No menu items!

காங்கிரஸ் பலமாக வேண்டும் – பாஜக விரும்புவது ஏன்?

காங்கிரஸ் பலமாக வேண்டும் – பாஜக விரும்புவது ஏன்?

‘காங்கிரஸ் பலமாக இருப்பது ஜனநாயகத்துக்கு அவசியம்.” இந்தக் கருத்தை காங்கிரஸ்காரரோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலிருப்பவரோ சொன்னால் ஆச்சர்யமில்லை. ஆனால் சொன்னவர் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

பாஜகவுக்கு என்ன காங்கிரஸ் மீது கரிசனம் என்ற கேள்விக்கு கட்காரி சொன்ன வரிகள் பதில் தரும்.

”காங்கிரஸ் பலவீனமடைந்தால் அந்த இடத்தை மாநிலக் கட்சிகள் எடுத்துக் கொள்ளும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” இதுதான் கட்காரி சொன்னது.

மாநிலக் கட்சிகள் ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வருகின்றன, பலமடைகின்றன. அது எப்படி ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும்?

நிதின் கட்காரி கூறியதில் ஜனநாயகம் என்ற சொல்லுக்குப் பதில் பாஜக என்று பொருத்திப் பார்த்தால் நிதின் கட்காரியின் பேச்சுக்கு அர்த்தம் புரியும்.

காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது. உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் மாநிலக் கட்சிகள் பலம் பெற்று வருகின்றன.

பஞ்சாபில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி பாஜகவை சிந்திக்க வைத்திருக்கிறது. டெல்லி என்ற சின்ன பிரதேசத்தில் செல்வாக்கை நிலை நிறுத்தி ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி பெரிய மாநிலமான பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

ஆம் ஆத்மியின் வெற்றி பாஜகவை கோபம் கொள்ளச் செய்திருக்கிறது என்பது அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய முறையிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து கெஜ்ரிவால் சொன்ன கருத்துக்கு எதிரான போராட்டம் என்று பாஜகவினர் கூறினாலும் அதில் அவர்கள் காட்டிய வீரியம் காஷ்மீர் ஃபைல்ஸை தாண்டிய எரிச்சல் என்பதை உணர்த்துகிறது

(காஷ்மீர் ஃபைல்ஸ் ஆதாரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்) .

மாநிலக் கட்சிகள் பலம் பெறுவதை ஏன் பாஜக விரும்பவில்லை, காங்கிரஸ் போன்று மாநிலக் கட்சிகளும் அரசியல் கட்சிகள்தானே..காங்கிரசை எதிர்ப்பது போல் மாநிலக் கட்சிகளை எதிர்க்கலாமே என்ற கேள்விகள் எழுலாம். பிரமாண்ட காங்கிரசையே பாஜக வீழ்த்திவிட்டது மாநிலக் கட்சிகளை வீழ்த்த முடியாதா என்று கேட்கலாம்.

ஆனால் காங்கிரசை எதிர்ப்பதற்கும் மாநிலக் கட்சிகளை எதிர்ப்பதற்கும் மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.

காங்கிரஸ் தேசியக் கட்சி. மாநிலங்களின் பிரச்சினைகளை, அதன் தேவைகளைவிட தேசிய அளவிலான பிரச்சினைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கும் அவற்றுக்கான பதிலடியை பாஜகவினால் கொடுக்க இயலும்.

ஆனால் மாநிலக் கட்சிகளுடன் மோதும்போது பாஜகவினால் சுதந்திரமாக முடிவுகள் எடுக்க இயலாது.

உதாரணமாய் தமிழ்நாட்டின் பிரச்சினையான நீட் தேர்வு குறித்து இங்குள்ள மாநிலக் கட்சிகள் குரல் கொடுக்க முடியும் ஆனால் தேசியக் கட்சிகளான காங்கிரசாலும் பாஜகவினாலும் குரல் கொடுக்க இயலாது. அதே போல் காவிரி சிக்கல். இது போன்ற பிரச்சினைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கின்றன.

பாஜக பலவீனமாய் உணர்வது இந்த விஷயத்தில்தான். ஆம் ஆத்மியால் பஞ்சாப் விவசாயிகளின் மனங்களை வெல்ல முடிகிறது. ஆனால் விவசாயிகள் எதிர்க்கும் விவசாய சட்டங்களைக் கொண்டு வந்த பாஜகவினால் பஞ்சாப் விவசாயிகளின் ஆதரவை பெற இயலாது.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியால் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்க இயலும். அதை பாஜக செய்ய இயலாது.

வலுவான மாநிலக் கட்சிகளும் மாநிலத் தலைவர்களும் பாஜகவுக்கு பெரும் சவால்.

இப்போது தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாநிலங்களின் வெற்றி தோல்வி பாஜகவின் கணக்குகளை பாதிக்கும். இந்த எட்டு மாநிலங்களில் 205 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன. மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டிலும் மாநிலக் கட்சிகளான சிவசேனாவுடனும் திமுகவுடனும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. இந்த 205 தொகுதிகளை முக்கியமாக கருதுகிறது பாஜக.

பொதுவாய் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அந்த மாநிலத்தில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்து பிறகு கூட்டணியைக் கட்சியையே முழுங்கிவிடுவதை ஒரு அரசியல் வியூகமாகவே செயல்படுத்தி வருகிறது பாஜக.

கோவா, மணிப்பூர், திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களில் இது சாத்தியமாகிறது. ஆனால் பெரிய மாநிலங்களில் பலம் பொருந்திய மாநிலக் கட்சிகள் இருக்கும் மாநிலங்களில் இந்த வியூகத்தை செயல்படுத்த இயலவில்லை. பெரிய மாநிலங்களில் அப்படி செய்ய முயன்றபோது அது தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. உதாரணமாய் மகாராஷ்டிரா. அங்கு சிவசேனையை முந்த முயன்றபோது உதவ் தாக்கரே ஏமாறவில்லை. காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். மற்றொரு பெரிய மாநிலமான பீகாரில் நிதிஷ் குமாரை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அங்கு இரண்டாவது இடத்தில்தான் தொடர வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தி இரண்டாம் இடத்துக்கு முன்னேற முயற்சிக்கிறது பாஜக. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் அணி அமைத்து ஆட்சியில் இடம் பெற்றிருக்கிறது. அடுத்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுக்கு எதிராகவே போட்டியிடலாம்.

70களிலும் 80களிலும் இந்தியா முழுவதிலும் மிக பலமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலைக்கு காரணம் மாநிலக் கட்சிகளின், மாநிலத் தலைவர்களின் வளர்ச்சிதான். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா என பல மாநிலங்கள் இதற்கு உதாரணம்.

வரலாற்றை பாஜகவும் படிக்கும் அல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...