No menu items!

தொடங்கிய மழை … கலக்கத்தில் சென்னை மக்கள்

தொடங்கிய மழை … கலக்கத்தில் சென்னை மக்கள்

பொதுவாக மழை பெய்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள். மழைக்காலம் எப்போது வரும் என்று காத்திருப்பார்கள். ஆனால் சென்னை மக்கள் இதற்கு நேர்மாறானவர்கள். மழைக்காலம் என்றாலே அவர்களுக்கு அலர்ஜி. ஒவ்வொரு மழைக்காலத்திலும் சாலைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படுவதும், கொசுக்கள் படையெடுத்து நோய்கள் அதிகரிப்பதுமே இதற்கு காரணம்.

சாதாரண நாட்களிலேயே மழைக்கு பயப்படும் சென்னை மக்கள், இப்போது அக்டோபரில் மழைக்காலம் தொடங்கப்போவதை நினைத்து இப்போதே அலறுகிறார்கள். மாழைக்காலம் வந்தால் எப்படி வெளியே நடமாடுவது என்று மிரண்டு போய் கிடக்கிறார்கள். மழைநீர் கால்வாய்க்காக பல இடங்களில் சாலைகள் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு கிடப்பதே இதற்கு காரணம்.

சென்னை நகருக்கு உட்பட்ட 59 கிலோமீட்டர் நீளச் சாலையில் 230 கோடி ரூபாய் செலவில்  மழைநீர் கால்வாய்களை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கின. கடந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்று அரசு உத்தரவாதம் கொடுத்தும், அது நடக்கவில்லை. பாதி தோண்டி குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டன. இந்த மோட்டார் பம்புகளின் புண்ணியத்தால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் வெள்ளத்தில் திணறாமல் பல முக்கிய சாலைகளும், தெருக்களும் தப்பின.

கடந்த ஆண்டு தப்பித்த நிலையில், இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாவது சென்னையில் சீரான மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர். ஆனால் புதிய சிக்கல் முளைத்தது. பல இடங்களில் ஏற்கெனவே போடப்பட்ட மழைநீர் கால்வாய்கள், சரியாக அமைக்கப்படவில்லை என்று கூறி, அவை மீண்டும் தோண்டப்பட்டன. ’மறுபடியும் முதல்ல இருந்தேவா?’ என்று மக்கள் மிரளும் வகையில் பணிகள் மீண்டும் தொடங்கின.

இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முழு பணிகளும் முடிவடைந்துவிடும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில், அன்றைய தேதிக்குள் மொத்த பணிகளில் 34 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்திருந்தன.

மழைநீர் வடிகாலுக்காக ஒருபக்கம் சாலைகள் தோண்டப்பட்டு கிடக்க, அத்துடன் அடுத்தடுத்து பெய்த மழையால் சாலைகள் சீர்கெட்டு போய் மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கவேண்டி வந்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைநீர் வடிகால்களால் ஏற்பட்ட பிரச்சினை போதாதென்று பல இடங்களில் மெட்ரோ பணிகளாலும் சாலைகள் தோண்டப்பட, போக்குவரத்து நெரிசல் அதிகமானது.  வரும் பொதுத்தேர்தலில் இது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்று அறிக்கைகள் கிடைத்த்தால் இவ்விஷயத்தில் முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கினார்.

 “சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை.

அமைச்சர் பெரு மக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன். இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன்” என்று கடந்த வாரம் அறிவித்த முதல்வர், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முழு பணிகளையும் முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

முதல்வரின் இந்த உத்தரவுக்குப் பிறகும், அவர் விதித்த கெடு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் 10 கிலோமிட்டர் நீள சாலையில் பணிகள் இன்னும் முடியவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சொல்வதைவிட அதிகமான இடங்களில் பணிகள் முடியாமல் இருப்பதை சமீபத்திய மழைகள் எடுத்துக் காட்டியுள்ளன.

சென்னை மாநகராட்சி முழு வேகத்தில் பணியாற்றினாலே மழைநீர் கால்வாய்களை சீரமைத்து சாலைகளை சீர் செய்ய குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்று தெரிகிறது. அதுவரை வடகிழக்கு பருவமழை சென்னை பக்கம் வந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் சென்னை மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...