No menu items!

கொஞ்சம் கேளுங்கள்: இந்தியினால் ஆபத்து இல்லை! எப்போது?

கொஞ்சம் கேளுங்கள்: இந்தியினால் ஆபத்து இல்லை! எப்போது?

‘இந்தி ஆதிக்கம்’ என்ற வார்த்தை தமிழ்நாட்டில் ஒலித்த – ஒலிக்கும் ஒரு குரல். மற்ற தென்னிந்திய மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் இதே மாதிரியான வார்த்தை அவர்களது மொழிகளில் ஒலித்துக் கொண்டிருக்கலாம். இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்த மாநிலங்கள்தான் அவை.

ஜனநாயக நாடான இந்தியாவில் ‘ஆதிக்கம்’ என்ற வார்த்தை சகிக்க முடியாதது.

‘மொழி ஆதிக்கம்’ பற்றி ஒரு வரலாற்றைப் பார்க்கலாம்.

இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது நம்மை அடக்கி ஆண்டதோடு திருப்தி அடையவில்லை துரைமார்கள்.

மெக்காலே பிரபு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசினார்: “இந்தியர்கள் நாம்தான் கதி என்று நம்மை முழுவதும் சரணாகதி அடைய ஓரே வழி – அவர்களுடைய பண்பாடுகளை மறக்கச் செய்ய வேண்டும். அது ஆங்கிலத்தை பரப்பும் கல்வியால் மட்டுமே முடியும். அவர்களது மொழியைவிட ஆங்கிலம் படித்தால்தான் வாழ முடியும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும். அவர்கள் தங்கள் மொழிகளை முற்றிலும் மறக்க வேண்டும்”.

மெக்காலே கல்வித் திட்டம் அறிமுகமாகிறது. வெள்ளையரின் நீண்ட ஆட்சியில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் எல்லை மீறி நடந்தது. என்னவாயிற்று? மெக்காலே நினைத்தது நடந்தது.

ஆங்கில கல்வி முறையால் நமது மொழியின் பெருமைகளை மறந்தாயிற்று. நம் நடை, உடை, பாவனைகள் எல்லாம் மாறிப்போனது. ஆங்கிலத்தில் இருந்த பேரிலக்கியங்கள் படித்தவர்களை மயக்கியது. நம் இலக்கியங்கள் பரண் மீது தூசி படிந்து கிடந்தன. போதாக்குறைக்கு அற்புதமான இலக்கிய ஓலைச் சுவடிகளை ஆற்றில் தூக்கி போட்டார்கள்.

பாரதி பாடினார்: ‘கம்பன் என்றொரு மானிடன் பிறந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும்’ என்று தன் சுயசரிதையில் ஆங்கில கல்வியால் நிகழ்ந்ததை கண்ணீரோடு சொல்ல ஆரம்பிக்கிறார் பாரதி.

“வானத்தை அளந்த பாஸ்கரன் மாட்சி பாணினி இலக்கணம் கொடுத்தது. சங்கரன் ஏற்றம் சேரன் தம்பி சிலம்பை இசைத்தது, தெய்வ வள்ளுவன் வான்மறை தந்தது – அன்ன யாவும் அறிந்திலர்”.

ஆங்கில ஆதிக்கம் நிகழ்த்திய கொடுமையை பாரதி பட்டியலிடுகிறார். அவர் தேச பக்தர். தமிழ் மொழிபோல எங்கும் கண்டதில்லை என்ற மொழிப் பற்றும் உள்ளவர்.

மொழி ஆதிக்கம் செய்யக்கூடிய விபரீதம் இது. நாம் பிரிட்டிஷாருக்கு அடிமையாக இருக்கிற உணர்வே இல்லாமல் போனது.

