்போது, முன்னால் ஒரு எருமை மாட்டு வண்டி வழி விடாமல் சென்று கொண்டிருந்தது. வழிவிட வேண்டி காரின் ஹார்னை ஆல்வி அழுத்தியபோது, எருமை மாடு மிரண்டு, திரும்பிப் பாய்ந்து காரை முட்டி சேதமாக்கியது. பலத்த சேதத்திற்குள்ளான காரை பழுதுபார்க்க ஒர்க் ஷாப் எடுத்துச்சென்றுள்ளனர்.

இந்த விபத்தால் திட்டமிட்டபடி சந்திக்க நினைத்த தயாரிப்பாளரை சந்திக்க முடியவில்லையே என்ற விரக்தியில் ஆல்வியும் குருதத்தும் ஒர்க் ஷாப் அருகில் இருந்த ஒரு விநியோகஸ்தரின் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர் பக்கத்தில் இருந்த ஒரு வளாகத்தில் பளிச் என மின்னல் போல் ஒரு பெண் நுழைவதை பார்க்கிறார்கள். அந்தப் பெண் ‘ரோஜுலு மராயி’ படத்தில் குருப் டான்ஸ் ஆடுவதற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத் வந்திருந்த வஹீதா ரஹ்மான். குருதத்துக்கு அவரை பிடித்துப் போகிறது. உடனே அப்பெண்ணை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இச்சம்பவத்தை குருதத் பற்றி ஆல்வி எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1956ஆம் ஆண்டு ஹிந்தியில் குருதத் தயாரிப்பில் தேவ் ஆனந்த் நடிப்பில் வெளியான ‘சிஐடி’ படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார், வஹீதா ரஹ்மான். அடுத்த ஆண்டே குருதத் நடித்து இயக்கிய ‘Pyaasa’ (1957) படம் மூலம் கதாநாயகியானார்.

அதேநேரம் குருதத் வாழ்க்கையிலும் வஹீதா ரஹ்மான் நுழைந்து அது குருதத் தற்கொலை வரைக்கும் கொண்டு சென்றது. ‘சிஐடி’ படத்தில் நடிக்கும்போது இருவரும் நெருக்கமானார்கள். ‘ப்யாஸா’ படத்தில் குருதத்துக்கும் வஹீதாவுக்கு காதல் உச்சம் அடைந்தது. ‘ப்யாஸா’ படத்தில் குருதத்தும் வஹீதாவும் நடிக்கும் ‘ஜானே க்யா’ பாடலை பாடியவர், குருதத்தின் மனைவி கீதா தத்.

தனது மனைவி கீதா தத், காதலி வஹீதா ரஹ்மான் இருவருக்கும் இடையில் சிக்கினார், குருதத். அவரால் இந்த சுழலிருந்து விடுபட முடியவில்லை. குருதத்தும் வஹீதாவும் அடுத்து இணைந்து பணியாற்றிய ‘காகஸ் கே பூல்’ (1959) படம், ஒரு வெற்றிகரமான இயக்குநர் ஒரு பெண்ணிடம் காதல் வசப்பட்டு பின்னர் வீழ்ந்ததைப் பற்றியதாக இருந்தது. குருதத்தின் திருமண வாழ்க்கை ஒருபக்கமும், வஹீதா ரஹ்மான் பிற இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்த படங்களின் தொடர்ச்சியான வெற்றிகள் ஒரு பக்கமும் இணைந்து, குருதத் – வஹீதா ரஹ்மான் காதலை பிரித்தது. இருந்தாலும் இருவரும் இணைந்து 1960ஆம் ஆண்டு வெளியான ‘சாத்வின் கா சாந்தில்’ வரை பணியாற்றினர். 1962ஆம் ஆண்டு வஹீதா நடிப்பில் வெளியான ‘சாஹிப் பீபி ஔர் குலாம்’ படம் 1963 பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை முன்னிட்டு இருவரும் பெர்லின் சென்றனர். அதன்பின்னர் பிரிந்தனர்.

இந்நிலையில், குருதத் தன்னை மாய்த்துக்கொண்டார். இது வரைக்கும் குருதத் மரணத்தை பற்றி  ஒரு வார்த்தைக்கூட வஹீதா ரஹ்மான் சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதற்குப் பிறகு வஹீதா ரஹ்மான் திரையுலகில் தொட்ட உச்சம் எவரும் கற்பனை செய்யமுடியாது. ஒரு தலைமுறையினரையே பிரமிக்க‌ வைத்தார். ‘ப்யாஸா’ (Pyaasa), ‘காகஸ் கி பூல்’ (Kaagaz ke Phool), ‘ செளதாவி கா சந்த்’ (Chaudhavi Ka Chand), ‘சாகிப் பிவி அவுர் குலாம்’ (Saheb Biwi Aur Ghulam), ‘ கைடு’ (Guide), ‘ காமோஷி’ (Khamoshi) போன்ற படங்கள் இந்தியத் திரைத்துறை வரலாற்றில் வஹீதா ரஹ்மான் இடத்தை இன்றும் நினைவுகூர்பவை. 1971ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ரேஷ்மா அவுர் ஷெரா’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.

தமிழில் கடைசியாக கமலின் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் ஐந்து தலைமுறைகளாக திரைத்துறையில்  பயணிக்கும் வஹீதா ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், வங்காளம் உட்பட இந்தியா முழுவதும் பல மொழிகளில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

1972இல் மத்திய அரசு வஹீதா ரஹ்மானுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. 2011இல் பத்ம பூஷன் விருதையும் பெற்றார்.

வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பெரிதாகப் படங்களில் ஏதும் நடிக்காமல் ஓய்வில் இருந்து வருகிறார் வஹீதா.

இந்நிலையில் தற்போது சினிவாவிற்கு வஹீதாவின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் விதமாக இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது மத்திய அரசு. இது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய சினிமாவுக்காக வஹீதா ரஹ்மான் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக இந்த ஆண்டுக்கான மதிப்பு மிக்க பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்படுகிறது. சுமார் 5 தசாப்தங்களாக நீளும் தனது கலை வாழ்வை, தேர்ந்தெடுத்து நடித்த தனது கதாபாத்திரங்கள் மூலம் மிகவும் நேர்த்தியாக அவர் அமைத்துக்கொண்டார். வஹீதா தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பின் மூலம் தான் சார்ந்திருக்கும் தொழிலில் சிறந்த உயரத்தினை அடையலாம் என்று இந்திய பெண் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ” என்று தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள் வஹீதா ரஹ்மான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...