No menu items!

60 – 70 பேரை கொன்றிருப்போம் – விடுதலை உண்மைக் கதை: வால்டர் தேவாரம் – 1

60 – 70 பேரை கொன்றிருப்போம் – விடுதலை உண்மைக் கதை: வால்டர் தேவாரம் – 1

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘விடுதலை’ விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘படத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனையே’ என்று சொல்லப்பட்டாலும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைவர் வால்டர் தேவாரம் தலைமையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் அஜந்தா’, தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு, வீரப்பன் வேட்டையில் நடைபெற்ற வாச்சாந்தி பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் உண்மையில் என்ன நடைபெற்றது? இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி. வால்டர் ஐசக் தேவாரம் ‘ வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே.

‘விடுதலை’ படத்தை நீங்கள் பார்த்தீர்களா?

நான் எந்தப் படமும் பார்க்கிறதில்லை. 1960இல் காலேஜ் படிக்கும்போது பார்த்ததுதான் கடைசி படம். அதன்பிறகு படமே பார்த்ததில்லை.

 ‘ஆபரேஷன் அஜந்தா’ பற்றி சொல்ல முடியுமா?

இந்தியாவில் சாரு மசூம்தார் என்பவர்தான் முதன்முதலில் மேற்கு வங்கத்தில் நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்தார். அவரைப் பின்பற்றி நாட்டின் பல பகுதிகளிலும் இளைஞர்கள் நக்சலைட் இயக்கத்தில் இணைந்தனர். தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் அவரால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் இருந்தார்கள். அதனால் இங்கே வந்து ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களை சேர்த்து நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்தார்.

சாரு மசூம்தார் தமிழ்நாட்டுக்கு வந்து ஒக்கேனக்கல் அருகே முந்திரிக் காட்டு பகுதியில் ரகசியமாகக் கூட்டம் போட்டார். இதில் பல இளைஞர்கள் இணைந்தனர். நக்சலைட் இயக்கம் முதலில் சிறியதாக இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. இதனால் கொலைகள் அதிகமானது. குறிப்பாக தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் நக்சலைட் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்தப் பகுதிகளில் பழங்குடியினர் அதிகம். அவர்களையும் சேர்த்துக்கொண்டார்கள்.

என்ன செய்வார்கள்? ஒரு கிராமத்துக்கு சென்று, அங்கு வட்டித் தொழில் செய்து பணக்காரராக இருப்பவர்களை பிடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களால் ‘மக்கள் நீதிமன்றம்’ என்று அழைக்கப்பட்டதில் ஒரு பொது விசாரணை நடத்துவார்கள். மக்களும் அவர் எல்லோரையும் ஏமாற்றியதை சொல்லுவார்கள். அதனையடுத்து மக்கள் சார்பில் அவருக்கு மரணத் தண்டனை அறிவிப்பார்கள். அங்கேயே அவரை வெட்டிக் கொன்றுவிடுவார்கள்.

இதுமாதிரி நிறைய நடந்தது. ஜோலார்பேட்டையில் ஒரு பணக்காரர், அவர் மனைவி, பேரக் குழந்தை மூன்று பேரையும் கொன்றுவிட்டார்கள். இப்படி பல கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் பதியப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட நக்சசலைட்டுகளை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், என்னை இந்தப் பணிக்காக அனுப்பினார்கள்.  அப்போது நான் திருச்சி டிஐஜி ஆக பணியாற்றி வந்தேன்.

நக்சலைட்டுகள் என்ன செய்வார்கள்? காவல்துறையில் இருந்து தப்பிக்க திருப்பத்தூரில் கொலை செய்துவிட்டு ஆந்திரா சென்றுவிடுவார்கள். ஆந்திராவில் கொலை செய்பவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். இரு மாநில காவல்துறைக்கும் இடையே ஒருங்கிணைவு இல்லாமல் இருந்தது அவர்களுக்கு வசதியாகிவிட்டது. இதனாலே நான் தெலுங்கு படித்தேன்.