சுதந்திர உணர்வு தட்டி எழுப்பப்பட்டபோதுதான் இந்திய மொழிகள் சிலிர்த்து எழுச்சி பெற்றன. தமிழும் அந்த காலகட்டங்களில் மீண்டும் தன் பெருமையை மலரச் செய்தது. பாரதி போன்ற மகாகவிஞர்கள், கலைஞர்கள், பேனா மன்னர்கள் தோன்றினர். கலைகள் மறுமலர்ச்சி பெற்றன.

சுதந்திர இந்தியாவில் எல்லா மொழிகளும் ஒளிவீசத்தான் மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட்டது.

“தேச ஒற்றுமைக்கு ஒரு பொது மொழியாக ‘இந்தி’ இருக்கலாம் என்ற கருத்து உருவானது. பொது மொழி ‘ஆட்சி மொழி’ என்கிற அந்தஸ்து தரப்பட்டபோது, ஆங்கில மொழி ஆதிக்க மொழியாக இருந்தபோது தாய் மொழிகளுக்கு ஏற்பட்ட தாழ்வு மீண்டும் நிகழக்கூடாது என்ற அச்சத்தில் எழுந்த கருத்துதான் இந்தி எதிர்ப்பு” – சொன்னார் ஒரு மொழியியல் அறிஞர்.

“கணினி யுகத்தில் ஒரு மொழிக்கு ஆட்சி மொழி என்கிற கிரீடம் சூட்ட வேண்டிய அவசியமில்லை. கணினி கண்சிமிட்டும் நேரத்தில் நிர்வாகத்துக்கு தேவையான மொழி மாற்றத்தை எம்மொழியானாலும் உடனே செய்து தந்துவிடும். மத்திய அரசின் நிர்வாகத்துக்கு எந்த தாமதமோ, பாதகமோ ஏற்படாது. கணினி யுகத்தில் அதன் மூலம் மக்களின் தாய் மொழி உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க முடியும்” என்றார் அவர்.

மற்ற மாநில மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்கிற உணர்வு மக்களுக்கு இருக்குமாறு பார்த்து கொள்வதே மிக முக்கியம். இந்தி பொது மொழி என்று கருதப்படுவதில் தவறில்லை. பெரும்பாலான இந்திய மக்களால் பேசப்படுகிறது என்பதால்! ஆட்சி மொழி என்கிற மேலாண்மை கூடாது. பொது மொழி என்று சொன்னால் அதற்கான நடைமுறைகளை பின்பற்றினால் ‘இந்தியால்’ ஆபத்தில்லை என்று தமிழர்கள் நம்புவார்கள்” என்று பேசினார் பெயர் சொல்ல விரும்பாத அந்த அறிஞர்.

சீன ஆக்கிரமிப்பின்போது தேச ஒற்றுமைக்காக தென்னக மக்களின் கவலைகளைப் போக்க பிரதமர் நேரு ஒரு உறுதிமொழி அளித்தார். செய்தித்தாள்களில் நேருவின் புகைப்படத்துடன் முழு பக்க விளம்பரமாக வந்தது.

‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கும்’ என்பதுதான் அது. 1965 ஜனவரி 26 முதல் இந்திக்கு ஆட்சி மொழியாக கிரீடம் சூட்டுவதாக அரசியல் சட்டம் கூறியதால் இந்த வாக்குறுதி. 1965ல் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகள் நடந்ததின் பின்னணி இந்த அரசியல் சட்ட கெடுதான் காரணம்.

கிரீடம் இழந்த ஆங்கிலம் தொடர்வதால் ஆதிக்க ஆபத்து கிடையாது. பொது மொழி என்கிற உணர்வே இருக்கும்.

கிரீடம் சூட்டப்படாமல் பொது மொழியாக இந்தி மற்ற மொழிகளுக்கு சமமாக நடைபோட வேண்டும். அவசியமுள்ள மக்கள் தானாக இந்தியை அறிவார்கள். இங்கே பணிக்கு வரும் வடஇந்தியர்கள் தமிழ் பேசவில்லையா!

மொழியியல் அறிஞர் முற்றுப்புள்ளி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...