No menu items!

நியூஸ் அப்டேட்: ஸ்டாலின் – கெஜ்ரிவால் சந்திப்பு!

நியூஸ் அப்டேட்: ஸ்டாலின் – கெஜ்ரிவால் சந்திப்பு!

டெல்லியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார்.  சந்திப்புக்குப் பிறகு கெஜ்ரிவாலுடன் டெல்லியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள சமூக சுகாதார சேவை மையங்களான டெல்லி மொஹல்லா கிளினிக்குகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “இதுபோன்ற  பள்ளிகளை தமிழகத்தில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது” என்றார். தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், ‘‘தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எங்களுடைய பள்ளிகளை காட்சிப்படுத்தியது எங்களுக்கு கிடைத்த கவுரவம்” என்றார்.

800-க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலை  உயர்ந்தது!

இந்தியா முழுவதும் மருந்து பொருட்களின் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் 10.7 சதவீதம் விலை உயர்த்தப்படும் என்று இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பாராசிட்டமால், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்தசோகை எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள் உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. காய்ச்சல், புற்றுநோய், நீரிழிவு எதிர்ப்பு நோய், இரத்த அழுத்தம், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகளின் விலையும் 10.7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், ட்விட்டரில் தொடர்ச்சியாக மத ரீதியான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை, அக்டோபர் 23-ல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கல்யாணராமன் மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்தனர்.

இந்தியாவுடன்  கூட்டணி வளர்கிறது: ரஷ்ய அமைச்சர் பேச்சு

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பேசிய செர்ஜி, ”உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நிலையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியா – ரஷ்யா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது. நாங்கள் இருநாட்டு உறவையும் மேலும் வலுப்படுத்தியுள்ளோம். எங்கள் அதிபர் (புதின்) இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்” என்றார்.  

ஈரோடு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 3 பெண்கள் மீட்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மெயின் ரோட்டில் தங்கும் விடுதி ஒன்றில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து மஃப்டியில் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து தகவலை உறுதி செய்துகொண்ட போலீசார், மசாஜ் சென்டர் மானேஜர் தானேஷ்குமாரை கைது செய்து, 3 பெண்களை மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...