காவல்துறையில் இருந்த தைரியமான நபர்களை தேர்வு செய்து அணியை உருவாக்கி நக்சலைட்டுகளை தேடத் தொடங்கினோம். தனியார் வாகனங்களில் ‘மப்டி’யில்தான் செல்வோம். அசோக்குமார் என்ற சப் இன்ஸ்பெக்டர் அதில் இருந்தார். மிகத் தைரியமானவர். அதன்பின்னர் வீரப்பன் தேடுதல் வேட்டையிலும் இவர் எங்களுடன் இருந்தார்.

அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்ட இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான காவலர்கள் ஏலகிரி மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த நக்சலைட் சிவலிங்கம், பெருமாள், ராஜப்பா, செல்வம், சின்னதம்பி ஆகியோரை பிடித்தனர். திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சரியாக அவர்களை பரிசோதனை செய்ய தவறிவிட்டனர். காரில் வக்கணம்பட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இதில் பழனிச்சாமி, ஏட்டுகள் ஏசுதாஸ், முருகேசன், நக்சலைட்டுகள் பெருமாள், ராஜப்பா, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரு போலீஸ்காரர் மட்டும் மீட்கப்பட்டார். அவரும் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காட்பாடியில் நடந்த இன்ஸ்பெக்டர் பழனிச்சாமியின் இறுதி ஊர்வலத்தில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். பழனிச்சாமி, இந்து; அவரது மனைவி கிறிஸ்தவர். அவர்களுக்கு இரண்டு மகள்கள். சர்ச்சில்தான் அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றது. அப்போது பழனிச்சாமியின் இளைய மகள் அஜந்தா அழுதுகொண்டே அங்கே நின்றிருந்தார். அதைப் பார்த்து தமிழ்நாட்டில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் ஆபரேசனுக்கு அஜந்தா பெயர் வைக்கப்பட்டது.

நக்சல் இயக்கத்தினரைப் பிடிக்க நான்கு பிரிவுகள் கொண்ட ஒரு சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டது. அவர்களிடம் சைனா துப்பாக்கியும் மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட துப்பாக்கிகளும் இருந்தன. எனவே, போலீஸுக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே வழக்கமான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதில் 60 – 70 பேரை நாங்கள் கொன்றிருப்போம். இன்னும் நிறைய பேரை கைது செய்தோம். அதில் ‘பார்டர் லைன் நக்சலைட்டுகள்’ என அடையாளம் காணப்பட்ட 40 பேருக்கு மேல், நானே என் பொறுப்பில் காவலராக வேலைக்கு எடுத்தேன். அவர்கள் எல்லோருமே கடைசி வரைக்கும் வேலை செய்தார்கள்.

அதுபோல் அரசாங்கத்திடம் எடுத்துச்சொல்லி, நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்த பகுதி மக்களுக்கும் நிறைய நலத்திட்டங்களை செய்துகொடுத்தோம். இதன்மூலம் அந்தப் பகுதிகளில் நக்சலைட்டுகளே இல்லாமல் செய்ய முடிந்தது. ஆறு மாதங்களில் பெரும்பகுதி பணிகளை முடித்துவிட்டோம். ஒரு வருடத்தில் முழுமையாக முடிந்துவிட்டது.

இதனையடுத்து, அஜந்தா ஆபரேசனில் ஈடுபட்ட எல்லோருக்கும் மெடல் கொடுக்க முடிவு செய்தோம். விதிப்படி 20 பேருக்குதான் ‘கேலரி மெடல்’ கொடுக்க முடியும். நான் எம்.ஜி.ஆரிடம் இது ‘ஸ்பெஷல்’ நடவடிக்கை; எனவே, எல்லோருக்கும் மெடல் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். அதன்பிறகு எல்லோருக்கும் மெடல் கொடுத்தார்.

அதன்பிறகு இன்று வரைக்கும் நக்சலைட் பிரச்சினை தமிழ்நாட்டில் இல்லை.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...