No menu items!

பல்லு பிடுங்கின ஆபிசர் பல்லை பிடுங்கணும்: சீறும் வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். பேட்டி – 2

பல்லு பிடுங்கின ஆபிசர் பல்லை பிடுங்கணும்: சீறும் வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். பேட்டி – 2

தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி. வால்டர் ஐசக் தேவாரம் ‘ வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அம்பாசமுத்திரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பற்களை பிடுங்கினார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சமீபமாக காவல் நிலையங்களில் நடக்கும் கொடுமைகள் அதிகமாய் வெளியில் தெரிகிறது. சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல்நிலைய சித்திரவதையில் இறந்தார்கள். காவல் துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வதில்லையா?

இந்த இரண்டு சம்பவங்களுமே மிகவும் மோசம், போலீஸ் செய்தது தவறு. போலீஸாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும். கட்டாயம் சிறைக்கு அனுப்ப வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் சிறையில்தான் இருக்கிறார்கள்.

பல்வீர் சிங் விவகாரம் விசாரணையில் இருக்கிறது. எனவே, அதுபற்றி உறுதியாக நான் எதுவும் சொல்லமுடியாது. என் சர்வீஸ் காலத்தில் இதுபோல் எப்போதும் பார்த்ததில்லை. அடிப்பார்கள், அவ்வளவுதான். ஆனால், செய்திகளில் பார்த்தவரைக்கும் இப்போது பற்களை பிடிங்கியிருக்க வாய்ப்புள்ளது போல்தான் தெரிகிறது. இது மிகவும் விசித்திரமான ஒரு வழக்கு.

பல்லை பிடுங்கியது உண்மையாக இருந்தால் அந்த ஆபிசரை, அவர் ஏஎஸ்பி ஆனாலும் சரி, அவர் மேல் வழக்கு பதிவு செய்து ஜெயில்ல போடணும். ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. செய்திருக்க வேண்டும். முதல்நாள் சஸ்பெண்ட் செய்யவில்லை; செய்திருக்க வேண்டும். இதிலெல்லாம் எந்தவிதமான கருணையும் காட்டக்கூடாது.

இப்படி ஒவ்வொருத்தரையாக பிடித்துக்கொண்டு போய் பல்லை பிடிங்கினால், அவர் பல்லையும் பிடுங்கலாம். டிஸ்மிஸ் செய்யவேண்டும். இப்படி பல்லை பிடுங்குகிறவர் சைக்கோவாக, மெண்டல் கேஸாக இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவர்களிடம் அனுப்பி அதற்கான பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவர் சைக்கோ என்று உறுதியானால் மெண்டல் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பவேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டு ஐபிஎஸ் சங்கம் குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த சூழலில் அந்த அறிக்கை அவசியமானதா?

அப்படி சொல்லியிருந்தார்கள் என்றால் அந்த அசோஸியேசனில் இருப்பவர்கள் எல்லோர் மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

இப்போது குற்றஞ்சாட்டப்பட்டவர் சாதாரண அதிகாரி அல்ல, ஐபிஎஸ் அதிகாரி. அவரே கொறாடாவை வைத்து பற்களை பிடுங்கினார் என்று கேள்விப்படும்போது காவல்துறை மீதே அச்சம் ஏற்படுகிறதே? ஐபிஎஸ் பயிற்சியில் விசாரணைகளை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார்கள் அல்லவா?

இதுபோல் பல்லை பிடுங்க வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். நல்லதைத்தான் சொல்லித் தருவார்கள். ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க அதிகபட்ச வழிகளை பயன்படுத்தலாம் என்று மட்டும்தான் சொல்லுவார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சினை என்றால் லத்தி சார்ஜ் செய்யலாம்; அதனாலும் முடியவில்லை என்றால் சூட்டிங் செய்யலாம். எல்லாவற்றுக்கும் விதிமுறைகள் இருக்கிறது. அதன்படிதான் செய்ய வேண்டும். நான் 15 – 20 இடங்களில் சூட்டிங் செய்திருப்பேன். ஒரு இடத்தில்கூட பிரச்சினை வந்ததில்லை. ஏனெனில், விதிகள் படிதான் நான் செய்தேன்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று உங்களை சொல்கிறார்கள். நீங்கள் செய்த  என்கவுண்டர்கள் பற்றி சொல்ல முடியுமா?

ஆபரேசன் அஜந்தாவில் நக்சலைட்டுகளுக்கு எதிராக நடைபெற்ற சூட்டிங், வீரப்பன் வேட்டையில் நடைபெற்ற சூட்டிங்குகள், இந்திரா காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடைபெற்ற கிண்டி சூட்டிங், சென்னை மெரீனா மீனவர்கள் பிரச்சினையின் போது சூட்டீங், எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வலத்தில் சூட்டிங், நான் போலீஸில் சேர்ந்த புதிதில் அரவங்காடு தொழிற்சாலையில் நடைபெற்ற சூட்டிங் என நிறைய செய்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எனக்கு க்ளீன் சீட்தான்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி – ஜெயலலிதா என அதிமுக இரண்டாக உடைந்திருந்தபோது தமிழ்நாடு சட்டசபையில் கலாட்டா நடந்தது. சட்டசபைக்குள் யூனிபார்ம் போலீஸ் போகக்கூடாது என்ற நடைமுறை இப்போதும் இருக்கிறது. இதனால், சட்டசபைக்குள் காவல்துறையினர் உள்ளே போகக்கூடாது என்று தலைமைச் செயலாளர் சொன்னார். ஆனால், கலாட்டா அதிகமாகி, அன்றைய சட்டசபை சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன், “அய்யய்யோ என்னை கொல்றாங்க” என்று சத்தம் போட்டார். நான் காவலர்களை அழைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டேன். எல்லோரையும் அடித்து நொறுக்கினோம். எங்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றார்கள். விவாதங்களை கேட்ட நீதிபதி மோகன், “தேவாரம் செய்ததுதான் சரி. கொலை நடந்திருந்தால் போலீஸைதானே குற்றம் சொல்வீர்கள்” என்றார்.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...